×

தீவனூரில் அருள்பாலிக்கும் பொய்யாமொழி விநாயகர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது தீவனூர் எனும் சிற்றூர். இவ்வூரின் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் நெற்குத்திசுவாமிகள் என்றழைக்கப்படும் பொய்யா மொழி விநாயகர்.

தல வரலாறு:

தேசிங்கு மன்னன் செஞ்சியை ஆண்டுவந்த காலத்தில் இப்பகுதியில் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் வயல்களிலிருந்து நெற்கதிர்களை திருடி பறித்து வந்து நெல்லை உதிர்த்து அவைகளை ஒன்று சேர்த்து, ஒரு கல்லை கொண்டு, நெல்லை குத்தி அரிசியாக்கி தின்று வந்தார்கள். ஒரு நாள் சிறுவர்கள், நெல்குத்த கல் தேடியபோது யானை தலைபோன்ற தோற்றமுடைய 5 அங்குல நீளத்தில் கல் ஒன்று கிடைத்தது. அந்த கல்லால் நெல்லை குத்த முடியவில்லை. இதனால் அந்த கல்லை நெற்குவியலின் மீது வைத்துவிட்டு வேறு கல்லை தேடி போனார்கள். வேறு கல் கிடைக்காமல் திரும்பிவந்து பார்த்தபோது அவர்கள் வைத்துவிட்டு போன நெற்குவியலில் இருந்து நெற்கள் குத்தப்பட்டு அரிசி, தவிடு, உமி என தனித்தனி குவியலாக இருந்தது. இதைகண்ட சிறுவர்கள் ‘இது சாதாரண கல் இல்லை, நெற்குத்தி சாமி கல். இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், நாம் தினமும் திருடிவரும் நெல்லை இது குத்தி அரிசியாக்கும்.

இதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும்’ என கூறியபடி அந்த கல்லை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு வீடு திரும்பினர். மறுநாள் திரும்பிவந்து பார்த்தபோது அந்த கல்லை காணவில்லை. இதனால் மனமுடைந்த சிறுவர்கள் பல இடங்களில் தேடினார்கள், கிடைக்கவில்லை. உடல் சோர்ந்துபோன சிறுவர்கள் தாகம் தீர தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த குளத்தில் இறங்கியபோது குளத்தில் ஓரிடத்தில் குபுக்குபுக்கென நீர்குமிழிகள் தொடர்ந்து வந்தது. இதைக்கண்ட சிறுவர்கள், குளத்தில் குதித்து நீர்குமிழ்கள் வந்த இடத்தில் மூழ்கி பார்த்தபோது, காணாமல் போன அந்தக்கல் இருந்தது. இதைக்கண்ட சிறுவர்கள் அந்தக்கல்லை எடுத்துகொண்டு கரைக்கு வந்து, தாங்கள் திருடிவந்த நெற்குவியல் மீது வைத்தார்கள்.

கல்லை நெற்குவியல் மீது வைத்ததும், அந்த நெற்குவியல் அரிசி, தவிடு, உமி என தனித்தனியாக பிரிந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவர்கள் அந்த கல்லை ஒரு மரத்தடியில் வைக்கோலால் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். மீண்டும் மறுநாள் திரும்பிவந்து பார்த்தபோது கல்லை காணவில்லை. அதை தேடியபோது மீண்டும் குளத்தில் நீர்குமிழ்கள் வந்தது. இறங்கி பார்த்தபோது குளத்தில் கல் இருந்தது. அதை எடுத்து வழக்கம் போல நெல்லை குத்தி சாப்பிட்டார்கள். இவ்வாறு பல நாட்கள் நடந்து வந்த அதேநேரத்தில், கிராம மக்கள் வயல்களில் நெற்கதிர்கள் திருடு போவதாக ஊர் பெரியவரான ஏகாம்பரத்திடம் முறையிட்டனர். அவர் உடனே வீடு வீடாக சோதனை செய்ய  உத்தரவிட்டார்.

வயதான ஒரு கிழவி வீட்டில் நிறைய நெல் உமி குவியல் இருந்தது. அதனால் அந்த கிழவிதான் நெல்லை திருடினாள் என முடிவு செய்து, தண்டனை வழங்க தீர்மானிக்கும்போது, அந்த கிழவி, ‘அய்யா இந்த உமிகளை மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் கிரயத்திற்கு பெற்றேன்’ என கூறி, அந்த சிறுவர்களை அடையாளம் காட்டினார். அவர்களை விசாரித்தபோது, அந்த கல்லின் மகிமையை கூறினார்கள். அந்தக்கல் மூலம் குத்தப்பட்ட உமியை பல நாட்களாக கிழவியிடம் விற்று வருவதாகவும், பகலில் வெளியே இருக்கும் இந்த கல், இரவில் குளத்தில் போய்விடும் எனவும் கூறினார்கள் அந்த கல்லை ஏகாம்பரம் கைப்பற்றி தன் வீட்டுக்கு எடுத்து சென்றார்.

கனவில் விநாயகர்

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய விநாயகர், ‘நீர் கொண்டு வந்த கல்லை கல்லாக நினையாதே, நீ விபூதி அணிந்து, ருத்ராட்சம் தரித்து இடைவிடாமல் என்னை பூஜித்து வருவாயானால், என்னை அடையும் பாக்கியம் பெறுவாய்’ என கூறி, காட்சி தந்து மறைந்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த ஏகாம்பரம் திகைத்து போனார். ‘யானோ வைணவன், நெற்றியில் திருநாமம் இடுபவன், நான் எப்படி நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்ராட்சஷம் தரிப்பது, இது முற்றிலும் மாறுபாடாக இருக்குமே என வழக்கம்போல வைணவராகவே இருந்தார். இதையறிந்த அவரின் இளைய சகோதரர் வெங்கடாசலம் ‘அண்ணா, நமக்கு நல்லகாலம் பிறந்து விட்டது. பிரணவமூர்த்தியின் தியானத்தை அனைவரும் அனுசரிக்கலாம் என கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஏகாம்பரம் ஏற்கவில்லை.

ஏழையான பெரியவர்

இதனால் வெங்கடாசலம் இரவில் கல் மறைந்து கொள்ளும் குளமருகே சிறு குடிசை கட்டி ஒரு கோயிலை உருவாக்கி, அதில் நெற்குத்தி கல்லை வைத்து பூஜைசெய்ய ஆரம்பித்தார். அதிலிருந்து அவர் வாழ்க்கை சிறந்து விளங்கியது. விநாயகபெருமானை தொழ மறுத்த ஏகாம்பரம் செல்வசெழிப்பை இழந்து வறுமையடைந்தார். பின்னர் இளைய சகோதரருடன் நெற்குத்தி கல் விநாயகப்பெருமானை விதிப்படி பூஜிக்க தொடங்கினார். இந்த சமயத்தில் வாலாஜாப்பேட்டை ஸ்ரீமத் சட்டநாதர் சுவாமிகள் சிஷ்யரான முருகப்பன் என்ற மளிகை வியாபாரி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு 100 பொதி மாட்டின் மீது 100 மிளகு மூட்டை ஏற்றிக்கொண்டு செல்லும் சமயத்தில், வழியில் உள்ள தீவனூர் கிராமத்தில் விநாயகப்பெருமான் கோயிலில் தங்கி சமையல் செய்து சாப்பிட நேர்ந்தது. அப்போது கோயிலை பராமரிக்கும் ஏகாம்பரம், சுவாமியின் பொங்கல் விநியோகத்திற்கு முருகப்பனிடம் கொஞ்சம் மிளகு கேட்டார்.

அதற்கு அவர், இது மிளகில்லை, உளுந்து என்றார். ஏகாம்பரம் மறுமொழி பேசாமல் மிளகின்றி பொங்கல் செய்து விநாயகருக்கு நிவேதித்தார். பின் முருகப்பன் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சந்தையில் விலைபேசி முன்பணம் பெற்று மிளகு மூட்டைகளை ஒப்படைக்கும் போது, மிளகு மூட்டைகள் உளுந்து மூட்டைகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது என்ன அநியாயம், என அழுது புலம்பினார். அப்போது ‘என் சந்நிதானத்தில் கூறியபடி மிளகு, உளுந்து மூட்டையாகிவிட்டது, நீ ‘பொய்மொழியுடையான்’ ‘யானோ பொய்யாமொழியுடையேன்’ என் கோயில் சென்று உன் குற்றத்தை மன்னிக்கும்படி பிரார்த்தித்தால் உளுந்து மிளகாகும் என்று ஒரு அசரீரீ வாக்கு உண்டாயிற்று.

இதை கேட்ட முருகப்பன் வியப்படைந்து, மூட்டைகளுடன் தீவனூருக்கு வந்து விநாயகர் சந்நிதியில் ‘இந்த வியாபாரத்தில் பாதி லாபம் உமக்கே அர்ப்பணம் செய்கிறேன்’ என மனமுருக வேண்டி மன்னிப்பு கேட்டுவிட்டு உளுந்தூர்பேட்டை சந்தைக்கு மூட்டைகளுடன் திரும்பினார். அங்கு சென்று பார்த்தபோது உளுந்து மூட்டைகள் மிளகு மூட்டைகளாகி இருந்தன. அதை எடுத்து சென்று தீவனூரில் விநாயகபெருமானுக்கு கற்களால் கோயில் அமைத்து பொய்யா மொழி விநாயகர் என திருப்பெயரில் பதிகம் பாடினார். அன்றுமுதல் இக்கோயிலுக்கு அனைவரும் வந்து தங்கள் மனதில் உண்மைகளை மட்டும் பொய்யாமொழி விநாயகபெருமானிடம் கூறி பரிகாரம் பெற்று செல்கிறார்கள்.

Tags : Divanur ,
× RELATED தீவனூரில் அருள்பாலிக்கும் பொய்யாமொழி விநாயகர்