×

வேண்டியதெல்லாம் நிறைவேற சந்தைக்கடை மாரியம்மன்

மலைகளின் அரசியாகத் திகழும் ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. சந்தைக்கடையை ஒட்டி மாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். இதனாலேயே இக்கோயிலை சந்தைக்கடை மாரியம்மன் கோயில் என்று பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கோயில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யாவரும் எளிதில் வந்து தரிசிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஊட்டி சுற்றுலா தளமாக உள்ளதால், இங்கு தமிழக மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் அதிகளவு வருகின்றனர். அவர்கள் இக்கோயிலிற்கு வந்து வழிபாடு நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது.

ஆதிபராசக்தி, இந்தக் கோயிலில் மாரியம்மனாக, காளியம்மனாக, காட்டேரியாக, முப்பெரும் தேவியாக எழுந்தருளியிருப்பது பக்திப் பரவசமூட்டுகிறது. இறைவி, உயிர்களுக்கு அருளை பொழிவதன் மூலம் உலகில் அவர்கள் வாழ்ந்திட வேண்டிய சக்தியைத் தருகிறாள். அந்த சக்தி மூன்று வகைப்படும்: இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இச்சை என்பது விருப்பமாகும். உயிர்களுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்ற விருப்பம் தோன்றுவது இயற்கை. அந்த விருப்பங்களை அடைய வலிமை தருவது இச்சா சக்தியாகும். கிரியை என்றால், செயல்படுதல் அல்லது இயங்குதல் எனப்படும்.

அவ்வாறு உயிர்கள் இந்த உலகில் முறையாக இயங்குவதற்கு உரிய வகையில் வலிமை அருள்வது கிரியா சக்தியாகும். அதே போன்று, உயிர்கள் உலகத்தில் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கி வாழ்ந்து ஓய்ந்த பின்னர் ஞானம் என்ற அறிவுநிலையை எய்த வலிமையை அளிப்பது ஞான சக்தியாகும். இந்த மூன்று வகையான சக்திகளையும் உயிர்களுக்கு வாரி வழங்குவதற்காகவே ஊட்டி மாரியம்மன் திருக்கோயிலில் மாரியம்மனாகவும், காளியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும், அம்மன் மூன்று வடிவங்களை தாங்கி ஆட்சி செய்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயிலில் வேண்டியதெல்லாம் நிறைவேறுவதால் நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags : Market Mariamman ,
× RELATED காமதகனமூர்த்தி