×

அறிவுத் திறனை அள்ளித்தரும் ஆனி மாதத்தின் பெருமைகள்!

பகவத் கைங்கர்ய,ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

“ஆத்ம காரகன்”, “சரீர காரகன்”, “பித்ரு காரகன்” என்றெல்லாம் இதிகாச புராணங்களிலும், உபநிடதங்கள் மற்றும் வேதங்கள் ஆகியவற்றிலும் பூஜிக்கப்படுபவரும், நவக்கிரங்களின் நாயகனாக ஜோதிடக் கிரந்தங்களில் போற்றப்படுபவருமான சூரியன், “வித்யா காரகர்”  எனவும், “கல்விக் கிரகம்'' எனவும் ஜோதிடக் கலையில் பிசித்திப்பெற்ற “புதன்” கிரகத்தின் ராசியான மிதுனத்தைக் கடக்கும் காலமே “மிதுன காலம்'' எனப்படும் “ஆனி” மாதமாகும்.

அறிவுத் திறனையும், புத்தி சாதுர்யத்தையும் கிரகிப்புத் திறனையும் உயர்ந்த கல்வித் தகுதியையும், விவேகத்தையும் (Wisdom)  தந்தருளும் புதனின் வீட்டில் ஆத்ம பலம், தெய்வ பக்தி, ஒழுக்கம், தந்தையிடம் பக்தி, பெரியோர்களிடம் மரியாதை, நோயற்ற உடல் (blemishless - healthy skin), இதய நோயின்மை ஆகிய மகத்தான பேறுகளைத் தந்தருளும் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றவர்கள், பெரும்பாலும் மேற்கூறிய நற்பலன்களைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

இவற்றைக் கணித்து, ஆராயும்போது, ஜாதகத்தில் மற்ற முக்கிய கிரக நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, ஆனி மாதத்தில் பிறப்பவர்களுக்கு, பிறவியிலேயே பல நற்குணங்கள் அமைந்திருப்பதை அனுபவத்தில் பார்க்கலாம். புதன், சூரியனுக்கு நட்புக் கிரகமாகும். பகவான், ஸ்ரீமந் நாராயணன் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, ஈரேழு  பதினான்கு உலகங் களையும் பாதுகாத்தருளிய மாதமும் ஆனிதான்.

இத்தகைய தெய்வீகச் சிறப்புகளைப் பெற்ற இந்த ஆனி மாதம், எமது வாசக அன்பர்களுக்கு வழங்கவிருக்கும் பலா பலன்களை அவரவர்களின் ராசியின் அடிப்படையில், டிகிரி சுத்தமாக “ஷோடஸ ஸதவர்க்கம்'' எனும் சூட்சும கணித முறைப்படி ஆராய்ந்து பார்த்து வழங்கியுள்ளோம். இதனால், எமது தினகரன் வாசக அன்பர்கள் அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வுடனும், மன நிறைவுடனும் வாழ எமது ஆராதனைத் தெய்வமாகிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரிடம் பிரார்த்திக்கின்றோம்; வாழ்க வளமுடனும், உடல் நலனுடனும்!!  முதலில். இம்மாதத்தில் வரவிருக்கும் முக்கியமான நன்நாட்களைக் காண்போமா?

சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யும் நன்னாட்களையே ஆனி மாதமாகக் கொண்டாடப்படுவதால், இதை மிதுன மாதம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனி மாதத்தில் பகற் பொழுது அதிகமாக இருப்பதால், இம்மாதத்தில் பிறந்தவர்கள், சூரியனுக்கு நிகரான புத்திக்கூர்மையுடையவர்களாயும், நேர்மை, நியாய - அநியாயங்களை அறிந்து அதன்படி நடப்பவர்களாகவும், மற்றவர்களையும் அறத்தின்வழியில் வழிநடத்தச் செய்பவர்களாக இருப்பர். இவர்களின் பேச்சு நெளிவு, சுளிவில்லாமல், தன் பேச்சினால் மற்றவர் மனம் புண்படுமே என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், உள்ளதை உள்ளபடி இயம்பும் இயல்புடையவர்கள். மனத்தில் தோன்றியதை தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவிப்பர்.

“படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு; பாடம் படிக்காத மேதைகளும் பாரினுள்உண்டு”  என்ற சொற்றொடர்க்கு ஏற்றாற்போல் திகழ்வர்.  தமிழ் வருடத்தின் இரண்டு பருவங்களான (தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை) தேவலோகத்தில் உள்ள தேவர்களின்  மாலைப் பொழுதாகவும் கருதப்படுவதை, உத்திராயணம் எனவும், (ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை உள்ள காலமாகிய தேவர்களுக்குரிய விடியற்காலைப் பொழுதை) தட்க்ஷிணாயனம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது.

15-6-2022 ஆனி மாதப் பிறப்பு   மாதப் பிறப்பாகிய இந்நாளில், உயிர்நீத்த மூதாதையர்களுக்கு (தாய் - தந்தை இழந்தோர்) தர்ப்பணம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும். நமது மூதாதையர்களுக்கு, நாம் பக்தியுடன் அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய - சந்திர கிரகணப் புண்ணியக் காலங்கள், ஆண்டுத் திதிகள், மஹாளயப் புண்ணியக் காலம் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகளின் பலனை, அவர்கள் எங்கிருந்தாலும், எப்பிறவி எடுத்திருந்தாலும், அவர்கள் இருக்கும் இடத்தையறிந்து, அவர்களிடம் சேர்த்துவிடுவதால்தான், சூரிய பகவானைப் பித்ருக்காரர் எனப் புகழ்கின்றன, தர்ம சாஸ்திரமும், ஜோதிடமும்! இதை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுகிறார் ஒரு நிகழ்வில்!

ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணனும், அர்ஜுனனும்  யமுனை நதிக்கரையில் உலவிக்கொண்டிருக்கையில், லட்சக்கணக்கான பசுக்கள் கன்றுகளுடன் மேய்ச்சலை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தது. அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்து, “ஒரு மனிதன் செய்யும் பாவ-புண்ணிய பலன்கள் எவ்விதம் அவனைச் சேர்கின்றது?   கோடிக்கணக்கான ஜீவராசிகள் உள்ள இத்தரணியில்?” என்று கேட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே, “அந்தப் பசுமாட்டுக் கூட்டத்திலிருந்து ஒரு கன்றுக்குட்டியை எடுத்துவா!” என்றார். அர்ஜுனனும் ஒரு கன்றுக்குட்டியை எடுத்துவந்தான்.

சில மணித் துளிகள் கடந்தபின், ஸ்ரீ கிருஷ்ணன், “அந்தக் கன்றுக்குட்டியை அதன் தாயிடம் கொண்டுபோய் விட்டுவிட்டுவா!” என்றார். திகைத்துப் போன அர்ஜுனன், “கண்ணனா! விளையாடுகிறாயா? லட்சக்கணக்காக போய்க்கொண்டிருக்கின்ற பசுக் கூட்டத்திலிருந்து ஒரேஒரு கன்றை எடுத்துவா, என்றாய்! நானும் எடுத்து வந்தேன்! மீண்டும் அதன் தாயிடம் கொண்டுபோய் விடச் சொல்கிறாய்... எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது, அதன் தாயிடம்? அது இயலாத காரியமாயிற்றே!!” என்றான்.

புன்சிரிப்புடன் ஸ்ரீகிருஷ்ணன், “அர்ஜுனா! அந்தக் கன்றை கீழே இறக்கிவிடு!!” என்றார் அர்ஜுனனும் தன்னிடமிருந்த கன்றுக்குட்டியை கீழே இறக்கிவிட்டதுதான் தாமதம்! நாலுகால் பாய்ச் சலில் பசுக்கூட்டத்தினிடையே புகுந்துசென்று தன் தாய்ப் பசுவைச் சென்றடைந்தது. “இக்கன்றுக் குட்டியைப் போலவேதான் ஒவ்வொருவரும் செய்யும் பாவ-புண்ணியங்களும் அவர்களைத் தவறாமல் பின்தொடர்ந்து பற்றிக்கொள்ளும் என விளக்கினார்.” “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!” என இளங்கோ அடிகளும் தனது சிலப்பதிகாரத்தில் பகிர்ந்துள்ளார்.

கூர்மாவதாரம்!

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி எனும் தேவ நாகத்தைக் கயிறாகவும் கொண்டு, பாற்கடலைக் கடைந்தபோது, மலையானது பாரம் தாங்காமல் கடலில் மூழ்க ஆரம்பித்தது. தேவர்களனைவரும் பெருமானை வேண்ட, மிகப் பெரிய ஆமை உருக் கொண்டு, கடலினுள் சென்று, அம்மலையைத் தன் முதுகில் சுமந்து,  பாற்கடலைக் கடையச் செய்வித்து, இந்திராதி   தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்து, இழந்த செல்வங்களை மீட்டுத் தந்த கூர்ம அவதாரம் (ஆமை உரு) எடுத்த நன்னாள், 25-6-2022 அன்று கூர்ம ஜெயந்தி.

28-06-2022 அமாவாசை தர்ப்பணம் - காச்யப மகரிஷியின் புத்திரனாகிய சூரியன், மறைந்த நமது முன்னோர்களுக்கு நாம் சிரத்தையுடனும், பக்தியுடனும் ஆண்டு திதி பூஜைகள், அமாவாசை, மாதப் பிறப்பு, மஹாளய பட்சம், அட்சய திருதியை, சூரிய - சந்திர கிரகணங்கள் போன்ற புண்ணிய தினங்களில் செய்யும் தர்ப்பணம், எள்ளுடன்கூடிய தீர்த்தம் ஆகியவற்றின் பலன்களை, அந்தந்த லோகங்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறார், சூரியன். அதனால் முன்னோர்கள் பரம திருப்தியடைந்து, அவர்களின் பரிபூரண ஆசியுடன் நம் துன்பங்கள் அனைத்தும் விலகிடும்.

ஸ்ரீவராஹி நவராத்திரி!

ஆனி 16ம் தேதியன்று, ஸ்ரீ வராஹி நவராத்திரி ஆரம்பம் ஆஷாட நவராத்திரி. தானியப்ரியையாகிய ஸ்ரீ வராஹிதேவியை வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள், பில்லிசூன்னியம், வீண் அபவாதம், கண் திருஷ்டி இல்லாமலிருக்கவும், வியாபாரத்தில் மிகச் சிறந்த முன்னேற்றத்தையும் அபிவிருத்தியைக் காணவும், ஸப்த கன்னியருள் ஒருவராகிய ஸ்ரீவராஹி அம்மன், லலிதா திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி என பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுபவளும், துஷ்ட நிக்ரஹரம், சிஷ்ட பரிபாலனம் புரிந்திட பல்வேறு ஆயுதங்களைத் தன் திவ்ய ஹஸ்தத்தில் (திருக் கரங்களில்) தரித்திருந்தாலும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சகோதரராகிய பலராமரைப் போல திருக்கரங்களில் திகழும் கலப்பையையும், தனது ஆயுதங்களில் ஒன்றாகச் சேர்த்திருப்பதிலிருந்தே விவசாயத்தைப் போற்றவும் அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு நன்கு உணர்த்திடவும் திருவள்ளுவப் பெருந்தகை உணர்த்தியதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்;  மற்ற எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்னும் கருத்தை அழகாக எடுத்துக்காட்டுவதும், நல்ல போதுமான அளவு   மழையைப் பெறவும், அதிகளவு விளைச்சலைப் பெறவும், உலகில் எவ்வுயிரும் பட்டினி பசி   பஞ்சம் இல்லாமல், வயிராற உணவு உண்டு மகிழ்வுடனும், மன அமைதியுடனும் வாழ்வதற்காக, பூமிக்கடியில் விளையும் நிலக் கடலை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கருணை, சேனைக்கிழங்குகளினால் பொரியல் செய்து அமுது செய்வித்து, 9 நாட்களும் தேவியை பூஜித்து வந்தால் போதும்,  தேவி மன மகிழ்ந்து நம் ஆழ்மனத்தில் இருக்கும் அத்துனை அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து வைக்கும் கருணைக் கடல், அன்னை திரிபுர சுந்தரி!

ஆனி 20 கௌரி விரதம்  இறைவனை மட்டுமே வணங்குதல் கூடாது; அகலகில்லேன் எனப் பெருமானின் திருமார்பில் வீற்றிருக்கும் அன்னையையும் சேர்த்தே வணங்குதல் வேண்டும். ஸ்ரீ ராமபிரானை மட்டும் அனுபவிக்க (வணங்க)  வேண்டும் என்று எண்ணியவள், சூர்ப்பனகை! அவளுக்கு காதும் மூக்கும் பறிபோனதுதான் மிச்சம்!! ராவணனோ, சீதையை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என ஆசை கொண்டான்! அவனுடைய பத்துத் தலைகளும் பூமியில் வீழ்ந்தன!! ஆனால், ஸ்ரீ ராமபிரானையும் ஸ்ரீ சீதாபிராட்டியையும் சேர்த்தே வணங்கவேண்டும் என சங்கல்பித்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் ஸ்ரீ ஹனுமான்!! இவருக்கோ அனைத்து இடங்களிலும் கோயில் மற்றும் பூஜை, வடைமாலை!! இந்தத் தத்துவத்தை எடுத்து இயம்புவதே கௌரி விரதத்தின் முக்கிய குறிக்கோள்.

உமையவளை நீக்கி, சிவபெருமானை மட்டுமே வணங்குதைத் தன் வாடிக்கையாகக் கொண்டவர் பிருங்கி முனிவர்! அவர் இவ்வாறு செய்வதை உணர்ந்த மலைமகள், ஒருதினம்கூட இறைவனை விட்டு விலகாமல் அவர் அருகிலேயே வீற்றிருந்து, பிருங்கி முனிவர், தன்னையும் வணங்கும்படிச் செய்திடல் வேண்டுமென தீர்மானித்திருந்தாள். ஆனால், பிருங்கி முனிவரோ ஒரு சிறு வண்டின் உருவமெடுத்து, இறைவனை மட்டுமே வணங்கிச் சென்றதைக் கண்ணுற்ற தேவி, இறைவனை நோக்கி, இனி யாராகிலும் தன்னை விலக்கி, தங்களை மட்டும் வணங்குதல் கூடாது! அதற்கு என்ன செய்தால் நலம் என வினவ, கௌரி விரதமிருக்க அறிவுறுத்த, மலைமகளும், 9 நாட்கள் கடுந்தவமியற்றி இறைவனுடன் சரிபாதியாக - அர்த்தநாரீஸ்வரராக இரண்டறக் கலந்து காட்சியளித்தார்.

இனி, ஸ்ரீதேவியை விலக்கி, இறைவனை மட்டுமே வணங்கவும் வழிபடவும் முடியாத நிலையை உருவாக்கினாள்!! இதை நினைவுறுத்தும் விதமாகவே ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி உற்சவம் இன்றும் நடைபெறும். லௌகீக வாழ்க்கையில் திருமணமாகிய தம்பதியர் எக்காரணங்கொண்டும் பிரிந்திருக்கக் கூடாது; என்றென்றும் கண்ணினின்று இமை பிரியாதிருப்பதுபோல்,  உடலிலிருந்து உயிர் பிரிந்த மறுகணமே உடல் இயக்கம் நின்றுபோவதுபோல, கணவரும் - மனைவியும் எல்லாவிதக் கருத்துவேற்றுமைகளையும் மறந்து, ஒருமித்து, தங்களுக்குள் உண்டான பிணக்கு களைக் களைந்து, நூறாண்டுக்காலம் இணைபிரியா வாழவேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

10-7-2022 சாதுர்மாச விரதம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உணவுப் பொருட்களைக் கைவிடுவது பெரியோர்களின் தலையாய கடமையாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒருமாதம் காய்-கறிகளைச் சாப்பிடாமலும், ஒரு மாதம் பால், பால் பொருட்களைக் கைவிடுதலையும், ஒரு மாதம் தானியங்களை, பழ வகையறாக் களைப் பயன்படுத்தாமல் இருப்பதும்தான் இவ்விரதத்தின் முக்கிய கடமையாக இருக்கின்றது.

அதாவது, நமக்குப் பிடித்த உணவு வகையறாக்களின் மீது அளவற்ற   தீரா ஆசை கொண்டிருக்காமல், உடலையும், மனத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்காகவும், இவ்வுலக பந்தங்களிலிருந்து மெதுவாக தன்னை நீக்கிக்கொள்ளும் ஒரு வெள்ளரிப் பழத்தைப்போல (மற்ற ஏனைய பழவகைகள் பழுத்தவுடன், கிளைகளிலிருந்து காம்புடன் தன்னை விலக்கிக்கொள்ளும்; ஆனால், வெள்ளரிப்பழமோ, காம்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். அது இருப்பதும் தெரியாது, விலகியதும் தெரியாது! தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது இருப்பதுபோல் உலக வாழ்வில் இருப்பதுபோல் தெரிந்தாலும் அதிலிருந்து விலகியே இருத்தல்) இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Tags : Anne ,
× RELATED மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை:...