×

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன?

தெளிவு பெறுஓம்

?பதிபக்தி, குருபக்தி இரண்டில் அதிக பலன் தருவது எது?
- விநாயகராமன், திசையன்விளை.

பதிபக்தி என்பது பெண்கள் கணவரிடம் கொண்டிருப்பது. குரு பக்தி என்பது மனிதர்கள் தங்களை வழிகாட்டும் குருமார்களிடம் செலுத்துவது. குரு மூலமாகத்தான் வாழ்க்கைப் பயணத்தை கடக்க இயலும். எல்லோருடைய வாழ்விலும் குரு என்பவர் நிச்சயமாக ஒருவர் இருப்பார். யாரேனும் ஒருவரைப் பின்பற்றித்தான் எல்லோருமே தங்களுடைய வாழ்வினில் குறுக்கே வரும் இடர்களைக் கடக்கிறார்கள். பெண்களைப் பொறுத்த வரை அவர்களது கணவன்மார்கள்தான் அவர்களுக்கு உரிய குரு.

திருமணம் ஆகும் வரை தந்தை குருவாக இருந்து வழிகாட்டுகிறார். திருமணத்திற்குப் பிறகு கணவன்மார்கள் குருவாக இருந்து அவர்களை உடன் அழைத்துச் செல்கிறார்கள். திருமணமான பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கணவனே குரு என்பதால் பதிபக்தி என்பதும் குருபக்தி என்பதும் ஒன்றுதான். ஆக, பதிபக்தி என்பதும் குருபக்திக்குள் உள்ளடங்கிவிடுவதால் குருபக்தி என்பதே அதிக பலனைத் தரக்கூடியது என்று தீர்மானிக்க இயலும்.

?அரசமரமும் வேப்பமரமும் இணைந்திருந்தால் அவற்றிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். அரச இலை மேல் மாதவன் பள்ளிக்கொண்டான் என்கிறார்கள் (ஆலிலை கண்ணன்). வேப்பமரம் என்பது அம்மன் சம்பந்தப்பட்டது. மாதவனுக்கும் அம்மனுக்கும் எவ்வாறு திருமணம் செய்து வைக்க முடியும்? முறை மாறுகிறதே?
- வேணுகோபால், திருவள்ளூர்.

ஆலிலை கண்ணன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.  ஆல மரத்தினுடைய இலையே ஆலிலை. ஆலமரம் என்பது வேறு, அரசமரம் என்பது வேறு. அத்துடன் அரச மரம் என்பது மும்மூர்த்திகளின் ஸ்வரூபம். அரசமரத்தை வலம்வரும்போது, மூலதோ ப்ரஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபினே, அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜாயதே நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வலம் வருவார்கள். அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்மா, மத்தியில் விஷ்ணு, உச்சியில் சிவன் என மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குவது அரச மரம். அவ்வாறே வேப்பமரம் என்பது துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் அம்சம் ஆகும்.

எனவே தான் அரசமரம் தனக்கு அருகில் வேப்ப மரம் ஒன்றைத் தவிர மற்ற மரங்களை வளரவிடுவதில்லை. அவ்வாறு, இயற்கையாகவே அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றாக இணைந்து வளருகின்ற பகுதி தெய்வ சாந்நித்யம் நிறைந்த பகுதியாக இருக்கும். இந்த இரண்டு விருட்சங்களுக்கும் திருமணம் செய்து வைக்கும்போது, தெய்வத்திருமணங்களை நடத்திய புண்ணியம் என்பது வந்து சேரும். விருக்ஷ விவாஹம் என்பது புதிதாக உருவான சம்பிரதாயம் அல்ல.

பன்னெடுங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியமான பூஜை முறையே. வீட்டில் மகன் அல்லது மகளுக்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் தடை கண்டு வருவோர் இன்றளவும் இதுபோன்ற விருட்ச விவாஹ பூஜை பரிகாரத்தை செய்து பலன் பெறுவதை காண இயலும்.
?அந்தணன் - பிராமணன் என்பவர்கள் யார்? இருவருக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுங்கள். அந்தணருக்கு தானம் செய்யுங்கள் என்று பெரியவர்கள் கூறுவதால் இந்த இரு சொல்லின் விளக்கம் அறிய விரும்புகிறேன்.
- கங்காதரன், மதுரை.

அந்தணர் என்போர் `அறவோர்’ என்கிறது தமிழ் இலக்கியம். அறநெறி தவறாது வாழ்பவர்களை அந்தணர் என்கிறார்கள். பிரம்மத்துவம் நிறைந்தவன் பிராமணன் என்கிறது சாஸ்திரம். தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், அன்றைய தேவைக்கு மட்டும் அறநெறியில் பொருள் தேடுவதும், கற்றலும் தான் கற்ற கல்வியை பிறருக்கு கற்பித்தலும் பிராமணின் தொழில் என்றும் தர்மசாஸ்திரம் வலியுறுத்துகிறது. இந்த இரு சொற்களும் அடிப்படையில் ஒரே பொருளைத் தருபவையே என்றாலும், உங்களுடைய சந்தேகம் யாருக்கு தானம் அளிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்கிறது.

தன்னலம் கருதாது பிறர் நலன் கருதி புரோஹிதம் பார்க்கின்ற புரோஹிதர்களுக்கும், பணத்தை பிராதானமாக எண்ணாமல் தர்ம சாஸ்திரத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பெரியவர்களுக்கும், வேதம் படித்து அதன் உண்மையான கருத்துக்களை சாமானிய மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கம் தரும் வேத பண்டிதர்களுக்கும், நமது இல்லத்தில் சுப அசுப நிகழ்வுகளை நடத்தித் தரும் சாஸ்திரிகளுக்கும், இறைவனுக்கு தொண்டு செய்வதையே தங்கள் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருக்கும் ஆலய அர்ச்சகர்களுக்கும் தானம் செய்வது சாலச்சிறந்தது என்பதே உங்கள் சந்தேகத்திற்கான தெளிவான விளக்கம்.

?ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
- சிவசங்கரன், குரோம்பேட்டை.

ஏழரைச்சனியை தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரைநாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம்.

முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரை சனி என்கிறோம். ஆக, 22 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரை சனி என்பது நமது வாழ்வில் இடம்பிடிக்கிறது. இந்தக் காலத்தில் சிறுசிறு தடங்கல்களை சந்திக்க நேரிடுமே தவிர, பெரிய அளவிலான பாதகங்கள் ஏதும் ஏற்படாது. அவரவர் ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்யும். ஏழரை சனியினால் உண்டாகும் தடைகள், இடையூறுகள் தற்காலிகமானதே தவிர நிரந்தர பிரச்சனையைத் தராது.

ஏழரைச் சனி என்பது சாலையில் பயணிக்கும்போது குறுக்கிடும் வேகத்தடைகள் போல். வேகமாக வண்டி ஓட்டுபவனுக்கு சாலையில் குறுக்கிடும் வேகத்தடை எரிச்சலைத் தரும் என்றாலும் அது வேகத்தைக் குறைத்து விபத்து ஏற்படாமல் அவனது உயிரைப் பாதுகாக்கிறது. அவ்வாறே, ஏழரை சனியின் காலமும் தடைகளைத் தந்து எந்த காலத்திலும் உதவிடும் அனுபவ அறிவினை அருள்கிறது. சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். எனினும் ஏழரை சனியின் தாக்கத்தினைப் பெறுபவர்கள், சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு எள்ளுப்பொடியுடன் சிறிதளவு தயிர் கலந்த சாதம் வைப்பது நல்லது. எள்ளுப்பொடி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் நன்மை தரும்.

சனிக்கிழமையில், வீடுவாசல் தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற அளவிற்கு உணவினை செய்யுங்கள். ஆதரவற்ற முதியவர்கள், அநாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும். பொருளுதவிதான் என்று இல்லை. இவர்களுக்கு நம்மால் இயன்ற உடல் ரீதியான உதவியையும் செய்யலாம். தொண்டு செய்வது, சேவைகுணம் ஆகியவை சனிக்கு மிகவும் பிரியமானவை. ‘சனி கொடுக்க எவர் தடுப்பர்’ என்பது முதுமொழி. ஏழரை சனி விலகும் நேரத்தில் எந்த காலத்திலும் நம் நினைவில் நிற்கக்கூடிய பெரும் செல்வத்தை சனி அருள்வார் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

?சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?
- வாணிரமேஷ், சிதம்பரம்.

கிணற்றில் மீன்கள் இருந்தால் போடலாம். ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதை விட அந்த சாதத்தை தெரு நாய்களுக்கு வைக்கலாம். சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்தாது. அவ்வாறு சிராத்தம் செய்தபின் வைத்த பிண்டத்தை காகம் எடுக்க வராவிட்டால் அதனை ஆறு, குளம், ஏரி அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே நல்லது.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

Tags : Seventh National Saturn ,
× RELATED காமதகனமூர்த்தி