×

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

431. அர்த்தாய நமஹ (Arthaaya namaha)
கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரோடு உறையும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாளைப் பூஜித்துவரும் அர்ச்சகர்களுள் ஒருவரான ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் சுவாமியோடு அடிக்கடி ஆகமங்கள் குறித்து உரையாடும் பேறு அடியேனுக்குக் கிட்டுவதுண்டு. அப்போதெல்லாம் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள பல நுட்பங்களை ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் அடியேனுடன் பகிர்வார்.ஒருமுறை அடியேன் அவரிடம், “சுவாமி! உங்களைப் போல் இவ்வளவு ஆழமாக ஆகமங்களைக் கற்ற வித்வான்கள் நம் சார்ங்கபாணிப் பெருமாளுக்குப் பூஜை செய்வதை நினைத்துப் பார்க்கையில் பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றன!” என்று சொன்னேன். அதற்கு சௌந்தரராஜ பட்டாச்சாரியார், “அடியேனின் தாய்வழித் தாத்தாவான தேரழுந்தூர் ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமிக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார். ஏன் என்று அடியேன் கேட்க, அப்போது அர்ச்சகர் ஒரு கதை சொன்னார்:

நான் இளம் வயதில் அரைக்கால் சட்டை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தேன். எனது நடவடிக்கைகளைக் கவனித்த என் தாத்தா என்னை அழைத்தார். “நீ என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார். விளையாட்டுச் சிறுவனான அடியேன், “நான் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடினேன்.

மீண்டும் அழைத்தார் தாத்தா. “குழந்தாய்! இங்கே வா! நீ எத்தகைய குடும்பத்தில் பிறந்திருக்கிறாய் தெரியுமா? குடந்தையில் உள்ள திருக்கோவில்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காலத்திலும், அந்நியப் படையெடுப்புகள் நடைபெற்ற காலத்திலும் உனது மூதாதையர்கள் தங்கள் குலதனமாகக் கருதிக் கோவிலையும் பெருமாளையும் பூஜைமுறைகளையும் காத்து இன்றளவும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அவ்வாறு அந்நாட்களில் கோவிலைக் காத்த உங்களைப் போன்ற சில குடும்பங்களுக்கு இங்கே பூஜை மிராசு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் பிறந்துவிட்டு, வேதங்களையும் ஆகமங்களையும் பயிலாமல் இப்படி நீ விளையாடலாமா?” என்று கேட்டார்.

அவரது ஆழமான பேச்சைக் கேட்டவாறே என் மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டது. “அடியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். தாத்தா மேலே சொல்லத் தொடங்கினார், “குழந்தாய்! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. முக்திக்கு வழிகாட்டும் பாரத தேசத்தில் மனிதனாகப் பிறப்பது என்பது அதைவிட அரிதானது. அதிலும், ஆழ்வார்களின் அமுதத் தமிழ் ஆறாகப் பெருகி ஓடும் தமிழகத்தில் பிறப்பது மிகவும் அரிது. திருமாலிடம் பக்தி நிறைந்தவனாக இருத்தல் அதனினும் அரிது. அந்தத் திருமாலையே தீண்டித் திருவாராதனம் செய்யும் பாக்கியம் பெறுதல் என்பது அதை விடவும் அரிதானது. அங்கே கோவிலில் ஆராவமுதாழ்வான் என்று அழைக்கப்படும் சார்ங்கபாணிப் பெருமாள் உன் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். நாளை நீ பண்டிதனாகி வந்து அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று அவன் காத்திருக்க, நீ வேத ஆகமங்களைப் பயிலாமல் விளையாடலாமா?

அனைத்து உலகங்களையும் அநாயாசமாகப் படைத்து, காத்து, அழிக்கும் இறைவன், தனது எளிமையை வெளிப்படுத்தும் விதமாகத் தன் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு அர்ச்சாவதாரமாகக் கோவில்களிலே எழுந்தருளி உள்ளான். அனைத்து சக்திகளும் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் கையை எதிர்பார்த்து அவன் காத்திருக்கிறான்.உலகிலுள்ள அத்தனை பேருக்கும் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்காக இருப்பவன் பகவான். கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்று சொல்கிறது. ‘காஷ்டா’ என்றால் இலக்கு. நாம் அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்கு இறைவனே. ‘கதி:’ என்றால் வழி. இலக்காகிய அந்த இறைவனை அடைவிக்கும் வழியும் அவனே. இலக்கும் அவனே, வழியும் அவனே என்பதே இவ்வாக்கியத்தின் பொருள்.

எல்லோருக்கும் அடைய வேண்டிய இலக்காக இருக்கும் அந்த எம்பெருமான் தானே உனக்கும் அடையத்தக்க இலக்காவான்? எனவே அவனை ஆராதிக்க, அவனை மகிழ்விக்க நீ வேத ஆகமங்களை நன்றாகப் பயின்று மிகச்சிறந்த அர்ச்சகனாக வர வேண்டும்!” என்று என்னை ஆசீர்வதித்தார்.இந்தக் கதையைச் சொன்ன அர்ச்சகர், “அடியேன் ஒருவனுக்கு மட்டும் இல்லை. இதுபோல் பல குழந்தைகளையும் அழைத்து, குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் நல்ல உபதேசங்களைச் செய்து, இறைவனே நாம் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்காவான் என்பதைப் பிஞ்சு மனங்களில் தெளிவாக விதைத்தார் அந்த மகானான ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமி.

அவருடைய வழிகாட்டுதலும் வாழ்த்துகளும்தான் அடியேனைப் போன்ற பலரையும் இந்த நன்னிலையில் இன்று வைத்திருக்கிறது. கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஆராவமுதாழ்வானின் உகப்பு மட்டுமே எங்களின் ஒரே இலக்கு என்று நாங்கள் அவனுக்குத் தொண்டாற்றுகிறோம்!” என்று உருக்கமாகச் சொன்னார் அர்ச்சகர்.விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 431-வது திருநாமமான ‘அர்த்த:’ என்ற திருநாமத்துக்கு என்ன கதை எழுதலாம் என்ற கேள்வியுடன் கோவிலுக்குச் சென்ற அடியேனுக்கு அர்ச்சகர் மூலமாகவே மிகச்சிறந்த கதையைக் காட்டி விட்டார்கள் கோமளவல்லித் தாயாரும் ஆராவமுதாழ்வானும். ‘அர்த்த:’ என்றால் (இவ்விடத்தில்) அடைய வேண்டிய இலக்கு என்று பொருள்.

மிகச்சிறந்த பக்திமான்களுக்கு அடைய வேண்டிய இலக்காகத் திருமால் ஒருவரே இருப்பதால், திருமால் அர்த்த என்று அழைக்கப்படுகிறார்.“அர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அடைய விரும்பும் இலக்குகள் விரைவில் கைகூடும்படி ஸ்ரீஆராவமுதாழ்வான் அருள்புரிவான்.

432. அனர்த்தாய நமஹ (Anarthaaya namaha)

கண்ணனுக்கு மாலிகன் என்றொரு நண்பன் இருந்தான். கேட்டதும் கொடுப்பான் கண்ணன் என்று எல்லோரும் கண்ணனைப் புகழ்வதைக் கவனித்த அந்த மாலிகன், கண்ணனிடம், “நான் கேட்பதை நீ தருவாயா?” என்று கேட்டான். கண்ணபிரானோ, “நீ என்னையே கேட்டாலும் உனக்குத் தருவதற்குத் தயாராக உள்ளேன்!” என்று விடையளித்தான்.
ஆனால், முன் பிறவிகளில் செய்த பாபங்களாலே அந்த அளவுக்குப் பக்குவம் பெறாத அந்த மாலிகன் கண்ணனிடம், “கண்ணா! எனக்கு நீ ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் எப்படிப் பயன்படுத்தி எதிரிகளை வெல்ல வேண்டும் என்று நீ சொல்லித் தரவேண்டும்!” என்று கோரினான்.

தனது நண்பனின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய கண்ணனும், அவனுக்கு உலகிலுள்ள அனைத்து விதமான ஆயுதங்களிலும் பயிற்சி அளித்தான். கண்ணனிடம் பயிற்சி பெற்றுக் கொண்ட அவன், பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்தி நல்லவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். பல சாதுக்கள் அவனால் இன்னலுக்கு ஆளாயினர்.

இவற்றைக் கவனித்த பலராமன் கண்ணனிடம், “என்ன கிருஷ்ணா? இந்த மாலிகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தாயா? சீக்கிரமாக அவனை வதைக்க வேண்டும். ஆனால் நீ அவனை அழித்தால், நண்பனைக் கொன்றவன் என்று உனக்குச் சிலர் பெயர் வைக்கக்கூடும். நீ நேரடியாகத் தொடர்பு படாமல் அவனை அழிக்க வழி உள்ளதா என்று பார்!” என்றார்.
கண்ணன் சிரித்துக் கொண்டே, “அண்ணா! இத்தகைய சில தீய சக்திகளை நான் கொஞ்சம் வாழ விடுவேன். சில வாய்ப்புகளும் தருவேன். அவனாகத் திருந்துகிறானா என்று சோதித்துப் பார்க்கவே இவற்றை நான் செய்கிறேன்.

இவன் திருந்தாவிட்டால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் இவனது தீமைகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் பாருங்கள்!” என்றான்.
இந்நிலையில், மாலிகன் கண்ணனிடம் வந்து, “கண்ணா! இப்போது தான் நாரதர் மூலம் ஒரு செய்தி அறிந்து கொண்டேன். என்னவென்றால், எல்லா ஆயுதங்களிலும் எனக்குப் பயிற்சி அளித்த நீ, உன் கையில் ஏந்தி இருக்கும் சக்கராயுதத்தில் மட்டும் எனக்கு இன்னும் பயிற்சியே அளிக்கவில்லை. அதையும் உன்னிடமிருந்து கற்று வருமாறு நாரதர் சொல்லி அனுப்பினார்!” என்றான்.
கண்ணன் பலராமனைப் பார்த்துப் புன்னகை செய்யவே, பலராமன், “ஓ! நாரதர் மூலம் கிருஷ்ணன் செய்த லீலை போலும் இது!” என்று புரிந்து கொண்டார். மாலிகனைப் பார்த்துக் கண்ணன், “மாலிகா! சக்கராயுதத்தை மிகவும் ஜாக்கிரதையாகப் பிரயோகிக்க வேண்டும். கொஞ்சம் கவனம் குறைந்தாலும் உன் கழுத்தையே அது சீவிவிடும். அந்தப் பயிற்சி உனக்கு வேண்டாம் என நான் நினைக்கிறேன்!” என்றான்.

மாலிகனோ, “இல்லை இல்லை! அதையும் நான் கற்றே தீருவேன்!” என்று கண்ணனை வற்புறுத்தினான். இனி உன் விருப்பம் என்று சொன்ன கண்ணன், மாலிகன் கையில் தன் சக்கரத்தைக் கொடுத்து, அதை ஏவும் முறையையும் சொல்லிக் கொடுத்து ஏவச் சொன்னான். சக்கரத்தை மாலிகன் ஏவ முயன்றவாறே, அது நேராக மாலிகனின் கழுத்தில் பாய்ந்து அவன் தலையைக் கொய்து வதைத்துவிட்டது.

கண்ணன் பலராமனிடம், “அண்ணா! என் நண்பனை நான் கொல்லவில்லை. அவனே சக்கராயுதத்தைத் தவறாகப் பிரயோகித்துத் தன் கையால் தானே மரணத்தைத் தேடிக் கொண்டான் பாருங்கள்!” என்றான். அச்சமயம் அங்கே வந்த நாரதர், “கண்ணபிரானே! உங்களைத் தரிசிக்கும் பேறு பெற்ற சான்றோர்கள், உங்களையே மிக உயர்ந்த இலக்காக வேண்டிப் பெறுவார்கள். ஆனால் இந்த மாலிகனைப் போன்றவர்கள், நீங்கள் உங்களைத் தருவதற்குத் தயாராக இருந்தபோதும், உங்களைத் தவிர்ந்த மற்ற விஷயங்களை நாடித் தங்கள் முடிவைத் தேடிக் கொள்கிறார்களே!” என்றார்.

இவ்வரலாற்றைப் பெரியாழ்வாரும்,
“சீமாலிகன் அவனோடு தோழமை
கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்”
என்று பாடியுள்ளார். மாலிகன் தீயவன் என்றபோதும், கண்ணனுடன் தோழமை கொள்ளும் பேறு பெற்றவன் என்பதால் ஸ்ரீ என்ற அடைமொழி சேர்த்துச் சீமாலிகன் (ஸ்ரீமாலிகன்) என்று குறிப்பிடுகிறார் பெரியாழ்வார்.பக்திமான்கள், ஞானிகளுக்கு அடையத் தக்க மிகச்சிறந்த இலக்காக இருப்பதால், திருமால் அர்த்த: (431-வது திருநாமம்) என்று அழைக்கப்படுகிறார்.

அதே சமயம், மாலிகன் போன்ற தீய எண்ணம் கொண்டவர்கள் திருமாலைத் தவிர்ந்த மற்றைய விஷயங்களை இலக்காக எண்ணி, திருமாலைத் தங்கள் இலக்காகக் கொள்ளாமல் போவதால், திருமால் ‘அனர்த்த:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 432-வது திருநாமம். ‘அனர்த்த:’ என்றால் இலக்காக இல்லாதவர் என்று பொருள். துர்பாக்கியசாலிகளுக்கு இலக்காக இல்லாத திருமால் ‘அனர்த்த:’ எனப்படுகிறார்.“அனர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் எண்ணங்கள் உயர்ந்து பக்குவம் அடையும்படித் திருமால் அருள்புரிவார்.

433. மஹாகோசாய நமஹ (Mahaakoshaaya namaha)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். 1945ம் வருடம். ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வசித்து வந்த காலம். அவரது மூத்த மகனுக்கு உபநயனம் என்ற வைதிகச் சடங்கு செய்து, காயத்திரி மந்திர உபதேசம் செய்ய வேண்டிய தருணம் வந்தது. உபநயனச் சடங்கு செய்வதற்கு அக்காலத்தில் சுமார் 200 ரூபாய் தேவைப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் அது சுமார் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையாகும்.
ஸ்ரீநிதி சுவாமிகளோ என்றுமே உலகியல் செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல் குடந்தையில் உறையும் கோமளவல்லித் தாயார் - ஸ்ரீஆராவமுதாழ்வான் திருவடிகளையே தனது செல்வமாகக் கொண்டிருந்தார்.

“கிம் கேஹை: கலிதை: தனை: அபி கதை: கேதாரஜாலை: ததா
கிம் வா தை: அபி வஸ்துபி: ப்ரியதமை: யாதை: மனோஹாரிபி:
பந்துப்யச்ச ஸமாகதை: பரிபவை: கிம்
வா மம அத்ர ஆகதம்
ஸ்ரீமத் கோமளவல்லிகா ஸஹசரம்
ஸ்ரீசார்ங்கிணம் பச்யத:”

என்று அபர்யாப்தாம்ருத விம்சதி என்னும் துதியில் அவரே பாடியுள்ளார். கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஸ்ரீஆராவமுதாழ்வானைத் தரிசிக்கும் பாக்யம் பெற்ற அடியேனுக்கு மாளிகைகளாலோ, செல்வங்களாலோ, படாடோபப் பொருள்களாலோ, உறவினர்கள் கொடுக்கும் பரிசுகளாலோ ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை. எனது மிகப்பெரிய சொத்தே திருமகள் கேள்வனாகிய திருமால் தான் என்பது இதன் பொருளாகும்.

ஆனால் குடும்ப வழக்கத்தையும் உலகியல் கட்டாயங்களையும் அனுசரித்து அக்காலத்தில் 200 ரூபாயாவது செலவு செய்தாலன்றி உபநயனச் சடங்கை மகனுக்கு நிறைவேற்ற இயலாது. அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று சிந்தித்த நிலையில் சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்ற ஸ்ரீநிதி சுவாமிகள், கோமளவல்லித் தாயாரைப் பார்த்து ஒரு
ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்
“மாத: கோமளவல்லி மன்மன இதம் யுஷ்மத் கடாக்ஷாபிதம்
ப்ருங்கம் வாஞ்சதி ஜங்க்ருதி பரதரா யஸ்யேத்ருசீ ராஜதே
அன்யோன்யம் தன ஹேம ஸங்கதி வசாத் அஸ்மன் மன கர்ணயோ:
ஆனந்தம் தததீ ஜணஜ் ஜணதிதி ப்ரக்ராந்த லீலா ரஸா”

“கோமளவல்லித் தாயே! எனது மனமாகிய தாமரை உனது அருளாகிய வண்டின் ரீங்காரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. உன்னருளால் விரைவில் பொன்னும் பொருளும் மழையாகப் பொழிகின்ற அந்த ஒலியைக் கேட்டு அடியேன் ஆனந்தம் பெறும்படி நீ அருள்புரிய வேண்டும்!” என்று கோமளவல்லித் தாயாரிடமும் சார்ங்கபாணிப் பெருமாளிடமும் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகப் பிரார்த்தனை செய்தார்.

அதன்பின் தனது உறவினரான திருப்புல்லாணி. திரு. ஸ்ரீநிவாசன் அவர்களைச் சந்திப்பதற்காக மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார் ஸ்ரீநிதி சுவாமிகள். கம்ப ராமாயணத்தில் மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான ஸ்ரீநிவாசன் அவர்கள், ஸ்ரீநிதி சுவாமிகளைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து வரவேற்றார். “உங்களைத் தான் காணவேண்டும் என்று கள்ளழகரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். கண்முன்னே வந்து நின்று விட்டீர்களே!” என்றார் ஸ்ரீநிவாசன்.

“என்ன விஷயம்?” என்று கேட்டார் ஸ்ரீநிதி சுவாமிகள். “நீங்கள் இங்கே என் வீட்டில் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஒன்றை ஆற்ற வேண்டும். வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு வேறுபடுத்தி அடியேன் எழுதி வரும் ஆராய்ச்சி நூலுக்கு நீங்கள் ஆற்றும் சொற்பொழிவு மிகவும் உதவியாக இருக்கும்!” என்றார் ஸ்ரீநிவாசன்.
அவ்வாறே அங்கே தங்கிப் பதினைந்து நாட்கள் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

சொற்பொழிவு நிறைவடைந்தவாறே ஸ்ரீநிவாசன் அவர்கள் சரியாக 200 ரூபாய் சன்மானத்தை நாணயங்களாக வழங்கினார். அந்த நாணயங்களின் ஒலி கோமளவல்லித் தாயாரின் சலங்கை ஒலிபோல் ஸ்ரீநிதி சுவாமிகளின் காதுகளில் ஒலித்தது. குசேலர் கேட்காமலேயே கண்ணன் செல்வத்தைத் தந்தருளியது போல், நாம் தற்செயலாக வந்த இடத்தில் இவர் மூலம் 200 ரூபாய் கிடைக்கும் படித் திருமாலும் திருமகளும் அருள்புரிந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்த ஸ்ரீநிதி சுவாமிகள், மேற்கொண்டு தமது மகனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

இந்த ஒரு சந்தர்ப்பம் என்று மட்டுமில்லை, ஸ்ரீநிதி சுவாமிகளின் வாழ்வில் பல தருணங்களிலும் இவ்வாறு செல்வத்தைக் கொடுத்து அவரைக் காத்திருக்கிறார் திருமால். இப்படி அடியார்களுக்கு அருள்புரிவதற்கு ஏதுவாக எல்லையில்லாத தனத்தைக் கொண்டிருக்கும் திருமால் ‘மஹாகோச:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஹாகோச:’ என்றால் அள்ள அள்ளக் குறையாத நிதிகளை உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 433வது திருநாமம்.“மஹாகோசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இல்லங்களில் செல்வச் செழிப்பு நிறையும்.

434. மஹாபோகாய நமஹ (Mahaabhogaaya namaha)

கேரளாவில் உள்ள ஒரு திவ்யதேசமான திருவாறன்விளை என்ற திருத்தலத்தின் தல வரலாறு இது. மகாபாரதப் போர் தொடங்கும் முன் பீஷ்மர் ஒரு சபதம் செய்தார். “கண்ணன் ஆயுதமே எடுக்காமல் பாண்டவர்களுக்கு உதவி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். நான் எப்படியாவது கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன்!” என்பதே பீஷ்மர் செய்த சபதம்.
மகாபாரதப் போர் தொடங்கியது. கையில் குதிரைகளை ஓட்டும் கோலுடன் பார்த்தசாரதியாக - அர்ஜுனனின் தேரோட்டியாக - தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறான் கண்ணபிரான். அர்ஜுனன் கௌரவ சேனையை எதிர்த்துப் போரிலே ஈடுபடுகிறான். கௌரவ சேனையை வழிநடத்தும் பீஷ்மர் ஆக்ரோஷமாகப் பாண்டவ சேனையைத் தாக்கினார். பீஷ்மர் மேல் உள்ள மரியாதையாலே அர்ஜுனனுக்கு அவர்மீது கொடிய பாணங்களை ஏவ மனம் வரவில்லை.

ஒன்பதாம் நாள் போரில் அர்ஜுனன் பீஷ்மரின் பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், கண்ணன் கையில் பிடித்திருந்த கோலைக் கீழே போட்டு விட்டுச் சக்கராயுதத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதைக் கண்ட பீஷ்மர், தனது வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, “கண்ணா! உன் கையால் மரணிக்க நான்
தயாராக உள்ளேன்!” என்றார்.ஆனால் கலங்கிப் போன அர்ஜுனன், கண்ணனின் திருவடிகளைப் பிடித்து மன்றாடி, “என்னை மன்னிக்கவும்! நானே போர் புரிகிறேன்! வாருங்கள்!” என்று அழைத்து வந்து தேர்த்தட்டிலே அமர்த்திவிட்டான்.

ஏன் இவ்வாறு கண்ணன் சக்கராயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடக்க வேண்டும்? இறைவன் தான் தோற்றாலும் தோற்பான், தனது பக்தனைத் தோற்க விடமாட்டான். ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கண்ணன் சபதம் செய்திருந்தான். அவனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று பீஷ்மர் சபதம் செய்திருந்தார். தனது சபதத்தில் தான் தோற்றாலும் பரவாயில்லை, பக்தரான பீஷ்மர் அவரது சபதத்தில் தோற்கக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு முறை கையில் ஆயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான் கண்ணன். மேலும் பரமபக்தரான பீஷ்மருக்குத் தனது நடையழகைக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் கண்ணன் பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான்.

இந்த ரகசியத்தை அம்புப் படுக்கையில் கிடந்த சமயத்தில் பீஷ்மர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார். “நீ ராஜ்ஜியம், செல்வம் இவற்றால் எத்தகைய இன்பம் பெறுவாயோ, அதை விடப் பெரிய இன்பத்தை அருள வல்லவன் பகவான் கண்ணன். செல்வத்தால் பெறும் இன்பமும் உண்மையில் இறைவன் கொடுத்து வருவதே என்பதை உணர்ந்து கொள்!” என்று உபதேசித்தார் பீஷ்மர். அடியார்களுக்காகவும், அந்த அடியார்களை மகிழ்விப்பதற்காகவும் இறைவன் தன்னைத் தாழவிட்டுக் கொண்டு செய்யும் செயல்களை எண்ணி உருகினான் அர்ஜுனன்.

பின்னாளில், பாண்டவர்கள் தங்கள் வாரிசான பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள். கேரளாவில் உள்ள பம்பை நதிக்கரையை அவர்கள் அடைந்தபோது, பாண்டவர்களுள் ஒவ்வொருவரும் அப்பகுதியில் திருமாலுக்காக ஓரோர் கோவில் அமைத்தார்கள். அவற்றுள் அர்ஜுனன் நிர்மாணித்த
 திருக்கோவில் தான் திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் ஆகும். ஆறு மூங்கில் கழிகளைக் கொண்டு கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி, மேற்கொண்டு கோவிலைக் கட்டினான் அர்ஜுனன்..

பீஷ்மர் எனும் பக்தரை மகிழ்விக்கக் கையில்
சக்கரம் ஏந்திய திருக்கோலத்தோடு பார்த்தசாரதி
பெருமாள் அங்கே கோவில் கொண்டு அர்ஜுனனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தார். “போரில் வென்று ராஜ்ஜியம் பெற்றபோது அடைந்த ஆனந்தத்தை விட உன்னை இங்கே தரிசித்ததாலே பேரானந்தம் பெற்றேன்!” என்றான் அர்ஜுனன்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருவாறன்விளை திருத்தலத்தைப் பாடுகையில்,
“இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற
அணிபொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ”
திருக்குறளப்பன் என்றும் பார்த்தசாரதி என்றும் திருநாமம் கொண்டு, பத்மாசனித் தாயாரோடு ஆனந்தம் மேலிடும்படி கோவில் கொண்டிருக்கும் திருமால், இந்த உலகனைத்துக்கும் ஆனந்தம் ஏற்படும்படி ஆட்சி செய்கின்ற தலைவர் ஆவார். அவர் கோவில் கொண்டிருக்கும் திருவாறன்விளை திருத்தலத்தைத் தொழும் நாள் எப்போது கைகூடுமோ என்று பாடுகிறார்.இப்படி பீஷ்மர், அர்ஜுனன், நம்மாழ்வார் தொடக்கமாகத் தனது அடியார்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய ஆனந்தத்தை அருள்வதால், திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.

போகம் என்பது மகிழ்ச்சி, ஆனந்தத்தைக் குறிக்கும். செல்வச் செழிப்பால் ஒருவர் பெறும் ஆனந்தம் எதுவோ, அதுவும் கூட உண்மையில் இறைவனின் அருளால் தான் கிடைக்கிறது. இப்படி அனைத்து வித ஆனந்தத்தையும் அருள்பவராகத் திகழ்வதால் திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 434வது திருநாமம்.
“மஹாபோகாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆனந்தம் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!