இந்த வார விசேஷங்கள் : திருஞானசம்பந்தர் குருபூஜை

16-5-2022 - திங்கட்கிழமை சம்பத் கௌரி விரதம்

வருடம் முழுக்க பல்வேறு பெயர்களில் கௌரி விரதங்கள் உண்டு. இன்று பார்வதி தேவியை கௌரியாகக் கருதி பூஜித்தால் சகல நன்மைகளும் ஏற்படும். காசி அன்னபூரணியை சம்பத்கவுரி என்பார்கள். சம்பத் என்றால் செல்வங்கள் என்று பொருள். சகல செல்வங்களும் தருகின்ற இந்த விரதத்தை இன்றைய நாளில் இருக்க வேண்டும்.

பங்குனி மாதம் வளர்பிறை திருதியை திதியில் சம்பத் கௌரி விரதம் இருப்பதுண்டு. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த அன்னைக்கு ஒரு வடிவம் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதிதேவி பசுவுடன் காட்சியளிக்கும் கோலத்திற்கு சம்பத்கவுரி கோலம் என்று பெயர் காரணம் சில தலங்களில் பார்வதி தேவியே பசுவாக அவதரித்து சிவபெருமானை பூஜித்தது உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடை நாயகி ஆகிய திருப்பெயர்கள் உண்டு. விரத நாட்களில் வீட்டில் கலசம் வைத்து, அம்பாளை ஆவாகனம் செய்து, வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குறைந்தபட்சமாக அன்றைய தினம் அம்பாள் படத்திற்கு அலங்காரம் செய்து, நிவேதனம் வைத்து, தூபதீபம் காட்டி வழிபட வேண்டும். கோயிலுக்குச் சென்று அம்பாளுக்கு விளக்கு வைத்து வர வேண்டும்.

19-5-2022 - வியாழக்கிழமை திருஞானசம்பந்தர் குருபூஜை

இன்றைய தினம் மூல நட்சத்திர நாள். திருஞானசம்பந்தரின் குருபூஜை நாள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சைவ சமயத்து தூண்களில் ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படுபவர். திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் விவரித்துள்ளார். இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத்தொகையில்.`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.  ஆளுடைய பிள்ளையார், பாலறாவாயர், பரசமய கோளரி என்பன அவரது வேறு பெயர்கள். வைகாசி மூல நாளில், நல்லூர் பெருமணம் என்று அறியப்படும் ஆச்சாள்புரத்தில் சிவ சோதியில் கலந்தார். திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சம்பந்தரே, மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார். வருடாவருடம் வைகாசி மாதத்தில், இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, வீதிகளில் உலா வருவார்.

19-5-2022 - வியாழக்கிழமை  

திருநீலநக்கர் குருபூஜை

திருநீலநக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தார். இவர் சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அர்ச்சித்து வணங்குதலே சிறப்பு எனத் தெளிந்து அதன்படி வாழ்ந்தார். நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்தார். பல திருப்பணிகளையும் செய்துவந்தார்.

திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன் வர, கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்தார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனை வாயினால் ஊதித் தள்ளினார்.

நாயனார் அச்செயலைக்கண்டு சினந்தார்.

‘‘சிவலிங்கத்தின் மீது எச்சில் படலாமா? இது பாவமல்லவா. இப்படி பாவம் செய்த உன்னைத் துறந்தேன்” என்று மனைவியை அப்படியே விட்டு விட்டு, வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி, ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது, அயவந்திப் பெருமான் கனவில் காட்சி தந்தார். ‘‘அன்பனே!  இதோ என் திருமேனியைத் பார். உன் மனைவி ஊதி எச்சில் பட்ட இடம் தவிர, மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் பார்” என்று காட்ட, திடுக்கிட்டார்.  

இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். உடனே ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருவடிகளில் விழுந்து, தன் தவறை மன்னிக்கச் சொல்லி, மனைவியாரையும் உடனழைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய குருபூஜை நாள் இன்று.

19-5-2022 - வியாழக்கிழமை திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூஜை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ,சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் . இவர் விருத்தாச்சலம் அருகே திருஎருக்கத்தம்புலியூரில்(இப்போது ராஜேந்திர பட்டினம்) பாணர் குலத்தில் பிறந்தவர். யாழ்  மீட்டுவதில் வல்லவர். இவர் மனைவியார் மதங்கசூளாமணியாரும்  யாழ் மீட்டுவதில் நிபுணர். இவர்கள் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடிப் பணியும் தொண்டினைப் புரிந்துவந்தனர். ஒரு முறை  மதுரை சென்று அங்கே உள்ள இறைவனைப் பாடுகின்றபொழுது, அவர்களுக்கு பலகை போட்டு மரியாதை செய்யும்படி இறைவன் ஆலவாய் அண்ணல் சரியாய் கோள் கொடுக்க அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகையிட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொரு பாகனை வணங்கி அற்புதமாகப் பாடி சைவ சமயத்திற்கு பெரும் தொண்டு ஆற்றினார். அவருடைய குருபூஜை வைகாசி மூலம் இன்று.

19-5-2022 - வியாழக்கிழமை  முருக நாயனார் குருபூஜை

முருக நாயனார் சோழ நாட்டில் திருப்புகலூர் என்னும் ஊரில் வேதியராகப் பிறந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு நந்தவனம் செல்வார்.  அன்று அலர்ந்த பூக்களைப்  பறித்து வகைவகையான மாலைகளைத் தொடுப்பார். இறைவனுக்குத் தலையில் அணியும் இண்டை, மார்பில் அணியும் தார், பெரிய மாலையாகிய தாமம் என பலவகை மாலைகளைத் தொடுப்பார். அதனை இறைவனுக்கு அணிவித்து கண்ணீர் மல்க பூஜை செய்வார். சிவனடியார்கள் வந்து தங்குவதற்கும் திருப் புகலூரில் திருமடம் ஒன்றைக் கட்டினார். அம்மடத் திற்கு  திருஞான சம்பந்தர் வந்தபோது அவரை எதிர்கொண்டு அழைத்துப்  போற்றினார். ஞானசம்பந்தர் இவர் மீது அன்பு கொண்டு தம் திருமண நிகழ்ச்சிக்கு அழைத்தார். திருநல்லூரில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருமண நிகழ்ச்சியில் முருகநாயனார் கலந்து கொண்டார். அந்த திருமணத்தின்போது எழுந்த இறைசோதியில் முருகனாரும் மற்றவர்களுடன் இணைந்து சிவசோதியில் கலந்தார். முருக நாயனார் குரு பூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

19-5-2022 - வியாழக்கிழமை  சங்கடஹர சதுர்த்திஇன்றைய தினம் உபவாசம் இருந்து, மாலையில் அருகாமையில் உள்ள விநாயகர் ஆலயத்திற்குச்  சென்று வழிபாடு செய்ய வேண்டும் இதன் மூலம், எல்லாவகைச்  சங்கடங்களும் விலகி நல்வாழ்வு கிடைக்கும்.

Related Stories: