×

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடர கோரிக்கை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி நடத்துபவர்கள் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் உள்ளிட்டோர் முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வெளிவட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த சுற்றுலா நடவடிக்கைகளை விரைந்து துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட ( Corezone) பகுதிகளில் யானை சவாரி, வாகன சவாரி ஆகியவை வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல், வளர்த்து யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல், வெளிவட்ட ( Buffer Zone) வனப்பகுதிகளான சீகூர் சிங்கார வனப்பகுதிகளில் பொக்காபுரம் விபூதி மலை, ஆனைகட்டி, சிறியூர்,  மாயார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மசினகுடி பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா வாடகை ஜீப்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்கும் சூழல் சுற்றுலா திட்டம் கடந்த 2019ம்  ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட இந்த சுற்றுலா நடவடிக்கைகள் தற்போது வரை துவங்கப்படவில்லை. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை மசினகுடி ஊட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இங்கு உள்ள சுற்றுலா நடவடிக்கைகள் இன்னும் துவக்கப்படாத காரணத்தால் வரும் சுற்றுலா பயணிகள் நேரடியாக ஊட்டிக்கு சென்று விடுவதால் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா வருமானத்தை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். சுற்றுலா வருமானத்தை நம்பி உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானம் இன்றி தவிப்பதாகவும், இங்கு உள்ள ஜீப்களுக்கு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர பெரிய அளவில் வருமானம் எதுவும் இல்லை என்பதாலும் முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வெளிவட்ட சுற்றுலா நடவடிக்கைகளை விரைவாக துவக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதேபோல், இங்குள்ள சுற்றுலா விடுதிகளுக்கு எல்லா காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்தது. தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் காலங்களில் மட்டுமே ஓரளவு சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கும் நிலையில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விடுவதால் தங்களது வருமானம் பாதிப்பதால் சுற்றுலா விடுதிகள் நடத்துபவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.ஆனால் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து உரிய உத்தரவு வராததால் இந்த நடவடிக்கைகள் இதுவரை துவக்கப்படாமல் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tigers ,Cuddalore ,Masanakudi ,Nilgiri District Kudalore ,Badumalai Tigers ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...