×

குழந்தை வரம் தரும் மழலை முனீஸ்வரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வந்தவாசி சாலையில் உள்ள நல்லாளம் கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மழலை முனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு காளிகாம்பாள் உடன் மழலை முனீஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நல்லாளம் கிராமத்தில் தூளியில் இருக்கும் சிறு குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகும். குழந்தையின் பெற்றோர் தேடி திரியும்போது கோயில் அருகே உள்ள மரத்தின்மீது குழந்தை அழும் சத்தம் கேட்கும். பிறகு பெற்றோர்கள் கையேந்தி வணங்கி தன் பிள்ளையை பெற்று செல்வார்கள். இச்சம்பவம் அந்த கிராமத்தில் அடிக்கடி நடைபெறுகிறது.  ஒரு நாள் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற பெண் அவ்வழியாக ஆடுகளை ஓட்டி செல்லும்போது முட்புதரில் இருந்து அசரீரி ஒலி கேட்டது. ‘‘காமாட்சி, நான் மழலை முனீஸ்வரன்.

நான் இங்கு முட்புதரில் உள்ளேன், என்னை மீட்டு எனக்கு இங்கே ஒரு கோயில் கட்டு’’ என கேட்டுள்ளது. உடனே ஊருக்கு சென்ற காமாட்சி ஊர் மக்களை அழைத்து வந்து முட்புதர்களை சுத்தம் செய்தபோது 4 அடி உயர பீடத்தின் மீது சுயம்புவாக மழலை முனீஸ்வரன், காளிகாம்பாள் மற்றும் நாகலிங்கம் சிலைகள் இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்டினர். மழலை முனீஸ்வரன் பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவபெருமான் கோபித்து கொண்டு சுடுகாட்டு வழியாக செல்கிறார்.

அப்போது தனது காலில் இறந்துபோன அழகான குழந்தைகளின் சடலம் தட்டுப்பட்டது. அந்த குழந்தைகளை கையில் தூக்கி பார்த்து கண்கலங்கிய சிவபெருமான், இந்த சின்னஞ்சிறிய மழலைச்செல்வங்களுக்கு இப்படி ஒரு கதியா என்று மனம் வருந்தினார். இனிமேல் இந்த மழலைச் செல்வங்கள் மட்டும் என்னால் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாகும் குழந்தைகளின் முதல் தலைமுடியை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று அருளினார். அன்று முதல் இன்று வரை குழந்தைகளின் தலைமுடி காணிக்கை செலுத்தும் முறை  நடந்து கொண்டு இருக்கிறது.

குழந்தை பாக்கியம்

இக்கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலம் பக்தர்கள் தம்பதிகளாக வந்து குழந்தை வரம் வேண்டிகொள்கின்றனர். பின்னர் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் ஆடி மற்றும் தை மாதங்களில் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தி, காது குத்தி, அன்னதானம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரவில்லை என்றால் அவர்களுக்கு நினைவுப்படுத்த குழந்தைகளின் முடிகளை சடைமுடியாக மாற்றி விடுவார் என்பது இத்தலத்தில் ஐதீகம்.

மண் குதிரையில் வலம்

மண் குதிரையில் முனீஸ்வரன் இரவு நேரத்தில் ஊரை சுற்றி வலம் வந்து காப்பதாகவும் ஊரில் இதுவரை எந்த ஒரு திருட்டு சம்பவமும் நடந்தது இல்லை என்று முனீஸ்வரனை கிராம மக்கள் போற்றுகின்றனர்.

காளிகாம்பாள்

இங்கு அம்மன் சுயம்புவாக கிழக்கு பார்த்த வண்ணம் கருணை பொங்கும் விழியுடன், பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பவராக காட்சி தருகிறார்.  இஷ்ட தேவதைகள் வாமுனீ, கரிமுனீ, மச்சமுனீ, ஜடாமுனீ, சட்டமுனீ, எல்லையை காக்கும் யோகமுனீ, லாடமுனீ, தவமுனீ, ஜெயமுனீ, செம்முனீ, ஆகிய பிரமாண்ட சிலைகள் உள்ளன. முனீஸ்வரரை வணங்கினால் திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் தீராத நோய்கள் தீரும் என்பது இத்தலத்தின் சிறப்பு. காளிகாம்பாள் சிவனின் அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது.

Tags : Muneeswaran ,
× RELATED ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் 2 வாலிபர்களுக்கு 8 ஆண்டு சிறை