மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையும், தயாரிப் பாளரும், இயக்குனருமான கங்கனா ரனவத், தற்போது பாஜ எம்.பியாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ேசாஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் அவர் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். சில இந்தி படங்களையும் அவர் இயக்கி இருக்கிறார். இந்நிலையில், அனுராக் ருத்ரா இயக்கும் ‘பிளெஸ்டு பி தி எவில்’ என்ற ஹாலிவுட் ஹாரர் படத்தில் அவர் அறிமுகமாகிறார். ‘டீன் வுல்ஃப்’ டெய்லர் போஸே, ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லயன் மூவிஸ் தயாரிக்கும் இப்படம், இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் உருவாகிறது. விரைவில் நியூயார்க்கில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக ஹாலிவுட் பாணியில் ஆங்கிலம் பேசுவதற்கு கங்கனா ரனவத் விசேஷ பயிற்சி பெற்று வருகிறார்.
