×

இரண்டல்லாத ஒன்று’ என்றார் சங்கரர்

ஸ்ரீசங்கரர் ஜெயந்தி

கி.மு.  ஏழாம் நூற்றாண்டு, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடி என்னும் ஊரில், சிவன் மீது அதீத பக்திகொண்ட சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர்  வசித்துவந்தனர். இவர்கள் புத்திர பாக்கியம் வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்சூர் வடக்குநாதரை வழிபட்டுவந்தனர். ஒருநாள் சிவகுருவின்  கனவில் தோன்றிய சிவன், அனைத்து  நற்குணங்களும் ஞானமும் நிறைந்த, குறைந்த ஆயுள்கொண்ட புத்திசாலி மகன் வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளைக் கொண்ட சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார்.

இறைவனின் கேள்வியை முழுமையாக புரிந்துகொள்ளாத சிவகுரு, தங்கள் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில், புத்திசாலிக் குழந்தையே வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறக்கப்  போவதை எண்ணி ஆனந்தம்கொண்டாள்.

ஒரு வைகாசி மாதம் பஞ்சமி திதியன்று  சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரகங்கள் உச்சத்தில் இருந்த சுப வேளையில் இறைவனின் அருளால் அந்த தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து  சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். சோதிடர்கள், இவன் ஒரு பெரிய ஞானியாக வருவான் என்று கூறினார்கள். ஒருநாள் குழந்தை வெளியில் விளையாடிக்  கொண்டிருந்தபோது ஒரு பெரிய நாகமொன்று  அருகாமையில் வந்துவிட்டது.  இதைப்பார்த்த பெற்றோர்கள் பதறினர். அந்த பாம்பு சிறிது நேரம் அவருடன்  விளையாடிய பின், விபூதியாகவும், ருத்ராட்சமாகவும் மாறிற்று. அதன்பிறகு குழந்தையின் உடலில் சிவச்சின்னங்கள் இருப்பதை கண்டு  குழந்தைக்கு சங்கரன் என்று பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூன்று வயதாகும்போது தந்தை சிவகுரு காலமானார்.

சிறுவயதிலேயே  சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்கு தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால், ஆர்யாம்பாள்  மறுத்துவிட்டாள். ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், பூர்ணா நதிக்குச்  சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர்  உரத்த குரலில், `அம்மா! கிரகவாசியான என்னை முதலை இழுத்துச் சென்று  கொண்டிருக்கிறது. சந்நியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் என் காலைவிடும்’ என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள், மகன் பிழைத்தால் போதும் என்ற நினைப்பில் சங்கரர் சந்நியாசியாக அனுமதி கொடுத்தாள். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விலகியது. பிரம்மாவின் சாபத்திற்கு ஆளான ஒரு கந்தர்வனே முதலையாக வந்திருந்தான்.

சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்றவன், சங்கரரை வணங்கி தன் இருப்பிடம்  சென்றான். கரை ஏறி வந்த சங்கரர் வீட்டிற்குச் செல்லாமல், துறவியாய்  “உலக  சஞ்சாரம் செய்ய புறப்படுகிறேன், உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள்” என்று தாயிடம் கூறி விடை கேட்டார். மகனின் விருப்பத்தை அதற்கு மேலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த ஆர்யாம்பாள் ஓப்புக் கொண்டு, “என்  கடைசிக் காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக்கடன்களை செய்ய வேண்டும்” என்று  கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார்.

 ஆதிசங்கரரின் படைப்புகளில் முதலாவது, முதன்மையானது, கனகதாரா ஸ்தோத்தரம். ஒரு ஏழைக் குடும்பத்தின் மீது ஏற்பட்ட பரிவில் அவர் இதை பாடினார். குருகுலவாசம் செய்த காலத்தில் தினந்தோறும் பிச்சை எடுத்து குருவிற்கு அர்ப் பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் வீட்டு வாசலில் நின்று, பவதி பிக்ஷாம் தேஹி என்றார். குரல்கேட்டு வெளியே வந்த ஏழையின் மனைவி, ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக  தன்னிடம் ஏதுமில்லையே என்று வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி,  உலர்ந்துபோன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள். இந்த  கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர்க் குளமாக்கியது.

