×

குறளின் குரல்-குறளும் உறக்கமும்

படிப்பவர்களுக்கெல்லாம் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திருக்குறள் உறக்கத்தைப் பற்றியும் பேசுகிறது.
`நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்’
அதிகாரம்: மடிஇன்மை.
(குறள் எண்: 605)

செயலைச் செய்வதில் காலம் நீட்டித்தல், ஞாபக மறதி, சோம்பல், அளவு மீறிய உறக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற தன்மையுடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
`தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.’
அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்.
(குறள் எண்:1103)

  தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் கூறுகின்றார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?
`உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.’
அதிகாரம்: நிலையாமை.

(குறள் எண்:339)
இறப்பு என்பது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, அதன்பின் பிறப்பு என்பது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
உறக்கம் என்றதும் நம் நினைவிற்கு வரும் ராமாயணப் பாத்திரம் கும்பகர்ணன். பிரம்மதேவனின் அருள்வேண்டித் தவமிருந்தான் அவன். நித்யத்வம் என மரணமில்லாமல் என்றும் உயிரோடு இருப்பதை பிரம்மனிடம் வரமாகக் கேட்க நினைத்தான்.

அவன் மனத்தில் உள்ளதை அறிந்துகொண்ட தேவர்கள் பிரம்மதேவன் அந்த வரத்தைக் கொடுத்துவிடக் கூடாதே எனப் பதறினார்கள். தேவர்களை வாட்டி வதைக்கும் ஓர் அரக்கன் மரணமே இல்லாமல் என்றென்றும் வாழ்பவனாக இருந்தால் தேவர்கள் நிலை என்னாவது ?அவன் கேட்கும் வரத்தை எவ்விதமேனும் மாற்ற விரும்பிய தேவர்கள் சரஸ்வதி தேவியைச் சரணடைந்தார்கள். தேவர்களின் வேண்டு கோளை ஏற்றாள் கலைவாணி. வரம் கேட்கும்போது கும்பகர்ணனின் நாவைப் புரட்டிவிட்டாள்.

தடுமாறிய கும்பகர்ணன் நித்யத்வம் என்று கேட்பதற்கு பதிலாக நித்ரத்வம் என்று கேட்டான், அந்த வரம் தந்தேன் எனச் சொல்லி மறைந்தார் பிரம்மதேவர்.
அவர் கொடுத்த நித்ரத்வ வரத்தின்படி நித்திரையில் ஆழ்ந்தான் கும்பகர்ணன் என்கிறது ராமாயணம்.

`கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?'
என்று ஆண்டாள் நாச்சியார் எழுதிய திருப்பாவையில் நெடுநேரம் உறங்கும் பெண்ணைப் பார்த்து துயிலெழுப்ப வந்த பெண் கேட்கிறாள்.  
இன்றும் கூட நீண்ட நேரம் தூங்குபவர்
களிடம் கும்பகர்ணனைப் போல என்ன தூக்கம் என்றுதானே கேட்கிறோம்?

ஒருவர் உணவை அவருக்காக இன்னொருவர் உண்ண முடியாது, அதுபோல ஒருவர் தூக்கத்தை அவருக்காக மற்றவர் தூங்க முடியாது.என்றாலும் இதற்கு ராமாயணத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு வருகிறது, லட்சுமணனுக்கான உறக்கத்தையும் சேர்த்து அவன் மனைவி ஊர்மிளை உறங்கினாளாம்.

லட்சுமணன் ராமனை நிழல்போலத் தொடர்ந்து தானும் பதினான்கு ஆண்டுகள் கானகம் சென்றான், இரவு பகல் பாராது கண்விழித்து ராமனையும் சீதையையும் வன விலங்குகளிடமிருந்தும் அரக்கர்களிடமிருந்தும் காவல் காக்க வேண்டிய கடமை அவனுக்கு. உறங்கவே உறங்காமல் நிகழ்த்த வேண்டிய கடமை அல்லவா அது?  
தன் கணவர் தனது கடமையை முழுமையாகச் செய்வதற்காக அவர் உறக்கத்தைத் தான் உறங்க வேண்டும் என நித்திராதேவியிடம் வரம் கேட்டுப் பெற்றாள் ஊர்மிளை. நாள்தோறும் தனக்கான உறக்கத்தை முடித்துவிட்டுத் தன் கணவனுக்கான உறக்கத்தைத் தொடர்வாள் அவள்.

உறங்காதிருந்தாலும் உறங்கி எழுந்ததுபோல் நாள்தோறும் புத்துணர்ச்சி பெறுவான் லட்சுமணன், ஈருடல் ஓருயிர் கூட அல்ல, ஒரே உடலின் தனித்த இரு பகுதிகள் போல வாழ்ந்திருக்கிறார்கள் ஊர்மிளையும் லட்சுமணனும்.ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் தூக்கம் குறித்த செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது, சிம்சுபா மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆஞ்சநேயர் சீதாப்பிராட்டியைத் தனியே சந்திக்க விரும்பினார், அரக்கியர் காவலில் அவர்கள் நடுவில் அல்லவா அமர்ந்திருக்கிறாள் சீதை?

என்ன செய்வதென யோசித்த ஆஞ்சநேயர் நித்திராதேவியைப் பிரார்த்தனை செய்து ஒரு மந்திரத்தை ஜபித்தார், அடுத்த கணம் அவர் வேண்டியபடியே சீதையைத் தவிர திரிஜடை உள்ளிட்ட அத்தனை அரக்கியரும் உறக்கத்தில் ஆழ்ந்தார்கள் என்றும் அதன் பின் சீதாப்பிராட்டியைத் தனியே சந்தித்தான் அனுமன் என்றும் சொல்கிறது சுந்தர காண்டம்.

நம் தெய்வங்களில் உறங்கும் தெய்வம் திருமால், அவர் பாற்கடலில் பள்ளி கொண்டு உறங்குபவர், திருவரங்கத்தில் திருமாலின் சயன கோலத்தை நாம் தரிசிக்க முடியும்,அருணாசலக் கவிராயர் திருவரங்க ரங்கநாதரிடம் ஏன் பள்ளி கொண்டீர் என வினவும் கீர்த்தனை அழகிய கற்பனைகள் நிறைந்தது.

`ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீரெங்கநாதரே - நீர்
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?
ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?
கோசிகன் சொல் குறித்ததற்கோ - அரக்கி
குலையில் அம்பு தெறித்ததற்கோ?

ஈசன்வில்லை முறித்ததற்கோ - பரசு
ராமன் உரம் பறித்ததற்கோ?
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ?
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத்
துறை கடந்த இளைப்போ?

மீசுரமாம் சித்ரகூடச் சிகரக்கல்
மிசை கிடந்த களைப்போ?
காசினிமேல் மாரீசன் ஓடிய
கதி தொடர்ந்த இளைப்போ?

ஓடிக் களைத்தோ? தேவியைத்
தேடி இளைத்தோ?’- மரங்கள் ஏழும்
துளைத்தோ? - கடலைக் கட்டி
வளைத்தோ?
இலங்கை என்னும்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?'
என்று ரங்கநாதரிடம் கவிராயர் தொடுக்கும் வினாக்கள் தான் எத்தனை நயமானவை?
பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு.
ஆனால் ஓர் ஆச்சரியம்! சென்னையில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில், ஆந்திர மாநிலத்தில் சுருட்டப்பள்ளி என்ற  ஊரில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உறங்கும் நிலையில் காட்சி தருபவர் யார் தெரியுமா? சிவபெருமான்!

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைவதற்கு மந்தரமலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் உள்ள வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர். `வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி' என இந்நிகழ்ச்சியைப் பேசுகிறது இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம்.தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒருபக்கமும் வாசுகி பாம்பைக் கயிறுபோல இழுக்க, நீண்ட நேரம் கடைந்ததால்  வலி பொறுக்காது  அந்தப் பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கியது.

கொடிய விஷத்திலிருந்து தேவர்களைக் காக்கவேண்டி சிவபெருமான் அந்த விஷத்தை அருந்தினார். விஷத்தின் வீரியத்தால் அவருக்கு மயக்கம் ஏற்பட விஷம் அவர் உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் பார்வதி அவர் கழுத்தைப் பிடித்தாள்.சிவனின் கையைப் பிடித்து மணந்தவள் கழுத்தைப் பிடித்துத் தடுத்ததும் நஞ்சு கழுத்திலேயே அதாவது கண்டத்திலேயே நின்றது, சிவன் நஞ்சுண்ட கண்டன் ஆனார்,ஆனாலும் கொடும் விஷத்தால் ஏற்பட்ட மயக்கம் தீரவில்லை, எனவே அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற ஊரில் படுத்து ஓய்வெடுக்கிறார் என்கிறது சிவ புராணம்.

ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை இரண்டுமே அதிகாலையில் உறங்கும் பெண்களைத் துயிலெழுப்பும் உத்தியில் அமைந்த பனுவல்கள் தான்.
காலை துயிலெழுப்புவது என்பது வெறும் துயிலெழுப்பல் அல்ல, மாயை என்ற இருளில் ஆழ்ந்து கிடக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி பரம்பொருள் என்ற வெளிச்சத்தை அறிமுகப் படுத்துவதுதான் அது,இறைவனைத் துயிலெழுப்பப் பாடும் பாடல் தமிழில் திருப்பள்ளியெழுச்சி என அழைக்கப் படுவதுபோல சம்ஸ்க்ருதத்தில் சுப்ரபாதம் எனப்படுகிறது,
விஸ்வாமித்ர மகரிஷி கானகத்திற்கு ராம லட்சுமணர்களை உடன் அழைத்துச் சென்றார் அல்லவா? அப்போது அவர்களின் உறக்கத்தைக் கலைத்து அவர்களை எழுப்ப கோசலையின் புத்திரனான ராமனே எழுவாய் என்றுதான் அவர் அழைத்தாராம், இன்றும் வேங்கடேச சுப்ரபாதம் கௌசல்யா சுப்ரஜா ராம என்றுதான் தொடங்கிப் பாடப்படுகிறது,
இறைவன் உறங்குவானா ?  உலகில் உள்ள அத்தனை உயிர்களும் அவன் குழந்தைகள், அத்தனை பேரையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அவனுக்கு உண்டு, அப்படியிருக்க அவனுக்கு உறங்க நேரமேது ?

அவனது உறக்கம் உறங்குவதுபோலான உறக்கமே தவிர முழுமையான உறக்கமல்ல, அதனால்தான் இறைவனின் உறக்கத்தை அறிதுயில் என்கிறார்கள். அது அனைத்தையும் அறிந்துகொண்டே துயிலும், துயில் அல்லாத துயில்தான்.  திருப்பள்ளியெழுச்சி என்பது ஒருவரை அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுப்புகின்ற பாடல் மரபு, கடவுளை எழுப்பும் திருப்பள்ளியெழுச்சி மரபின் தொடர்ச்சியாக பாரத மாதாவை உறக்கத்திலிருந்து எழுப்ப பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடினார் மகாகவி பாரதியார்.

அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த காலத்தில் அன்னை பாரததேவி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். பாரத மக்கள் சுதந்திரம் வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியைப் பெற வேண்டுமே?
 அன்னைக்குத் தாலாட்டுப் பாடினால் பாரதம் மேலும் அல்லவா உறக்கத்தில் ஆழும்? எனவேதான் தாலாட்டுப் பாடாமல் திருப்பள்ளியெழுச்சி பாடி அன்னையை எழவைத்தார் பாரதியார்.
 கர்நாடக இசை மரபில் நீலாம்பரி என்று ஒரு ராகம் இருக்கிறது. அந்த ராகத்தை இசைத்தால் தூக்கம் வரும், தூங்காத கண்களும் தூங்கும். தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் நீலாம்பரி ராகத்தில்தான் அமையும்,ஆராராரோ ஆரிராரோ என்ற ஒலிக்குறிப்பு வார்த்தைகளுக்குத் தூக்கத்தைத் தோற்றுவிக்கிற சக்தி இருக்கிறது. தன்தாயாரின் பாசக் குரலில் அந்த ஒலியைக்கேட்கிற குழந்தைகள் கண்சொக்கித் தூங்கிவிடுகின்றன.

சில திரைப்படங்களைப் பார்த்தால் தூக்கம் வரக் கூடும்! ஆனால், திரைப்படங்கள் சிலவற்றில் தூங்க விடாமல் நம்மைச் சிந்தனையில் ஆழ்த்தும் தூக்கத்தைப் பற்றிய அரிய பாடல்கள் உண்டு.
`தூக்கம் கண்களைத் தழுவட்டுமே,, தூங்காத கண்ணென்று ஒன்று, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, கண்ணே கண்ணே உறங்காதே' என்றெல்லாம் உறக்கத்தைப் பற்றிய பாடல்கள் இடையே உறங்காதே என்று சொல்லும் புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றும் உண்டு, நாடோடி மன்னன் படத்தில் டி,எம், சௌந்தரராஜனின் கணீர்க் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் இளைஞர்களைத் தூங்காமல் விழித்திருந்து உழைக்கச் சொல்கிறது.

`தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே..
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்  உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்  கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!’
அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் காலாவதியான பழைய கோப்புகள் (ஃபைல்கள்) சிலவற்றைக் கேட்டு எடுத்துக் கொண்டு தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தாராம், இது எதற்கு என மனைவி கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:`சுற்றிலும் கோப்புகள் இருந்தால்தான் வீட்டில் ஓர் அலுவலகச் சூழ்நிலை தோன்றும், அப்படித் தோன்றினால்தான் பகலில் என்னால் தூங்கமுடியும்!’்

 (குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Kural ,
× RELATED குறளின் குறல்: திருக்குறளில் ஆமை!