×

திருக்குறளில் காதலியின் நெஞ்சம்

குறளின் குரல்-

நெஞ்சொடு கிளத்தல், நெஞ்சொடுபுலத்தல் என காமத்துப் பாலில் இரண்டு அதிகாரங்கள் எழுதியுள்ளார் திருவள்ளுவர். `நெஞ்சொடு கிளத்தல்’ என்பது தலைவி தன் துன்பத்தைத் தனது நெஞ்சுக்குச் சொல்லுதல், `நெஞ்சொடு புலத்தல்’ என்பது தலைவி தன் நெஞ்சோடு மாறுகொண்டு பேசுதல்.இந்த இரு அதிகாரங்களிலும் தலைப்புகளில் நெஞ்சு இடம்பெற்றிருக்கிறது, அது மட்டுமல்ல, இவற்றில் உள்ள இருபது குறட்பாக்களிலும் கூட ஒவ்வொரு குறட்பாவிலும் நெஞ்சு இடம்பெற்று நம் நெஞ்சுக்கு நிறைவு தருகிறது,இந்த இரண்டு அதிகாரங்களும் தலைவிக்குத் தலைவன் மேல் உள்ள தீராத காதலின் தீவிரத்தையே பேசுகின்றன. காதலின் தீவிரம் காதலியின் நெஞ்சத்தையும் அதில் உள்ள நினைவு களையும்  மையமாக வைத்துப் பேசப் படுகிறது,
நெஞ்சொடு கிளத்தல்
`நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.’

(குறள் எண் 1241)
நெஞ்சே!  எந்த மருந்தினாலும் தீராத என் காதல்நோய் தீரவேண்டும், அதற்கு ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப்பார்த்து, உன்னால் சொல்லமுடியுமா?.
`காதலவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு’
(குறள் எண் 1242)

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமை, நீ வாழ்க.
`இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்
துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.’
(குறள் எண் 1243)

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லை, அப்படியிருக்க  நெஞ்சே! நீ
மட்டும் இங்கிருந்துகொண்டு அவரை நினைத்துக் கலங்குவதால் என்ன பயன்?
`கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.’
(குறள் எண் 1244)

  நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று எண்ணி என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.
`செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.’
(குறள் எண் 1245)

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்துவிட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலை நாம் கைவிட்டுவிட முடியுமா?.
`கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.’
(குறள் எண் 1246)

  நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக்  கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ, இப்போது அவர் மீது கொள்ளுகிற சினம் பொய்யானதுதானே?.
`காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டு.’
(குறள் எண் 1247)

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் வெட்கத்தையாவது விட்டுவிடு , இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக்கொள்ள  என்னால் முடியாது.
`பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.’
(குறள் எண் 1248)

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்துவிட்டாரேயென்று ஏங்கும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்றுகொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதுதான்,
`உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.’
(குறள் எண் 1249)

 உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கிறார், அப்படியிருக்க, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே ஏன் தேடி அலைகிறாய்?.
`துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.’
(குறள் எண் 1250)

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.
நெஞ்சொடு புலத்தல்
`அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா தது.’
(குறள் எண் 1291)

  நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.
`உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைக்
செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு’.
(குறள் எண் 1292)

என் நெஞ்சமே, நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என எண்ணி அவரிடமே செல்கின்றாயே, அது எதனாலோ?
`கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்’.
(குறள் எண் 1293)

நெஞ்சமே, நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?
`இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று’.
(குறள் எண் 1294)

நெஞ்சமே, நீதான் ஊடுதலைச் செய்து அதன் பலனையும் நுகரமாட்டாய். இனிமேல் அதுபோன்ற செய்திகளைப்பற்றி உன்னோடு ஆராய்பவர்தாம் எவரோ?
`பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.’
(குறள் எண் 1295)

அவரைப் பெறாத போதும் அஞ்சும். பெற்றபோதும் என்னை விட்டுப் பிரிவாரோ என்று அஞ்சும். இவ்வாறு என் நெஞ்சம் எப்போதும் நீங்காத துயரையே உடையதாகின்றது.
`தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.’
(குறள் எண் 1296)

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகவில்லை, என்னைத் தின்பதுபோலத் துன்பம் தருவதாக இருந்தது.
`நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.’
(குறள் எண் 1297)

காதலரை மறக்கவியலாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து மறக்கக் கூடாததாகிய வெட்கத்தையும் நான் மறந்தேன்.
`எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.’
(குறள் எண் 1298)

 பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம் அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே.
`துன்பத்திற்கு யாரே துணையாவார்
தாமுடைய நெஞ்சம் துணையல் வழி.’
(குறள் எண் 1299)

தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில் வேறு யார் தாம் துணையாவார்கள்?
`தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.’
(குறள் எண் 1300)

  தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்.நெஞ்சோடு பேசுகிற உத்தியில் அமைந்துள்ள இந்தக் குறட்பாக்கள் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த காதலைப் பற்றி நாம் எண்ணியெண்ணி வியக்கும் வண்ணம் தெரிவிக்கின்றன, இதுபோன்ற அழகிய உத்திகள் தான் நீதிநூலான திருக்குறளை இலக்கியமாக்குகின்றன.

`கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற புகழ்பெற்ற வரியில் நெஞ்சம் என்ற சொல் வருகிறது, இந்த வரி கம்பராமாயணத்தில் உள்ளதாகப் பலரும் நினைக்கிறார்கள். கடன்பட்டார் நெஞ்சத்தைப் பற்றி உருக்கமாகப் பேசும் இவ்வரி பெயர் தெரியாத புலவர் ஒருவர் எழுதிய ஒரு தனிப்பாடலில் உள்ள வரி, முழுப் பாடல் இதோ:

விடம்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்டார் நெஞ்சம் போலக்
கலங்கினான் இலங்கை வேந்தன்.

அனுமன் நெஞ்சில் ராமபிரான் இருக்கும் உண்மையை உலகிற்கு நிரூபிக்க அனுமன் தன் நெஞ்சைப் பிளந்து காட்டியதாகவும் நெஞ்சின் உள்ளே தென்பட்ட ராமனைப் பார்த்து மக்கள் அதிசயித்து வணங்கியதாகவும் ஓர் அபூர்வ ராமாயணக் கதை சொல்கிறது. நெஞ்சம் அடங்கினால் முக்தி கிடைக்கும் என்கிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம். `நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறது அது.

நாலடியார் பாடலொன்று மனிதர்களுக்கு எது அழகு என ஆராய்கிறது, தலைமுடி அழகோ முந்தானையில் கரையிட்ட அழகோ மஞ்சள் தரும் அழகோ அழகல்ல, கல்வி கற்று அறம் சார்ந்து நடுநிலையில் நின்று நல்ல நெறிகளின் படி வாழ்கிறோம் என நெஞ்சத்தில் ஏற்படும் உணர்வே சரியான அழகு என்கிறது அப்பாடல்,  

`குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.’
சிவபெருமானை நெஞ்சத்தில் வைத்துப் போற்றும் திருநாவுக்கரசர்
பல பாடல்களில் நெஞ்சம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே போற்றுகிறார்,

`முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.’
என்று தொடங்கி, வரும் பத்துப் பாடல்களிலும் நெஞ்சம் என்ற சொல்லை வெவ்வேறு விதங்களில் நயம்படப் பயன்படுத்துகிறார்`அன்பனை நினைந்த நெஞ்சம், அரும்பொனை நினைந்த நெஞ்சம், நிருத்தனை நினைந்த நெஞ்சம், நீற்றனை நினைந்த நெஞ்சம், நெருப்பனை நினைந்த நெஞ்சம், ஆதியை நினைந்த நெஞ்சம், அழகனை நினைந்த நெஞ்சம், அண்ணலை நினைந்த நெஞ்சம், அரவனை நினைந்த நெஞ்சம்’என்றெல்லாம் அவர் எழுதும் வரிகள் சிவனடியார்களின் நெஞ்சத்தை உருக்கும் வலிமை பெற்றவை.

 `நெஞ்சு விடு தூது’ என்ற புகழ்பெற்ற செய்யுள் நூல்  உமாபதி  சிவாச்சாரியார் எழுதியது.  இறைவனைத் தலைவனாகப் பாவித்து தலைவி இறைவனுக்குத் தன் நெஞ்சைத் தூதனுப்புவதான பாணியில் எழுதப்பட்டது. பசு, பதி, பாசம் ஆகிய சைவ சித்தாந்தக் கொள்கைகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மகாகவி பாரதியாரும் தம் கவிதைகளில் நெஞ்சைப் பற்றி நிறைய எழுதுகிறார்,

`நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,

தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.’
என பராசக்தியே தம் நெஞ்சுக்கு நீதியாக இருப்பதாய்க் குறிப்பிடுகிறார்.
`அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!’
என முழங்கிய அவர் அஞ்சிஅஞ்சிச் சாகும் மனிதரைக் கண்டு தமக்கு நெஞ்சு பொறுக்கவில்லை என்கிறார்.
`நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால் !

அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சகப் பேய்களென்பார் - இந்த
மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத்
துயர்ப்படு வார்எண்ணி பயப்படுவார்’

ஒரு காதலி தன் காதலனிடம் அவன் தாயாரின் நெஞ்சை எடுத்துவரச் சொல்லிக் கேட்டாளாம். மருமகள் தன் நடத்தையால் மாமியாரின் நெஞ்சைக் கவர வேண்டும் என்று சொல்வதை அவள் வேறு விதத்தில் அர்த்தப்படுத்திக் கொண்டுவிட்டாள் போலிருக்கிறது !

அவள் காதலனும்  உடன்பட்டுத் தன் தாயிடம் அவள் நெஞ்சைத் தரமுடியுமா என்று கேட்க, மகன்மேல் மிகுந்த பாசம் கொண்ட அந்தத் தாயும் அதற்கு சம்மதித்தாளாம்.
காதலன் தன் தாயைக் கொன்று அவள் நெஞ்சத்தை எடுத்துக் கொண்டு காதலியை நோக்கி ஓடிச் சென்றபோது கல்லில் கால் தடுக்கிக் கீழே விழுந்தானாம், அப்போது அவன் கையிலிருந்த தாயின் நெஞ்சு `மகனே பார்த்துப் போ, அடிபட்டால் உனக்குக் கால் வலிக்குமே’ என்று பாசத்தோடு எச்சரித்ததாம், தாய்ப் பாசத்தின் பெருமையை விளக்க இப்படியொரு கற்பனைக் கதை சொல்லப்படுகிறது,பல திரைரசிகர்கள் நெஞ்சத்தில் இடம்பெற்ற திரைப் பாடல்களிலும் நெஞ்சம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது, `நெஞ்சம் மறப்பதில்லை, `நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே,’ `நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா, `ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே’ `நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி’ `நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா` போன்ற பாடல்கள் சில உதாரணங்கள்.  

`நெஞ்சொடு கிளத்தல், நெஞ்சொடு புலத்தல்’ என்ற இரு அதிகாரங்களில் மட்டுமல்லாமல் மேலும் பல அதிகாரங்களில் பற்பல குறட்பாக்களில் நெஞ்சைப் பற்றிப் பேசுகிறார் வள்ளுவர். நெஞ்சம் என்ற சொல் திருக்குறளில் இவ்விதம் ஏராளமான இடங்களில் இடம்பெற்று நம்நெஞ்சைத் தொடுகிறது.

(தொடரும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறளில் வேள்வி!