×

2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்; அண்ணாமலையார் கோயில் சுப்பிரமணியர் தேர் சீரமைப்பு பணி தீவிரம்: அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுப்பிரமணியர் தேர் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தேர் ஸ்தபதிகள் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.தீபத்திருவிழாவின்போது மலை மீது காட்சி தரும் மகா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வது தனிச்சிறப்பு. தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று பிரசித்தி பெற்ற தேர் திருவிழா நடைபெறும். அப்போது, அண்ணாமலையார் கோயில் மாடவீதியில் பஞ்ச ரதங்கள் பவனி வரும். விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வரும்.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை. நூற்றாண்டுகளாக நடைபெறும் பாரம்பரியமான தீபத்திருவிழா தேரோட்டம் தொடர்ந்து 2 ஆண்டுகள் தடைபட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்திருந்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால், இந்த ஆண்டு வழக்கம் போல தீபத்திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, வரும் 30ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் தடைபட்டதால், ஒரே இடத்தில் நிலையில் நிறுத்தியுள்ள தேர்களின் உறுதித்தன்மையை மறு ஆய்வு செய்து, தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. .அதன்படி, முருகர் தேர் எனப்படும் சுப்பிரமணியர் தேர் சீரமைப்பு பணி தீவிரமாக தற்போது நடந்து வருகிறது. தேர் பீடத்தின் மேல் பகுதியில் உள்ள அலங்கார கால்கள், மேல் அடுக்குகள் ஆகியவை முற்றிலுமாக மறு சீரமைப்பு செய்யப்படுகிறது. அதற்காக, நூற்றாண்டுகள் பழமையான வேங்கை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, இன்னும் நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் தன்மை கொண்டதாகும்.சுப்பிரமணியர் தேர் மறு சீரமைப்புக்கான மர சிற்ப வேலைப்பாடுகள், அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபம் அருகே நடந்து வருகிறது. இப்பணியில், வேங்கை மரங்களை இழைத்து, தேரில் பொருத்தும் அலங்கார வேலைப்பாடுகளில் தேர் ஸ்தபதிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தேர் திருப்பணி முடிந்ததும், பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த திருப்பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்….

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்; அண்ணாமலையார் கோயில் சுப்பிரமணியர் தேர் சீரமைப்பு பணி தீவிரம்: அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Anamalayar Temple Subramaniyar Chore ,Thiruvandamalai ,Thiruvandamalayar Annamalayar Temple Subramaniar Chore ,Annamalayar Temple Subramanyar Chore ,
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...