×

தேவையை நிறைவேற்றி தருவாள் தேரிக்குடியிருப்பு தேவி

தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பில் லட்சுமி தானயம் கிராமத்தில் வீற்றிருக்கும் தேவி, தன்னை வேண்டி வழிபடும் அன்பர்களுக்கு தேவையை நிறைவேற்றி தருகிறாள்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குரும்பூர் அடுத்துள்ளது பொறையூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். தனது ஒரு மகளை செல்லமாக வளர்த்து வந்தார். இவரது குல தெய்வம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள முப்பந்தல் இசக்கி. அந்த தெய்வத்தின் பெயரை தனது மகளுக்கு சூட்டினார். இசக்கி அழகுடன், அறிவுடனும் திகழ்ந்தாள். ஒரு முறை கோவில்பட்டியில் நடந்த உறவினர் திருமண வீட்டுக்கு தாய், தந்தையருடன் சென்றாள் கன்னிப்பெண்ணான இசக்கி. திருமண வீட்டில் இளமை ததும்ப வலம் வந்து கொண்டிருந்த இசக்கியின் அழகைக்கண்ட கடம்பூரைச் சேர்ந்த சொக்கலிங்கம், தனது மகன் ராசய்யாவுக்கு இவள்தான் மனைவியாக வரவேண்டும் என்று எண்ணி தனது மனைவி தங்கத்திடம் கூறினார்.

பின்னர், யார் இந்த பெண். எந்த ஊரைச்சேர்ந்தவள் என்று விசாரித்து, கடைசியில் இசக்கியின் தந்தை சிவபெருமாள் என்பதை அறிந்து, அவரிடம் பெண் கேட்டார். அவர்கள் விருப்பத்திற்கு சிவபெருமாள் இணங்கினார். தனது வசதிக்கு எல்லா சொந்தபந்தங்களுக்கும் சொல்லி, பிரம்மாண்டமாக மகனின் திருமணத்தை கடம்பூரில் நடத்த திட்டமிட்டார் சொக்கலிங்கம். அதற்கு மறுத்த சிவபெருமாள், ``பெண்ணை அழைச்சி விடமாட்டோம், மண முடிச்சி அனுப்புறோம்’’ என்று கூறினார். அதன்படி இசக்கிக்கும், ராசய்யாவிற்கும் பொறையூரில் வைத்து திருமணம் நடைபெற்றது. மண முடித்த மறு ஆண்டே ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் இசக்கி, அந்த குழந்தைக்கு சின்னதம்பி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். செவ்வாய், வெள்ளி நாட்களில் தனது குலதெய்வமான முப்பந்தல் இசக்கிக்கு விரதமிருந்து வந்தாள்.

மணமுடித்து ஆண்டுகள் பத்து கடந்த பின்பு ராசய்யா, தனது மனைவியை விட்டு, வேறு பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தினான். இதையறிந்த இசக்கி, கணவனிடத்தில் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாள். இதனிடையே இரண்டாவதாக கர்ப்பமுற்றாள் இசக்கி. கணவனின் போக்கு சரியில்லாமல் இருக்க, இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக தனது ஏழு வயது மகனுடன் பொறையூரிலுள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாள், எட்டுமாத கர்ப்பிணியான இசக்கி. வயிற்றில் குழந்தையும், கையில் குழந்தையுமாக வந்த மகள், நடந்ததை கூறி அழுததைக்கண்டு, ``தகுதிக்கு மீறி சம்பந்தம் வச்சதாலே, இந்த தலைக்குனிவு, சரி, நம்ம வீட்ல இருந்து புள்ளைங்களை வளர்த்து ஆளாக்கு’’ என்றார் சிவபெருமாள். உடன்குடியில் திங்கள்கிழமை தோறும் நடக்கும் சந்தைக்கு, பொறையூரில் இருந்து சரக்குகளை தனது மாட்டுவண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்து வரும் வியாபாரி பிச்சை, ஒரு நாள் சந்தைக்கு போய் விட்டு வரும்போது வழியில், மூக்கன் என்ற மந்திரவாதி கைகாட்டி, வண்டியை நிறுத்தி ஏறிக்கொண்டான்.

பிச்சை, தன்னைபற்றி அவரிடத்தில் அறிமுகம் செய்து கொண்டு, அவரைப்பற்றி விசாரித்தான். அப்போது, மூக்கன் தான் ஒரு மந்திரவாதி என்றும் கழுதைப்புலித்தேரி பகுதியில் ஒரு புதையல் இருக்கிறது. அதை விரைவில் எடுக்கப்போகிறேன். அதன் பின்னர் இந்த சுற்றுவட்டாரத்திலேயே நான்தான் பெரிய ஆள் என்று கூறினார். உடனே பிச்சை, என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்கிறேன். எனக்கும் புதையலில் பங்கு கொடுங்கள் என்று கூறினான். புதையல் எடுப்பதற்கு தலைப் பிள்ளையை பலி கொடுக்க வேண்டும், அதுவும் ஆண் பிள்ளை வேண்டும். அப்படி கொடுத்தால் புதையலில் பாதிப் பங்கை உனக்கு தருகிறேன் என்றான்  மந்திரவாதி மூக்கன்.

புதையல் கனவோடு வீட்டிற்கு வந்தான் பிச்சை. தனக்கு பிறந்தது இரண்டும் பெண்ணாயிற்றே என்று எண்ணினான். இரவு முழுவதும் புதையல் எண்ணத்தால் தூக்கத்தை தியாகம் செய்தான். மறுநாள் தெருவில் விளையாடிய சிறுவன் ஒருவனை அழைத்து, எள்ளுருண்டையை கொடுத்தான். அவனிடம் விசாரித்தான். தனது வீட்டில் அக்காவிற்கு பிறகு நான் என்று அந்த சிறுவன் கூறியதும் சோகத்துடன் அனுப்பி வைத்துவிட்டான். மறுவாரம் திங்கள் கிழமை வந்தது. சந்தைக்கு வண்டி கட்டினான் பிச்சை, இசக்கி வீட்டருகே வண்டி வந்தபோது ஆடுகள் குறுக்கே செல்ல வண்டி மெதுவாக நகர்ந்தது. அப்போது, இசக்கியின் மகன் சின்னதம்பியும் அவனோடு விளையாடிய இரண்டு சிறுவர்களும் வண்டியின் பின்னே தொங்கினர். வண்டி நகர தொடங்கியதும், அந்த இரண்டு சிறுவர்களும் வண்டியை விட்டு இறங்கிவிட்டனர். சின்னதம்பி மட்டும் வண்டியில் தொங்கியபடியே சிறிது தூரம் சென்றான்.

அதைக்கண்ட பிச்சை, வண்டியை நிறுத்தி, ``ஏலே, யாரு நீ, உங்க வூட்டுல எத்தன பேரு’’ என்று விவரங்களை கேட்கத் தொடங்கினான். நான்தான் மூத்தவன், என்றும் தந்தை வீட்டில் சண்டைபோட்டுவிட்டு, தனது தாய், தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்ததையும் எடுத்துரைத்தான். ``வா...தாத்தா கூட சந்தைக்கு போயிட்டு வருவோம்’’ என்றான் பிச்சை. ``எங்கம்மா அடிப்பாங்க’’ என்று பதில் கூறினான் சின்னதம்பி. உடனே, தான் வைத்திருந்த எள்ளுருண்டைகளை கொடுத்து சாப்பிட வைத்தான் பிச்சை. பின்னர் தனது அருகிலேயே உட்கார வைத்து சந்தைக்கு அழைத்துச்சென்றான்.அங்கு அவன் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்தான் பிச்சை. மாலை நேரம் ஆனது. சந்தை முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பினர். வரும் வழியில் மந்திரவாதி மூக்கனை சந்தித்து, தான் தலைச்சன்பிள்ளையை அழைத்து வந்திருப்பதாகவும், பலி பூஜைக்கு ஏற்பாடு செய்யும்படியும் கூறினான். உடனே பூஜைக்கு உரிய பொருட்களுடன் ஒத்தையடிப் பாதையாக கழுதைப்புலித்தேரி மயான காட்டுக்கு மூக்கன் சென்றான். பிச்சையும் வண்டி கட்டினான். நடக்கப்போகும் விபரீதம் அறியாத சின்னதம்பி, பொம்மை மாட்டு வண்டியை, மாட்டு வண்டிக்குள் ஓட்டி மகிழ்ந்தான். இடையிடையே... ``தாத்தா... விருசில வண்டிய ஓட்டுங்க, எங்க அம்மா தேடும்...’’ என்று குரல் கொடுத்து வந்தான். சின்னதம்பியின் கால்சட்டை பாக்கெட்டில் ஓட்டை இருந்ததால், பாக்கெட்டில் போட்ட அவல் சிந்திக்கொண்டே வந்தது. இரவானதால், சிறுவன் வண்டியிலேயே தூங்கிவிட்டான்.

நள்ளிரவு 12 மணி ஆனது. மயான கரைக்கு வண்டி வந்து சேர்ந்தது.மண் கூட்டி உருவம் பிடிக்கப்பட்டது. அதன் முன்பு பூஜைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டது. அந்த பகுதியே சாம்பிராணி புகை மண்டலமாக இருந்தது. தலை வாழை இலை விரித்து, அதன் மேல் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கிடத்தினார் பிச்சை. அவன் மேல் சந்தனம் தெளித்தான் மந்திரவாதி மூக்கன். உடனே கண் விழித்தான்  சின்னதம்பி. அவனின் வாயை மூடிய மூக்கன், தான் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சை கீறினான். பலி கொடுத்த பின்பு புதையல் இருக்கும் பகுதியை தோண்டினர் இருவரும். ஆனால், அங்கு புதையல் இல்லை. விரக்தியுடன் வீடு திரும்பினர். மகன் சின்னதம்பியை காணவில்லை என்று இசக்கி ஒப்பாரி வைக்க, ஊரில் உள்ள இளைஞர்களும், பெரியவர்களும் காடுகரைன்னு தேட ஆரம்பித்தார்கள்.

மறுநாள் காலையில், அவனோடு விளையாடிய சிறுவர்கள், கடைசியாக பிச்சையின் வண்டியில் சின்னதம்பி போனதாக கூற, உடனே இசக்கி பிச்சை வீட்டுக்கு சென்றாள்.
கண்களில் நீர் வடிய, குரல் தழு தழுக்க கேட்டாள், ``என் மகனே, எங்கே மாமா, உங்க கூட தானே வண்டியில வந்தானாம்’’ ``ஆமா, எங்கூட உங்க தெரு சந்து வரைத்தான் வந்தான். அதுக்கப்புறம் இறங்கி வீட்டைப்பாக்க ஓடி வந்தானே’’ என்று ஒன்றுமே தெரியாதவன் போல் கூறினான் பிச்சை. அழுதுகொண்டே இசக்கி வீட்டுக்கு திரும்பினாள். அப்போது கழுதைப் புலித் தேரிக்கு செல்லும் வழியில் சின்னதம்பியின் கால் டவுசரிலிலுள்ள பட்டன் கீழே கிடக்க, அதை எடுத்த இசக்கி, மகனுடைய கால்சட்டையில் உள்ளது தான் என்பதை அறிந்து அவ்வழியே நடந்தாள். வழியெங்கும் அவல் சிதறி கிடந்தது. மாலை நேரம் ஆனது. மயானக் கரையும் வந்தது. அங்கே இசக்கி கண்ட கோலம், அவளை உக்கிரமாக மாற்றியது. ஆம், நெஞ்சு பிளந்த நிலையில் பெற்ற பிள்ளையின் உடல். கையில் அள்ளி எடுத்தாள். மயானப் பகுதியே அதறும் வகையில் அலறினாள். நிறைமாத கர்ப்பிணி இசக்கி. அலறலில் குழந்தை பேறு நிகழ்ந்தது. பெற்ற குழந்தையையும் கொன்றாள். நாக்கை பிடுங்கி தன்னையும் சாகடித்தாள்.

இந்த சம்பவம் நடந்த மறுவாரம் தேரிக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பூசாரிமார் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் சேர்ந்து ஆழ்வார்திருநகரிக்கு போய் விட்டு வரும்போது இரவாகிவிட்டது. அமாவாசை நல்ல இருட்டு, அவர்களில் ஒருவர் சுருட்டு பற்றவைக்க கூட்டத்திலிருந்து தனித்து வந்தார். அப்போது அவர் காலடியில் ஒரு பொட்டலம் இருந்தது. திறந்தார் அதில் பொரி, மற்றும் எள்ளுருண்டைகளும், கருப்புக்கட்டியும் இருந்தது. ஏதோ வண்டியிலிருந்து விழுந்திருக்கும் என்று எண்ணி அதை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தார்.தனது பிள்ளைகளுக்கு அதை கொடுத்தார். அதை வாங்கித்தின்ற பிள்ளைகள் சிறிது நேரத்தில் பேய் பிடித்து ஆடினர். உடனே கோயில் பூசாரி ஒருவரை அழைத்து தண்ணீர் எடுத்து தெளித்தனர். பின்னர் அவர் கூறியதற்கு இணங்க, இசக்கிக்கு கோயில் எழுப்பி பூஜித்து வந்தனர். கோயிலில் இசக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோயில் திருச்செந்தூர் அடுத்த காயாமொழி கிராமம் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா நடந்துவருகிறது. எல்லா இசக்கியம்மன் கோயிலிலும் உயிர்ப் பலி உண்டு. ஆனால், இந்தக்கோயிலில் சேவல், ஆடு முதலான உயிர்கள் பலியிடப்படுவதில்லை.


Tags : Goddess ,
× RELATED சாலையோரங்களில் பூத்து குலுங்கும்...