×

நாமக்கல் அருகே பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூர கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்டு சென்ற கும்பல்

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் பணியாற்றி வந்த இரவு காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்து, அலுவலக வளாகத்தில் டூவீலர்கள் நிறுத்தும் ஷெட்டில் உள்ள இரும்பு கம்பியில் உடலை கட்டி தொங்க விட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் சின்னஅரியாகவுண்டம் பட்டியை சேர்ந்த பரமசிவம் (60) இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பதால் அங்கிருந்த ஜேசிபி ஆபரேட்டருடன் அதிகாலை 2 மணி வரை பரமசிவம் பேசிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அலுவலக வளாகத்தில் டூவீலர்கள் நிறுத்துவதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டால் போடப்பட்டுள்ள ஷெட்டில் உள்ள இரும்பு கம்பியில் பரமசிவம் கால்கள் மற்றும் உடல் கயிறால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்க விடப்பட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து அவர்கள் பரமசிவத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் சம்பவ இடம் வர தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பரமசிவத்தின் உறவினர்கள் திடீரென ஆத்தூர்-ராசிபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் பரமசிவம் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்ததை போட்டோ, வீடியோ எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பினர். இதனால் இச்சம்பவம் வைரலானது. பின்னர் சம்பவ இடம் வந்த எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது உறவினர்கள் கூறுகையில், `இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் உள்ளனர். அவ்வாறு இருக்கும்போதே பிரதான சாலையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே நடவடிக்கை எடுக்கும் வரை மறியலில் ஈடுபடுவோம்’ என்றனர். இதையடுத்து அவர்களிடம் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே அனைவரும் கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து, கம்பியில் கட்டப்பட்டிருந்த பரமசிவத்தின் சடலத்தை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரமசிவத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் உடலை ஷெட்டில் உள்ள கம்பியில் கட்டி தூக்கிலிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடலில் எங்கும் காயங்கள் இல்லாததால் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்விரோத தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏடிஎஸ்பி சேகர் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் போதையில் வாலிபர்கள் அதிகளவில் சுற்றி வருவதால் அவர்களில் ஏதேனும் ஒரு கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையான பரமசிவத்திற்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post நாமக்கல் அருகே பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூர கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்டு சென்ற கும்பல் appeared first on Dinakaran.

Tags : Panigaram ,Namakkal ,Namakirippet ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி