×

₹56 லட்சத்துடன் தனியார் நிறுவன டிரைவர் ஓடிய சம்பவம் ஏடிஎம் மையத்தில் நிரப்ப வேண்டிய பணத்தை திருடிய முக்கிய குற்றவாளி கைது

*சிசிடிவி காட்சியை வைத்து ₹53.5 லட்சம், கார் பறிமுதல்திருமலை : ஆந்திர மாநிலம் கடப்பாவில்  ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் தற்காலிக டிரைவர் ₹56 லட்சத்துடன் தப்பிச் சென்றார். இந்த திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ₹53.5 லட்சம், எட்டியோஸ் கார் மற்றும் ஏ.டி.எம். மையத்தில் பண வைக்கும் ஏஜென்சியின் வாகனம் ஆகியவற்றை சிசிடிவி காட்சியை வைத்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடப்பா மாவட்ட எஸ்.பி.அன்புராஜன் கூறியதாவது: கடந்த 16ம் தேதி சி.எம்.எஸ். ஏஜென்சியில் பாதுகாவலராகப் பணிபுரியும் மந்திரி சுனில் குமார் என்பவர் கடப்பா தாலுகா போலீஸில் புகார் அளித்தார். அதில், கடப்பா நகரத்தில் உள்ள சி.எம்.எச். அலுவலகத்தில் பாதுகாவலராக பணிபுரிவதாகவும். கடந்த 16ம் தேதி அன்று எஸ்.பி.ஐ. வங்கியில் ₹71 லட்சம் பணத்துடன்  நானும் தன்னுடன்  பணிபுரியும் மகேந்திர ரெட்டி இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்கள் அலுவலகத்தில் பதிவு செய்து  ஏஜென்சி நிறுவனத்தின் எம்.எச். 09 சி.எச் 5866 என்ற பதிவு எண் கொண்ட வேனில்  பணத்தை ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப நானும் மகேந்திர ரெட்டியும் வேன் டிரைவர் ஃபாரூக்குடன் புறப்பட்டு இரண்டு ஏ.டி.எம். மையங்களில் ₹10 லட்சம் வைக்கப்பட்டது. பின்னர் லோஹியா நகர் ஏடிஎம்மிற்குச் சென்று ஏடிஎம்மில் பணம் வைக்க சென்றோம். வெளியே வந்து பார்த்தபோது ஏஜென்சியின் டிரைவர் ஷேக் உமர் ஃபாரூக் என்கிற ஃபரூக் வேனுடன் காணாமல் போனார்.  ஜி.பி.எஸ் உதவியுடன் வேன்  இருந்த இடத்தை கண்டறிந்த போது விநாயக நகர் அருகே உள்ள ஷெட்டில் இருப்பதை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது வேன் மட்டும் இருப்பதும் தெரியவந்தது. வேனில் இருந்த ஒரு பெட்டியில் ₹56 லட்சத்தை டிரைவர் பரூக்கை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் ஏஜென்சி வேன் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்த சி.சி.கேமரா காட்சிகளை பார்த்தபோது உமர் பாரூக் வேனில் இருந்த பணத்தை வேறு காரில் கொண்டு செல்வது தெரிய வந்தது. பின்னர், இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில் சென்னூரு மஹ்பூப் பாஷா மற்றும் ஷேக் உமர் பாரூக் இருவரும் நண்பர்கள் என்பதும் இருவரும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, கடனில் சிக்கியுள்ளனர். கடனில் இருந்து வெளியே வரவும், சுலபமாக பணம் சம்பாதிக்க  வேண்டும் என்ற பேராசையுடன் மஹ்பூப் பாஷா திட்டம் தீட்டியுள்ளார். திட்டத்தின்படி எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சியில்  தனது நண்பரான பரூக்கை கடந்த 16ம் தேதி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் நிரப்ப  சிஎம்எஸ் நிறுவனத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணியில் சேர்ந்தான். பின்னர் திட்டத்தின்படி தனது உறவினர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், டிரைவராக செல்வதாகவும் கூறி  சிக்கந்தர் என்பவரிடம் காரை வாடகைக்கு  எடுத்துள்ளார். இம்மாதம் 16ம் தேதி முதல் முறையாக எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் நிரப்ப சிஎம்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேன் ஒன்றில் ₹71 லட்சம் பணத்துடன் புறப்பட்டு முதலில் ₹5 லட்சம், பின்னர் ₹5 லட்சத்தை ஏ.டி.எம். மையத்தில் வைத்தனர். பின்னர், லோஹியா நகரில் உள்ள ஏடிஎம்மில் சிஎம்எஸ் நிறுவன ஊழியர்கள் பணம் வைக்க சென்றபோது, வேனை ரிவர்ஸ் செய்து வைப்பதாக கூறி மீதி இருந்த ₹56 லட்சம் பணத்தை வேனுடன் டிரைவர் ஓட்டி சென்றான். விநாயக நகர் அருகே திட்டப்படி தயாராக வைத்திருந்த டொயோட்டா எட்டியோஸ் காரில் வேனில் இருந்த பணப்பெட்டியை மாற்றிக் கொண்டு சில நொடிகளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.பின்னர், ஒய்.வி.யூ. அருகே காத்திருந்த பாரூக்கின் நண்பரான முக்கிய குற்றவாளியான மஹ்பூப் பாஷா ஏடிஎம் வேனில் இருந்து எடுக்கப்பட்ட பணப்பெட்டியை உடைத்து காரில் பணத்தை வைத்து கொண்டு பாரூக்கை பெங்களூரு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி பாரூக் பணத்துடன் காரில் சென்று கொண்டுருந்தான். இந்நிலையில் போலீசார்  சிசி கேமராவில் இருந்த ஆதாரம் மற்றும் பாரூக்கின் செல்நம்பர் சிடிஆர் தரவுகளின் அடிப்படையில் பாரூக் ஏபி 39 ஹெச்.ஜி. 3109 என்ற காரில் புலிவெந்துலா, அனந்தபூர் மாவட்டத்தின் வழியாக பெங்களூர் செல்ல இருந்ததை அறிந்து   அனந்தபூர் மாவட்டம், கர்நாடகா மாநில எல்லையில் உள்ள பாகேபல்லே சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சோதனை சாவடியில்  போலீசார் வாகன சோதனை செய்வதை கவனித்த பாரூக் காரை சோதனை சாவடிக்கு சிறிது தூரத்தில் விட்டுச்  அதில் இருந்த கொஞ்சம் பணத்துடன் தப்பி சென்றான். அப்போது, சோதனை சாவடியில் இருந்த போலீசார் தனிப்படை போலீசாரும் சேர்ந்து காரை கண்டறிந்து அதில் இருந்த ₹50 லட்சம் பணத்தை  மீட்டனர். மேலும் கார் நிறுத்தப்பட்டு இருந்த சிறிது தூரத்தில் ₹.3.50 லட்சம்  பணம் இருப்பதை பார்த்து அவற்றையும் பறிமுதல் செய்தனர். மொத்தம்  ₹53.50 லட்சம் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த சென்னூரு மஹ்பூப் பாஷாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீதமுள்ள ₹5.50 லட்சத்துடன்  தலைமறைவான பாரூக்கை போலீசார் தேடி வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். …

The post ₹56 லட்சத்துடன் தனியார் நிறுவன டிரைவர் ஓடிய சம்பவம் ஏடிஎம் மையத்தில் நிரப்ப வேண்டிய பணத்தை திருடிய முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : AP State ,ATM ,Kadappa ,Dinakaran ,
× RELATED வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து...