திருக்குறளில் காயும் கனியும்!

குறளின் குரல்: 166

திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்லை, எல்லா அறநெறிக் கருத்துகளையும் சொல்லும் திருக்குறள் அந்தக் கருத்துகளை விளக்கப் பல்வேறு உவமைகளைக் கையாள்கிறது, காயும் கனியும் கூட அதில் உவமைகளாக இடம்பெறுகின்றன.  

`இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’

(குறள் எண்-100)

பேசுவதற்கு இனிமையான வார்த்தைகள் இருக்கும்போது அவற்றை விட்டுவிட்டு கடுமையாகப் பேசுவது என்பது, கனிகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் காய்களைப் பறித்துத்

தின் பதற்குச் சமமாகும். காமத்துப் பாலிலும் தம் கருத்தைத் தெரிவிக்கக் காயையும் கனியையும் உவமைகளாகப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.

`தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி’.

(குறள் எண்-1191)

தாம் யாரை விரும்புகிறாரோ

அந்தக் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர் எவரோ அவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

`துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று’.

(குறள் எண்-1306)

பெரிய ஊடலும் சின்ன ஊடலும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும், முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். கனி என்ற சொல்லைப் பயன்படுத்தும் வள்ளுவர், அதே பொருளைத் தரக்கூடிய பழம் என்ற சொல்லையும் ஓர் இடத்தில் கையாள்கிறார்.

`அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்’.

(குறள் எண்-1120)

அனிச்ச மலரும் அன்னப் பறவையின் இறகும் கூட பெண்களின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சிப் பழம்போல் வலியேற்படுத்தக் கூடியவை. (நெருஞ்சிப் பழம் முள் நிறைந்தது) நமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூட காயும் கனியும் நிறைய வருகின்றன, இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் சாதாரணக் கனி அல்ல, எச்சில் கனியே மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுவிடுகிறது.

மூதாட்டி சபரி, ராமபிரானை எச்சில் கனி தந்துதான் உபசரிக்கிறாள். அது எச்சில் கனி என்பதால் ராமனுடன் இருந்த லட்சுமணன் அந்தக் கனியை உண்ணத் தயங்குகிறான். ஆனால், ஒவ்வொரு கனியாகக் கடித்துப் பார்த்து கசப்பானவற்றை விலக்கி இனிப்பானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவள் பக்தியின்

பரிமாணம் ராமனை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

ராமன் அந்தக் கனிகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயில் இட்டுக் கொள்கிறான், லட்சுமணன் மனம் திகைக்கிறது. ``அண்ணா ஏன் கனியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அதன் பின் வாயில் இட்டுக் கொண்டீர்கள்’’ என வினவு கிறான், மிகுந்த நெகிழ்ச்சியுடன் ராமன் பதில் சொல்கிறான்;`லட்சுமணா! பக்தி மணம் கமழும் சபரியின் உமிழ்நீர் கங்கையை விடவும் புனிதமானது.

அதை எச்சில் என்று கருதுவது தகாது’ பிறகு லட்சுமணன் தானும் அந்தக் கனிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு வாயில் இட்டுக் கொள்கிறான், இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் மூதாட்டி சபரி யோசனையில் ஆழ்கிறாள். பின் தயங்கியவாறே கேட்கிறாள்;`ராமா!  நீ புனிதமே வடிவான கடவுள், நானோ ஆசாரம் அறியாதவள். எச்சில் கனியை உனக்குத் தந்து அபசாரம் செய்துவிட்டேனோ?’

கலகலவென நகைத்த ராமன் சொல்கிறான்;`தாயே! கவலைப் படாதே. பரமனுக்கும் பக்தைக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் புனிதமான எச்சில் சம்பந்தம் உன் அடுத்த பிறவியிலும் தொடரும்!

`எப்படி?’ ஆச்சரியத்தோடு வினவுகிறாள் சபரி. பதில் சொல்கிறான் ராமன்.`தாயே! அடுத்த பிறவியில் நான் கண்ணனாகப் பிறப்பேன். நீ கண்ணன் கையிலிருக்கும் புல்லாங்குழலாகப் பிறப்பாய். புனித எச்சில் சம்பந்தம் மறுபிறப்பிலும் தொடரத் தானே செய்யும்?’

சிவ புராணத்திலும் ஒரு மாங்கனி வருகிறது. நாரதர் கொண்டுவந்து கொடுத்த அந்த ஒற்றை மாங்கனியை யாருக்குக் கொடுப்பது? விநாய கருக்கா முருகனுக்கா? உலகை முதலில் சுற்றி வந்தவர்க்கே கனி எனப் போட்டி நடத்தப்படு கிறது. முருகன் மயிலில் ஏறிச் சுற்றிவரச் செல்கிறான், தாய் தந்தைதான் உலகம் எனக் கூறி அவர்களைச் சுற்றிவந்து விநாயகன் பழத்தைப் பெறுகிறான் என்பது பெற்றோரின் பெருமையைச் சொல்லும் புராணக் கதை. புராணங்கள் மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியமும் கூட காயைப் பற்றியும் கனியைப் பற்றியும் பேசுகிறது. அதிகமான் அஞ்சி என்ற மன்னன் தமிழ் மூதாட்டி அவ்வையின் பாடல்களில் மனம் பறிகொடுத்தவன். அவ்வையை ஆதரித்த மன்னன் அவன்.

 

ஒருநாள் வேட்டைக்குப் போனான், கானகத்தில் அரிய வகைக் கருநெல்லி மரத்தைக் கண்டான், பல்லாண்டுகளுக்கு ஒருமுறை அந்த மரம் அபூர்வமாக ஒரே ஒரு கருநெல்லிக் கனியைத் தரும். அந்தக் கனியை உண்பவர்கள், ஆயுள் கூடப் பெற்று நீண்ட காலம் வாழ்வார்கள். இதை அந்த மன்னன் அறிவான். அந்தக் கனியைப் பறித்த மன்னன் யோசித்தான். தான் வாழ்வதை விடவும் அவ்வை நீண்ட காலம் வாழ்ந்தால் அதனால் தமிழுலகம் பயன் பெறும் அல்லவா என்று அவன் மனம் சிந்தித்தது.

அரண்மனை திரும்பிய அவன் அது நீண்டநாள் வாழவைக்கும் கனி என்பதைச் சொல்லாமலே அவ்வையிடம் கொடுத்து உண்ணச் செய்தான். உண்டபின் அந்தக் கனியின் சக்தி பற்றி அறிந்த அவ்வை, அதிகமான் தன்மேல் செலுத்தும் அதிகமான பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்தாள். அவ்வைக்கு அதிகமான் கருநெல்லிக் கனி தந்த செய்தியை நல்லூர் நத்தத்தனார் தாம் எழுதிய சிறுபாணாற்றுப் படையில்;

 

“நெல்லி அமிழ்து விளை தீங்கனி

ஔவைக்கு ஈந்த அதியன்”

என்ற வரிகளில் பதிவு செய்துள்ளார்.

 

அவ்வைக்குத் தாம் மிகவும் தமிழறிந்தவர் எனச் சற்று அகங்காரம் ஏற்படுகிறது. அகங்காரம் முக்திக்கு வழி காட்டாதே? தன் பக்தையான அவ்வையின் அகங்காரத்தை நீக்க முருகன் முடிவு செய்கிறான். அவ்வை நடந்த களைப்போடு நிழலுக்கு ஒதுங்கிய நாவல் மரக் கிளையில், சிறுவனாகத் தோன்றுகிறான் கடவுள் முருகன்.

 

`பாட்டி களைத்திருக்கிறாயே? உனக்குச் சாப்பிட நாவல் பழங்கள் பறித்துப் போடுகிறேன், அதுசரி. உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?’ என வினவுகிறான். அவ்வையின் மனம் திகைக்கிறது. அந்தக் கேள்வியின் பொருள் அவ்வைக்குப் புரியவில்லை. சரி சரி, சுட்ட கனியையே பறித்துப் போடு என்கிறாள் அவ்வை. முருகன் மரத்தை உலுக்க கனிகள் கீழே உதிர்கின்றன. உதிர்ந்த கனிகளில் மண் ஒட்டிக் கொள்ளவே, அதை ஊதி ஊதி உண்கிறாள் அவ்வை.

 

`பழத்தை ஊதி ஊதி உண்கிறாயே? பழம் ரொம்பவும் சுட்டுவிட்டதா?’ எனச் சிறுவன்

வினவியபோதுதான் அவ்வைக்கு அவன் கேட்ட கேள்வியின் பொருள் புரிகிறது.  

சூரியனால் அதிகம் சுட்டுக் கனிந்த பழமே சுட்ட பழம். அவ்வளவாகக் கனியாத பழம் சுடாத பழம், `நாவல் கனியின் மூலம் எனக்குத் தமிழ் கற்பிக்கிறாயே? யாரப்பா நீ?’ என அவ்வை கனிவோடு வினவ, சிறுவன் முருகனாய்க் காட்சி தந்தான் என்றும் அவ்விதம் அவ்வையின் கர்வத்தை அவன் நீக்கினான் என்றும் சொல்கிறது கதை.

நிழலுக்கு ஆல மரத்தடியில் படுத்திருந்த ஒரு வழிப்போக்கனின் சிந்தனை பற்றிய புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு.

 

மாபெரும் ஆலமரத்தின் பழம் மிகச் சிறியதாக இருக்கிறது. ஆனால், தரையில் படரும் எளிய பூசணிக்கொடியின் காயோ மிகப் பெரிதாக இருக்கிறது. இதென்ன இறைவன் படைப்பில் இப்படியொரு முரண் எனச் சிந்தித்தவாறே அவன் உறங்கிவிட்டான். திடீரென அவன் நெற்றியில் ஓர் ஆலம்பழம் காற்றில் உதிர்ந்து விழுந்தது. துள்ளி எழுந்த அவன் புரிந்துகொண்டான். பூசணிக்காய் போல் ஆலம்பழம் பெரிதாக இருக்குமானால் அவன் நிலை இப்போது என்ன ஆகியிருக்கும்? பூசணிக் கொடியின் கீழே போய் யாரும் படுத்துத் தூங்கப் போவதில்லை.

ஆனால், ஆலமரத்தடியில் அவனைப் போல் பலர் நிழல் வேண்டி வந்து படுத்து உறங்குவார்கள். கருணையே வடிவான இறைவன் படைப்பில் எல்லாமே காரணத்தோடு தான் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான் அவன்.

`பலே பாண்டியா’ படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று காய் என்ற சொல்லை வைத்து சிலேடை நயம் கொஞ்சக் கொஞ்ச எழுதப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்

பாடல்களில் தனி முத்திரை பதித்த பாடல் அது.

`அத்திக்காய் காய்காய் ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும்

நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்

அங்கேகாய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ?

இரவுக்காய் உறவுக்காய்  ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயுங்காய் நிதமுங்காய் நேரில் நிற்கும்

இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம்போல் தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

உள்ளமெலா மிளகாயோ? ஒவ்வொருபேச் சுரைக்காயோ?

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ?

கோதை எனைக் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா!

`செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பாடல் `ஆளுக்கொரு வீடு’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய கருத்தாழம் நிறைந்த பாடல்;

`காயும் ஒரு நாள் கனியாகும் - நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விலையாகும் - நம்

கனவும் நினைவும் நிலையாகும் - உடல்

வாடினாலும் பசி மீறினாலும் - வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்’

எனக் காயையும் கனியையும் பற்றி அதில் வரும் வரிகள் உழைத்து வாழ்வதன் மேன்மையை விளக்குகின்றன. ஒவ்வோர் ஆப்பிள் பழத்திலும் எத்தனை விதைகள் உள்ளன என்பதை எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம். ஆனால், ஒவ்வோர் ஆப்பிள் விதையிலிருந்தும் எதிர்காலத்தில் மொத்தமாய் எத்தனை ஆப்பிள் பழங்கள் தோன்றும் என்பதை எப்படிக் கணிக்க முடியும்? ஒரு விதை ஓர் ஆப்பிள் மரத்தை உருவாக்கினால் அந்த ஆப்பிள் மரம் மேலும் எத்தனை ஆப்பிள்களை உருவாக்கும்?

அதிலிருந்து தோன்றும் ஒவ்வோர் ஆப்பிளிலும் எத்தனை எத்தனை விதைகள்! அவை உருவாக்கப் போகும் ஆப்பிள் மரங்களின் எண்ணிக்கையும், அவற்றில் பழுக்கப் போகும் பழங்களின் எண்ணிக்கையும் எத்தனை எத்தனை! அதற்கு முடிவேது! ஓர் ஆப்பிள் விதை நம் கற்பனையின் எல்லையைத் தாண்டிய அளவு ஆப்பிள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் அல்லவா?

 

ஒரு செயலைச் செய்துவிட்டு வருபவரைப் பார்த்துக் காயா பழமா எனக் கேட்கும் வழக்கம் நம்மிடையே உண்டு. காய் என்றால் செயலில் தோல்வி என்றும் பழம் என்றால் செயலில் வெற்றி என்றும் பொருள். பழம் எப்போதும் வெற்றியின் அடையாளம். அதனால்தான் `வெற்றிக் கனியை ஈட்டித் தாருங்கள்’ என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். சிலேடைச் செல்வர் கி.வா.ஜகந்நாதன் தன் இல்லத்திற்கு வந்தபோது `வீட்டுத் தோட்டத்தில் பழுத்தது’ என்று சொல்லி, பாசத்துடன் அவருக்குச் சில மாதுளங்கனிகளைக் கொடுத்தாள் ஒரு சகோதரி. `மாது உளங்கனிந்து கொடுத்த கனியல்லவா இந்த மாதுளங்கனி?’ என்றவாறே மலர்ச்சியோடு அந்தக் கனிகளைப் பெற்றுக் கொண்டார் கி.வா.ஜ,.

மறுமுறை, அதே வீட்டுக்குக் கி.வா.ஜ, சென்றபோது `இது வீட்டில் பழுத்த கொய்யாக் கனி’ எனக் கொய்யாப் பழத்தைக் கொடுத்தாள் அதே சகோதரி. `இல்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’ என்றார் கி.வா.ஜ. அவள் திகைத்தபோது கி.வா.ஜ விளக்கினார். `இது கொய்யாக் கனி அல்லவே? மரத்திலிருந்து கொய்த கனியல்லவா?’ தமிழ் இலக்கியத் தோட்டத்தில் காயும் கனியும் திருவள்ளுவர் காலத்திலிருந்தே நிறைய விளைகின்றன. அவற்றைச் சுவைப்பது ஒரு தனி இலக்கிய இன்பம்தான்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: