×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

418. ஸுதர்சனாய நமஹ (Sudharshanaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421
[பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர்
அளிக்கும் ராமனின் சரித்திரம்)

சிவதனுஸ்ஸை ராமன் முறித்த செய்தியை அயோத்தியில் உள்ள தசரதனுக்குத் தூதர்கள் மூலம் சொல்லி அனுப்பினார் ஜனகர். சீதா ராமனின் திருமணத்தை நிச்சயிப்பதற்காகத் தனது பரிவாரத்துடன் தசரதன் புறப்பட்டு மிதிலை தேசத்துக்கு வந்தார். ஜனகரும் ராம லட்சுமணர்களும் தசரதனையும் அவரோடு வந்திருக்கும் அன்னையர்கள், தம்பிமார்களையும் எதிர்கொண்டு வரவேற்றார்கள்.

நகரின் எல்லையிலிருந்து அவர்களை ஜனகரின் அரண்மனைக்கு ராமன் அழைத்துச் செல்லுகையில், மிதிலையில் உள்ள மக்கள் எல்லோரும் ராமனின் அழகைக் கண்டு மெய்ம்மறந்து நின்றார்களாம். ராமனின் அழகை அவர்கள் அநுபவித்த விதத்தை உலாவியல் படலம் என்னும் ஒரு தனிப் படலமாகக் கம்பர் பாடியுள்ளார்.

“வீதிவாய்ச் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோன் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்”

என்கிறார் கம்பர். குதிரை பூட்டிய தேரில் பயணம் செய்வது போல், மிதிலையில் வாழும் மக்களின் கண்களிலே ராமன் பயணித்துக் கொண்டிருந்தான். கண்ணன் என்றால் கண்ணில் நிற்பவன் என்று ஒரு பொருள் உண்டு. காண்போர் கண்களில் நன்றாக நிலைபெற்று, அதன் மூலம் கண்ணன் என்ற திருப்பெயர் தனக்குக் காரணப்பெயராகவும் இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டான் ராமன் என்பது இப்பாடலின் கருத்து.அந்த அளவுக்குக் கண்ணுக்கு இனிதாக இருக்கும் தன் அழகினாலே, மிதிலை மக்களின் கண்களை எல்லாம் கட்டிப்போட்டுவிட்டான் ராமன். அதை கம்பர்,

“தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்”
என்று பாடுகிறார்.

தாடகையை வதைத்த ராமனின் தோள்
அழகைக் கண்டவர்கள் அந்தத் தோள் அழகி லேயே
ஈடுபட்டு வைத்தகண் வாங்காமல்
அத்தோள்களையே பார்த்து வந்தார்கள்.

ராமனின் மற்ற அவயவங்களைக் காணவில்லை.
அகல்யாவின் சாபத்தைப் போக்கிய ராமனின் திருவடிகளின் அழகைக் கண்டவர்கள் அந்தத் திருவடிகளின் அழகிலேயே ஈடுபட்டு வைத்த கண் வாங்காமல் அத்திருவடிகளையே பார்த்து வந்தார்கள். மற்ற அவயவங்களைக் காணவில்லை.

சிவ தனுஸை முறித்த ராமனின் திருக்கரத்தின் அழகைக் கண்டவர்கள் அதையே பார்த்தார்கள், மற்ற அங்கங்களைக் காணவில்லை.ஒருவேளை மிதிலை மக்களுக்குப் பார்வையில் குறைபாடு உள்ளதோ? அதனால் தான் நீண்ட நேரம் பார்க்கிறார்களோ? இல்லை, இல்லை. அவர்கள் வாள்போல் கூர்மையான கண் கொண்டவர்கள்தான். ஆனால் ராமனின் ஒவ்வோர் அங்கமும் அத்தனை அழகாக இருப்பதால், வேறு அங்கத்தை நாடி அவர்களின் பார்வை செல்லவில்லை. முதலில் எந்த அங்கத்தைப் பார்த்தார்களோ, அதையே முடிவு வரை பார்த்தபடி உள்ளார்கள்.

இதற்கு ஓர் உவமை சொல்கிறார் கம்பர். (ஆசாரியர்கள் அருளிய உரையின் அடிப்படையிலான விளக்கம் இது) பரமாத்மாவான திருமாலுக்கு அங்கங்களாக இருக்கும் தேவர்களை வணங்குபவர்கள், திருமாலின் ஓர் ஓர் அங்கமாக இருக்கும் குறிப்பிட்ட சில தேவர்களையே வணங்கி நிற்பார்களே ஒழிய, முழுமையான திருமாலை வழிபடுவதில்லை. அதுபோல்தான் இங்கே ராமனின் குறிப்பிட்ட ஓர் ஓர் அங்கங்களை மட்டுமே கண்டு அதில் மயங்கிய மிதிலை மக்கள் முழுமையாக ராமனின் திருமேனி அழகைக் காணவில்லை.

இப்படிக் காண்போரின் கண்ணுக்கு இனிதாக இருக்கும் திருமேனி அழகோடு திகழ்வதால், ராமன் ‘ஸுதர்சன:’ என்று அழைக்கப்படுகிறார். ‘தர்சன’ என்றால் பார்வை. ‘ஸுதர்சன:’ என்றால் பார்வைக்கு இனியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 418-வது திருநாமம்.“ஸுதர்சனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புறக்கண், அகக்கண் ஆகிய இரண்டுமே சிறந்து விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

419. காலாய நமஹ (Kaalaaya namaha)கோதாவரிக் கரையில் உள்ள பஞ்சவடி

என்னும் இடத்தில், லட்சுமணன் அமைத்த பர்ண சாலையில் சீதையோடு ஆனந்தமாக எழுந்தருளி இருந்தான் ராமன். அச்சமயம் அங்கே ராவணனின் சகோதரியான சூர்ப்பணகை வந்தாள். பர்ணசாலையில் விளங்கும் ராமனின் அழகைக் கண்டாள். அடுத்த நொடியே ராமன் மீது மையல் கொண்டாள்.“இவன் மன்மதனோ? ஆனால் மன்மதனின் உடலைப் பரமசிவன் எரித்துவிட்டாரே! மன்மதனுக்கு உடலே கிடையாதே! எனவே இவன் மன்மதனாக இருக்க வாய்ப்பில்லை!

இவன் இந்திரனாக இருப்பானோ? ஆனால் இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உண்டு! இவன் இரண்டு கண்களோடுதானே இருக்கிறான்?அல்லது, சிவபெருமானாக இருப்பானோ? ஆனால் அவருக்கு நெற்றிக்கண் ஒன்று இருக்குமே! அது இவனிடம் இல்லை!அல்லது, திருமாலாக இருப்பானோ? ஆனால் திருமாலுக்கு நான்கு தோள்கள் உண்டு! இவன் இரண்டு தோள்களோடுதானே விளங்குகிறான்?” என்று இப்படிப் பலவாறு ராமனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள் சூர்ப்பணகை. இதைக் கம்பர்,

“சிந்தையின் உறைபவர்க்கு உருவம்
தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிர நயனம் ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர்மூன்று நான்குதோள்
உந்தியின் உலகளித்தார்க்கு என்று
உன்னுவாள்”
என்று பாடுகிறார்.

ராமனின் அழகில் மிகவும் ஈடுபட்ட சூர்ப்பணகை அவனது கையழகு, தோள் அழகு, மார்பழகு, முக அழகு, திருவடி அழகு, திருமேனி ஒளி, திருவாய் எழில், முடியழகு, இடையழகு, நடையழகு, முழு மெய்யழகு என ஒவ்வொன்றிலும் ஈடுபட்டு அதை எல்லாம் வர்ணித்துக் கவிபாடத் தொடங்கிவிட்டாள். சூர்ப்பணகையைக் கூட

கவியாக்க வல்லது ராமனின் அழகு. கம்ப
ராமாயணத்திலிருந்து ஓர் உதாரணத்தை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்:
“உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று இவன் அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர்
பொடித்தன போலும் இப் புல் என்று
உன்னுவாள்”
என்கிறாளாம் சூர்ப்பணகை. பூமியில் ஏன் புற்கள் முளைத்திருக்கின்றன தெரியுமா? அவை புல் கிடையாது! ராமன் பூமியின் மேல் திருவடி வைத்ததால், பூமிதேவி மிகவும் மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியில் பூமிதேவியின் ரோமங்கள் எல்லாம் எழுந்து நின்று விட்டன. எழுந்து நின்ற பூமியின் ரோமங்களே புற்களாகக் காட்சி
அளிக்கின்றன என்பது இப்பாடலின் கருத்து.

இவ்விடத்தில் வால்மீகி ராமாயணத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் இடையே ஒரு சிறு வேறுபாட்டைக் காணமுடிகிறது. சூர்ப்பணகை தனது கொடிய அரக்கி வடிவத்துடனேயே
ராமனிடம் வந்ததாக வால்மீகி தெரிவித்தார். கம்பரோ, மனோதத்துவ ரீதியில், “நாம் இத்தகைய கோர வடிவத்துடன் ராமன் முன்னே போய் நின்றால் ராமன் ஏற்பானோ மாட்டானோ!” என்று அஞ்சிய சூர்ப்பணகை, மந்திரத்தால் தன் வடிவை அழகிய பெண்ணின் வடிவமாக மாற்றிக்கொண்டு ராமனிடம் வந்தாள் என்று தெரிவிக்கிறார்.

சூர்ப்பணகை ராமன் மீது காதல் கொண்டதில் தவறில்லை. ஏனெனில் இறைவனின் அழகைப் பார்க்கும்போது எல்லா உயிர்களுக்கும் அவன்மீது காதல் வருவது இயற்கை. ஆனால் ராமனைத் தான் அடைவதற்குத் தடையாக இருப்பவள் சீதை என்று எண்ணிச் சீதையை அழிக்கப் பார்த்தாள் சூர்ப்பணகை. அதற்குத் தண்டனையாகத் தனது காதையும் மூக்கையும் இழந்தாள் என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

இப்படி ரஜோகுணம் மிகுந்த சூர்ப்பணகையைக் கூடத் தன் பால் ஈர்க்கும் அளவுக்குப் பேரழகு மிக்கவனாக ராமன் திகழ்வதால், ராமன் ‘கால:’ என்று அழைக்கப்படுகிறான். ‘கலனம்’ என்றால் ஈர்த்தல் என்று பொருள். ‘கால:’ என்றால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 419-வது திருநாமம்.“காலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வருவோரின் மனங்களை ராமன் கொள்ளை கொள்வான்.

420. பரமேஷ்டினே நமஹ (Parameshtine namaha)

ராமன் தனது அவதாரத்தை நிறைவு செய்யும் கட்டம் வந்தது. காலதேவன் மூலமாக பிரம்மதேவர் ராமனுக்கு அவதாரம் நிறைவடையும் காலம் வந்ததை நினைவூட்டினார். எனவே அவதாரப் பூர்த்தியின் முதல்படியாக வைகுண்டம் நோக்கிய தனது பயணத்தை லட்சுமணன் தொடங்கினான்.சரயூ நதியில் நீராடிய லட்சுமணன், உள்ளத்தில் திருமாலைத் தியானித்தபடி, பிராணாயாமம் செய்து தனது பிராணனை விட்டான். இந்திரன் லட்சுமணனை அந்த உடலோடு அப்படியே தேவலோகத்துக்கு அழைத்துச் சென்றான். தேவரிஷிகள் அங்கே லட்சுமணனுக்குப் பூஜைகள் செய்தார்கள்.

“ததோ விஷ்ணோச் சதுர்பாகம் ஆகதம் ஸுரஸத்தமா:
த்ருஷ்ட்வா ப்ரமுதிதாஸ் ஸர்வே பூஜயந்தி ஸ்ம ராகவம்”
என்கிறார் வால்மீகி பகவான்.

குசாவதி, ச்ராவஸ்தி என்ற இரு நகரங்களை உருவாக்கிய ராமன் முறையே குசனையும் லவனையும் அப்பகுதிகளின் மன்னர்களாக முடிசூட்டினான். தனது வைகுண்டப் பயணத்தைத் தொடங்கத் தயாரானான் ராமன். சுக்கிரீவனும் அங்கதனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு ராமனைத் தேடி வந்தான்.

விபீஷணன் ராமனை நாடி வந்து, தானும் ராமனுடன் வர விரும்புவதாகத் தெரிவித்த நிலையில், ராமன், “விபீஷணா! நம் குலதெய்வமான ரங்கநாதனை ஆராதித்துக்கொண்டு, பூமியில் எவ்வளவு காலம் ஜனங்கள் உள்ளார்களோ அவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டு அதன்பின் என்னை வந்து என்னை அடைவாயாக!” என்று சொன்னான்.
அவ்வாறே அனுமனைப் பார்த்து,

“மத்கதா ப்ரசரிஷ்யந்தி யாவத் லோகே ஹரீச்வர
தாவத் ரமஸ்வ ஸுப்ரீதோ மத்வாக்யம்
அநுபாலயன்”

“இந்த உலகில் ராமாயண வரலாறு எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் வரை நீ பூமியிலே சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு எனது நாமங்களையும் கதைகளையும் பாடிக் கொண்டு திகழ்வாயாக!” என்று கூறினான் ராமன்.ஜாம்பவான், மைந்தன், துவிவிதன் ஆகியோரும் கலியுகம் நிறைவடையும்வரை பூமியிலே வாழ்வார்கள் என்று சொல்லிவிட்டு மறுநாள் விடியற்காலை தனது வைகுண்டப் பயணத்தைத் தொடங்கினான் ராமன்.

மெல்லிய பீதாம்பரம் அணிந்தபடி, வாயில் பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, கையில் தர்ப்பை அணிந்து, அரண்மனையிலிருந்து வெளியேறினான் ராமன். அவனது வலப்புறத்தில் தேவியும் இடப்புறத்தில் பூதேவியும் தோன்றினார்கள். வேதங்கள் வேதியர் வடிவில் ராமனைப் பின்தொடர்ந்தன. வைகுண்ட வாசல் திறந்ததை அறிந்து ரிஷிகளும் ராமனைப் பின்தொடர்ந்தார்கள். பரதன், சத்ருக்நன் அயோத்தியில் உள்ள மனிதர்கள், பறவைகள், பசுக்கள் என அனைவரும் ராமனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

சரயூநதியில் இறங்கிய ராமன், திருமாலுக்குரிய திருமேனியில்கலந்தான். தேவலோகத்தில் காத்திருந்த லட்சுமணன் ஆதிசேஷன் திருமேனியில் கலந்தான். (வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் - திருமலை நம்பிகள் ராமாநுஜருக்குச் சொன்ன ரகசிய விளக்கத்தின் அடிப்படையில்) பரதன் கருடனின் திருமேனியில் கலந்தான். சத்ருக்நன் விஷ்வக்சேனரின் திருமேனியில் கலந்தான். தன்னைப் பின்தொடர்ந்து வந்து உயிரினங்களோடு விஷ்ணு லோகத்தை அடைந்தான் ராமன்.

(கம்ப ராமாயணத்தின்படிபரதன் சக்கரத்தின் அம்சம், சத்ருக்நன் சங்கின் அம்சம்)இப்படிப் பூமியில் தனது அவதாரச் செயல்களை நிறைவு செய்து விட்டுப் பரமபதமாகிய வைகுண்டத்திலே போய் எழுந்தருளியதால், ராமன் ‘பரமேஷ்டீ’ என்று அழைக்கப்படுகிறான். ‘பரமேஷ்டீ’ என்றால் பரம பதத்தில் (வைகுண்டத்தில்) உறைபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 420-வது திருநாமம்.“பரமேஷ்டினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிகப்பெரிய பதவிகளை எட்டும்படி ராமன் அருள்புரிவான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்


Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!