×

சேலத்தில் களமிறங்கிய உள்ளாட்சி அமைப்புகள்; ஒரேநாளில் 821 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சோதனையுடன் தொடரும் விழிப்புணர்வு நடவடிக்கை

சேலம்:  சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 821 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு, விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பிளாஸ்டிக்  பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பைகள், உறிஞ்சு குழல்கள், கொடிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் குறித்தும் மாசுக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்தும், அது தொடர்பாக ஆய்வுகள் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தவகையில் சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில், நெகிழிப்பொருட்களின் (பிளாஸ்டிக்) தடைக்கான சிறப்புப் பணிக்குழுவின் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் பறிமுதல் செய்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகவும், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதேபோல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவின் படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் பல்வேறு பகுதிகளில் மாநகர நலஅலுவலர் யோகானந், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் கடைகளில் திடீரென சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், சூரமங்கலம் மண்டலத்தில் 600 கிலோ, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 211 கிலோ, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 7 கிலோ, அம்மாப்பேட்டை மண்டலத்தில் 3 கிலோ என மொத்தம் 821 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைகளுக்கு ₹31,500 அபராதம் விதிக்கப்பட்டது.  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கடைகளில் சோதனைகளை நடத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கேரிபேக்குகள் போன்ற பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மண்ணை மலடாக்கும் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றனர். …

The post சேலத்தில் களமிறங்கிய உள்ளாட்சி அமைப்புகள்; ஒரேநாளில் 821 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சோதனையுடன் தொடரும் விழிப்புணர்வு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Saleam ,Salem ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...