குரு தரும் யோகங்கள்

யோகம் என்ற வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று நினைப்பது தவறு. யோகம் என்றால் இணைவு என்று பொருள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரஹங்கள் இணைவது யோகத்தினைத் தரும். இது நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு நேரெதிராக மாற்று பலனையும் தரலாம். நாம் காணும் இந்த யோகங்கள் அனைத்தும் குருபகவான் சம்பந்தப்பட்டவை என்பதாலும், குரு பகவான் அடிப்படையில் சுபகிரஹம் என்பதாலும் பெரும்பாலும் இந்த யோகங்கள் யாவும் நற்பலனைத் தரும் விதமாகவே அமைந்துள்ளன. இந்த யோகங்கள் வலிமையாகச் செயல்பட கோச்சாரத்தில் குருபகவானின் பார்வையும் துணை செய்யும். குருவருள் இருந்தால் திருவருள் (லட்சுமி கடாட்சம்) நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு இந்த யோகங்களே சான்று.

கஜகேசரி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு பகவான் அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பும், செல்வச்செழிப்பும் பெற்றிருப்பதோடு அறிவாளியாகவும் விளங்குவார்கள். அனைத்து விதமான நற்குணங்களும் பெற்றிருப்பார்கள். அரசாங்கத்தில் உயர்பதவி அல்லது அதற்கு நிகரான பதவியில் இருப்பார்கள்.

சாமர யோகம்

லக்னாதிபதி 1,4,7,10ல் உச்சமடைந்து குரு பகவானின் பார்வை அவர் மீது விழுந்தால் சாமர யோகம் உண்டாகும். சாமர யோகத்தில் பிறந்தவர்கள் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பெரும் தனவந்தராகவோ இருப்பார்கள். நீண்ட ஆயுளையும், தீர்க்கமான அறிவையும், பல கலைகளை கற்றறிந்தவர்களாகவும், வாக்குவன்மை உடையவர்களாகவும் சிறப்பாக வாழ்வார்கள்.

கலாநிதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டிலோ அல்லது ஐந்திலோ குரு அமர்ந்து அவரை புதன் அல்லது சுக்கிரன் பார்த்தால் கலாநிதி யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நற்குணங்கள் பொருந்தியவராகவும், கற்றறிந்தவராகவும், நோய் குறித்த பயம் இல்லாதவராகவும் இருப்பார்கள். பொதுமக்களின் அன்பினைப் பெறுவதற்கும், பகைவர்களே இல்லாத தலைவராக உருவெடுப்பதற்கும் இந்த யோகம் தேவை.

அம்ச யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அம்ச யோகம் உண்டாகும். இவர்கள் இனிமையான குரல்வளம், அழகிய தோற்றம், புத்தி கூர்மை, தீர்க்காயுள் ஆகியவற்றுடன் அம்சமாக வாழ்வார்கள்.

கௌரி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய கேந்திர த்ரிகோண ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்து அவரை குரு பகவான் பார்த்தாலும் அல்லது இணைந்தாலும் கௌரியோகம் உண்டாகும். கௌரியோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வாகினை உடையவர்களாகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகவும், நற்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

சரஸ்வதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் ஆட்சி, உச்ச பலத்துடன் அமர்ந்து புதன் அல்லது சுக்கிரனுடன் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் சரஸ்வதி யோகத்தினைப் பெற்றிருப்பார். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நுண்ணறிவாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், கதை, கவிதை, நாடகங்கள் எழுதுபவராகவும் இருப்பார். சாஸ்திரங்களைக் கற்றறிந்து அதனை காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றியமைத்து மக்களை  நல்வழிப்படுத்துபவராக இருப்பார். இந்த யோகத்தினைப் பெற்றிருப்பவர்கள் உரிய நேரத்தில் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார்கள். நல்லாசிரியர் விருது பெற சரஸ்வதியோகம் அவசியம் தேவை.

விரிஞ்சி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதியுடன் குரு இணைந்து, சனியின் பார்வையும் இணைவும் நிகழாமல் இருந்தால் அவருக்கு விரிஞ்சி யோகம் உண்டாகும். இவர்கள் நல்ல ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். பிரம்மத்தை உணர்ந்தவர்களாகவும், வேத நெறிகளை கடைபிடிப்பவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும், நிதானம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோகத்தினைப் பெற்றவர்களுக்கு அரச மரியாதை என்பது கிடைக்கும்.

 

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

Related Stories: