×

ஷெஹானாஸ் பர்வீன் எனும் மனிதி!

‘ஒரு ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்’ … இப்படி பைபிள் வாசகத்துடன் ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண் பர்வீன் பேச, சுற்றி இருந்த அத்தனை கிறிஸ் தவர்களும் கட்டியணைத்து நெழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறினர். இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் அன்று நல்ல கூட்டம்.  வழக்கத்திற்கு மாறாக அன்று பாதர் சார்லஸ் சாம்ராஜ் கூட்டத்திலிருந்து திடீரென ஒரு பெண்ணை அழைத்தார். ஏகோபித்த பாராட்டுக்களுக்கு இடையே வந்து நின்றார் ஷெஹானாஸ் பர்வீன். தலையை மூடிய ஹிஜாப் சங்கீதமாக வந்த பர்வினை சுற்றி இருந்த மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பர்வீனை அறிமுகம் செய்து வைத்து பேசத் துவங்கினார் ஃபாதர் சார்லஸ் சாம்ராஜ், ‘ தான் யார் எனவும் தான் செய்யும் உதவிகள் குறித்தும் எங்கேயும் சொல்லக்கூடாது என பர்வீன் கூறியிருந்தார். பிறர் அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்துகொள்வதற்காக இதைச் சொல்கிறேன். பர்வீன் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு வீட்டில் கூட விளக்கு வசதி இல்லை. அதைப் பார்த்த பர்வீன், சூரிய ஒளியில் மின்வசதியை அமைப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார்.தேவாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் ‘ஜீவ சாந்தி அறக்கட்டளை’யுடன் இணைந்து இந்த சேவை செய்துவருகிறார் பர்வீன். கொரோனா நோய் பரவலின் போது ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்துள்ளது இந்த அமைப்பு. அதிலும் தன்னை இணைத்துள்ளார் பர்வீன்’. இப்படி தேவாலயத்தில் பர்வீன் அறிமுகம் செய்யப்பட கூட்டம் கைதட்டி அவரை பாராட்டியது. தொடர்ந்து பேசினார் பர்வீன்.‘வறியவர்களுக்கு நாம் செய்யும் சேவை கடவுள் மீது நாம் வைத்துள்ள அன்பை நிரூபிக்க உண்மையான ஒரு வாய்ப்பாகும்’ என்றார். மேலும் ‘எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெவ்வேறு விதமான நம்பிக்கைகளுக்கு மத்தியில் மனித நேயம் இப்போது நமக்குத் தேவை என நான் உண்மையாக நம்புகிறேன். அனைத்து மதங்களும் அன்பையும் மதநல்லிணக்கத்தையும்தான் வலியுறுத்துகின்றன’ என்ன பேசிக் கொண்டிருந்த பர்வீன் தனது பேச்சின் இறுதியில்  ‘ஒரு ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்’ என்ற வாசகத்தைப் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினார். பர்வீன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அத்தனை கிறித்தவர்களும் பர்வீனை கட்டி அணைத்து தங்களது நன்றி களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஒரு பக்கம் மதத்தாலும் மொழியாலும் ஜாதியாலும் நாம் தனித்தனியே பிரிந்து ஏராளமான பிரச்னைகளுக்கு உட்பட்டு கிடக்கும் பொழுது அதையும் மீறிய மனிதநேயம் இதுபோன்று ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தன்னுடைய மதத்தில் இருக்கும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளையும் மீறி இன்னொரு மதத்தின் அறக்கட்டளையுடன் இணைந்து பர்வீன் செய்து கொண்டிருக்கும் இந்த சேவை பலருக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்றே சொல்ல வேண்டும். மதமா, மொழியா,  இனமா என்று பார்த்தால் இங்கே மனித நேயமும் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் தான் ஜெயித்திருக்கிறது. பர்வீன் செய்து கொண்டிருக்கும் இந்த சேவைகள் வெறும் மத நல்லிணக்கத்தை மட்டும் எடுத்துக்காட்டாமல் ஒரு பெண்ணின் சுதந்திரம் எந்த அளவிற்கு நன்மைகள் செய்யும் என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கிறது. தொகுப்பு : கவின்

The post ஷெஹானாஸ் பர்வீன் எனும் மனிதி! appeared first on Dinakaran.

Tags : Shehanas Parveen ,
× RELATED 6 அமைச்சரவை இடங்களை கேட்டு பாஜக தலைமைக்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டிஸ்