×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

410. ப்ரணமாய நமஹ: (Pranamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்)ராமனைக் காட்டுக்குப் போகாதே என்று சொல்லிப் பலவாறு தடுத்துப் பார்த்தாள் கௌசல்யா தேவி. ஆனால், தந்தையின் வாக்கை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதிலே ராமன் உறுதியாக இருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவள், ராமபிரானுக்கு மங்கலம் பாடி வழியனுப்பி வைக்கிறாள். அதை வால்மீகி பகவான் மத் ராமாயணத்தின் அயோத்தியா காண்டம் 25ம் சர்கத்தில் வர்ணித்துள்ளார்.

ராமா! எந்த தர்மத்தை நீ இத்தனை நாட்களாகக் காத்து வருகிறாயோ,அந்த தர்மம் துணைநின்று உன்னைக் காக்கட்டும்.வேள்விச் சாலைகளில் நீ எந்தெந்த முனிவர்களை எல்லாம் வணங்கி  இருக்கிறாயோ, அந்த முனிவர்கள் காட்டில் உனக்குத் துணை நிற்கட்டும்.
விச்வாமித்ரர் அருளிய தெய்வீகமான படைக்கலங்கள் உனக்குத் துணையாக இருக்கட்டும்.
பெற்றோர் மனம் கோணாத படி நீ செய்த பணிவிடைகள் உன்னைக் காக்கட்டும்.நீ காத்து வரும் சத்தியம் உன்னைக் காக்கட்டும்.

அரக்கர்கள், பிசாசுகள், குரங்குகள், கொசுக்கள், காட்டு ஈக்கள், மலைப் பாம்புகள், புழுக்கள், யானைகள், சிங்கங்கள், புலிகள், காட்டு எருமைகள், பேய் பிசாசுகள் உனக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.மங்கலம் பகவான் விஷ்ணுர் மங்கலம் மதுஸூதன, மங்கலம் புண்டரீகாக்ஷோ மங்கலம் கருடத்வஜ:- திருமால் உனக்கு அனைத்து வித மங்கலங்களையும் தந்து காத்தருளட்டும். இவ்வாறு ராமனுக்கு ஆசீர்வாதம் செய்து, விசல்யகரணி என்ற மூலிகையை ராமன் கையில் ரட்சையாகக் கட்டி வழியனுப்பினாள் கௌசல்யா தேவி.

மேலே சீதையிடம் செய்தி சொல்லி விட்டுக் காட்டுக்குப் புறப்படலாம் என்ற திருவுள்ளத்தோடு கௌசல்யாவின் மாளிகையை விட்டு வெளியேறினான் ராமன். ராமன் வனவாசம் செல்லப் போகிறான் என்ற செய்தி அதற்குள் ஊர் முழுதும் பரவியிருந்த படியால், ராமன் வெளியே வந்தவாறே ஊர்மக்கள் அத்தனை பேரும் ராமனை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். கண்களில் நீர்மல்க, முகம் வாட, உடல்சோர பட்டுப் போன மரம் போல் மக்கள் ராமனைச் சுற்றி நின்றிருந்தார்கள், ராமனை விழுந்து வணங்கினார்கள்.

கௌசல்யாவின் மாளிகையில் இருந்து சீதையின் மாளிகையை நோக்கி ராமன் செல்ல, மக்களும் செய்வதறியாது ராமனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள். இந்த மக்கள் ராமன் மீது இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்துள்ளமைக்கு எது காரணம்? வால்மீகி பகவான் அயோத்தியா காண்டம் 26ம் சர்கம் 2ம் ஸ்லோகத்தில் காரணம் சொல்கிறார்:

“விராஜயன் ராஜஸுதோ ராஜமார்கம் நரைர்வ்ருதம்
ஹ்ருதயானி மமந்தேவ ஜனஸ்ய குணவத்தயா”

ராஜவீதிக்குத் தன் திருமேனி ஒளியால் ஒளி சேர்த்தபடி ராமன் செல்ல, மக்கள் எல்லாரும் பின் தொடர்ந்து சென்றார்கள். ஏன்? தனது குணங்களால் அனைத்து மக்களின் உள்ளங்களையும் கடைந்து எடுத்துக் கொள்ளை கொண்டு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல், மக்கள் மனங்களைத் தன் குணங்களால் கடைந்து அவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறான் ராமன். அதனால் தான் எந்த ஒருவருமே ராமனைக் கண்ட மாத்திரத்தில் தம்மை அறியாமல் விழுந்து நமஸ்கரித்து விடுவார்களாம். ஏனெனில், ராமனைத் தரிசித்த மாத்திரத்தில், அவனது குணங்கள் நமது உள்ளத்தைக் கடைந்து ஈர்த்து விடும்.

இப்படித் தன் குணங்களால் எல்லோரையும் கவர்ந்து எல்லோராலும் வணங்கப்படுபவனாக ராமன் திகழ்வதால், ‘ப்ரணம:’ என்று ராமன் அழைக்கப்படுகிறான். ‘ப்ரணம:’ என்றால் எல்லோரையும் வணங்க வைப்பவர் என்று பொருள். ராமனைப் பொறுத்த வரை, அவன் தனது இறைத்தன்மையைக் காட்டிப் பிறர் தன்னை வணங்கும்படிச் செய்வதில்லை. மாறாகத் தன் குணங்களால் அனைவரையும் ஈர்த்து அவர்கள் தன்னைவணங்கும்படிச் செய்து விடுகிறான். இவ்வாறு அனைவராலும் வணங்கப்படும் ராமன் ‘ப்ரணம:’ - அது தான் ஸஹஸ்ரநாமத்தின் 410-வது திருநாமம். “ப்ரணமாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், உரிய இடத்தில் உரிய நேரத்தில் உரிய மரியாதைகளைப் பெற்று விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

411. ப்ருதவே நமஹ: (Pruthave namaha)
ராமனுடன் நட்பு பூண்ட சுக்ரீவன், ராமனின் உதவியோடு வாலியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றான். ராம லக்ஷ்மணர்களையும் தனது வானர அமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு வாலியின் இருப்பிடமான கிஷ்கிந்தையை அடைந்தான் சுக்ரீவன். “அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று உரத்த குரலில் வாலியைப் போருக்கு அழைத்தான்.

கடும் கோபத்துடன் போருக்கு வந்த வாலி, சுக்ரீவனைப் பலவாறு தாக்கினான். ஒரு மரத்தின் பின் மறைந்திருந்து வாலி மேல் பாணம் எய்வதாகச் சுக்ரீவனிடம் சொல்லி இருந்த ராமன், வாலி மீது பாணத்தை எய்யவில்லை. குத்துயிரும் கொலையுயிருமாக அடிபட்டு ரத்தம் கக்கியபடி திரும்பி வந்தான் சுக்ரீவன். நூலிழையில் உயிர் பிழைத்து வந்த சுக்ரீவனைப் பார்த்து ராமன், “சுக்ரீவா! நீயும் வாலியும் உருவத்தில் ஒத்தவர்களாக இருக்கிறீர்கள். அதனால் யார் வாலி, யார் சுக்ரீவன் என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.

இதோ! என் தம்பி லக்ஷ்மணன் உன் கழுத்தில் கஜபுஷ்பி என்னும் மலர்மாலையை அணிவிப்பான். இதைக் கொண்டு நான் உன்னை அடையாளம் கண்டுகொள்வேன். இப்போது போருக்குச் செல்!” என்றான் ராமன். லக்ஷ்மணன் அணிவித்த கஜபுஷ்பி மாலையுடன் மீண்டும் போருக்கு வந்தான் சுக்ரீவன். “அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று மீண்டும் அழைத்தான். அந்தக் குரலைக் கேட்டவாறே, வாலியின் குடிமயக்கம் நீங்கியது. கடும் கோபம் முளைத்தெழுந்தது.

தான், எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியாலும் பூமி நடுங்கும்படி சுக்ரீவனை நோக்கி நடக்கத் தொடங்கினான் வாலி. அப்போது வாலியின் மனைவியான தாரை, வாலியைத் தடுத்தாள். “சுவாமி! இப்போது தான் உங்களால் புடைக்கப்பட்டுத் தோல்வி அடைந்து உயிர்பிச்சை வாங்கிக் கொண்டு ஓடி இருக்கிறான் சுக்ரீவன். அவன் மறுபடியும் போர் புரிய அழைக்கிறான் என்றால் நாம் சற்று யோசிக்க வேண்டும். அவன் ஏதோ ஒரு பெரிய துணையோடு வந்திருக்க வேண்டும். நம் மகன் அங்கதன் அவனது நண்பர்கள் மூலம் ஒரு செய்தி அறிந்து வந்து என்னிடம் சொன்னான்.

இட்சுவாகு குலத்தில் உதித்த அயோத்தி மன்னரின் புதல்வர்களான ராம லக்ஷ்மணர்களோடு சுக்ரீவன் நட்பு கொண்டிருக்கிறானாம். அதிலும் ராமர் உலகப் பிரசித்தி பெற்ற தலைசிறந்த வீரர் ஆவார். போரில் அவரது பராக்கிரமத்துக்கு எல்லையே இல்லை. ஊழிக் காலத் தீ போல் எதிரியின் ஆற்றலை மொத்தமாக அழிக்க வல்லவர் அவர். நல்லவர்களைக் காக்கும்
கற்பக மரம் போன்றவர் அவர். இடருற்றவர்கள் அத்தனை பேருக்கும் மேலான புகலிடம் அவர். திக்கற்றவர்களுக்குச் சிறந்த காவலர் அவர்.
புகழுக்கு உரிய பாத்திரமாகத் திகழ்பவர். இதைத் தெரிவிக்கும் வால்மீகியின் ஸ்லோகம்:

“நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூனாம் ஆபந்நானாம் பரா கதி:
ஆர்த்தானாம் ஸம்ச்ரயச்சைவ யசஸச்சைக பாஜனம்”

எப்போது அந்த ராமர் சுக்ரீவனோடு நட்பு கொண்டிருக்கிறாரோ, அவன் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று பொருள். ராமர் இருக்கும் பக்கம் தான் வெற்றியும் இருக்கும். எனவே ராமனிடம் நட்பு கொண்ட சுக்ரீவனை எதிர்த்து இப்போது போர் புரியச் செல்லாதீர்கள். அந்த ராமரோடு நீங்களும் நட்பு கொண்டு விடுங்கள். ராமனைச் சரணடைவதே உங்களுக்குச் சிறந்த நன்மையைத் தரும்!” என்றெல்லாம் பலவாறு அறிவுரை சொன்னாள். அவற்றை மீறிப் போருக்குச் சென்ற வாலி தனது முடிவைச் சந்தித்ததை நாம் அறிவோம்.

இங்கே ராமனைத் தாரை குறிப்பிடும்போது, “யசஸச்சைக பாஜனம்” என்று குறிப்பிடுவதாக வால்மீகி காட்டுகிறார். “யசஸச்சைக பாஜனம்” என்றால் புகழுக்கு உரிய ஒரே பாத்திரமாக இருப்பவர் என்று பொருள். அயோத்தியில் எழுந்தருளியிருந்த ராமனின் பெருமைகள் கிஷ்கிந்தையில் வாழும் வானரப் பெண்ணான தாரை வரை, அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறதல்லவா? அப்படி எல்லோராலும் நன்கு அறியப்பட்ட புகழோடு ராமன் விளங்குவதால் தான் ராமன் ‘ப்ருது:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ப்ருது:’ என்றால் புகழால் உயர்ந்து நிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 411-வது திருநாமம். “ப்ருதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பேரோடும் புகழோடும் பெருமை பெற்று விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

412. ஹிரண்யகர்ப்பாய நமஹ: (Hiranyagarbhaaya namaha)

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப் பிரம்மம் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், ராமபிரான் மீது அபார பக்தி கொண்டிருந்தார். அவர் திருப்பதியில் இருந்து திருவொற்றியூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரது சீடர்கள் அவரைப் பல்லக்கில் சுமந்தபடி அழைத்துச் சென்றார்கள். கோவூர் சுந்தர முதலியார் என்னும் பெரியவர், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தியாகராஜ சுவாமிகள் எந்தச் செல்வத்தையும் ஏற்க மாட்டார் என்பதால், தியாகராஜரின் சீடர்களிடம் சில தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பி இருந்தார் அவர். தியாகராஜரைப் பல்லக்கில் சுமந்தபடி சீடர்கள் செல்லும்போது, காட்டுப் பாதை வழியே பயணிக்க வேண்டிய சூழல் வந்தது. காட்டுக்குள் நுழையச் சீடர்கள் அஞ்சினார்கள். அப்போது தியாகராஜர், “மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? நம்மிடம் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்றார்.

சீடர்களும் கோவூர் சுந்தர முதலியார் கொடுத்த செல்வத்தைப் பற்றி, அதுவரை தியாகராஜரிடம் தெரிவிக்கவில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டுக் காட்டுப் பாதையில் செல்லத் தொடங்கினார்கள். நடுக் காட்டில் அவர்கள் பயணிக்கும் போது சில திருடர்கள் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள். திருடர்களைக் கண்டு அஞ்சிய சீடர்கள், தியாகராஜ சுவாமிகளிடம், “குருவே! திருடர்கள் நம் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள்!” என்று சொன்னார்கள். “நம்மிடம் தான் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்று கேட்டார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னார்கள் சீடர்கள். அதற்கும் தியாகராஜர் கலங்கவில்லை. “இந்தச் செல்வத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. ராமனுக்காகத் தானே பயன்படுத்தப் போகிறோம்?

அப்படியானால் இது ராமனுடைய செல்வம்!
அவனது செல்வத்தைக் காத்துக் கொள்ள

அவனுக்குத் தெரியும்! நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம்!” என்றார். அந்த நடுக்காட்டில், திருடர்களால் சூழப்பட்ட நிலையில், ‘முந்து வேனுக…’ என்று தொடங்கும் ஒரு கீர்த்தனையை தர்பார் ராகத்தில் ராமனைக் குறித்து இயற்றிப் பாடினார் தியாகராஜர். அவர் பாடிய அளவில், அந்தத் திருடர்கள் அத்தனை பேரும் தியாகராஜ சுவாமிகளின் பாதங்களில் வந்து விழுந்து விட்டார்கள்.
“என்ன ஆயிற்று?” என்று திருடர்களைப் பார்த்துக் கேட்டார் தியாகராஜர். “சுவாமி!  இரண்டு இளைஞர்கள் கையில் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டு உங்கள் பல்லக்கைச் சுற்றிச் சுற்றி வருவதை நாங்கள் கண்டோம். அந்த இருவரும் எங்களைத் தாக்க முற்பட்டார்கள். அவர்களின் கால்களில் நாங்கள் போய் விழுந்தோம். உங்கள் காலில் விழுந்தால் உயிர் பிழைக்கலாம் என்று அந்த வில் பிடித்த இளைஞர்கள் கூறினார்கள். அதனால் தான் உங்கள் கால்களில் வந்து விழுந்து விட்டோம்!” என்று சொன்னார்கள் திருடர்கள்.

தன்னைக் காப்பதற்காக, வில்லும் அம்பும் கையில் ஏந்தி சாட்சாத் ராமனும் லக்ஷ்மணனுமே வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பக்திப் பரவசத்தில் பூரிப்படைந்தார் தியாகராஜ சுவாமிகள். ராமனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். இதன்மூலம் நாம் அறியும் செய்தி என்னவென்றால், ராமனின் அவதாரக் காலம் மட்டுமின்றி, அதற்குப் பிற்பட்டவர்கள் ராமனைத் தியானித்து வணங்கினாலும், அவர்களையும் தேடி வந்து அருள்புரிபவனாக ராமன் விளங்குகிறான். அதனால் தான் ராமனுக்கு ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று திருநாமம்.

இங்கே, ‘ஹிரண்ய’ என்பது இனிமையான இதயத்தைக் குறிக்கிறது, அதாவது, ராம பக்தர்களின் இனிய இதயங்கள். அந்த இதயங்களிலே மனத்துக்கு இனியவனாக எப்போதும் ராமன் குடியிருப்பதால், ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறான். ‘கர்ப்ப’ என்றால் உள்ளே வசிப்பவர். இனிய இதயங்களுக்குள்ளே வசிப்பவர் ‘ஹிரண்யகர்ப்ப:’; அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 412-வது திருநாமம். “ஹிரண்யகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம் மனங்களிலும் ராமன் வந்து குடிகொண்டு
ஆனந்தம் தருவான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!