×

ரெய்டுக்கு பயந்து அரசியல் பேசாமல் மவுனம் காக்கும் இலை கட்சியின் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ரெய்டுக்கு எதிராகவும் மாஜி அமைச்சருக்கு செல்வாக்கு சரியவில்லை என காட்ட கூட்டம் கூட்டிய அமைச்சரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில்  மாஜி அமைச்சர் ‘பெல்’லின் வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள்  இருவரது வீடு, அலுவலகங்கள் என 26  இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு  பற்றி தகவல் அறிந்ததும் இலை நிர்வாகிகள் அனைவரும் மாஜி அமைச்சர் ‘பெல்’ மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகம் முன்பாக திரள வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு பறந்ததாம். அதில், போலீசாரை விட கட்சிக்காரர்களின் தலைகள் அதிகளவில் இருக்க வேண்டும், உடனடியாக  ஆட்களை அழைத்துச்செல்லுங்கள் என்று சொன்னார்களாம். ஆனால்,  எதிர்பார்த்தபடி கட்சி நிர்வாகிகள், ஆட்களை அழைத்து வரவில்லை. மாஜி  அமைச்சர் ‘பெல்’ வீட்டுக்கு மட்டும் ஓரளவுக்கு ஆட்கள் அழைத்து  வரப்பட்டனர். அவரது 2 நண்பர்கள் வீடுகள் பக்கம் தொண்டர்களே வரலையாம். இதனால், கட்சியின் மேலிடம் கடுப்பாகிவிட்டது. யார் யார் வரவில்லை. எந்தெந்த நிர்வாகிகள் மேலிட உத்தரவை பின்பற்றவில்லை என கணக்கெடுக்கும்படி இன்னொரு உத்தரவும் கூடவே  வந்துள்ளது. இதனால், சில அடி-பொடிகள் பயத்தில் இருக்காங்களாம். நிர்வாகிகளே, கரன்சி வராமல் கூட்டத்தை எப்படி கூட்டுவது என்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வாய் திறந்தால் தானே பிரச்னை… மவுனசாமியாக இருந்தால் சேர்த்த சொத்தை காப்பாற்றலாம் என்று நினைக்கும் இலை கட்சியின் மாஜி அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை  கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் அளவுக்கு அதிமாக சொத்து  சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்தது. விஜிலென்ஸ் அதிரடி  சோதனையால் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் கலக்கத்தில்  இருந்து வருகிறாராம். மாவட்டத்தை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே  முடங்கி கிடக்கிறாராம். சேலத்துக்காரர், தேனிக்காரர் என இரண்டு அணியாக  எதிரும், புதிருமாக செயல்பட்டு வரும் நேரத்தில் இவர்களது விஷயத்தில் மாஜி  அமைச்சர் எந்த பக்கமும் போகாமல் தனித்தே இருக்கிறாராம். மேலும் விமர்சனம் என்ற சொல்லை கேட்டாலே அலறுகிறாராம். நான் ஏதாவது பேசப்போய், பழைய கேஸ்களை தூசு தட்டி என் வீட்டில் ரெய்டு அடித்தால் என் கதை அவ்வளவுதான் என்று புலம்பி வருகிறாராம். இதனால், விஜிலென்ஸ் ரெய்டு நம்ம பக்கம் எதுவும் வராத அளவுக்கு மவுனமாக இருப்போம் என மாஜி அமைச்சர் நினைக்கிறாராம். எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால்  தனது ஆதரவாளர்கள் யாரும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது. மாவட்டத்திலேதான்  இருக்க வேண்டும் என மாஜி அமைச்சர் ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம். மாஜி  அமைச்சர் அலுவலகம், அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்கள் முகாமிட்டு  உள்ளார்களாம். எனினும் நான் அமைதியாக இருப்பதால் ரெய்டு எல்லாம் வராது என்று தன் அடிபொடிகளிடம் கூறி தன்னை தானே மாஜி அமைச்சர் ஆறுதல் படுத்திக் கொண்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கிகளை பார்த்து குற்றவாளிகள் கலங்குவார்கள், ஆனால் காக்கிகளே கலக்கத்தில் இருப்பது ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டதுல ெசங்கமான ஊரில் போலீஸ் சப்-டிவிஷன் அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 5 போலீஸ் நிலையங்கள், ஒரு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்கள்ல கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் விற்பனை தொடர்பாக யாராவது ரகசியமாக கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வர்றாங்களாம். இதனால் விரக்தியடைந்த சமூக ஆர்வலர்கள் நேரடியாக மாவட்ட காவல் அதிகாரிக்கு புகார்களை அனுப்பி வைத்துள்ளனர். ரகசிய தகவல்கள் அடிப்படையில் மாவட்ட காவல் அதிகாரி தனிப்படை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளார். அவர்கள் இந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்ல திடீர் ரெய்டு நடத்துறாங்க. இப்படி ரெய்டு நடத்துனதுல ஒரே நேரத்தில் 100 கிலோ குட்கா பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் என பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து திடீர் ரெய்டுகள் நீடிப்பதால், சப்-டிவிஷனுக்கு உட்பட்ட உயர் காக்கிகள் முதல் அனைவரும் எப்போது நம்ம மீது நடவடிக்கை பாயுமோ என்று கதிகலங்கி உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிவகங்கை, மதுரை மாவட்டத்தில் நடந்த விஷயத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பெரியாறு பாசனத்தால் பயனடையும்  கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இலைக்கட்சியின் முன்னாள் மந்திரியானவர்  இருந்தும், சிவகங்ைக, மதுரை மாவட்டத்தில் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்தாண்டு கால ஆட்சி காலத்தில் இங்கு இருந்த  மாஜியும் சரி, இலைக்கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளும் சரி,  தங்கள் சொந்த வேலையை கவனிக்கத்தான் அக்கறை காட்டினார்களே தவிர, விவசாயிகள்  நலனில் துளியும் அக்கறை செலுத்தவில்லை என மக்கள் இப்போதும் குற்றம்  சாட்டுகிறார்களாம். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு  வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருப்பதுடன், மாவட்டத்தின் பல்வேறு  கிராமங்களிலும் இருக்கிற இலைக்கட்சி விவசாயிகளே அரசின் நடவடிக்கையை  பாராட்டி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா….

The post ரெய்டுக்கு பயந்து அரசியல் பேசாமல் மவுனம் காக்கும் இலை கட்சியின் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : minister ,Ili Party ,wiki ,Peter ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி