×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

405. தர்மவித்-உத்தமாய நமஹ: (Dharmavidh-uthamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்)இலங்கை அசோக வனத்தில் சீதா தேவியைத் தரிசித்த அனுமன், தன்னை ராமதூதன் என்று அடையாளப் படுத்திக்கொள்ளும் பொருட்டு, முதலில் ராமனின் வரலாற்றைப் பாடினார். அதைத் தொடர்ந்து, ராமனுடைய அங்க அடையாளங்களைச் சொன்னார். பின், சீதைக்கும் ராமனுக்கும் மட்டுமே தெரிந்த சில ஏகாந்தமான குறிப்புகளைத் தெரிவித்தார்.

அதன்பின் ராமபிரானுக்கே விசேஷமாக இருக்கும் பெருமைகளைப் பட்டியலிட்டார். ராமன், மொத்த உலகங்களையும் காப்பவர். தன்னைச் சார்ந்தவர்களையும் நன்கு காப்பவர். தமது கடமையையும், அறத்தையும் என்றும் விடாமல் காப்பவர். தீயவர்களான எதிரிகளை அழிப்பவர். உலகிலுள்ள எல்லா மனிதர்களும் நியாயத்துக்கும் தருமத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்பவர் ராமன். அவர் ஒளிமிக்கவர், அனைவராலும் பூஜிக்கத் தக்கவர். மனதையும் புலன்களையும் நன்றாக அடக்கி வைப்பதில் உறுதி மிக்கவர். நல்லோர்களுக்கு உதவியாளர். எல்லாவிதச் செயல்களையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் மிக்கவர். ராஜநீதியில் வல்லவர், வேதம் வல்லார்களைப் போற்றித் துதிப்பவர். சாஸ்திரங்கள் கூறும் கருத்துகளைக் கசடறக் கற்றுத் தேர்ந்தவர். அடக்கம் மிக்கவர். அதே நேரம், மக்களுக்கு ஆபத்து வரும்போது போர் புரிந்து எதிரிகளை வீழ்த்தும் வீரமும் ஆற்றலும் கொண்டவர்.

“யஜுர்வேத வினீதச்ச வேதவித்பிஸ் ஸுபூஜித:
தனுர்வேதே ச வேதேஷு வேதாங்கேஷு ச நிஷ்டித:”

அனைத்து வேதங்களிலும், வேத அங்கங்களிலும், வில் வித்யையிலும் வல்லவராக இருக்கும் ராமனை வேதங்களைக் கற்றுணர்ந்த எல்லாப் பெரியோர்களும், தருமம் அறிந்த நல்லோர்களும் போற்றிக் கொண்டாடுகிறார்கள். இப்படிப்பட்ட பல அடையாளங்களை உரைத்த பின், ராமனின் முத்திரை மோதிரத்தை முக்கிய அடையாளமாக அனுமன் சீதையிடம் காட்டித் தான் ராமதூதன் என்பதை நிரூபித்தார். இங்கே, அனுமன் ராமனுக்குரிய பெருமைகளைச் சொல்லும் போது, அதன் முக்கியப் பகுதியாக ‘வேதம் அறிந்தோர்களும், தருமம் அறிந்தோர்களும் ராமனைப் பூஜிப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்திலும், நாரதர்ராமனின் குணங்களை வால்மீகிக்கு எடுத்துரைக்கும்போது,

“ஸர்வதாபிகதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி:” என்கிறார். நதிகள் எல்லாம் எப்படிக் கடலை நோக்கிப் போகின்றனவோ, அதுபோல், சான்றோர்கள் அனைவரும் தருமத்தின்
நுட்பங்களைக் கேட்டு அறிவதற்காக ராமனை நாடி வருவார்கள் என்பது இதன் பொருளாகும். கிஷ்கிந்தா காண்டத்திலும் ராமபாணத்தால் தாக்கப்பட்டுக் குத்துயிரும் கொலை
யுயிருமாக விழுந்து கிடந்த வாலியைக் காண வந்த வாலியின் மனைவி தாரை, ராமனைத் தரிசித்தவாறே, மனத்தூய்மை பெற்று ராமனைத் துதித்தாள்:

“த்வம் அப்ரமேயச்ச துராஸதச்ச
ஜிதேந்த்ரியச்ச உத்தம தார்மிகச்ச
அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச்ச
க்ஷிதிக்ஷமாவான் க்ஷதஜோபமாக்ஷ”

இதிலும் ‘உத்த தார்மிக:’ என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் தாரை. உத்தம தார்மிக: என்றால் தர்மம் அறிந்தவர்களுள் உயர்ந்தவர் என்று பொருள். “ஒருபுறம் சரணடைந்த சுக்ரீவனுக்கும் நன்மை செய்தீர்கள். மறுபுறம் என் கணவர் வாலியின் மீது பாணம் எய்தி, அதனால் அவரது பாபங்களைப் போக்கி அவருக்கும் நற்கதி தந்து விட்டீர்கள். இப்படி தருமப்படி அவரவருக்குச் சேர வேண்டியதைச் சரியாகத் தந்த உத்தம தார்மிகர் நீங்கள்!” என்று ராமனிடம் சொல்கிறாள் தாரை.

இப்படி அறநெறிகளை நன்றாக அறிந்து பின்பற்றிய ராமன், அறத்தின் வழி வாழ நினைப்போர்க்கு முன்மாதிரியாகவும், அறத்தை அறிந்த சான்றோர்களால் போற்றப்படுபவனாகவும் விளங்குவதால், ராமன் ‘தர்மவித் உத்தம:’ என்று அழைக்கப்படுகிறான். ‘தர்மவித்’ என்றால் தர்மம் அறிந்தவர் என்று பொருள். ‘உத்தம:’ என்றால் (இவ்விடத்தில்) தலைவர். (தர்மவித்+உத்தம:) ‘தர்மவிதுத்தம:’ என்றால் தர்மம் அறிந்தவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 405-வது திருநாமம். “தர்மவிதுத்தமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும் அறவழியில் நிலைத்திருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

406. வைகுண்டாய நமஹ:(Vaikuntaaya namaha)

ராமன் வனவாசத்துக்காக அயோத்தியை விட்டுப் புறப்பட்ட போது, அயோத்தியில் உள்ள மக்கள் எல்லோரும் எல்லையில்லாத் துயரத்தில் மூழ்கினார்கள். சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமன் அயோத்தியை விட்டு நீங்கும் அக்காட்சியைக் காணும் போது, உயிரை இழந்த உடல்போல் மொத்த அயோத்தி நகரும் வாடிக் கிடந்தது என்கிறார் கம்பர். “ஓவில் நல்லுயிர் உயிர்ப்பினோடு உடல்பதைத்து உலைய மேவு தொல்லழகு எழில்கெட விம்மல் நோய் விம்ம தாவில் ஐம்பொறி மறுகுறத் தயரதன் என்ன ஆவி நீக்கின்றது ஒத்தது அவ்வயோத்தி மாநகரம்” கன்றை விட்டுப் பிரிந்த தாய்ப்பசு கதறி அழுவது போல் அயோத்தியில் உள்ள பெண்களெல்லாம் கதறி அழுதார்கள்.

வேதியர்கள் அக்னிஹோத்ரம் போன்ற வைதிகச் சடங்குகளைச் செய்யவில்லை. எந்த வீட்டிலும் உணவு சமைக்கப் படவில்லை. சூரியன் கூட ராமன் வனம் செல்வதைக் காண மனமில்லாமல் மறைந்து விட்டான். மாலைப்பொழுது வந்ததை வால்மீகியும் கம்பரும் தற்குறிப்பேற்ற அணியால் இப்படித் தெரிவித்துள்ளார்கள். மனிதர்கள் மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே ராமனைப் பிரிந்து வாடியதாக வால்மீகி பகவான் தெரிவிக்கிறார்.

“வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்
புத்ரம் ப்ரதமஜம் லப்த்வா ஜனனீ நாப்யனந்தத”

பாம்புகள், தாங்கள் உண்ட உணவை வெளியே கக்கி விட்டன. பசுக்கள் கூடத் தங்கள் கன்றுகளுக்குப் பாலூட்டவில்லை. முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் கூட அக்குழந்தையைப் பார்த்து மகிழவில்லை. மேலும், “கோசல தேசம் கைகேயியுடையதாக ஆகி விட்டதால், இனி இதில் வாழ வேண்டாம்! ஒன்று காட்டில் ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்து அவனது திருவடிவாரத்தில் வாழ்வோம்! இல்லாவிட்டால் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வோம்!” என்று மக்கள் பேசிக் கொண்டதாக வால்மீகி கூறுகிறார்.
“தே விஷம் பிபதாலோட்ய க்ஷீணபுண்யாஸ் ஸுதுர்கதா:

ராகவம் வா அனுகச்சத்வம் அச்ருதிம் வாபி கச்சத” இப்படி மக்கள் கதறி அழுது கொண்டிருக்க அயோத்தி மாநகரம் நீரில்லாத கடல்போல் ஆனது. ஆடல், பாடல், வாத்தியம், திருவிழா ஏதுமில்லாமல் வெறிச்சோடிப் போனது. இச்சம்பவங்களில் இருந்து அயோத்தி மக்கள் ராமபிரான் மேல் எவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா? இத்தகைய அடியார்கள் தன்னை விட்டுப் பிரிந்து தவிப்பதைப் பார்த்து ராமனும் பொறுத்திருக்க மாட்டான்.

தேவகாரியமான ராவண வதத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், ராமன் வனவாசம் மேற்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேநேரம், நாட்டில் தன்னைப் பிரிந்து வாடும் பக்தர்களைத் தேற்ற வேண்டும் என்றும் கருதிய ராமன், தனது பிரதிநிதியாகத் தன் பாதுகையைப் பரதனிடம் தந்து அனுப்பி வைத்தான். அந்தப் பாதுகா தேவி பட்டாபிஷேகம் செய்து அயோத்தியை ஆள்கையில், ராம ராஜ்ஜியத்தில் இருப்பது போன்ற உணர்வு அயோத்தி மக்களுக்கு ஏற்பட்டது.

பாதுகையைத் தந்ததோடு அயோத்தி மக்களை ராமன் அப்படியே கைவிடவும் இல்லை. தேவ காரியமான ராவண வதம் ஆனபின், மக்கள் விரும்பிய படியே அயோத்திக்குத் திரும்பி வந்த ராமன் சீதையோடு சேர்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு சிம்மாசனத்திலே வீற்றிருந்து அவர்கள் விரும்பிய ராமராஜ்ஜியத்தை அருளினான்.

‘குடி’ என்றால் தடை என்று பொருள், இங்கே இறைவனை அடைவதற்குத் தடையாக இருப்பவற்றை ‘குடி’ என்ற சொல் குறிக்கிறது. அடியார்கள் தன்னை அடைய விடாமல் தடுக்கும் தடைகளாகிய ‘குடி’களைத் தனது பாதுகை மூலமாகவும், சீதா ராம பட்டாபிஷேகம் மூலமாகவும் தகர்க்கும் ராமன், தன் அடியார்களை ‘விகுண்ட:’ - ‘குடி’ (தடை) இல்லாதவராக - ஆக்கி விடுகிறான். இறையநுபவத்தில் தடையில்லாத அந்த விகுண்டர்களின் தலைவனான ராமன் ‘வைகுண்ட:’ என்று அழைக்கப்படுகிறான். ‘வைகுண்ட:’ என்றால் தன் அடியார்கள் தன்னை அடையவிடாது தடுக்கும் தடைகளைத் தகர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 406- வது திருநாமம்.“வைகுண்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஏற்படும் தடைகளை ராமன் தகர்த்தெறிவான்.

407. புருஷாய நமஹ: (Paravhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்) ராஜா, ராமனாக அயோத்தியை ராமன் ஆண்டு வந்த காலம். ஒருமுறை ராமனைச் சந்தித்த தேவர்கள், “அகத்திய முனிவரின் தபோவனத்தைத் தரிசிப்பதற்காக நாங்கள் எல்லோரும் செல்கின்றோம். பன்னிரண்டு வருட காலம் தண்ணீருக்குள்ளே தவம் செய்து வந்த அகத்திய முனிவர், தனது தவத்தை நிறைவு செய்து விட்டார். அவரைத் தரிசிக்க நீங்களும் வாருங்கள்!” என்று அழைத்தார்கள்.

அதை ஏற்ற ராமன், புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு அகத்தியரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். தேவர்கள் பலவித விமானங்களில் ராமனைப் பின் தொடர்ந்து அகத்தியரின் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள். ராமனையும் தேவர்களையும் அகத்திய முனிவர் வரவேற்றார். அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்தார். அகத்தியரை வணங்கி விட்டு தேவர்கள் எல்லோரும் தங்கள் தேவலோகத்துக்குத் திரும்பி விட்டார்கள். அதன்பின் ராமன், தனியாக அகத்தியரை அடிபணிந்தார்.

அகத்தியர் ராமனைப் பார்த்து, “புருஷோத்தமா! நீ இங்கே எழுந்தருளியது அடியேனுக்கு மிகப்பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன். எண்ணிலடங்காத மங்கல குணங்கள் நிறைந்த உன்னை எப்போதும் என் உள்ளத்தில் வைத்து ஆராதித்து வருகிறேன். தேவர்கள் சென்று விட்டார்கள், ராமா! நீ இப்போது செல்ல வேண்டாம்! இன்று இரவு என்னுடன் இங்கே தங்கி விட்டு நாளை போகலாம்!” என்றார். மேலும், விஸ்வகர்மா தயாரித்த மிக உயர்ந்த ஓர் ஆபரணத்தை ராமனுக்குப் பரிசாக வழங்கினார் அகத்தியர். அதன்பின் அகத்தியருடன் ராமனும், மாலை செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தைச் செய்தான். பல விதக் காய், கிழங்குகள், கீரை வகைகள் நிறைந்த விருந்தை ராமனுக்கு அளித்தார் அகத்தியர். அதைத் தேவாமிருதமாகக் கருதி அமுது செய்த ராமன், அன்றிரவு அகத்தியரின் ஆசிரமத்திலேயே பள்ளி கொண்டார்.

காலை எழுந்து நீராடி, சந்தியாவந்தனம் உள்ளிட்ட கடமைகளை நிறைவு செய்த ராமன், அகத்தியரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட எண்ணினான். அகத்தியரை அடிபணிந்து, “உங்களது தரிசனத்தால் அடியேன் தன்யன் ஆனேன்! மீண்டும் உங்களைத் தரிசிக்க விழைகிறேன்! இப்போது அடியேன் எனது நகரத்துக்குப் போக அனுமதி அளித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கேட்ட அகத்தியர்,“அத்யத்புதம் இதம் வாக்யம் தவ ராம சுபாக்ஷரம்பாவனஸ் ஸர்வபூதானாம் த்வம் ஏவ ரகுநந்தன”(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-9)“ராமா! என்ன விசித்திரமான வார்த்தையைப் பேசுகிறாய்? அடியேனைத் தரிசிப்பது உனக்கு பாக்கியமா? நீ சாட்சாத் திருமால் என்பதை அடியேன் அறிவேன். உனது எளிமையால் உன்னைத் தாழ விட்டுக் கொண்டுஎங்களுடன் நீ கலந்து பழகுகிறாய். உண்மையில், அனைத்து உயிர்களுக்கும் தூய்மை அளிப்பவன் நீயே!”

“ஈத்ருசஸ்த்வம் ரகுச்ரேஷ்ட பாவனம் ஸர்வ தேஹினாம்
புவி த்வாம் கதயந்தோபி ஸித்திம் ஏஷ்யந்தி ராகவ”
(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-12)

“நீ அனைவரையும் தூய்மையாக்குபவனாக இருப்பதால் தான், உனது கதையை ஒருமுறை கேட்பவர் கூட அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபட்டு, தூயவராகி முக்தி அடைந்து விடுகிறார். நீ அடியேனின் குடிலுக்கு வந்தது அடியேனின் பாக்கியம். மீண்டும் மீண்டும் வருகை தந்து அடியேனைத் தூய்மை ஆக்கி அருள்புரிய வேண்டும்!” என்று ராமனிடம் பிரார்த்தித்து அவனுக்கு விடைகொடுத்தார். அகத்தியர் கூறிய படி, தூய்மையானவனாகவும், தன்னைச் சார்ந்தோரைத் தூய்மை ஆக்குபவனாகவும் ராமன் திகழ்வதால், ராமன் ‘புருஷ:’ என்றழைக்கப்படுகிறான்.

‘புருஷ:’ என்பதற்கு (இவ்விடத்தில்) பாபங்களால் தீண்டப்படாது, தூய்மையாக இருந்து பிறரையும் தூய்மை ஆக்குபவர் என்று பராசர பட்டர் பொருள் உரைத்துள்ளார் - ‘ஸ யத் பூர்வோஸ்மாத் ஸர்வஸ்மாத் பாப்மன: ஓஷ: தஸ்மாத் புருஷ:’ ‘புருஷ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 407-வது திருநாமம்.“புருஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாபங்களைப் போக்கி அவர்கள் என்றும் தூய்மையாக இருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

408. ப்ராணாய நமஹ:(Praanaaya namaha)
தசரதனுடைய அரண்மனைக்கு வந்த விஷ்வாமித்ர முனிவர், “மன்னா! நான் சித்தாசிரமத்தில் ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்கு மாரீசன், சுபாகு என்னும் இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட உள்ளது. எனவே, அவர்களைத் தடுத்து என் வேள்வியைக் காக்கும் பொருட்டு உன் மகன் ராமனை என்னோடு அனுப்பி வைப்பாயாக!” என்று தசரதனைப் பார்த்துச் சொன்னார்.

அதைக் கேட்டவாறே நடுங்கிப் போன தசரதச் சக்கரவர்த்தி, “முனிவரே! தங்களுக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்யக் காத்திருக்கும் தொண்டன் அடியேன். உங்கள் வேள்வியைப் பாதுகாக்க என் மொத்த சேனையோடு நானே வருகிறேன். ஆனால், என் ராமனைக் கேட்காதீர்கள்! அவன் பதினாறு வயது கூட நிரம்பாத சிறு குழந்தை! அவனுக்கு அரக்கர்களுடன் போரிடத் தெரியாது!” என்று கெஞ்சினான். மேலும், “ராமன் தான் எனது உயிர். என் உயிரையே கேட்டாலும் தந்து விடுகிறேன். ஆனால், ராமனை மட்டும் என்னால் கொடுக்க முடியாது!” என்று கதறி மூர்ச்சையானான்.

தசரதன் தெளிந்து எழுந்தவாறே விஷ்வாமித்ரர், “மன்னா! ராமனின் பெருமையை நீ அறிய மாட்டாய்! நான் தான் அறிவேன்! ராமன் மஹாத்மா, மாறாத பராக்கிரமம் கொண்டவன். தசரதா!  உன் குருவான வசிஷ்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்! நான் சொன்னது சரி என்று அவரும் ஏற்பார்!” என்று கூறினார். வசிஷ்டரும் தசரதனிடம், “உன் மகனின் நன்மைக்காகத் தான் அவர் அழைக்கிறார்.

நீ நிச்சயமாக ராமனை, அவரோடு அனுப்பி வைக்கலாம். ராமனுக்கு அவரால் பல நன்மைகள் நடக்கப் போகின்றன!” என்றார். குருவின் வாக்கை மீறலாகாது என்பதால், தசரதன் ராமனை விஷ்வாமித்ரரோடு அனுப்பச் சம்மதித்தான். லக்ஷ்மணன் ராமனை விட்டுப் பிரியாதவன் என்பதால், அவனும் ராமனைப் பின்தொடர்ந்து சென்றான். இப்படி விஷ்வாமித்ரரோடும், லக்ஷ்மணனோடும் தன்னை விட்டு ராமன் பிரிந்து செல்லும் காட்சியைக் கண்ட தசரதன், தன் உயிர் தன் உடலை விட்டுப் பிரிந்து செல்வதைத் தானே தன் கண்ணால் பார்ப்பது போல் உணர்ந்தானாம்.

இதைக் கம்பர்,
“அன்ன தம்பியும் தானும் ஐயனாம்
மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் என
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்”
என்று பாடுகிறார்.

காவியக் கவிஞர் திரு.வாலி அவர்கள்,
சமீபத்தில் ஒரு பேட்டியில், கம்பரின்
இப்பாடலைத் தழுவியே,
“தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை -
நான்என் உயிர் பிரிவதைப் பார்த்து
நின்றேன்”

என்ற பாடலைத் தான் இயற்றியதாகக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. அவ்வாறே ராமன் சீதையோடும்,
லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் செல்லும் வேளையிலும்,
அக்காட்சியைக் கண்ட தசரதன்,
“ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி
ந நிவர்ததே
ந த்வா பச்யாமி கௌஸல்யே ஸாது மா பாணினா ஸ்ப்ருச”

“கௌசல்யா! என் கண் ராமனைப் பின் தொடர்ந்து சென்று விட்டது! என் உயிரும், அவனைப் பின்தொடர்ந்து செல்வதாகவே உணர்கிறேன். ராமன், பின் சென்ற என் கண்ணும், உயிரும் என்னிடம் திரும்ப வரவில்லை!” என்று புலம்புவதாக வால்மீகி, அயோத்தியா காண்டத்தில் வர்ணித்துள்ளார். இவ்வாறு தசரதன் போல் தன்னிடம் அன்பு பூண்டவர்கள் எல்லோர்க்கும் ராமன் தானே உயிர்மூச்சாக இருப்பதால், ராமன் ‘ப்ராண:’ என்று அழைக்கப்படுகிறான். ‘ப்ராண:’ என்றால் உயிர்மூச்சாக இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 408-வது திருநாமம். “ப்ராணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
ராமனே உயிர்மூச்சாக இருந்து அவர்களைக் காத்தருள்வான்.

409. ப்ராணதாய நமஹ:(Praanadhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்)வடமொழியில், வால்மீகி பகவான் இயற்றிய 24,000 சுலோகங்கள் கொண்ட மத் ராமாயணத்தின் அடிப்படையில், தமிழில் 10,000 பாடல்கள் கொண்ட ராமாவதாரம் என்னும் நூலைக் கம்பர் இயற்றினார். நாம் இன்று கம்ப ராமாயணம் என்று குறிப்பிட்டாலும், நூலாசிரியரான கம்பர், ராமாவதாரம் என்று இந்நூலுக்குப் பெயர் சூட்டியிருந்தார். கம்பர் தாம் இயற்றிய ராமாயணத்தை ராமனால் பூஜிக்கப்பட்ட, ரங்கநாதன் எழுந்தருளியிருக்கும் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதனால், திருவரங்கத்தில் உள்ள குருமார்களை அண்டினார். அந்த குருமார்கள், “கவியே! தமிழகத்தில் இப்போது ரங்கம், சிதம்பரம் என இரண்டு பெரும் தலங்கள் உள்ளன. சைவத்துக்குச் சிதம்பரம், வைணவத்துக்கு ரங்கம். முதலில், சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்து அவர்களுக்கு நீங்கள் எழுதிய காவியத்தை வாசித்துக் காட்டி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று வந்தால், மேற்கொண்டு ரங்கத்தில் இக்காவியத்தை அரங்கேற்றம் செய்ய ஆவன செய்வோம்!” என்றார்கள்.

அதனால், தனது காவிய ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார் கம்பர். அங்கே ஆறு மாதங்கள் தங்கிப் பல முயற்சிகள் எடுத்த போதும், கம்பரால் அங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்துத் தனது காவியத்தை வாசித்துக் காட்டி அங்கீகாரம் பெற முடியவில்லை. மிகவும் மனம் வெறுத்துப் போன கம்பர், ஒருநாள் மாலை தில்லை கோவிந்த
ராஜப் பெருமாளைத் தரிசித்து, “கோவிந்தராஜா! இதே தில்லை நகர்த் திருச்சித்திரகூடத்தைப் பாடும் போது தான் ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள், பத்தே பாடல்களில் உன் ராமாவதார வரலாற்றை அமுதத் தமிழில் வடித்தார். அதைத் தழுவியே பத்தாயிரம் பாடல்களாக உன் வரலாற்றைத் தமிழில் பாடியுள்ளேன். இது அரங்கேற வேண்டும் என்று நினைத்தால், நாளைக்குள் ஆவன செய்வாயாக! இல்லாவிடில் இந்த ஓலைச் சுவடிகளைத் தீயில் போட்டு நானும் தீக்குளிப்பேன்!” என்றார் கம்பர்.

மறுநாள் விடியற்காலை கம்பர் கனவில், சுடுகாட்டில் பிணம் எரியும் காட்சி தெரிந்தது. இறைவன் நம்மை அங்கீகரிக்கவில்லை போலும் என்று கருதிய கம்பர், தன் நூலை எரித்து விட்டுத் தானும் தீக்குளிக்கச் சுடுகாட்டை நோக்கி ஓடினார். அங்கே பார்த்தால் ஆச்சரியம்! மூவாயிரம் தீட்சிதர்களும் சுடுகாட்டில் கூடி இருக்கிறார்கள்! அவர்களுள் ஒருவரின் ஐந்து வயது சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டதால், துக்கம் தாளாமல் பிரிந்திருந்த அத்தனை பேரும் ஒரே இடத்தில் சுடுகாட்டில் கூடிவிட்டார்கள். இதுவே சந்தர்ப்பம் என்று கருதிய கம்பர், ராமாயணத்தை வாசித்துக் காட்ட அனுமதி கோரினார். துக்கத்தில் இருந்த அவர்கள், கோபம் கொண்டு, “என்ன பெரிய ராமாயணம் எழுதியுள்ளாய்? இதைப் பாடினால் இறந்த குழந்தை எழுந்தா வரப்போகிறது?” என்று கேட்டார்கள். கவிஞனுக்கே உரிய கருவத்தோடு கம்பர், “நிச்சயம் எழும்!” என்றார். பாடுங்கள் என்றார்கள் தீட்சிதர்கள்.

கம்பர் பாடத் தொடங்கினார். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் நிறை வடைந்து யுத்த காண்டம் வந்தது. இந்திரஜித்தின் நாகபாசத்தால் கட்டப்பட்டு கம்ப ராமாயணத்தின் படி லக்ஷ்மணனும் மொத்த வானர சேனையும் விழுந்து கிடக்கிறார்கள். அப்போது, வானிலே பொன் மலை இறக்கை கட்டி வருவது போல் கருடன் தோன்றினார்.

கருடனின் திருமேனி ஒளிபட்டவாறே, நாக பாசங்கள் அனைத்தும் நீங்கி, விழுந்தவர்கள் அத்தனை பேரும் எழுந்தார்கள். இதை வர்ணிக்கும் விதமாக, “வாசம் கலந்த மறைநாள நூலின் வகை என்பது என்னை மழையென்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சரராமன் வெண்ணை அணுகும் தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம்முதலோர் பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் என்று பாடினார் கம்பர். சடையப்ப வள்ளல் வீட்டு வாசலில் வந்து நிற்போரின் பசி பறந்தோடுவது போல், கருடனின் ஒளிபட்டு நாகபாசம் பறந்தோடியது என்று உவமை கூறுகிறார்.

இப்பாடலைப் பாடியவாறே, அந்தச் சிறுவனைப் பிடித்திருந்த நாகபாசம் விலகியது, அவன் மீண்டெழுந்தான். ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து தீட்சிதர்களும் அங்கீகரித்தார்கள். பின் திருவரங்கத்தில் வாழ்ந்த குருமார்களின் அங்கீகாரமும் பெற்றுக் கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததாக வரலாறு. பாம்பு தீண்டி இறந்த அச்சிறுவனுக்கு உயிர்தந்தது போலவே, இறந்தவருக்கும் உயிரளிக்கும் தெய்வமாக ராமன் திகழ்வதால், ‘ப்ராணத:’ என்று ராமன் அழைக்கப்படுகிறான். ‘ப்ராணத:’ என்றால் உயிர் தந்து காப்பவர் என்று பொருள். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 409-வது திருநாமம். “ப்ராணதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை உயிர்காக்கும் தெய்வமான ராமன் எல்லா ஆபத்துகளில் இருந்தும்
காத்தருள்வான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!