×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

421. பரிக்ரஹாய நமஹ (Parigrahaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமன் தனது அவதாரத்தை நிறைவு செய்துகொண்டு வைகுண்டத்தை நோக்கிப் புறப்பட்ட அளவில், அயோத்தியில் உள்ள அனைத்து உயிர்களும் ராமனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கின. வேதங்கள் வேதியர் வடிவில் ராமனைப் பின்தொடர்ந்தன. காயத்திரி உள்ளிட்ட வேதமந்திரங்களும் ராமனைப் பின்தொடர்ந்தன. முனிவர்கள் பின்தொடர்ந்தார்கள். அயோத்தியில் வாழும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்மணிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பின்தொடர்ந்தார்கள். பட்சிகள், பசுக்கள் உள்ளிட்ட பிராணிகளும் ராமனைப் பின்தொடர்ந்தன.

அச்சமயம் அந்த உயிர்கள் அனைத்தும் தன்மீது வைத்திருக்கும் அன்பை நினைத்துப் பார்த்தான் ராமபிரான். ஏற்கனவே ராமன் வனவாசம் புறப்பட்டுச் சென்ற சமயத்தில் அயோத்தியில் உள்ள மரங்கள், பொய்கைகள் உட்பட சராசரங்கள் அனைத்தும் ராமனைப் பிரிந்த துயரத்தால் வாடின.

“விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்சிதா:
அபி வ்ருக்ஷா: பரிம்லானா: ஸபுஷ்பாங்குர கோரகா:”
என்று இதை வால்மீகியும் வர்ணித்துள்ளார். மீண்டும் ஒருமுறை அத்தகைய பிரிவுத்துயரை அனுபவிக்கும் நிலை அயோத்தியில் உள்ள உயிர்களுக்கு ஏற்படக்கூடாது என்று கருதினான் ராமன்.
அதனால், அயோத்தியில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தையும் தன்னோடு அழைத்துச் சென்று சாந்தானிக லோகம் என்னும் உலகில் அவர்களைச் சேர்த்துவிடலாம் என்று தீர்மானித்தான். சாந்தானிக லோகம் என்பது பிரம்மாவின் சத்திய லோகத்துக்கும் மேலே இருக்கும் உலகம்.

அதை அடைந்தவர்கள், அங்கிருந்தபடி எளிதில் பக்தியோகமோ சரணாகதியோசெய்து விரைவாக வைகுண்டலோகத்தை அடைந்துவிடமுடியும். பின், வைகுண்டத்தில் நிரந்தரமாக இறைவனுடன் கூடியிருந்து இறையனுபவத்தில் ஈடுபடலாம்.ராமனை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த சிலர் கூடத் தங்களை மறந்து ராமனைப் பின்தொடரத் தொடங்கினார்கள். சரயுநதியிலே இறங்கிய ராமன் ஸ்ரீமந்நாராயணனின் திருமேனியில் சேர்ந்தான்.

பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வானில் தோன்றித் திருமாலைப் பூஜித்தார்கள். அப்போது நாராயணனின் திருமேனியில் சேர்ந்த ராமன் பிரம்மாவிடம், “நீங்கள் வழித்துணையாக இருந்து என்னைப் பின்தொடர்ந்து வந்த இந்த உயிர்கள் மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தையும் சாந்தானிக லோகத்தில் சேர்த்து விட வேண்டும். அங்கிருந்து அவர்கள் வைகுண்ட லோகத்தையும், காலக்கிரமத்தில் அடைவார்கள்!” என்று சொன்னான்.

“அத்தனை பேருக்கும் முக்தியா?” என்று கேட்டார் பிரம்மா. அதற்கு ராமன், “நான் இல்லாவிட்டால் எப்படி என் இளவல் லக்ஷ்மணன் மூச்சு விட மாட்டானோ, அவ்வாறே நான் இல்லாமல் இங்கே அயோத்தியில் அஃறிணைப் பொருட்கள் கூட இராது. எனவே அயோத்தியின் சராசரங்கள் அனைத்தையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் இப்போதே சாந்தானிக லோகத்தில் சேர்க்கவும்!” என்று ராமன் சொன்னான். அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார் பிரம்மா.

இவ்வரலாற்றைக் குலசேகரப் பெருமாளும்,
“அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னை”
என்று பாடுகிறார்.

இப்படி அயோத்தியில் உள்ள அனைத்து அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள், அனைத்து ஜீவராசிகள், அவர்களைச் சார்ந்தவர்கள் என அத்தனை பேரையும் தன்னோடு அழைத்துச் சென்றதால், ராமன் ‘பரிக்ரஹ:’ என்று அழைக்கப்படுகிறான். ‘பரிக்ரஹ:’ என்றால் அனைத்தையும் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 421-வது திருநாமம்.“பரிக்ரஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை அபிமானத்தோடு தன்னுடன் இணைத்துக் கொள்வான் ராமன்.

422. உக்ராய நமஹ (Ugraaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430
[பீஜம் அவ்யயம்] வரை - கல்கி அவதாரம்)

பரீட்சித் மகாராஜாவுக்கு வியாசரின் மகனான சுகப்பிரம்மம், ஸ்ரீமத் பாகவதம் என்ற மிக உயர்ந்த புராணத்தை உபதேசம் செய்தார். அதில், பகவானின் வெவ்வேறு அவதாரங்
களின் வரலாறுகளையும், இறையடியார்களின் வரலாறுகளையும் விவரித்த சுகப்பிரம்மம், குறிப்பாகக் கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணனின் லீலைகள் பற்றியும் விரிவாக உபதேசம் செய்தார். அவற்றை எல்லாம் கேட்ட பரீட்சித், கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்ற பின் பூமியிலே என்ன நடக்கும் என்று சுகப்பிரம்மத்திடம் வினவினான். அதற்கான விடையை ஸ்ரீமத் பாகவத புராணத்தின் நிறைவுப் பகுதியில் சுகப்பிரம்மம் வழங்குகிறார். கண்ணன் அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றவாறே பூமியில்
கலியுகம் தொடங்கிவிடும்.

கலியுகத்தில் வரும் மன்னர்கள் அதர்மத்திலும் பொய்மையிலும் பற்றுக் கொண்டவர்களாகவும், கருமிகளாகவும், கொடுங்கோபம் மிக்கவர்களாகவும், பெண்கள் குழந்தைகளைத் துன்புறுத்து
பவர்களாகவும், பிறர் மனைவி பிறர் பொருளை விரும்புபவர்களாகவும், அற்ப ஆயுள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அத்தகைய மன்னர்கள் தங்கள் பிரஜைகளைப் பலவாறு துன்புறுத்துவார்கள். நாளுக்கு நாள் மக்களிடத்தில் அறநெறி, வாய்மை, தூய்மை, ஆயுள், வலிமை ஆகியவை குறைந்து கொண்டே வரும். பணம் படைத்தவன் மேன்மையானவனாகக்
கருதப்படுவான்.

வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டமாக ஆகிவிடும். அந்தணர்களுக்குப் பூணூல் மட்டுமே அடையாளமாக இருக்குமே ஒழிய, வேதம் ஓதுவதை மறந்துவிடுவார்கள். கையூட்டு கொடுக்காவிட்டால் நியாயம் பெற முடியாது. ஓயாமல் பேசுபவனே பண்டிதனாகக் கருதப்படுவான். யார் திருடினாலும் அந்தத் திருட்டுப் பழி ஏழையின் மீதே விழும். வயிறு வளர்ப்பதையே லட்சியமாக மக்கள் கருதுவார்கள். குடும்பத்தைக் காப்பது மட்டுமே திறமை என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அறநெறியைப் பின்பற்றும் சிலர் பகட்டுக்காகவே பின்பற்றுவர். பஞ்சத்தாலும், அரசாங்கம் விதிக்கும் அதிக வரிகளாலும் மக்கள் துன்புறுவார்கள்.

பசி, தாகம் உள்ளிட்டவற்றாலும் மக்கள் துன்புறுவார்கள். துஷ்ட மன்னர்களின் ஆட்சியில், மக்கள் எல்லோரும் துன்புற்று அதர்மம் மேலோங்கி இருக்கும் சூழலில்தான் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார். (கலியுகம் தொடங்கிய காலம் கி.மு. 3102 என்று பெரியோர்கள் காட்டியுள்ளார்கள். கலியுகத்தின் மொத்த அளவு 4,32,000 ஆண்டுகள். அந்தக் கலியுகம் முடிவடையும் தறுவாயில் கல்கியவதாரம் பகவானால் எடுக்கப்படும்.)

“சம்பள க்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன:
பவனே விஷ்ணு யசஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி”

சம்பளம் என்ற கிராமத்தில், மிகச்சிறந்த மகாத்மாவான விஷ்ணு யசஸ் என்பவர்க்கு மகனாகக் கல்கி அவதாரத்தை பகவான் எடுக்க உள்ளார். தேவர்கள் அந்தக் கல்கி பகவானுக்குச் சிறந்த ஒரு குதிரையைக் காணிக்கையாக அளிப்பார்கள். அக்குதிரை மேல் ஏறிக்கொண்டு வேகமாகப் பூமியெங்கும் சஞ்சாரம் செய்து, அரசர்கள் வேஷத்தில் இருக்கும் துஷ்டர்களை எல்லாம் கத்தியால் அழிப்பார் கல்கி பகவான். கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகரும் மக்கள் அனைவரின் மனங்களிலும் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, அவர்கள் தூய்மை அடைவார்கள். அந்தக் கல்கி பகவான் அவதரித்த நேரத்தில் கலியுகம் முடிவடைந்து கிருதயுகம் தொடங்கும். சத்திய யுகம் என்றழைக்கப்படும் அந்தக் கிருதயுகத்தில் மக்கள் அனைவரும் சத்துவ குணம் நிறைந்த தர்மாத்மாக்களாகத் திகழ்வார்கள்.

இவ்வாறு கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் கலியுகத்தில் நடைபெற உள்ள சம்பவங்களைப் பரீட்சித்துக்குச் சுகப்பிரம்மம் உரைத்தார். கலியுகத்தில், அதர்மம் மேலோங்கி இருக்கும் வேளையில், கோபத்துடன் குதிரையில் வந்து துஷ்ட சக்திகளை அழிப்பதால், கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உக்ர:’ என்றால் உக்கிரமானவர் என்று பொருள். அறத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு உக்கிரமானவராகத் திகழ்வதால், கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 422-வது திருநாமம்.“உக்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் தீய எண்ணங்கள் தோன்றாதபடித் திருமால் காத்தருள்வார்.

423. ஸம்வத்ஸராய நமஹ (Samvathsaraaya namaha)

குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசத்துக்குப் பலவாறான இடையூறுகளைச் செய்துவந்தான். முன்பு திருக்கண்ணபுரம் திருக்கோயிலைச் சுற்றி ஏழு மதில்கள் இருந்தன. அதில் ஒரு மதிலுக்குள் வெள்ளி இருப்பதாக யாரோ சொன்ன செவி வழிச் செய்தியைக் கேட்டு அந்த மதிளை இடித்தான் சோழன். ஏதேதோ காரணங்களைச் சொல்லி மற்ற மதிள்களையும் இடிக்கத் தொடங்கினான். நாகைக் கடற்கரையில் கடற்படைத் தளம் அமைப்பதாகச் சொல்லித் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் தொண்டர்கள் தங்கி இருந்த இருப்பிடங்களை அழித்தான். திருக்கண்ணபுரத்திலே ஓர் அரையர் வாழ்ந்து வந்தார். அவர் அங்கே கோயில் கொண்டிருக்கும் சௌரிராஜப் பெருமாள் முன்னே ஆழ்வார் பாசுரங்களை இசையோடு பாடி, அவற்றின் பொருளை அபிநயம் பிடித்துக் காட்டி விளக்குவார்.

சோழனின் செய்கைகளைக் கண்டு கடும் கோபம் அடைந்த அந்த அரையர், ஒருநாள் சௌரிராஜப் பெருமாளிடம் சென்று, “இறைவா! உனக்குக் கண் இல்லையா? ஒருவன் இத்தனை தவறுகள் செய்து வரும் போது நீ கண்டும் காணாமல் இருக்கலாமா?” என்று கேட்டார். மேலும், தனது கோபத்தின் வெளிப்பாடாகத் தனது கையில் இருந்த தாளத்தைப் பெருமாள் மீதே எறிந்தார். அது பெருமாளின் நெற்றியில் பட்டது. இன்றும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் அந்தத் தழும்பைத் தரிசிக்கலாம்.

சற்று கோபம் தணிந்தவாறே, “அடடா! பெருமாளை நாம் அடித்துவிட்டோமே! பெரும் தவறு செய்துவிட்டோமே!” என்று தமது செய்கைக்கு வருந்திய அரையர், வருத்தத்துடன் தனது வீட்டுக்குத் திரும்பி, கண்ணீர் சிந்தியபடி சயனித்திருந்தார். அப்போது அரையரின் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டினார்கள். அரையர், கதவைத் திறந்து நீங்கள் யார் என்று கேட்டார். வந்தவர், “எனக்கு சபாநடேசன் என்று பெயர். நான் சிதம்பரத்தில் இருந்து வருகிறேன்!” என்றார். இவர் சோழனின் ஆளாக இருப்பாரோ என்று ஐயம் கொண்டார் அரையர். ஆனால், வந்தவர் யார் என்பதையும் அவரது பெயருக்கான காரணத்தையும் உணர்ந்து கொண்டார் அரையர்.

வந்தவர் சாட்சாத் சௌரிராஜப் பெருமாள் தான். ஆனால் தன் பெயரை சபாநடேசன் என்று சொன்னாரே, அது பெருமாளின் திருப்பெயரா? ஆம். சபை என்பது இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது. நட என்ற சொல் இந்தப் பிரபஞ்சமாகிய நாடகமேடையில் நடிக்கும் அனைத்து உயிர்களையும் குறிக்கிறது. பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையும் தனது சொத்தாகக்கொண்ட திருமால் சபாநடேசன் எனப்படுகிறார். திருமாலின் அருளால் இதை உணர்ந்துகொண்ட அரையர், பரவசத்தோடு திருமாலை வரவேற்றார். “தேவரீரைக் கோபத்தில் அடித்து விட்டேன்! அடியேனை மன்னித்து அருள வேண்டும்!” என்று மனம் உருகி வேண்டினார் அரையர்.

அரையரைப் பார்த்து சௌரிராஜப் பெருமாள், “அரையரே! நான் சொன்ன பெயரின் மூலம் நீங்களே ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். உலகமாகிய சபையும் என் சொத்து, அதில் நடமாடும் உயிர்களும் என் சொத்து. என் சொத்தைக் காக்க வேண்டியது என் பொறுப்பு அல்லவா? சரியான நேரத்தில் அதைச் செய்வேன். விரைவில் கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசன் தொண்டையில் நோய் வந்து மாண்டு போவான். இந்த ராஜ்ஜியத்தில் பழைய நிலை மீண்டும் திரும்பும். தீய சக்திகளை அழிக்க எப்போதும் நான் தயார்நிலையில் இருப்பேன் என்பதற்கு அடையாளமாக இனி இந்தத் திருத்தலத்தில் எனது சுதர்சனச் சக்கரத்தைப் பிரயோகச் சக்கர வடிவில் ஏந்தி இருப்பேன்!

அதர்மம் ஓங்குவதை என்றுமே நான் வேடிக்கை பார்க்க மாட்டேன்.உரிய நேரத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் என்றுமே தயார் நிலையில்தான் இருப்பேன்!” என்று கூறினார். அவ்வாறே திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் விரைவில் அமைதி திரும்பியது என்பது வரலாறு. அதுபோலத்தான், கலியுகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை உரிய காலத்தில் அழிக்க விரும்பி, கல்கி பகவான் இப்போதும் பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடிக் காத்திருக்கிறார்.

கலியுகம் முடிவடையும் காலம் வரும்போது, சம்பள கிரமாத்தில் விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றி தீய சக்திகளை அழிப்பார். பராசர பட்டர், இந்தத் திருநாம விளக்கவுரையில் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் - ஸம்வத்ஸரஸ் ஸ்யாத் பாதாளே அனந்தே ஸம்வஸதி இதி ஸ: என்று, கல்கி பகவான் புதிதாகக் கலியுகத்தின் முடிவில்தான் தோன்றப் போகிறார் என்று பொருளல்ல, அவர் ஏற்கனவே பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடி காத்திருக்கிறார். தனக்குரிய காலம் வரும்போது விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றுவார்.

இப்படி தர்மத்தை நிலைநாட்டும் காலத்தை எதிர்நோக்கிப் பாதாளத்தில் வசித்து வருவதால், கல்கி பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸம்வத்ஸர:’ என்றால் நன்றாக வசிப்பவர் என்று பொருள். பாதாளத்தில் வசிக்கும் கல்கி பகவான் ஸம்வத்ஸர எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 423-வது திருநாமம்.“ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்ல காலம் பிறக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

424. தக்‌ஷாய நமஹ (Dhakshaaya namaha)

அடியேனுடைய குருவின் குருவான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், நாச்சியார்கோவிலில் கோவில்கொண்டிருக்கும் கல் கருடன் விஷயமாக க்ஷேமகாரி சதகம் என்ற நூறு சுலோகங்களை அருளி உள்ளார். நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்காகத் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடினார். ஆனால், அந்தத் திருத்தலத்தில் பெருமாளை விடப் பிரசித்தி பெற்றவர் கல்கருடன் அல்லவா? அதனால், திருமங்கை ஆழ்வாரின் மறு அவதாரமாகப் போற்றப்படும் வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கல் கருடனுக்காக நூறு சுலோகங்கள் அடங்கிய அத்துதியைச் சமர்ப்பித்தார். அதிலே கல் கருடனுக்கும் வில்லூர் சுவாமிகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாகக் கீழ்க்கண்ட ஸ்லோகம் அமைந்துள்ளது.

“ரக்ஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்ஸே த்வதீயே ஸ்தித
தேனே கர்ஷணம் அத்ர தத்ர பவத: கேதாய கிம் நாபவத்
மோதாயைவ யதார்த்த ரக்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண:
தேனைவாஸ்ய பதாம்புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிர்வ்ருத:”

வில்லூர் சுவாமிகள்: பட்சி ராஜனே!
உனக்குத் தளர்ச்சி ஏற்படவில்லையா?
கல் கருடன்: எதற்காகத் தளர்ச்சி ஏற்பட வேண்டும்?

வில்லூர் சுவாமிகள்: கஜேந்திரனைக் காப்பதற்காக உன் மீது ஏறித் திருமால் பயணித்தார் அல்லவா? அப்போது தளர்ச்சி ஏற்படவில்லையா உனக்கு?
கல் கருடன்: எப்போதுமே பகவான் என் தோளில் தானே பயணிக்கிறார்? அது எனக்கு பாக்கியமே. தளர்ச்சி ஏற்படுவதில்லை.வில்லூர் சுவாமிகள்: மற்ற சூழ்நிலைகள் வேறு. கஜேந்திரனை விரைந்து காப்பதற்காகத் திருமால் உன்னை மிகுந்த வேகத்தோடு உன்னைப் பயணிக்கச் சொன்னார் அல்லவா? எந்த ஒரு ஓட்டுநருமே பயணி தன்னை வேகமாக ஓட்டும்படிப் பணித்துக்கொண்டே இருந்தால், அதை விரும்ப மாட்டார். ஆனால், திருமாலோ உன்னைப் பார்த்து வேகமாகப் போ... வேகமாகப் போ... என்று சொல்லிக்கொண்டே கஜேந்திரன் இருந்த குளத்தங்கரை நோக்கி உன்மீது பயணித்தார். அது உனக்குத் தளர்ச்சியை உண்டாக்கவில்லையா என்று கேட்டேன்.

கல் கருடன்: அது தளர்ச்சியை ஏற்படுத்தவில்லை, மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
வில்லூர் சுவாமிகள்: அப்படியா?
கல்கருடன்: ஆம், அடியார்களைக் காக்க வேண்டும் என்பதிலே பகவான் எவ்வளவு வேகம் காட்டுகிறான்? அந்த வேகம் என்பது போற்றுதற்குரிய குணம் அல்லவா? அடியவன் துன்பப் பட்டுக்கொண்டிருக்க, பகவான் பொறுமையாகக் காப்பாற்றலாம் என்று காத்திருந்தால் அது அவனது கருணைக்கேற்ற செயல் ஆகுமா? பக்தனுக்கு ஆபத்து என்றவுடன் விரைந்து சென்று காப்பது தானே இறைவனின் கருணைக்கு அழகு? இறைவனின் அத்தகைய குணத்தைப் போற்றவேண்டாமோ?
வில்லூர் சுவாமிகள்: நிச்சயமாக!

கல்கருடன்: அந்த வேகத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் அவர் திருவடியை விட்டு நீங்காமல் அவரது தொண்டனாக அவர் திருவடிவாரத்திலேயே என்றென்றும் இருக்கிறேன். அவர் என்னை வேகமாகப் பயணிக்கச் சொன்ன விஷயம் அடியேனுக்கு மகிழ்ச்சியையும் அவர்மீது மதிப்பையுமே அளித்தது.இப்படித் தன் பக்தர்களைக் காப்பதிலும் தீயசக்திகளை அழிப்பதிலும் மிகுந்த வேகம் கொண்டவராக விளங்குகிறார் திருமால். கலியுகத்தில் நடக்கும் அக்கிரமங்களை இறைவன் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக நாம் எண்ணி விடக் கூடாது. அவ்வப்போது ஏதோ ஒரு வகையில் அவற்றைத் தடுத்துக் கொண்டே தான் இருப்பார் இறைவன்.

கலியுகம் நிறைவடையும் காலம் வருகையில், கல்கி பகவானாகத் தோன்றி ஒட்டுமொத்தமாக அனைத்துத் தீய சக்திகளையும் விரைவாக அழித்து உலகில் அறநெறி தழைத்தோங்கும்படிச் செய்வார். எனவே, இறைவனைப் பொறுத்தவரையில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.தீய சக்திகளை விரைந்து அழிப்பதால் கல்கி பகவான் ‘தக்ஷ:’ என்று அழைக்கப்படுகிறார். ‘தக்‌ஷா:’ என்றால் விரைந்து செயல்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 424-வது திருநாமம்.“தக்‌ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் விரைந்து அருள்புரிவார்.

425. விஷ்ராமாய நமஹ (Vishraamaaya namaha)

ஓர் ஊரிலே ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர், “என்னிடம் காசு இல்லை, என்னிடம் பணம் இல்லை, என்னிடம் சொத்து இல்லை!” என்று புலம்பிக்கொண்டே யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடிக்குச் சிறிய நிலம் மட்டுமே இருந்தது. அதைத் தவிரத் தங்குவதற்கு வீடு கூட இல்லை. “ஐயோ! இறைவன் என்னை இப்படி ஏழையாகப் படைத்து விட்டானே!” என்று தினந்தோறும் புலம்புவாராம். ஆனால், அந்தப் பிச்சைக்காரருக்கு ஒரு விஷயம் தெரியாது. அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடி நிலம் இருக்கிறதே. அதற்குக் கீழே மிகப்பெரிய தங்கச் சுரங்கமே உள்ளது என்று. அதில் உள்ள அத்தனை தங்கமும் இவருக்குத்தான் சொந்தம். ஆனால், மண்ணால் தங்கச் சுரங்கம் மூடப்பட்டிருப்பதாலே, தான் அமர்ந்திருக்கும் இடம் தங்கச் சுரங்கம் என்றே அறியாமல் அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தில் எதற்காக இந்தப் பிச்சைக்காரர் கதை? இது வெறும் பிச்சைக்காரர் கதை இல்லை, இது சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் கதை. அந்தப் பிச்சைக்
காரர் தான் ஜீவாத்மாக்காளாகிய நாம். ஆனந்தம் தான் நமக்குரிய செல்வம். அந்தப் பிச்சைக்காரர் காசு இல்லை என்று புலம்பியது போல், நாமும் நமக்கு வாழ்வில் ஆனந்தமே இல்லையே,
துன்பப் படுகிறோமே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.

