×

அறிந்த திருமலை அறியாத தகவல்கள்

விபவ அவதாரமா? அர்ச்சாவதாரமா?
நரசிம்மன், ராமன், கண்ணன் போன்ற தோற்றங்களோடு இறைவன் பூமிக்கு வருவதை விபவ அவதாரநிலை என்று சொல்வார்கள். ஸ்ரீ ரங்கநாதன், வரதராஜன், சாரங்கபாணி போன்ற திருக்கோலங்களில் இறைவன் கோயில்களில் எழுந்தருளி இருப்பதை அர்ச்சாவதார நிலை என்று சொல்வார்கள். ஆனால் திருமலை ஸ்ரீ நிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலைக்கு அதிபதி யார்?

சுவாமி புஷ்கரிணிக் கரையில் உள்ள வராகப் பெருமாள் தான் திருமலைக்கு அதிபதியான பெருமாள். அவரிடம் நூறு சதுரஅடி நிலம் கடனாகப் பெற்றுக்கொண்டு, ஆனந்த நிலைய விமானத்தின் கீழே கருவறையில் ஸ்ரீ நிவாசன் கோயில் கொண்டிருக்கிறார். எனவே திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் வராகப் பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன்பின் மலையப்ப சுவாமியிடம் செல்ல வேண்டும் என்பது மரபு.

மலையே இறைவனின் வடிவம்

திருமலையின் ஏழு மலைகளுமே திருமாலின் வடிவமாகப் போற்றப்படுவதால், ராமாநுஜர் திருமலைக்கு வந்த போது, மலைமீது ஏற முதலில் மறுத்துவிட்டார். திருமலையப்பனைத் தரிசிக்க இயலாதவர்கள், அந்த ஏழு மலைகளைத்தரிசித்தாலே அனைத்துப் பாபங்களும் நீங்கி விடும் என்று குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
எனும் பாடலில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.

திருமலையில் மூன்று நாட்கள்விரதம் இருந்த மகான்

சில காலம் முன் வாழ்ந்த அன்னயார்ய மகாதேசிகன் என்ற பெரியவர், திருமலைக்குச் சென்ற போது மூன்று நாட்கள் உணவோ தண்ணீரோ உட்கொள்ளவில்லை. காரணம் வினவியபோது, உணவோ தண்ணீரோ உட்கொண்டால், இப்புனித மலையில் சிறுநீரோ மலமோ கழிக்க நேரிடும். அந்தப் பாபத்தை நான் செய்ய மாட்டேன் என விடையளித்தார்.

கோதை தரும் மாலை

புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போதுதிருமலையப்பன் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அணிந்துகொள்வது ஒரு சிறப்பம்சமாகும்.

மலையப்பனின் கண்கள்ஏன் மறைக்கப்பட்டிருக்கின்றன?

மலையப்பனின் கண்களில் இருந்து பொங்கி வரும் அருள்வெள்ளத்தைச் சாதாரண மக்களான நம்மால் முழுமையாக உள்வாங்க இயலாது என்பதால், இரு கண்களையும் மறைத்தவாறு திருமண் காப்பு சாற்றியிருக்கிறார் பெருமாள். தன் கடைக்கண்ணால் மட்டும் நமக்கு நல்லருளைச் சுரக்கிறார். வியாழக்கிழமை
திருமஞ்சனத்தின் போது, திருமண் காப்பு இல்லாமல் முழு கண்களையும் தரிசிக்கும் பேறு கிட்டும்.

பெருமாள் அமுது செய்யும் பிரசாதம்

பெருமாளுக்கான பிரசாதங்கள் புதிய மண் சட்டியிலேயே தயாரிக்கப்படும். தயிர் சாதம் தவிர மற்றைய பிரசாதங்கள் குலசேகரப் படியைத்
தாண்டிப் பெருமாள் சந்நதிக்குள் செல்வதில்லை.

குலசேகரன் படி

திருமலையில் பெருமாளின் கருவறைக்கு முன்னே படியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய குலசேகர ஆழ்வார், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்று பாடியுள்ளார். அதன் நினைவாக இன்றும் பெருமாளின் முன்னே இருக்கும்படி குலசேகரன் படி என்றே அழைக்கப்படுகிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீ நிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலையப்பனின் குரு

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையப்பனின் குலதெய்வம்

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் ஸ்ரீ நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீ நிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீ நிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்லமலை திருவேங்கட மலை.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வ மாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீ நிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பத்மபுராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீ நிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீ பாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம். அதனால் தான் ஸ்ரீ பாத ரேணு - அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.
- மகேஸ்வரி

Tags : Tirumala ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