×

மணக்கோலம் கண்ட உப்பூர் விநாயகர்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 29 கிமீ தொலைவில் உள்ளது உப்பூர். பண்டைய காலத்தில் லவணபுரம், சூரியபுரி, தவசித்திபுரி, பாவவிமோசனபுரம் என்ற பெயர்களிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. வன்னி, மந்தார மரங்கள் அதிகளவில் இருந்ததால் வன்னிமந்தார வனம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு பழமையான வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. மூலவராக விநாயகர் உள்ளார். கோயில் வளாகத்தில் உள்ள குபேர மூலையில் சித்தி, புத்தி சமேத விநாயகர் சிலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் மூலவர் சிலை மீது சூரியகதிர் படும் வகையில் இங்கு சன்னதி கட்டப்பட்டுள்ளது. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம் என 3 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. ராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

தல வரலாறு:

பண்டைய காலத்தில் பார்வதியின் தந்தை தட்சன் பிரமாண்ட யாகம் வளர்த்தான். யாகத்தில் கலந்து கொள்ளுமாறு விஷ்ணு, பிரம்மன் மற்றும் தேவர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான். ஆனால் தனது மகள் பார்வதியை மணந்த சிவபெருமானை அவமானப்படுத்தும் வகையில், அவரை அழைக்கவில்லை. யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார். சாப விமோசனம் பெற உப்பூர் விநாயகரை சூரிய பகவான் மனமுருக வணங்கினார். இதனால் மகிழ்ந்த விநாயகர், அவருக்கு விமோசனம் அளித்தார். மேலும் சூரிய பகவான் விரும்பியபடி தனது சிலை மீது வருடம் முழுவதும் சூரிய கதிர்கள் படுமாறு விநாயகர் அருளினார்.

பிற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் விநாயகருக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. மூலவர் சிலை மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படுமாறு சன்னதி அமைக்கப்பட்டது. இதனால் மூலவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது என்பது புராணம். சீதையை மீட்க இலங்கைக்கு சென்ற வழியில் ராமர் உப்பூருக்கு வந்தார். அங்கு அவர் தியானத்தில் இருந்த போது, அவர் முன் தோன்றிய விநாயகர் தனக்கு திருமணம் செய்து வைத்தால், சீதையை விரைவில் மீட்கலாம் என கூறி மறைந்தார். இதன்படி அருகில் உள்ள சூர்யகுளத்தில் நீராடிய ராமர் விநாயகருக்கு சித்தி, புத்தி என்று 2 பெண்களை திருமணம் செய்து வைத்தார். பின்னர் விநாயகர் ஆசியுடன் சேதுக்கரைக்கு ராமர் சென்றார் என்றும் புராண கதை மூலம் அறியப்படுகிறது.

விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் வருடந்தோறும் சித்தி, புத்தி ஆகியோருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தைப் பேறு பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வெயிலுகந்த விநாயகரை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Tags : Uppur Ganesha ,
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா