×

அரசு பதவியை தவறாக பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்கலாம் என பரிந்துரை

* மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் சிக்கினர்* லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அதிரடி* முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்சென்னை: அமைச்சர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தங்கள் பதவியை துஷ்பிரயேகம் செய்து, மருத்துவமனையில் 250 படுக்கை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதி உள்ளதாக போலி ஆவணங்களை தயாரித்து, வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கலாம் என்று தேசிய மருத்துவ குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவ குழுவினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை பல்லாவரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சங்காரணை பகுதியில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த தனியார் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி கோரி தேசிய மருத்துவ குழுமத்தில் விண்ணப்பித்திருந்தது. அதன்படி தேசிய மருத்துவ குழுமம் ஆண்டுக்கு 150 மாணவர்களை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கலாம். அதற்கு, மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக சுதாதாரத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்ய, அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் உத்தரவுப்படி தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எலும்பியல் துறை பேராசிரியர் டி.எம்.மனோகர், அதே மருத்துவ கல்லூரியின் நோயியல் துறை பேராசிரியர் சுஜாதா, மருந்தியல் துறை பேராசிரியர் வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. டாக்டர் பாலாஜிநாதன் தலைமையிலான குழு, மஞ்சங்காரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதால், 150 மாணவர்களை வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்க்க அனுமதி தரலாம் என்று 27.11.2020ம் தேதி அறிக்கையை தமிழக சுகாதாரத்துறையிடம் சமர்ப்பித்தது. தமிழக சுகாதார துறையின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மருத்துவ குழுமம் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 150 மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி வழங்கியதாம். ஒரு புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்க்கும் பட்சத்தில், அந்த மருத்துவமனையில் 60 சதவீதம் நோயாளிகள், 300 படுக்கைகள் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனை குறைந்தது 2 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். ஸ்கேன், ஆபரேஷன் தியேட்டர், புறநோயாளிகளை கவனிக்கும் வசதி, போதிய மருத்துவர்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம். ஆனால், தேசிய மருத்துவ குழுமத்தை ஏமாற்றும் நோக்கில், 2020ம் ஆண்டு அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் அமைத்த டாக்டர் பாலாஜிநாதன் தலைமையிலான குழுவினர், வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16.11.20 அன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த மருத்துவமனையில் 650 புறநோயாளிகளும், 210 உள்நோயாளிகள் மட்டுமே இருந்துள்ளனர். வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாச ராஜ் ஆய்வின்போது அனைத்து ஆவணங்களையும் வழங்கினார் என்று அறிக்கையில் மருத்துவ குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தேசிய மருத்துவ குழும விதிகளின்படி 2 ஆண்டுகள் மருத்துவமனை இயங்கி இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2020 ஜூன் மாதம் தான் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து சான்றிதழ்களும் முறையாக தேசிய மருத்துவ குழு விதிகளின்படி உள்ளதாக மருத்துவக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், போலியான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தேசிய மருத்துவ குழுமத்தை ஏமாற்றும் நோக்கிலும் அந்த ஆவணங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், டாக்டர்களான மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ ஆய்வுக்குழு தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேல்ஸ் மருத்துவமனைக்கு 150 மாணவர்கள் சேர்க்கைக்கு பரிந்துரைத்துள்ளனர். அதற்கான தகுதி சான்றை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கியது உறுதியானது. அதற்காக அந்த தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர் பல ஆதாயங்கள் அடைந்ததும் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, முறைகேடு தொடர்பான அனைத்து ஆவணங்கள் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கந்தசாமி தானாக முன்வந்து, மோசடியின் முதல் குற்றவாளியாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2வது குற்றவாளியாக வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அறங்காவலர் ஐசரி கே.கணேசன், 3வது குற்றவாளியாக  வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாச ராஜ், 4வது குற்றவாளியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவ குழுவில் இருந்தவர்கள் உள்பட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஐபிசி 120பி, 420, 468, 471 உள்பட 6 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

The post அரசு பதவியை தவறாக பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்கலாம் என பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Maji Minister ,7 ,Vijayapaskar ,
× RELATED மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்