தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிபெற்ற படம், ‘தெறி’. இப்படத்தின் இந்தியில் ரீமேக்கான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், கீர்த்தி சுரேஷ். இப்படம் தோல்வி அடைந்ததால், கீர்த்தி சுரேஷ் புதுப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தமிழில் அவர் நடித்த ‘கண்ணிவெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இதில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ என்ற இந்தி படத்தை இயக்கியிருந்த ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். இந்தியாவிலுள்ள தற்போதைய கல்வி முறையை நையாண்டியாக பேசும் படமாக இது உருவாகிறது. இரண்டு கல்வியாளர்களின் பார்வையில் அறிவை விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிக மயமானது என்பதையும் இப்படம் பேசும் என்று, படக்குழு தெரிவித்துள்ளது. கம்பா பிலிம்ஸ் சார்பில் ராஜ்குமார் ராவ் மனைவி பத்ரலேகா தயாரிக்கிறார்.