×

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும்: ஆய்வுக்குப் பின் அமைச்சர்கள் தகவல்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும், வரும் 2024க்குள் ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் நிறைவடையும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் வகுத்துமலை அடிவாரத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின்னர், அவர்கள் அளித்த பேட்டி:தென்னகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் புகழை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அலங்காநல்லூர் பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்படுமென அறிவித்தார். அதனடிப்படையில் நாங்கள் ஏற்கனவே இரு இடங்களை பார்வையிட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியின் அருகிலேயே இந்த மைதானம் அமைக்க முதல்வர் கேட்டுக்கொண்டதன் படி, தற்போது இந்த இடத்தில் 16 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஸ்டேடியம் அமையவுள்ளது.வனப்பகுதியை ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்த சூழலிலும் வனத்துறை இடத்தை அரசு கையகப்படுத்தாது. முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, 16 ஏக்கரில் மண் பரிசோதனை செய்து, இதை சமப்படுத்தி, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெறும். முதல்வரின் அனுமதியும், நிர்வாக ஒப்புதலும் பெற்று விரைந்து முடிக்கக்கூடிய வகையில் முறையாக ஒப்பந்தம் விடப்படும். வருவாய்த்துறையினர் அளவீடுகள் செய்து, திட்ட அறிக்கை தயார் செய்த பின், ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்கும். வரும் 2024க்குள் இந்த இடத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதற்கு பொதுப்பணித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும்: ஆய்வுக்குப் பின் அமைச்சர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Alankanallur ,Ministers ,A.V.Velu ,P.Murthy ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் கோயிலில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு