×

மேன்மை அருள்வார் மௌன குருவான தகப்பன் சாமி

கும்பகோணம்-திருவாரூர் சாலையில் 10 கி.மீ. தொலைவிலுள்ள நாச்சியார் கோயிலுக்கு அருகே திருப்பந்துறை அமைந்திருக்கிறது. திருப்பேணு பெருந்துறை குமாரமங்கலம் என்பது கிராமத்தின் பெயர். சம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம். பழமை வாய்ந்த கோயில்.  திருக்கோயிலின் எதிரில் மங்கள தீர்த்தம். அருகிலேயே குக கணபதி, சாந்தி கணபதி என இரட்டை விநாயகர்கள் அருளாசி வழங்கி மங்கள நாயகி உடனுறை பிரணவேஸ்வரரை வணங்க அனுமதி தருகிறார்கள். நுழைந்தவுடன் கொடிமரம், நந்தி மண்டபம், நுழைவாயிலில் விநாயகர், முருகர். வலதுபுறமாக மலையரசி எனப்படும் மங்கள நாயகி, தனிச்சந்நதியில் கம்பீரமாக அருள்மழை பொழிகிறாள். முகத்தில்தான் என்னவொரு தேஜஸ்!

‘ஆனந்த மந்தர புரந்தர முக்தமால்யம்
மெளலௌ ஹடேனநிஹிதம் மஹிஷாஸுரஸ்ய
பாதாம்புஜம் பவது வாம் விஜயாய மஞ்ஜு
மஞ்ஜுர சிஞ்ஜித மனோஹர மம்பிகாயா:’

என்று ஜகன் மாதாவை இமவான் மகளை வணங்கியதுதான் நினைவிற்கு வருகிறது. கருவறையில் பெரிய லிங்க ரூபமாக அலங்காரங்களுடன் அருட்பிரகாசராக காட்சி தருகிறார், சிவானந்தேஸ்வரர். சிவனே ஆனந்தம் தானே! சத்சித் ஆனந்தம். இங்கு பிரணவேஸ்வரர் இரட்டிப்பு ஆனந்தம் தருகிறார்.

ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும்
நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸாதேவம் கிம்னோ
ம்ருத்யு: கரிஷ்யதி.

என்று கயிலை வாசனை வணங்கி பிரார்த்தித்தோம். கருவறைக்கு முன்பாக நமக்கு இடதுபுறம் முருகப்பெருமான் நான்கு அடி உயரத்தில் அர்ச்சாவதார மூர்த்தி. தலையில் சிகை (குடுமி), கழுத்தில் மணிமாலை, வலதுகை சின்முத்திரையாக இடதுபுறம் தண்டபாணியாக மோன நிலையில் சுப்ரமணிய சுவாமிநாத பால தண்டாயுதபாணி! மிகவும் வித்தியாசமான அமைப்பு. தமிழ் கடவுளான குமரனுக்கு ஏன் இந்த மௌன தவவடிவம்? பணிபவர்க்கு பாங்காக வல்ல அடி உடைய சிவபெருமான் கை கட்டி, வாய் பொத்தி மாணவனாக பணிந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கு குருவான முருகன் மூலம் பெற்றார் அல்லவா! அதன் பிறகு சரவணபவனின் மனதில் ஒரு உறுத்தல்.

விளையாட்டுத்தனமாக, கர்வமாக இதைச் செய்துவிட்டோமே என்று வருந்தினான் குருநாதனான குகநாதன்! ‘‘உருவு என்று உணரப்படாத எந்தை அல்லவா! மெய் தரு வேதியனுக்கு நாம் உபதேசிப்பதா? இது குற்றமல்லவா’’ என்று மனம் பதைத்து மாமனாகிய மணிவண்ணனிடம் சென்று முறையிட்டான், செந்தில் முதல்வன். ‘‘சிவத்தை லிங்க ரூபமாக வழிபட்டால் சினம் தணிவார். உன் வினைகளை களைவார்’’ என்று அருளினார், புஜங்க சயனனான திருமால். மனம் வருந்தி, பேசாத மோன நிலைக்கு வந்தார் மௌன குருவேலன். கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருச்சேய்ஞ்சலூர் என்ற தற்போதைய சேங்கனூரில் சிவலிங்கம் ஸ்தாபித்து போற்றி பூஜித்தார். ஆனால், மனம் தெளிவுறவில்லை.

உலக மாந்தருக்கு ஞானச்சுடர் விளக்காக பிரகாசிக்கும் உமைபாலனுக்கு மனதில் ஒளி பிறக்கவில்லை. ஞானியாக இறைவரம் தேடி யாத்திரை வரும்போது கும்பகோணத்திற்கு அருகில் அரிசிலாற்றங்கரையில் உள்ள திருப்பேணு பெருந்துறை என்று ஆளுடைப் பிள்ளையால் துதிக்கப்பட்ட திருப்பந்துறையை அடைந்தார். மங்கள தீர்த்தத்தில் நீராடி சிவானந்தநாதேஸ்வரரான பிரணவநாதனை, மலையரசியான மங்களாம்பிகையுடன் வணங்கினார். பூஜைகள் செய்தார். மனதில் அருட்பிரகாசம் பரவக் கண்டார். சிவாச்சார்யார் கோலத்தில் முருகன் சிவனை பூஜித்து, மௌன நிலை மாறி சிவத்துதிகள் உரைக்க ஆரம்பித்தார்.  இந்தத் திருக்கோயிலில் தலையில் குடுமியுடன் வலதுகை சின்முத்திரை காட்ட, மிக அழகாக சுப்ரமணிய சுவாமிநாதன், பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் உலக மக்களின் ஊமைத் தன்மையைப் போக்குபவராக அருளாசி வழங்குகிறார்.

முகத்தில்தான் எத்தனை தெளிவு, பிரகாசம்! பால், சந்தனம், தேன் போன்றவற்றை அபிஷேகமாக ஏற்கிறார் இவர். அந்த தேன் பிரசாதத்தை தினம் நாக்கில் வைத்து வந்தால் ஊமைத்தன்மை, திக்குவாய் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். சிறந்த வாக்கு தேனாய் விளங்கும் அடியை உடைய குற்றாலத்து கூத்தனிடம் பாவம் தீர்க்க வேண்டி நின்று முருகன் உய்வடைந்ததுபோல நாமும் உய்வு பெறலாம். பிராகாரத்தில் உள்ள சந்நதிகளில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், விநாயகர்கள், பாணலிங்கம், தெய்வானை ஆகியோர்  காட்சி தருகின்றனர்.

மகா விஷ்ணுவின் அறிவுரைப்படிதானே இங்கு வந்து குமரக் கடவுள் சிவபூஜை செய்தார்! அதற்கு சாட்சியாக இடதுபுறம் லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய நிலையில் லட்சுமி நாராயணப் பெருமாளும் கடாட்சிக்கிறார். கரிகாலச் சோழனுக்கும் அவனது அரசிக்கும் சிலைகள் இருக்கின்றன. கோஷ்டத்தில் பிள்ளையார், பிரம்மா, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு நேர் மேலே கருவறை விமானம்.

அதில் பல சிவ விஷ்ணு ரூபங்கள். மிகவும் அற்புமான இரண்டு குரு வடிவங்கள், கோபுரப் பகுதியில் முதல் நிலையில் வீணா தட்சிணாமூர்த்தி உருவமும், அடுத்த நிலையில் அர்த்தநாரீஸ்வர ரூபமாக சிவசக்தி தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள். என்னே அருமை! சிவத்தையும், சக்தியையும் எந்த வடிவில் கண்டு வணங்கினாலும் பிறவித் துயர் தீருமே!  பிராகார வலம் வரும்போது விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர். நவகிரக சந்நதியில் ஒரு சிறப்பு  நடுநாயகராக விளங்கும் சூரிய பகவான் மற்றும் உஷா, பிரத்யுஷா தேவியருடன் தனி மேடையில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். சிவானந்தத்தில் விளைந்த சிவக்குமாரனை இந்த பங்குனி மாதத்தில் தரிசிப்பதுதான் எத்தனை பெரிய பாக்கியம்!

Tags : Sami ,Silent Guru ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...