×

தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்ட 400 கிலோ கஞ்சா, படகுடன் பறிமுதல்: 10 பேர் கைது பரபரப்பு தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதில் பலர், தூத்துக்குடி நமது கடற்கரை பகுதியிலும், சிலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுவதும் வாடிக்கையாகி  வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று போதைப் பொருள் கடத்திச் சென்று இலங்கையில்   பிடிபட்டவர்கள் 13  பேர். இவர்கள்  இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ளனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு இலங்கை கல்பிட்டியா துறைமுகம் அருகே உள்ள குதிரைமலை முனை பகுதியில் தமிழக  மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர்  தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த 400 கிலோ கஞ்சாவை படகுடன் பறிமுதல் செய்த கடற்படையினர், கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மற்றும் கஞ்சாவை வாங்கிச் செல்ல இலங்கை புத்தளத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்டுள்ள நாட்டுப்படகு, தங்கச்சிமடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி சென்று பிடிபட்டவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் சூசையப்பர் பட்டினம் ரிக்சன், கிறிஸ்டிராஜ், தங்கச்சிமடம் அந்தோணி அடிமை, கீழக்கரை இம்ரான்கான், திருப்புலனி உதயகுமார் என்பதும் தெரிய வந்துள்ளது.  மேலும் இவர்கள், மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சாவை கடத்தி வந்து கீழவைப்பார் அருகேயுள்ள கடல் பகுதியில் இருந்துதான் படகில் சென்றுள்ளனர் என்றும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.  பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் மற்றும் ஒன்றிய, மாநில உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து படகில் 400 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்….

The post தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்ட 400 கிலோ கஞ்சா, படகுடன் பறிமுதல்: 10 பேர் கைது பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்