வறுமையில் வாடும்போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது  அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமிதேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்தபோது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியாக மகாலட்சுமி பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய  திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில்தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது)  சங்கரர் நிலை நாட்டியது அத்வைத தத்துவம். இதோ காஞ்சி மகாபெரியவர் அத்வைதம் குறித்து சொல்வதைப் பார்ப்போம்.

அத்வைதம்’  என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? ‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w  ஆகிவிட்டது. ‘த்வி’தான் two  இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.
எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார்.

அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான்.

ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.

இந்த அனுபவத்தை அடைந்துவிட்டால், அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம், எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது. நமக்குப் புறம்பாக எதுவோயிருப்பதாக நினைப்பதால்தானே அதனிடமிருந்து கஷ்டம், பயம், காமம், குரோதம், இத்யாதிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன! இது தானே சம்ஸார பந்தம்? நம்மைத் தவிர இன்னொன்றே இல்லாதபோது எவன் கட்டப்படுவான், எது கட்டுப்படுத்தும்? கட்டு என்பதுதான் ஏது? இரண்டாவது வஸ்துவேதான் கிடையாதே! கட்டு என்றும் கட்டுகிற வஸ்து என்றும் நமக்கு வெளி வஸ்து எப்படியிருக்க முடியும்? கட்டிலிருந்து விடுபட்ட (முச்-விடுபடுதல்) இந்த நிலைதான் முக்தி அல்லது மோக்ஷம்.

சாரதா பிரதிஷ்டை: கர்நாடகாவிலுள்ள  பல புண்ணிய தலங்களை தரிசித்த சங்கரர், துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த  சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார். தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை  நடத்தித் தந்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் அங்கிருந்தது. அங்கு அவர் கண்ட ஒரு காட்சி அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது.  நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது  ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து தவளையைக் காப்பாற்றிய அற்புதக் காட்சியே அது.

இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக  இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடமாக இருக்க வேண்டும் என கருதினார். முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதா பரமேஸ்வரியை அதில் பிரதிஷ்டை செய்தார். பன்னிரண்டு ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார்.

சர்வக்ஞபீடம் அமர்தல்:  சங்கரர் இமயமலையில் கங்கைக் கரையில் தன் சீடர்களுடன் தங்கிவந்தார். அப்போது, காஷ்மீரத்தில் அன்னை சாரதா தேவியின் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு சர்வக்ஞபீடம்  இருக்கிறது. இதில், எல்லாம் அறிந்த சர்வக்ஞன் மட்டுமே அமரமுடியும். அதன்  நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு. வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய  திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன. ஆனால், தெற்குப் பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்குவாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார். உடனே சங்கரர் தென்திசைக் கதவு வழியாக அக்கோயிலுக்குள் நுழைய வேண்டுமென்று, அக்கோயிலை நோக்கிச் சென்றார்.  அவர் தெற்கு வாயிலை அடைந்தார்.

அங்கு பல அறிஞர்களை தம்முடைய வாதத்திறமையால் வென்றார். தென்திசைக் கதவு திறக்கப்பட்டது.  சங்கரர் பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார். சங்கரர் அங்கிருந்த சிம்மா
சனத்தில் உட்காரப் போனார். அப்பொழுது, சரஸ்வதி தேவியின் குரல்  கேட்டது. இந்த சிம்மாசனத்தில் உட்கார சர்வக்ஞனராக இருந்தால் மட்டும் போதாது, சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி. அதற்கு  சங்கரர், பிறந்ததிலிருந்து நான் ஒரு பாவத்தையும் அறியேன். நான் சர்வசுத்தன்  என்றார். இதைக் கேட்டு சரஸ்வதி மகிழ, சங்கரர் சர்வக்ஞ பீடத்தில் ஏறி அமர்ந்தார்.

அதன்பின்னர் அவர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.சங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ரி சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். சிலகாலம்  பத்ரியில் வசித்துவிட்டு கேதாரம் அடைந்தார். சங்கரர் சிவபெருமானைப்  பிரார்த்தனை செய்ததால், அங்கு
ஒரு வெந்நீர் ஊற்று தோன்றியது. இன்றும் அந்த  ஊற்றை நாம் காணலாம். சிவபெருமானின் அவதாரமாகிய சங்கரர் தமது 32வது (கி.பி.820) வயதில் ஈசனோடு ஈசனானார்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

Tags : Shankar ,
× RELATED வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை...