×

நின்னவன் தன்னே விஸ்வம் சமைக்கும்

மஞ்சுளாவிற்கு அன்று பூக்களை சேகரிப்பதென்பது எளிதாகவே இல்லை. எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ரோஜாக்களும் செவ்வந்திகளும் செவ்வரளிப் பூக்களும் செம்பருத்திப் பூக்களும் செங்காந்தள் மலர்களுமென சேகரித்தபடியே இருக்கிறாள். அந்திச் சூரியன் சிவப்பை வாரியிறைக்கத் தொடங்க துளசித் தழைகளை நடுவில் இழைத்து மாலை கட்டத் தொடங்குகிறாள். அருமையான செவ்வர்ண சுண்டியிழுக்கும் அழகுடன் குருவாயூரப்பனுக்கு இன்னும் அழகு சேர்க்கும் மாலை கட்டி முடிக்கப்பட்ட நிம்மதியில் அதைக் கயிற்றில் தொங்கவிட்டு சற்று தள்ளி நின்று கண்களால் அப்படிப் பார்க்கிறாள்.

அரிக்கேன் விளக்கொளியில் அட்டகாசமாக அங்கும் இங்கும் அசைந்த மாலையை குருவாயூரப்பனுக்குச் சாற்றி மனக் கண்ணில் அழகு பார்க்கிறாள். மனமெல்லாம் இந்த சின்ன விளக்கொளியிலேயே அப்பன் அவ்வளவு அழகெனின் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் வெளிச்சம் வாரி இறைக்கும் கோயிலின் சரவிளக்குகளின் சாந்நித்திய ஒளியில் இந்த மாலையில் அப்பனின் அழகு. எப்படியிருக்குமென நினைத்துப் பார்க்கிறாள். விவரிக்க முடியாத அந்த சின்ன மனதின் தெய்வீக காட்சியில் சின்ன மஞ்சுளாவுக்கு கண்கள் சிவந்துவிடுகின்றன.

ஓடுகிறாள்… ஓட்டமென்றாள் அப்படியொரு ஓட்டம்… இரவு ஏழு முப்பது மணிக்கெல்லாம் அர்த்த ஜாமம் முடிந்து அடையா நெடுங்கதவம் அடைக்கப்பட்டுவிடுமே எனும் பயம் விரட்ட, காலம் துரத்தும் ஒரு ஒப்பற்ற ஓட்டம். அவள் இதுவரை ஓடிப் பார்த்திராத ஓட்டம். குருவாயூரப்பன் கோயிலின் அருகிருக்கும் ஆலமரம் வரை ஓடி வந்துவிடுகிறாள். இதோ கோவில்… இனி அப்பனின் கழுத்தில் இந்த மாலை அழகு சேர்க்கும்.

சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு மாலையைப் பார்க்கிறாள். ஒரு பூவிதழ்கூட உதிர்ந்துவிடவில்லை. காலத்தின் மணித்துளி இதழ்கள் வேகமாகவே அவிழ்வதை உணர்கிறாள். ஆழ்ந்த பெருமூச்சொன்றுடன் அதற்கு மேல் ஓடமுடியாமல் நிற்கிறாள். அரங்கனின் திருவிளையாடல். யாரே அறிவார்… கோயில் நடைக் கதவுகள் மூடப்படும் சப்தம் கேட்டு அங்கேயே அமர்ந்து ஓங்கிக் குரலெடுத்து அழத் தொடங்குகிறாள்.

போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்… கோது கலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு…
- என்று பாடியபடியே பெரியவர் பூந்தாணம் நம்பூத்திரி அவ்வழியே வருகிறார். தீராத அழுகையுடனும் கையில் அழகு மிகுந்த மாலையுடனும் ஆற்ற முடியாமல் நிற்கும் அந்தச் சிறிய பெண்ணைப் பார்க்கிறார்.

குழந்தே என்ன ஆச்சு… ஏன் அழறே…. என்று கேட்க, மஞ்சுளா தான் தினமும் குருவாயூரப்பனுக்கு மாலை கட்டித் தருவதையும், இன்று காலதாமதம் ஆனதால் கோயில் கதவு மூடப்பட்டுவிட்டதால் மனமுடைந்து அழுவதையும் தேம்பலுடன் சொல்கிறாள். பெரியவர் குழந்தே… அரங்கன் எங்கும் இருக்கிறான். உன் சின்னக் கரங்களால் நீ தொடுத்த இந்த மாலையை இந்த ஆலமரத்திற்கு அணிவித்தால் அப்பனுக்கு மாலை சூட்டிய புண்ணியம் கிட்டும். கவலைப்படாமல் போய்த் தூங்கு எனச் சொல்லிச் சென்றுவிடுகிறார். குழந்தையும் மாலையை மரத்திற்குச் சாற்றி விழுந்து வணங்கி வீடு சென்று விடுகிறாள்.

நாமம் சொல்லும் இடத்திலே நித்ய வாசம் செய்யும் அரங்கன் அந்த மாலையை ஆலமரத்திற்கு அணிவித்த அதே மாலையை, தானே அணிந்து கொள்கிறான்.மறுநாள் காலை பட்டர் கோயில் விளக்கோடும் கையில் செப்புச் சொம்புத் தீர்த்தத்தோடும் கதவுகளைத் திறக்கிறார். கீழே விழுந்து நமஸ் கரிக்கிறார். பிராகாரத்தை ஒருமுறை சுற்றி வந்து கர்ப்பகிரஹ கதவுகளைத் திறக்கிறார். நிர்மால்ய பூஜைகளைச் செய்யத் தொடங்குகிறார். திரை இழுத்து மூடியிருக்க, சுப்ரபாத சேவைக்காக பக்தர்கள் கூடத் தொடங்குகிறார்கள்.

மாலைகளை விக்ரஹத்திலிருந்து ஒவ்வொன்றாக கழற்றுகிறார். நேற்று தன்னால் அணிவிக்கப்படாத சிவப்புப் பூக்கள் நிறைந்த மாலையொன்றை கழற்ற முடியாத தவிப்பில்… அது மின்னலுடன் ஜொலிப்பதைக் கண்டு கண்கள் கூச அதிர்ச்சி அடைகிறார். ‘எண்ட குருவாயூரப்பா… எந்த காணுன்னது…’ என்று கூவத் தொடங்குகிறார். தான் தவறு செய்துவிட்டோமோ என நினைந்து கூனிப் போகிறார். வெளியில் வர, பூந்தாணம் நம்பூத்திரி என்ன விடயமென்று வினவுகிறார். பட்டத்திரியின் கழற்ற முடியாத அரங்க கழுத்து மாலையின் அதிசயம் கேட்க, நேற்றைய சம்பவம் அவர் மனதில் முகிழ்கிறது. உடன் ஒரு கவிதையும்…

ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்களுக்கு
ஒன்னுகொண்டு அறிகுவானுன்ன வஸ்துவு மாய
ஒன்னிலுமொரு பந்தமிலாததாய
நின்னவன் தன்னே விஸ்வம் சமச்சுபோல்

ஹரே கிருஷ்ணா… ஹரே கிருஷ்ணா… என்று ஓங்கிக் குரலெடுத்து பாடுகிறார். பட்டத்திரியிடம் இது நேற்று அந்த மஞ்சுளா குருவாயூரப்பனுக்காக ஆலமரத்தில் சாற்றிய மாலையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி திரையை விலக்கச் சொல்கிறார். திரை விலகியவுடன் கோடி சூரிய வர்ணங்களை வாரி இறைக்கும் மாலையுடன் அரங்கன் குருவாயூரப்பன் அற்புதமாய் புன்னகைக்க, பூந்தாணம்… எண்ட குருவாயூரப்பா… இது மஞ்சுளா உனக்குச் சாற்றிய மாலையென்பது உண்மையென்றால் நிர்மால்ய பூஜைக்காக அதை நீ களைந்துகொள்ள அனுமதிக்க வேணும் என்று விண்ணப்பிக்கிறார். மாலை தானாகவே மெல்ல தளர்ந்து தரையைத் தொடுகிறது.

தூரத்தில் ஒரு மூலையில் இதையெல்லாம் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் குழந்தை. ஓடிச்சென்று அந்த மாலையை வாங்கி மீண்டும் அந்த ஆலமரத்திற்கே அணிவிக்கிறாள். அக்குழந்தையின் முகமெங்கும் தெய்வீகம் பரவி செந்தூரமாய்ச் சிவக்கிறது. மஞ்சுளா… மஞ்சுளே… என்று பக்தர்கள் மறுகுகிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். அயற்றுகிறார்கள். ஆலமரத்தில் அரங்கன் பக்தர்களுக்காக இன்றும்கூட மாலை சூடிக் கொள்கிறான். மஞ்சுளா… இன்னொரு ஆண்டாளாய் அவதரித்ததை அரங்கன் உலகிற்கு உணர்த்துகிறான். அந்த ஆலமரம் இன்னமும் குருவாயூர் கோவிலருகில் இருக்கிறது. தெய்வீகம் பெண் களால் உணர்த்தப்படுகிறது. பெண்கள் தெய்வீகமானவர்கள் என்பதும் உணரப்படுகிறது. உணர்த்தவும்படுகிறது.

ராகவபிரியன்

Tags : Ninnavan ,Visvam ,
× RELATED பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும்...