அந்தப் பிச்சைக்காரர் தங்கச் சுரங்கத்தின் மேலே அமர்ந்திருந்தார் அல்லவா? அதுபோலத்தான் ஆனந்தத்தின் சுரங்கமான திருமாலே நமக்குள் எழுந்தருளியிருக்கிறார். சுரங்கம் மண்ணால் மூடப்பட்டிருப்பதால், பிச்சைக்காரருக்கு அது தங்கச்சுரங்கம் என்று தெரியவில்லை. அதுபோல், நமது அறிவானது நம் முன்வினைகளாகிய பாபங்களால் மூடப் பட்டிருப்பதால், நமக்குள் எழுந்தருளி இருக்கும் ஆனந்தத்தின் வடிவான இறைவனை நாம் அறியாமல், எங்கெங்கோ ஆனந்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இதைக் கூறும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யம்:
“தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் அக்ஷேத்ரஜ்ஞா உபரி உபரி ஸஞ்சரந்தோ ந விந்தேயுரேவம் ஏவேமாஸ் ஸர்வா: ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம்
ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா:”

நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று உபநிஷத் சொல்கிறது. ஆனால், அவன் உள்ளே இருப்பதற்கு ஏதாவது நேரடிச் சான்று உண்டா? அதையும் காட்டுகிறது உபநிஷத். தினமும் காலை தூங்கி எழும்போது, “நான் இப்போது புத்துணர்ச்சி பெற்றேன்!” என்று மனிதர்கள் சொல்கிறார்களே! அந்தப் புத்துணர்ச்சி எங்கிருந்து வந்தது? தூங்குபவரால் எதையாவது சம்பாதிக்க முடியுமா? உறங்கியவரால் புத்துணர்ச்சியை எவ்வாறு சம்பாதிக்க முடிந்தது?

உறக்க நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தற்காலிகமாக இணைந்து இருக்கிறார். அந்தப் பரமாத்மா ஜீவாத்மாவை ஆசையுடன் தழுவிக்கொண்டு, ஓர் இளைப்பாறும் இடமாக இருந்து, ஜீவாத்மாவின் களைப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி கொடுக்கிறார். அதன் விளைவாகத் தான் மறுநாள் காலை எழும் போது புத்துணர்ச்சி பெற்றவனாக ஜீவாத்மா தன்னை உணர்கிறான். எனவே, காலையில் நாம் எழும்போது உணரும் புத்துணர்ச்சியே உள்ளே இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று என்கிறது உபநிஷத்.

உறக்க நிலையில் மட்டும் இல்லை, கலியுகம் முற்றிய நிலையில் அதர்மம் ஓங்கி, அறநெறி தாழ்ந்து, உலகில் வாழும் மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கல்கியாகத் திருமால் அவதாரம் செய்து அந்தத் தீய சக்திகளில் இருந்தும் அதர்மத்தில் இருந்தும் மக்களைக் காத்து, அவர்களுக்குச் சிறந்த இளைப்பாறும் இடமாகத் திகழ்வார்.

உறக்க நிலையில் பரமாத்மாவோடு இணைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் புத்துணர்ச்சி பெறுவது போல், கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகர்ந்த அத்தனை பேரும் புத்துணர்ச்சியும் தூய சத்துவ குணமும் பெற்று, அடுத்து தொடங்கும் கிருத யுகத்தில் தர்மாத்மாக்களாக வாழ்வார்கள்.இவ்வாறு கலியின் கொடுமையால் துன்புறுவோர்க்கெல்லாம் இளைப்பாறும் இடமாகக் கல்கி பகவான் இருப்பதால், அவர் ‘விச்ராம:’ என்று அழைக்கப்படுகிறார். ‘விச்ராம:’ என்றால் இளைப்பாறும் இடம் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 425-வது திருநாமம்.“விஷ்ராமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் களைப்பைத் திருமால் போக்கிப் புத்துணர்ச்சி தந்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!