×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

426. விஷ்வதக் ஷிணாய நமஹ:(Vishva-dhakshinaaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430
[பீஜம் அவ்யயம்] வரை - கல்கி அவதாரம்)
சரஸ்வதி நதிக்கரையில் ஒரு வேள்வி செய்து வந்த சில மாமுனிவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைத்துப் பார்க்க நினைத்தார்கள். அதன் பொருட்டு, பிரம்மாவின் மகனான பிருகு முனிவரை மும்மூர்த்திகளிடம் அனுப்பி வைத்தார்கள். இவ்வரலாறு ஸ்ரீ மத் பாகவத புராணத்தின் 10ம் ஸ்கந்தம் 89ம் அத்தியாயத்தில் வருகிறது. இவ்வரலாறு வழக்கில் பலவாறாகச் சொல்லப்பட்டுவந்தாலும், ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் சொல்லப்பட்ட சரித்திரம் இங்கே அப்படியே எடுத்தாளப்படுகிறது.

முதலில், பிரம்மாவின் சபைக்குச் சென்ற பிருகு முனிவர், பிரம்மாவை வணங்காமல், துதிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கோபம் கொண்டார் பிரம்மா. ஆனாலும் பிருகு முனிவர் தனது  மகன் என்பதால், கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாது மனதுக்குள் மறைத்துக்  கொண்டார். ஆயினும், பிரம்மாவின் மனதில் கோபம் எழுந்ததை பிருகு முனிவர் அறிந்து கொண்டார்.

அடுத்து கயிலாசத்துக்குச் சென்றார் பிருகு. பரமசிவன் ஆசையோடு பிருகு முனிவரை ஆலிங்கனம் செய்து கொள்ள வந்தார். ஆனால்,  சிவனை ஆலிங்கனம் செய்துகொள்ள மறுத்துக் கோபத்துடன் பேசினார் பிருகு  முனிவர். அதனால் கோபம் கொண்ட பரமசிவன், சூலத்தால் பிருகுவைத் தாக்க முற்பட்டார். எனினும் பார்வதிதேவி சிவபெருமானைச் சமாதானப் படுத்தி, அவரது கோபத்தைத் தணித்தாள். சிவபெருமானுக்கும் கோபம் வருகிறது என உணர்ந்தார் பிருகு முனிவர். அடுத்ததாகக் காரிய வைகுண்ட லோகத்துக்குச் சென்றார் பிருகு முனிவர். அங்கே மகாலட்சுமியின்  மடியில் சயனித்தபடித் திருமால், பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தார். அதைக் கண்ட பிருகு முனிவர் என்ன செய்தார்? ஸ்ரீ மத் பாகவத புராணம் சொல்கிறது.

“சயானம் ச்ரிய உத்ஸங்கே பதா வக்ஷஸி அதாடயத்
தத உத்தாய பகவான் ஸஹ லக்ஷ்ம்யா ஸதாம் கதி:”
திருமாலின் திருமார்பிலேயே வேகமாக எட்டி உதைத்துவிட்டார் பிருகுமுனிவர். ஆனால்,  திருமாலுக்குக் கோபமே வரவில்லை. மகாலட்சுமியும் திருமாலும் ஆதிசேஷப்  படுக்கையில் இருந்து விரைந்து எழுந்தார்கள். திருமால், பிருகு முனிவரை  நமஸ்கரித்தார். பிருகுவைப் பார்த்த திருமால், “வாருங்கள் முனிவரே!  உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் வந்ததைக் கவனிக்காமல் நாங்கள் இருந்தமைக்கு எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும். மேலும், உங்கள் மென்மையான  பாதங்களால் எனது கரடு முரடான மார்பை உதைத்துவிட்டீர்களே! உங்கள்  பாதங்களுக்கு வலிக்கிறதா?” என்று கேட்டுவிட்டு, பிருகுவின் பாதங்களை  மெல்லப் பிடித்து அமுக்கிவிட்டார்.

திருமாலின் எளிமையை எண்ணிக் கண்ணீர் வடித்த பிருகு முனிவர், சரஸ்வதி நதிக்கரைக்கே  திரும்ப வந்து திருமாலின் பெருமையை எடுத்துச் சொன்னார். “மிகவும் உயர்ந்தவனாக இருந்தபோதும், அந்த பகவான் அடியேன் செய்த தவறுக்காகக் கோபம் கொள்ளாது என் பாதங்களை அமுக்கி விட்டார். அத்தகைய இறைவன்தான் உலகிலுள்ள  அனைவர் மீதும் கருணை காட்டக் கூடியவன்!” என்று மற்ற முனிவர்களிடம் சொன்னார்.

அச்சமயம் அங்கே வந்த நாரதர், “பிருகு  முனிவரே! சரியாகச் சொன்னீர்கள். பின்னாளில் கலியுகம் முற்றிய நிலையில் கல்கி பகவானாகத் திருமால் அவதாரம் செய்வார். அப்போது அவர் தீய சக்திகளை  அழித்தாலும், உண்மையில் அவர்கள் மீதும் இரக்கம் காட்டித் தனது வாள்  வீச்சால் அந்தத் தீயவர்களின் பாபங்களைப் போக்கி அவர்களுக்கும்  நன்மையைத்தான் செய்யப் போகிறார். எல்லா நிலைகளிலும், அனைவர் மீதும் கருணையையும் பொறுமையையும் இரக்கத்தையும் காட்டுபவர் அன்றோ திருமால்?” என்று  கூறினார். இப்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் மீதும் இரக்கம்  காட்டுவதால், கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ என்று அழைக்கப்படுகிறார்.  ‘விச்வ’ என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது. ‘தக்ஷிண:’  என்றால் தாட்சிண்யம், அதாவது இரக்கம் காட்டுபவர் என்று பொருள்.

ஈவு இரக்கம் என்ற தொடரை தயவு தாட்சிண்யம் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது  அல்லவா அனைத்துயிர்களிடமும் இரக்கம் காட்டுவதால், கல்கி பகவான்  ‘விச்வதக்ஷிண:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 426-வது திருநாமம்.“விஷ்வதக் ஷிணாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, அவர்கள் செய்த பாபங்களைத் திருமால் மன்னித்து திருத்திப் பணிகொள்வார்.

427. விஸ்தாராய நமஹ:(Visthaaraaya namaha)

உலகில்  கலியுகம் தொடங்கிச் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் கடந்த அளவில், கலியுகம்  கி.மு., 3102ம் ஆண்டு தொடங்கியதாகப் பெரியோர்கள் கணக்கிட்டுள்ளார்கள். உலகில் தருமங்கள் குறைந்துகொண்டேவந்தன. இதைக் கவனித்த திருமால், தனது படுக்கையான ஆதிசேஷனை அழைத்து, “உலக நடைமுறையைப் பார்த்தாயா?” என்றார். ஆதிசேஷனும் “ஆம் பகவானே! அடியேனும் கவனித்துக்கொண்டு வருகிறேன். பூமியில்  அறநெறி தொய்வடைந்து, அதர்மம் தலைதூக்கிவிட்டது.

நீங்கள் வழங்கிய வேதங்களை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். வேறு சிலர் அந்த வேதங்களுக்கே தவறான பொருள் கூறிவருகிறார்கள். கருணைக் கடலாகிய உங்களுக்குக் குணங்களே இல்லை என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆழ்வார்கள் அவதரித்துப் பாடிய ஈரத்தமிழ்ப் பாசுரங்கள் இப்போது வழக்கொழிந்து போய்விட்டன. நீங்கள் பற்பல திவ்ய  தேசங்களில் கோயில் கொண்டிருந்தாலும், உங்களை வந்து தரிசித்து உங்களுக்குத்  தொண்டு செய்யப் பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. இவை அனைத்தையும் கவனித்து  வருகிறேன் சுவாமி!” என்று பதிலளித்தார்.

திருமால் ஆதிசேஷனைப் பார்த்து, “அனந்தா! இவை மட்டும் இல்லை. வேத வியாசர் உலகுக்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார்? மகாபாரதம், புராணங்கள், பிரம்ம சூத்திரங்கள் இத்தனையும் வழங்கியவர் வியாசர். ஆனால், அவரை இப்போது  நகைப்புக்கு உரிய பொருளாக மக்கள் மாற்றிவிட்டார்கள். அவரது பிரம்ம சூத்திரங்களைப் பயன்
படுத்திக்கொண்டே வியாசரின் திருவுள்ளத்துக்கு முரணான கருத்துகளைப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். நான் ராமனாக அவதரித்த போது வெளிப்படுத்திய எனது மங்கல குணங்களைத் தொகுத்து வால்மீகி முனிவர்  ஸ்ரீ ராமாயணத்தை அருளினார். ஆனால், இப்போது வால்மீகியை ஒரு பொருட்டாகவே  கருதாமல் தள்ளிவைத்து விட்டார்கள் மக்கள்.

ஸ்ரீ ராமாயணத்தையும் அதில் சொல்லப்பட்ட ராமனின் குணங்களையும், அடியோடு மறந்து விட்டார்கள். இவை மட்டுமா கிருஷ்ணனாக நான் அவதரித்துச் செய்த லீலைகளை
எல்லாம் சுகப்பிரம்மம் தேனினும் இனிய பாகவத புராணமாக வழங்கினார் அல்லவா? அந்த சுகப்பிரம்மம் வழங்கிய பாகவத புராணத்தை ஏதோ விளையாட்டுக் கிளியின் உளறல்  என்று கருதித் தூக்கி எறிந்துவிட்டார்கள் மக்கள். வியாசரின் பிரம்ம  சூத்திரங்களுக்குப் போதாயனர் என்ற மகான் விரிவான விளக்கவுரை  வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெரியவரின் நூலையே மறுத்துப் பேசிக் குறைகூறி வருகிறார்கள் சில மக்கள். இப்படிப் பூமியில் தர்மம் க்ஷீணித்திருக்கும்  நிலையில், ஆதிசேஷா! நீயே பூமியில் அவதாரம்செய்து மீண்டும் தர்மம்  தலைதூக்கும்படிச் செய்ய வேண்டும்.

அதற்கு முதல்படியாக வேத வியாசர் அருளிய பிரம்மசூத்திரங்களுக்குப் போதாயனர் அருளிய விளக்கவுரையின் அடிப்படையில், ஓர் உரையை உருவாக்க வேண்டும்!” என்று சொல்லி ஆதிசேஷனைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால். திருமாலின் ஆணைக்கிணங்க பூமியிலே ராமானுஜராக அவதரித்த ஆதிசேஷன், பிரம்ம சூத்திரத்துக்குப் போதாயனர் அருளிய விளக்கவுரையின் அடிப்படையில், ``ஸ்ரீ பாஷ்யம்’’ என்ற அற்புதமான விளக்கவுரையை அருளிச்செய்தார்.

கலியுகத்தில் தருமங்கள் தழைத்தோங்கும்படிச் செய்து, மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு பாராது பக்தியையும் ஞானத்தையும் எல்லோருக்கும் பரப்பினார் ராமானுஜர். ஆக, எப்போதெல்லாம் அதர்மம்  தலைதூக்குவது போன்ற சூழல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் திருமால், நேராகவோ  மறைமுகமாகவோ அந்த அதர்மத்தை அழித்துப் பூமியில் தர்மத்தை நிலைநாட்டிவிடுவார்.

கலியுகம் முற்றும்போது, தானே கல்கியாக அவதாரம் செய்து,  ஒட்டுமொத்த அதர்மத்தையும் அழித்து, பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை நன்றாகப்  பரப்பி, தர்மத்தைத் தழைத்தோங்கச் செய்வார்.
இவ்வாறு  தர்மத்தைப் பரப்புவதால், கல்கி பகவான் ‘விஸ்தார:’ என்று அழைக்கப்படுகிறார். ‘விஸ்தார:’ என்றால் பரப்புபவர் என்று பொருள். தர்மத்தைப் பரப்புவதால் கல்கி ‘விஸ்தார:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின்
427-வது திருநாமம்.

“விஸ்தாராய நமஹ:” என்று தினமும் சொல்லி  வரும் அன்பர்களின் உள்ளங்களில்,
அறநெறியும் அறச் சிந்தனைகளும் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

428. ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:(Sthaavara-Sthaanave namaha)

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட சமயத்தில் காம்ய வனம் என்ற பகுதியில் தங்கி யிருந்தபோது, கண்ணபிரான் அவர்களை வந்து சந்தித்தான். அப்போது, அங்கே  மார்க்கண்டேயர், நாரதர் உள்ளிட்ட முனிவர்களும் வந்தார்கள். நாரதர் மார்க்கண்டேயரிடம் தர்மபுத்திரருக்கு நல்வார்த்தைகளை உபதேசித்து அருளுமாறு  பிரார்த்திக்க, மார்க்கண்டேயரும் பல புண்ணியக் கதைகளையும் நல் உபதேசங்களையும் தர்மபுத்திரருக்கு வழங்கினார். அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே வந்த தர்மபுத்திரர், மார்க்கண்டேயரைப் பார்த்து, “முனிவரே! அடுத்து வர இருக்கும் கலியுகத்தின் நிலைமை எப்படி இருக்கும்? பொதுவாகக் கலிகாலம் என்றாலே தர்மம் சீர்குலைந்திருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்களே! அவ்வாறு கலியுகத்தில் தர்மம் சீர்குலைந்தால் எப்போது அந்த நிலை சீரடையும்? மீண்டும் கிருத யுகம் எப்படி உண்டாகும்? அறநெறி மீண்டும் எவ்வாறு தழைத்தோங்கும்?” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு  மார்க்கண்டேயர், “தர்மம் என்னும் காளை கிருதயுகத்தில் நான்கு கால்களோடும், திரேதாயுகத்தில் மூன்று கால்களோடும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களோடும், கலியுகத்தில் ஒரு காலோடும் இருக்கும். அதாவது, அறநெறியின் அளவு அப்படிக் குறைந்திருக்கும். கலியுகத்தில் மக்களின் ஆயுள்,  வீரியம், மனம், புத்தி, பலம், தேஜஸ் ஆகிய அனைத்தும் குறைந்திருக்கும்.  பிறரை ஏமாற்று வதற்காகவும், வெளிவேஷத்துக்காகவுமே மக்கள் அறநெறிகளைப் பின்பற்றுவார்களே தவிர, உளமார அறநெறிப்படி வாழ்வோர் கலியுகத்தில் குறைந்துவிடுவார்கள்.

பேராசையும் அறியாமையும் மலிந்திருக்கும். கலியுகம் முடியும் தறுவாயிலில், சணல் நாரால் செய்யப்பட்ட  ஆடையே மிக உயர்ந்தது என்று மக்கள் கருதுவார்கள். மக்கள் ஒருவரை ஒருவர்  துன்புறுத்திக்கொள்வார்கள். நதிக்கரையில், பூமியை வெட்டி அற்ப தானியங்களை  விதைப்பார்கள். தந்தையின் பொருளை மகன்கள் கவர்ந்து செல்வார்கள். பசுக்களை வண்டி இழுக்க வைப்பார்கள். இளங்கன்றின் தலையில் மூட்டைகளை வைத்துச்  சுமக்கச் செய்வார்கள்.

அரசர்களும் தீய எண்ணம் கொண்டவர்களாகக் கொடுங்கோல் ஆட்சிபுரிவார்கள். வியாபாரத்தில் நேர்மை இராது, பொருளாசையால் வஞ்சனையே நடக்கும். சூரியன், சந்திரன், பிருகஸ்பதி ஆகிய மூன்று கிரகங்களும் பூச  நட்சத்திரத்தை அடைந்து ஒரு ராசியில் சேரும் சமயத்தில் கலியுகம் முடிவு  பெறும். சம்பளம் என்னும் கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்பவர்க்கு மகனாகத்  திருமால் கல்கி அவதாரம் எடுப்பார். அவர் மனத்தினால் நினைத்தவுடன் எல்லா  வாகனங்களும், ஆயுதங்களும், படைவீரர்களும், கவசங்களும் அவரை வந்தடையும்.

குதிரை மேல் பயணித்து விஜயம் செய்து தீய சக்திகளை அழித்து, நல்லோர்களை அவர்  மகிழ்விப்பார். குழப்பமுற்றுத் திரியும் மக்கள் யாவரும் அவரைத் தரிசித்து அவரது அருளால் தெளிவு பெறுவார்கள். ஒட்டுமொத்த தீய சக்திகளையும் அவர் அழித்தவாறே, உலகில் மீண்டும் நல்லோர்களின் எண்ணிக்கை கூடி அறநெறி தழைத்து  ஓங்கத் தொடங்கும். தீய சக்திகளை அழித்த பின், கல்கி பகவான் மிகப்பெரிய  அச்வமேத வேள்வி ஒன்றைச் செய்வார். அந்த வேள்வியின் நிறைவில் சான்றோர்களான  நல்லோர்களுக்கு இந்த மொத்த பூமியையும் தானம் செய்வார். அதன்பின் அந்த  நல்லோர்கள் நல்லாட்சி செய்ய, ஒட்டுமொத்த உலகமும் க்ஷேமமாக இருக்கும்.

இப்படிக் கிருதயுகத்தில் தர்மம் நன்றாக நிலைநாட்டப் பட்டபின், கல்கி பகவான்  சாந்தமாக ஓய்வெடுக்கத் தொடங்குவார். இவ்வாறு அறநெறிகளை உலகில் நிலைநாட்டிய பின் சாந்தமாக இருப்பதால், கல்கி பகவான் ‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்தாவர’ என்பது அறநெறியை நன்கு நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது. ‘ஸ்தாணு:’ என்பதற்கு சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.  ‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்றால் அறநெறியை நிலைநாட்டியபின் சாந்தமாக இருப்பவர்  என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 428-வது திருநாமம்.
“ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, மன அமைதி ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

429. ப்ரமாணாய நமஹ:(Pramaanaaya namaha)
அடியேனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளிய ஆசார்யரான சிறுபுலியூர் ஸ்ரீ .உ.வே. திருவாழி அண்ணன் சுவாமிகளிடம், ஒரு சீடர் ஒருமுறை ஓர் ஐயம் கேட்டார். “சுவாமி!  தினமும் கோயிலுக்குப் போய் இறைவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம். இறைவனை வலம்  வருகிறோம். உண்மையில் இவையெல்லாம் நமக்கு விஞ்ஞான ரீதியாக ஏதோ பலன்களைக்  கொடுக்கின்றன போலும். அந்த அறிவியல் ரீதியான பலனை நேராகச் சொன்னால் நாம்  கேட்க மாட்டோம் என்பதற்காகத் தான் இப்படி மறைமுகமாகத் தெய்வம், சுவாமி  என்றெல்லாம் சொல்லிச் சில உடற்பயிற்சிகளை நம் முன்னோர்கள் செய்யச் சொல்லி  இருக்கிறார்கள் போலும். எனவே நமஸ்காரம் செய்தல், கோயிலை வலம் வருதல் இதனால்  கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள் என்ன சுவாமி?” என்று அந்தச் சீடர்  கேட்டார்.

அதற்கு எங்கள் ஆசார்யன் அற்புதமான ஒரு  விடையை அளித்தார். “குழந்தாய்! தெய்வத்தோடு தொடர்புடைய விஷயத்தையே நீ  அறிவியல் ரீதியாகச் சொன்னால்தான் ஏற்பேன் என்று சொல்கிறாய். அப்படி  இருக்கும் போது அறிவியல் ரீதியான ஒரு விஷயத்தைத் தெய்வத்தோடு தொடர்பு  படுத்திச் சொல்ல வேண்டிய தேவை என்ன? அறிவியல் ரீதியான, உடல் ரீதியான,  உலகியல் ரீதியான பலன்களுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதி இருந்தால், அதை நேரடியாகத் தான் சொல்வார்களே தவிர,  அதில் தாமாகத் தெய்வத்தைச் சேர்த்துச் சொல்லவே மாட்டார்கள்.

கோயிலுக்குப் போவதும், அங்கே இறைவனை விழுந்து நமஸ்கரிப்பதும், இறைவனை வலம் வருவதும், இறைவனது உகப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இறைவனின்
திருவுள்ளம் மகிழ வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செய்யப்படும் செயலுக்கே கர்மயோகம் என்று பெயர். அதனால், நமக்குக் கிடைக்கும் உலகியல் பலனில் கண் வைத்துச் செயல் புரிந்தால், அது கர்மயோகமே ஆகாது. காலை நீராடுவதோ, சந்தியாவந்தனம்,  பிராணாயாமம் போன்றவை செய்வதோ, இறை வனுக்குப் பூஜை செய்வதோ என அத்தனையுமே இறைவனின் உகப்புக்காகத்தான் நாம் செய்கிறோம்.

அப்படியானால் இவற்றால் உலகியல் பலன் எதுவுமே கிடையாதா? இவை உடலுக்கு ஆரோக்கியம் தராதா? என்று நீ கேட்கலாம். நிச்சயமாக அவைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரலாம். அதை மறுக்கவில்லை. ஆனால், இச்செயல்களின் முக்கிய நோக்கம் வெறும் தேக ஆரோக்கியம் மட்டும் கிடையாது. அதைக் காட்டிலும் மிக உயர்ந்த பகவத் ப்ரீதி, இறை
வனின்  திருவுள்ள உகப்பு என்பதே இச்செயல் களால் கிடைக்கும் மிகமிகப் பெரிய பலன்.  ஒரு மாணவன் பள்ளிக் கூடத்துக்கு நடந்து சென்று வந்தால் அதன் விளைவாக அவனது  உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வைத்துக்கொண்டு,  அவன் பள்ளிக் கூடம் போனதே உடல் எடையைக் குறைக்கத்தான் என்று சொல்லி விட  முடியுமா? பள்ளிக்கூடம் போவது கல்வி என்ற உயர்ந்த லட்சியத்துக்காக அல்லவா!. அத்துடன் இலவச இணைப்பாக, உடல் ஆரோக்கியம் இவன் நடந்து சென்றதால்  கிடைக்கிறது. அதுபோலத் தான் இதுவும்!” என்று விளக்கினார்.

உடனே  அந்தச் சீடர், “சுவாமி! அப்படி நம் சாஸ்திரச் சடங்குகளுக்கு அறிவியல்  ஆதாரங்களைத் தேடாதே என்று சொல்லி விட்டால், இளம் தலைமுறையினர் இவற்றை எப்படிப் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார். அதற்கு ஆசார்யன், “நாம்  அன்றாடம் பின்பற்ற வேண்டிய கடமைகளை வேத சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த அறநூல்கள் யாவும் இறைவன் தானே திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள். இறைவன்  விதித்த விதிகள். இறைவன் விதித்த ஒரு விதிக்கு யாரோ ஒரு விஞ்ஞானியின் அங்கீகாரம் எதற்கு? நம் முன்னோர்களும் இறைவனும் என்ன  விதித்திருக்கிறார்களோ, அதை அப்படியே பின்பற்றி நடப்பதற்குத் தான் சிரத்தை, பக்தி என்று பெயர். யாரோ ஒரு விஞ்ஞானி அங்கீகரித்தால்தான் சாஸ்திரத்தை ஏற்பேன் என்று சொன்னால், இறைவன் மீது நமக்கு முழு நம்பிக்கை இல்லை என்று பொருள்படும்!” என்றார்.

மகாபாரதத்திலே ஒரு ஸ்லோகம் வருகிறது;“தச்சீலம் அநுவர்தந்தே மநுஷ்யா லோகவாஸின:”கலியுகம் முடியும்போது கல்கி பகவான் அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டி கிருத  யுகத்தைத் தொடங்கி வைக்கிறார். அந்தக் கிருத யுகத்தில் வாழ்வோர் எல்லாரும் எப்படி இது தான் தர்மம், இது அதர்மம் என்று அறிவார்கள்? அதற்கு மகாபாரதம்  விடை சொல்கிறது. கல்கி பகவான் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அது தர்மம், கல்கி பகவான் எதிலிருந்து விலகி இருக்கச் சொல்கிறாரோ அது அதர்மம் என்று மக்கள்  பின்பற்றுவார்கள். அப்படித்தான் கிருத யுகத்தில் தர்ம அனுஷ்டானம் தொடங்கும்.

ஆக, தர்மம் எது அதர்மம் எது என்பதைக்  காட்டும் நம்பகத் தன்மைகொண்ட பிரமாணமாகக் (authority-ஆக) கல்கி பகவான்  திகழ்வதால், அவர் ‘ப்ரமாணம்’ என்று அழைக்கப்படுகிறார். ப்ரமாணம் என்றால் ‘நம்பத்தகுந்த ஆதாரம்’ என்று பொருள். தர்மம், அதர்மம் ஆகியவற்றை அறிவதற்குரிய ஆதாரமாக இருப்பதால், கல்கி பகவான் ‘ப்ரமாணம்’ எனப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 429-வது திருநாமம்.“ப்ரமாணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் சிரத்தையும்  நம்பிக்கையும் தழைத்தோங்கும் படித் திருமால் அருள்புரிவார்.

430. பீஜாய அவ்யயாய நமஹ:(Beejaaya Avyayaaya namaha)

திருக்கோஷ்டியூரில்  செல்வ நம்பிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். (ராமானுஜரின் குருமார்களுள்  ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அல்லர் இவர்; இவர் திருக்கோஷ்டியூர்  நம்பிக்குப் பல நூறாண்டுகள் முற்பட்டவர்.) ஒருமுறை செல்வ நம்பிகள் ஒரு முக்கியப் பணிக்காக வெளியூர் சென்றிருந்தார். அவரது மனைவி மட்டும்தான் வீட்டிலே இருந்தார். அச்சமயம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்  திருக்கோயிலில் நடைபெறும் மாசி மக உற்சவத்தைத் தரிசிப்பதற்காகப் பல ஊர்களில் இருந்தும் அடியார்கள் திருக்கோஷ்டியூருக்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் ஊர் மக்களிடம், “இவ்வூரில் எங்கே உணவு கிடைக்கும்?” என்று  விசாரித்தபோது, மக்கள் எல்லோரும் செல்வ நம்பிகளின் மாளிகையைக் காட்டி, “அந்தப் பெரியவரின் இல்லத்துக்குச் செல்லுங்கள் நிச்சயமாக உணவு  கிடைக்கும்!” என்று கூறினார்கள்.அந்த அடியார்களும் செல்வநம்பிகளின் இல்லத்துக்கு வந்தார்கள். செல்வ நம்பிகளின்  மனைவி அவர்களை வரவேற்று உபசாரம் செய்தார். வந்திருந்த அடியார்கள், “நாங்கள்  வெளியூரிலிருந்து இங்கே பெருமாளின் உற்சவத்தைத் தரிசிப்பதற்காக வந்தோம். உங்கள் இல்லத்தில் உணவு கிடைக்கும் என்று கேள்விப் பட்டு வந்திருக்கிறோம்!” என்றார்கள்.

“அடியார்களான உங்களுக்கு உணவு பரிமாறுவது நாங்கள் செய்த பாக்கியம்!” என்று சொல்லி விட்டுச் செல்வ நம்பிகளின் மனைவி சமையலறைக்குச் சென்றார். “சுமார் நாற்பது பேர் வந்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கும்  சமைக்கும் அளவுக்கு நம் இல்லத்தில் அரிசி இல்லையே! ஆனால், அதே நேரம் வந்திருக்கும் அடியார்களை வெறும் வயிற்றோடு திருப்பி அனுப்பு
வதும் பெரும் பாபம் ஆயிற்றே! என்ன செய்வது?” என்று சற்றுநேரம் சிந்தித்தார் செல்வ  நம்பிகளின் மனைவி.

அவர் மனதில் ஓர் யோசனை தோன்றியது. “ஆஹா! அடுத்து வயலில் விதைப்பதற்காகக் கொல்லையிலே விதை நெல்லை நம் கணவர் சேமித்து வைத்திருக்கிறாரே! அந்த விதை நெல்லைக் குத்தி அரிசி ஆக்கி இவர்களுக்கு உணவளித்துவிடுவோம்!” என்று தீர்மானித்தார். அவ்வாறே உணவு தயாரித்து வந்திருந்தோர் அனைவருக்கும் வயிறாரப் பரிமாறி விட்டார். அவர்களும் திருப்தியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

வெளியூர் சென்றிருந்த  செல்வ நம்பிகள் ஊர் திரும்பிய பின், அடுத்து வயலில் விதைப்பதற்காக விதைநெல்லைச் சரிபார்க்கச் சென்றார். பார்த்தால் விதை நெல்லைக் காணவில்லை. மனைவியிடம், “இங்கே வைத்திருந்த விதை நெல் எல்லாம் எங்கே போனது?” என்று கேட்டார் செல்வ நம்பிகள். “அவற்றை நான் வைகுண்டத்தில் விதைத்து விட்டேனே!” என்றார் மனைவி. அதாவது, இறை அடியார்களின் வயிற்றில் அந்த நெல்லைச்  சேர்த்தது வைகுண்ட லோகத்தில் விதைத்ததற்குச் சமம் என்பது தாத்பரியம்.

“அப்படியா? நல்ல காரியம் செய்தாய்! அடியார்கள் பட்டினியுடன் நம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தால், அது மிகப்பெரிய பாபம்!” என்று சொல்லித் தன் மனைவியைப்  பாராட்டினார் செல்வ நம்பிகள். அன்று இரவு செல்வ நம்பிகளின் கனவில் தோன்றிய  அரங்கன், “இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன். என் அடியார்களுக்கு விதை நெல்லைக் கொண்டு உணவளித்த உங்களுக்கு  நானே விதை தந்து அருள்வேன்!” என்று சொன்னான். கனவில் அரங்கன் சொன்னது  போலவே மறுநாள் திருவரங்கத்தில் இருந்து பல மூட்டை களில் விதை நெல் செல்வ நம்பிகள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. அதை அவர் வயலில் விதைக்கவே மிகச்சிறந்த விளைச்சலும் உண்டானது.

செல்வ நம்பிகளின் கனவில் அரங்கன் சொன்னது போல், இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும் மூலக் காரணமாக, அதாவது விதையாக திருமால் இருக்கிறார். நம்மாழ்வாரும் “முதல் தனி வித்து” என்றும் “வேர் முதலாய் வித்தாய்” என்றும் திருமாலைப் பாடுகிறார். கல்கி அவதாரத்திலும், கிருத யுகம் நிலைபெற்று  அதிலே தருமங்கள் செழிப்பதற்குரிய வித்தாகக் கல்கி பகவான் திகழ்கிறார்.  அவரது அருளால்தான் கலியுகம் முடிந்து, கிருதயுகம் தொடங்கி, தருமம் என்னும் பயிர் செழிக்கத் தொடங்குகிறது.

தருமமாகிய  பயிர் செழிப்பதற்கு விதையாக இருப்பதால், கல்கி பகவான் ‘பீஜம் அவ்யயம்’  என்று அழைக்கப்படுகிறார். அவ்யயம் என்றால் அழியாத, பீஜம் என்றால் விதை. ‘பீஜம் அவ்யயம்’ என்றால் அழியாத விதை, தருமங்கள் அழியாமல் செழிக்கச்செய்யும் விதை என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 430-வது திருநாமம்.“பீஜாய அவ்யயாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் வயல்களில் விவசாயம் நன்றாகச் செழிக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!