×

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை-களைகட்டிய காய்கறி சந்தை

திருபுவனை : புதுச்சேரி மாநிலத்தில் மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்தோறும் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் இங்கு விற்பனை செய்யப்படும். அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மாட்டுச்சந்தையும், அதன் பிறகு 10 மணி முதல் இரவு 10 மணி வரை காய்கறி சந்தையும் நடக்கும். வழக்கமாக ஒரு ஜோடி மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒன்றரை லட்சம் வரை விற்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல வாரங்களாக சந்தை நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப்பின், சந்தை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.இங்கு மாடுகள் தவிர காய்கறிகள், பழங்கள், மாட்டுக்கு தேவையான கயிறுகள், மணிகள், கருவாடு, தளவாட பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களும் விற்கப்படுகின்றன. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் மாடுகள், கோழிகள், முயல், காடை ஆகியவற்றை விற்பதற்காக வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகளும் மாடுகளை வாங்க சந்தையில் குழுமியிருந்தனர்.இந்நிலையில் நேற்று வாரச்சந்தையில் மாடுகளின் விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. சில விவசாயிகள் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மாடுகளை வைத்து செலவு செய்ய முடியவில்லை. அதனால் விற்க வந்ததாக கூறினர். இதனால் ஒரு கன்றுக்குட்டி ரூ.6 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஜோடி காளை மாடுகள் அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மாடுகள் விலை பாதியளவு குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.மேலும், காலை 10 மணிக்கு மேல் நடந்த சந்தையில் வெங்காயம் 7 கிலோ 100 ரூபாய்க்கும், தக்காளி 6 கிலோ ரூ.100க்கும், பூண்டு 4 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் அவற்றை வாங்க மக்கள் அலை மோதினர். சந்தைப்பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் டாக்டர் லதா மங்கேஸ்வர், இணை இயக்குநர் டாக்டர் ராஜீவ், மதகடிப்பட்டு கால்நடை மருத்துவர் டாக்டர் அன்புக்கரசு ஆகியோர் வியாபாரிகளிடமும், கால்நடை விற்க வந்திருந்த விவசாயிகளிடமும் ஆய்வு மேற்கொண்டனர். …

The post மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை-களைகட்டிய காய்கறி சந்தை appeared first on Dinakaran.

Tags : Tirupuvana ,Puducherry ,Tamil Nadu ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு