×

தாலி பாக்கியம் தரும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப மரம் உள்ளது. அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.

தலவரலாறு

பண்டைய காலத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த வணிகர் முத்துச்செட்டியார் தங்களது பகுதியில் விளைந்த விளைபொருட்களை மதுரையில் விற்பனை செய்தார். மதுரை மீனாட்சியம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். குழந்தை பாக்கியம் இல்லாத இவர், மதுரைக்கு வரும்போது மீனாட்சியம்மனை தரிசித்து குழந்தை பேறு கிடைக்க வேண்டி வந்தார். ஒரு முறை அவர் மதுரையில் விளைபொருட்களை விற்று விட்டு ராமநாதபுரத்திற்கு குதிரையில் வந்து கொண்டிருந்தார். வழியில் அழுதவாறு நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியை பார்த்த அவர், அவளிடம் விசாரித்தார். சிறுமி தனது பெயர் முத்துமாரி என்றும், வழிதவறி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்பினார்.

வழியில் இருந்த ஒரு குளத்தில் குளிக்க முத்து செட்டியார் விரும்பினார். சிறுமியை கரையில் அமரும்படி தெரிவித்த அவர், குளத்தில் இறங்கி குளித்தார். சிறிது நேரம் கழித்து அவர் கரைக்கு வந்தபோது, அங்கிருந்த சிறுமி மாயமானது தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் வீடு திரும்பிய அவர் நடந்தது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், கள்ளிக்காட்டு பகுதியில் நானே சிறுமியாக வந்தேன். அப்பகுதியில் எனது பாதச்சுவடு பதிந்துள்ளது. அதனை பிடிமண்ணாக எடுத்து எனக்கு கோயில் எழுப்பி வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன் என்று கூறி மறைந்தார். இதன்படி முத்துசெட்டியார் பிடிமண் எடுத்து அம்மனுக்கு சிலை செய்து, கோயில் எழுப்பினார் என்பது புராணம்.  

இக்கோயிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா விமர்சையாக நடக்கிறது. முக்கிய விழாவாக பிடிமண்  வழிபாடு நடக்கிறது. விழாவுக்கு முந்தைய நாள் இரவில் பிடிமண் எடுத்து  அம்மனாக பாவித்து பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பால்குடம்,  தீர்த்தவாரி, பூக்குழி வைபவம் என 10 நாட்களும் திருவிழா களை கட்டுகிறது. இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு முதலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெறுகின்றனர். தீர்த்தத்தை பருகுவதால் அம்மை நோய் விரைவில் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

திருமண வரம் வேண்டும் இளம்பெண்கள், தாலிப்பொட்டை அம்மன் காலடியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனை வணங்கி, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கிறது.

Tags : Thayamangalam Muthumariamman ,Tali ,
× RELATED தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்