×

கோயம்பேடு மார்க்கெட்டில் நள்ளிரவு ஆப்பிள் பழப் பெட்டிகளை திருடிய ஆசாமிகளை வியாபாரிகள் மடக்கினர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு; பல ஆண்டுகளாக திருடியது அம்பலம்

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நள்ளிரவில் பழப்பெட்டிகளை ஆட்டோவில் வந்து திருடிய இருவரை வியாபாரிகள் மடக்கி பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆட்டோ மற்றும் ரூ.40,000 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆப்பிள் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, சீத்தாப்பழம் ஆகியவை வருகின்றன. இந்த பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக அந்தந்த கடைகளுக்கு முன்பு இறக்கி வைக்கப்படுகின்றன. பின்னர், சென்னை புறநகர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்.இந்நிலையில், சமீபகாலமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த திராட்சை, ஆப்பிள், மாதுளை ஆகிய பழப்பெட்டிகள் திருட்டுப்போனது. இதை அறிந்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வருவது, ஒரு வாலிபர் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் அருகே பைக்கில் காத்து நிற்பது, மற்ற இருவர் மார்க்கெட்டுக்கு வந்து அங்குள்ள ஒரு கடையில் 5 பெட்டிகள் என சுமார் 15 கடைகளில் ஆப்பிள் பழப்பெட்டிகளை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது.அதேபோல், நேற்று முன்தினம் முரளி என்பவருக்கு சொந்தமான கடையில் இருந்து 5 ஆப்பிள் பெட்டிகளை திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பழப்பெட்டிகளை திருடும் கும்பலை பிடிப்பதற்கு பழப்பெட்டிகளை வழக்கம்போல இறக்கி வைத்துவிட்டு நள்ளிரவு 1.30 மணி அளவில் வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது, பழப்பெட்டிகளை திருட ஆட்டோவில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் ஆட்டோவில் இருந்து இறங்கி பழப்பெட்டிகளை திருடும்போது வியாபாரிகள் ஓடி வந்து மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் வியாபாரிகளை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஆட்டோவில் ஏற முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்ற வியாபாரிகள் இருவரை மடக்கிப்பிடித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டார். மடக்கி பிடித்த இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கோவிந்தன் (19), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், முத்துகருப்பன் (21) ஆட்டோ டிரைவர் என்பதும், தப்பிச் சென்றவர் துரைக்கண்ணு என்பதும் தெரியவந்தது. மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்படும் பழப்பெட்டிகளை இரவில் திருடிச்சென்று திருவொற்றியூரில் உள்ள மார்க்கெட்டில் ஒரு பெட்டி 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்வோம் என்றும், இந்த திருட்டு பல வருடங்களாக செய்து வந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 10 பெட்டி ஆப்பிள்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.* காவல்நிலையம் இருக்கு… காவலர்கள் தான் இல்ல…பழ வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் இரவு நேரத்தில் தொடர்ந்து செல்போன், பைக் திருட்டு, வழிப்பறிகள் நடக்கிறது. கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றி வருகின்றனர். இதுதொடர்பாக, கோயம்பேடு போலீசாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரைக்கும் எந்த நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் நிலையம் உள்ளது. அங்கு போலீசார் யாரும் இருப்பதில்லை. எந்த குற்ற சம்பவங்கள் நடந்தாலும் போலீசாரிடம் சொன்னால் கண்டுகொள்வதில்லை. மார்க்கெட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் குற்ற சம்பவங்களை தொடர்ந்து, குற்றவாளிகளை நாங்களே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகிறோம். மார்க்கெட்டில் காவல் நிலையம் இருந்தும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க இனிமேலாவது போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும்’’ என்றனர்….

The post கோயம்பேடு மார்க்கெட்டில் நள்ளிரவு ஆப்பிள் பழப் பெட்டிகளை திருடிய ஆசாமிகளை வியாபாரிகள் மடக்கினர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு; பல ஆண்டுகளாக திருடியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Annagar ,Coimbed Fruit Market ,Asamis ,Coimbadu Market ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...