அறுவடைத் திருவிழா

உலகெங்கும் வேளாண் மக்கள் தங்களது அறுவடை முடிந்ததும் மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களின் முதல் பலனைக் காணிக்கை ஆக்குகின்றனர். வளர்ந்த நாகரிகமும் வேளாண் பண்பாடும் உள்ளவர்கள் நெல் [அரிசி], கோதுமை என்று தானியங்களைப் படைக்கின்றனர். உணவு சேகரிப்பு சமூகத்தின் பழக்க வழக்கங்களை இன்றும் பின்பற்றி வரும் சில இனக்குழுவினர் இன்றும் கனிவர்க்கங்களைத் தங்கள் கடவுளுக்குப் படைக்கின்றனர்.

வேளாண் கடவுளர் ஆணா? பெண்ணா?

நாகரிகம் வளர்ந்த காலத்தில், வளமைத் தெய்வங்கள் என்று பல பெண் தெய்வங்கள், எல்லா சமூகத்திலும்  தோன்றினாலும், ஆதியில் இடி மின்னல் மழைக்குரிய தெய்வம் மட்டுமே வேளாண்மைக்குரிய கடவுளாக வணங்கப்பட்டது. காலப்போக்கில், பெண் வளமைத் தெய்வங்கள் வேளாண்மை மற்றும் குழந்தைப்பேறு அல்லது குழந்தை நலம் ஆகிய இரண்டுக்கும் உரியவையாகப்போற்றப்பட்டன. இதுவே, மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப  கடவுள் வரலாறும் வளர்ந்து வந்த முறையாகும்.

 இந்திரனும் ஆதவனும்இன்று இந்தியாவில், அறுவடை நாளும் இந்திரனுக்குரிய  போகியும் ஆதவனுக்குரிய மகர சங்கராந்தியும் இணைந்து பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. வேதங்களில் இந்திரன், ஆதவன், அக்னி, வருணன் போன்றோர் காணப்படுகின்றனர். மேலும், இவர்கள் காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் என்பதால் ஆதித்யர்கள் எனப்பட்டனர். இந்திரன், இடி மழை மின்னலுக்குரிய கடவுள். இவன் கொட்டும் அருவிக்கும் ஓடும் நதிக்கும் காக்கும் கடவுளாக விளங்கினான். யாராவது நதியை ஓட விடாமல் தடுத்து அணை கட்டினால் அதை இந்திரன் தகர்த்து எறிந்து நதியை அணைக்கட்டில் இருந்து விடுவிப்பான்.

ஆதவன், தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குப் பெருந்துணையாய் நிற்பான். வெயில் அதிகமாகும்போது இலை தழை பெருகும். பூ வைக்கும். காய் பிடிக்கும். கனி பழுக்கும். கதிரவனை வேளாண் கடவுளாக ஏற்றுக்கொண்டது பிற்கால வரலாறு ஆகும். உலகெங்கும் இடி, மழைக்கடவுளே வேளாண் கடவுளாகப்போற்றப்படுகிறான். இந்தியாவில் இரண்டு தெய்வங்களும் வேளாண் குடியினரின் முக்கியத்தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு, விழா எடுத்து முதற்பலனை அளித்து வேளாண் குடியினர், நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

மேலை நாடுகளில் கிறிஸ்துவம் வந்த பிறகு, இந்த கடவுள் பெயர் சொல்லி இக்காணிக்கையியைச் செலுத்தாவிட்டாலும் இயேசு கிறிஸ்து மற்றும் மரியாளின் பெயரைச்சொல்லி

இக்காணிக்கையைச் செலுத்துகின்றனர். வடக்கே இந்திரனின் பெயரைக்குறிப்பிட்டு போகி கொண்டாடுகின்றனர். தெற்கே தமிழ்நாட்டில், இந்திரனின் பெயரை மறந்துவிட்டு ஆதவனின் பெயரை மட்டும் சொல்லி காணிக்கையை அளிக்கின்றனர். ஆனால், இந்திரனுக்குரிய வழிபாட்டுநடைமுறைகளை இன்றும் பின்பற்றுகின்றனர்.

அரிசி கோதுமை காணிக்கைதமிழ்நாட்டில், பொங்கல் நன்னாளன்று புது அரிசியைக்கொண்டு புது மண்பானையில் பொங்கல் வைத்து கதிரவனுக்குப்படைப்பது வழக்கம். மறு நாள் இந்திரன் வழங்கிய காளை மாட்டுக்கு பொங்கல் வைப்பதுண்டு. இதுபோல, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கூட நடைபெறுவதுண்டு. இன்று, அங்குள்ள மக்கள் இடிமழைக் கடவுளை மறந்து விட்டாலும், வேறு மதங்களை தழுவினாலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்றி  இவ்விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இன்றைய மேலை நாட்டு மதங்களிலுள்ள பல பண்டிகைகள் பெயர் மாறிய பழைய வேளாண் குடிமக்களின் பண்டிகைகளே ஆகும்.

அமெரிக்காவில், நன்றி தெரிவிப்பு நாளன்று [Thanks Giving Day] கோதுமைக் கஞ்சி தயாரித்து இறைவனுக்கு நன்றி சொல்லி உண்பர். இத்துடன், வான் கோழியும் மீனும் சேர்த்து உண்பார்கள். வான்கோழி விருந்து, நன்றி தெரிவிப்பு நாளின் சிறப்பு நிகழ்வாகும். வேளாண்மையைச் சிறப்பிக்கும் வகையில் 1863 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இந்நாளை விடுமுறை நாளாக அறிவித்தார்.இங்கிலாந்திலும், வேளாண் குடியினர் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தில், கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவுக்கு ‘லாமாஸ்’ என்று பெயர். இது ஒரு கிறிஸ்துவ அறுவடைத்திருவிழா. லாமாஸ் பண்டிகைக்குப் புது கோதுமை மாவால் ரொட்டி சுட்டு [Loaf mass day] கடவுளுக்குப் படைத்து உண்பது மரபு.  அன்றைய தேவ ஆராதனைக்கு ரொட்டி ஆராதனை [loaf mass] என்றே பெயர்.

 கனி காணிக்கை வேளாண்மையைச் சிறப்பாகச் செய்து முடித்து அதன் பலன் வந்ததும் சுவை தரும் கனிகளைப் படைத்து தம் நன்றியை கடவுளுக்கு காணிக்கை ஆக்குவது பழங்குடியினரின் வழிபாட்டுச் சடங்காகும். இன்றும், இவ்வழக்கம் பல நாட்டு மக்களிடையே நடைமுறையில் உள்ளது. அர்ஜென்ட்டினா, இத்தாலி, தாய்லாந்து, சுவீச்சர்லாந்து போன்ற நாடுகளில், அறுவடைத் திருநாளன்று கனிகளைப் படைத்து வணங்குகின்றனர். தாய்லாந்தில் சந்தாபூரி என்று அழைக்கப்படும் அறுவடைத் திருவிழாவில் விதவிதமான உருவங்களைக் கனிகளைக் கொண்டு உருவாக்கி அவற்றை  ஊர்வலமாகத் தெரு வழியாகக் கொண்டு வருவர். இவ்வூர்வலத்தில், மிக அரிதான விலை மிகுந்த துரியன் பழங்கள், ரம்புஸ்தான் பழங்கள் போன்றவையும் காணப்படும்.

சுவீச்சர்லாந்தில் அறுவடைத் திருவிழாவுக்கு உடைமரம் அல்லது குடைவேல் மரம் எனப்படும் புனித மரக்குச்சிகளை நட்டு வைத்து வளர்த்து தோட்டம் போடுவர். கன்னித்தன்மை அற்ற இளைஞர்கள் நட்டு வைக்கும் மரங்கள் வளராது என்பது ஓர் நம்பிக்கை. அத்தோட்டத்துக்கு அவர் இராஜ உடையில் வந்து, அம்மரங்களின் முதல் முதல் கனிகளை உண்பார். அவர் இவ்விழாவுக்கு முன்பு ஒரு மாத காலம் வெளி நிகழ்ச்சிகள் எதிலிலும் கலந்து கொள்ளாமல் தனிமையில் விரதம் இருப்பார்கள்.

உடைமரம் அவர்களின் குல மரபுச் சின்னமாக இருப்பதால், அந்த மரத்தை அவர்கள் தெய்வமாகக் கருதி, அம்மரத்தில் தங்கும் மன்னனை இறைவனின் பிரதிநிதியாகக் [divine succession] கொள்கின்றனர். உடை மரத்தில் இருந்து தங்கள் குலத்தின் முன்னோர்கள் உதித்ததாக கருதுவது இவர்களின் நம்பிக்கை ஆகும்.  டிசம்பர் மாதத்தின் இறுதியில், கொண்டாடப்படும் இவ்விழாவில், மன்னனுக்குப் படைக்க மக்கள் தங்களால் தோட்டங்களில் உள்ள மரங்களில் பழுத்த முதல் பழங்களைக் கொண்டு வருவார்கள்.

அர்ஜென்ட்டினாவில் திராட்சைப்பழங்கள் மிக உயர்வானவையாகப் போற்றப்படுகின்றன. ஒரு மாத காலம் கொண்டாடப்படும் இவ்விழாவில், பேராயர் புனித நீரைத் தெளித்து பழங்களை ஆசிர்வதிப்பார். இப்பழங்களைக்கொண்டு தயாரித்த புதிய மதுவை இறைவனுக்கு படைப்பார்கள். பிப்ரவரி மாதம் கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பம்சம், அப்போது இவ்வூர்களில் அழகிப்போட்டி நடக்கும். மேலும், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று வாணவேடிக்கை விட்டு பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ந்திருப்பார்கள். வேளாண் பணிகள் முடிந்து விட்டதால்கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.

இத்தாலியில், நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும். ஒலிவ மரத்தின் புதிய கனிகளை கொண்டு ஆலிவ் எண்ணெய் எடுத்து தேவாலயத்துக்குக் கொண்டு செல்வர். பேராயர் அந்த எண்ணெயை ஜெபித்து ஆசிர்வதித்துக்கொடுப்பார். இதற்கென்று தனி ஆராதனை [mass] நடைபெறும். 12ஆம் நுற்றாண்டில், இந்த ஆராதனை முடிந்ததும் ஊர் மக்கள் அனைவரும் ஒரு பெரிய அரண்மனையில் விருந்துண்பர். இப்போது, இது நடைமுறையில் இல்லை. வேளாண்மையின் முதல் பலன், கடவுளுக்குப் படைத்தல், மன்னனுக்கு மரியாதை செலுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களும் மேனாட்டின் அறுவடைத் திருவிழாவில் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

இந்திரனும் போகியும்நிலங்கள் தரும் விளைச்சலை போகம் என்பது தமிழ் வழக்கு. முப்போகம் விளையும் பூமி என்ற சொற்றொடர் ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யும் வயலைக் குறிக்கிறது. போகம் என்பது மக்களின் இன்ப நுகர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை, வயல்களின் நுகர்ச்சியையும், தாவரங்களின் நுகர்ச்சியையும், அதன் விளைவாகக் கிடைக்கும் விளைச்சலையும் சேர்த்தே குறிக்கிறது. விளைச்சலுக்குக் காரணமான இடி, மின்னல், மழை அருளும் இந்திரனை மருத நிலத்தவர் தொடக்கத்தில் தமது குல முன்னோராகவும், பின்னர் குல தெய்வமாகவும்  போற்றினர். விளைச்சலும், போகமும் ஒரே பொருளில் புரிந்து கொள்ளப்பட்டதால் போகத்துக்கு [இரு போகம், முப்போகம்,] காரணமான இந்திரன் போகி என்று அழைக்கப்பட்டான். பின்னர் வானவியல் வளர்ந்த காலத்தில் ஆதவனின் நகர்வும் வெயிலின் அருமையும், தாவரத்தின் பயனுக்கு கதிரவனின் பங்களிப்பும் உணரப்பட்டது.

 போகி கொண்டாட்டம் -தூய்மைத் திருநாள்

மகர சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரனுக்காக போகி கொண்டாடப்பட்டது. போகியை Bhogi Mantalu, Bhogi Pallu, Bhogi Pandlu, Lord Indra Puja என்று பல பெயர்களில் அழைத்தனர். அந்நாள்  தூய்மைத் திருநாள் ஆகும். பழைய பொருட்கள் தீ வைத்து கொளுத்தப்படும். வீடு வெள்ளையடிக்கப்படும். மலர்களால் அலங்கரிக்கப்படும். வடக்கே, மஞ்சள் கேந்தி மலர்களால் தோரணங்கள் கட்டுவர். ஆந்திரா முதலான சில மாநிலங்களில், அன்று மஞ்சள் ஆடை உடுத்துவர். போகியின் திருநாள் என்பதால் ஆண்களும், பெண்களும் ஆடிப் பாடி கொண்டாடுவர். வட நாட்டில் போகி அன்று பங்கரா, டோலி போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்வர்.

தமிழகத்தில் போகி

தமிழ்நாட்டில், கிராமங்களில் வீடுகளை வெள்ளையடித்து சுவரோரங்களில் செம்மண், பட்டை பூசி பச்சரிசி மாவால் கோலம் போடுவர். மார்கழி மாதம் முழுவதும் வாசலில் கோலம் போட்டு அதன் நடுவில் மஞ்சள் நிற பூசணி மலரை சாணி உருண்டையின் மீது வைப்பர். பொங்கலன்று புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, பானையை அடுப்பில் ஏற்றுவர். மஞ்சள் நிறம், போகியான இந்திரனுக்குரியது. இன்றைக்கு இந்திரனை தமிழ்நாடு மறந்துவிட்டாலும், அவனுக் குரிய வழிபாடும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மழைக்கடவுளுக்கான இந்திரனுக்குரியஇவ்வழிபாட்டு மரபுகளை வேளாண் குடியினரால் ஆராய்ச்சியாளர்களும்  இனி மீட்டுருவாக்கம் செய்து சடங்குகளின் உண்மைத் தன்மையை ஊரறியச் செய்ய வேண்டும். தமிழ்நாடு, ஆதவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தைப்பொங்கலை செந்நெல்லும் கன்னலும் வைத்துக் கொண்டாடி மகிழ்கிறது.

இந்திரனும் மாட்டுப் பொங்கலும்தைப் பொங்கல், இடி மழைக் கடவுளான  இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் மரபுகளைப் பின்பற்றிக் கொண்டாடுவதுபோல, அதன் அடுத்த நாளான மாட்டுப் பொங்கலும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே ஆகும். ஏனெனில், வேளாண் பணிகளில் உழவனோடு நின்று உழைக்கும் காளை மாடுகளை இப்பூமிக்குத் தந்தவன் இந்திரன் என்பது ஒரு நம்பிக்கை. இதற்கான தொன்மங்கள் வேளாண் குடியினரின் நாட்டுப்புற மரபில் ஏராளமாக உள்ளன.

இந்திரன் நெல் விதை, காளை மாடு, கலப்பை, தென்னை, சாவி ஆகியவற்றை மருத நிலத்து மனிதருக்குக் கொடுத்து நெல் வேளாண்மையைப் பூவுலகில் அறிமுகம் செய்தான். இதனை சங்கரன் கோவிலின் கோபுரத்தின் உட்புறச் சுவரில் உள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது.இந்திரன், ஏருழவனுக்கு வழங்கிய காளை மாடும் கலப்பையும் நிலத்தைப் பண்படுத்த உதவிற்று. நெல் விளைந்ததும் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை இழுக்க உதவிற்று. ஏருழவன் வெளியூர் சென்று நெல்லை விற்கவும் வைக்கோல் போர் கொண்டு செல்லவும் வண்டி இழுக்க இக்காளை மாடுகள் உதவின. வேளாண் பணிகள் முடிந்ததும் இக்காளை மாடுகளுக்கு ஒருநாள் பொங்கல் வைத்து நன்றி செலுத்தி, ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு என்று காளையுடன் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டான். நெல் விதை, கலப்பை, காளை மாட்டையும் வழங்கிய தன் குல தெய்வமான இந்திரனுக்கு உழவன் நன்றி செலுத்தினான்.

அறுவடைத் திருவிழாவும்ஆதவனின் நகர்வும்

அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் மாதம் நாட்டுக்கு  நாடு மாறுபடுகிறது.  மேலை நாடுகளில் மக்கள்  [சுவீச்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி] நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் சில இடங்களில் ஆகஸ்ட் மாதங்களிலும் கொண்டாடுகின்றனர். ஆதவன் தெற்கே திரும்பும் தட்சிணாயனம் தொடங்கும் காலத்திலும் [ஆடி - ஆவணி] சில நாடுகளில் [இங்கிலாந்து

இந்தியாவில் சத்தீஸ்கர் மற்றும் கேரளா] ஆதவன் வடக்கே திசை மாறும் உத்தராயண காலத்திலும் [மார்கழி - தை] கொண்டாடுகின்றனர். அதாவது ஆகஸ்ட் மாதத்தை ஒட்டியும் நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் பெரும்பாலும் கொண்டாடுகின்றனர்.

வட இந்தியாவில் அறுவடைத் திருவிழா

வட இந்தியாவில், கோடை விதைப்பு கரீப் பருவம் எனப்படும். இதில் நெல், சோளம், பருத்தி, துவரை போன்ற வெயில் காலப்பயிர்களை விதைப்பர். அது முடிந்ததும் மழைக்கால விதைப்புத் தொடங்கும். இதனை ரபி பருவம் என்பர். இதில் கோதுமை, பார்லி, கடுகு போன்றவற்றை விதைப்பர். இதற்கிடையே, ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலத்தில் காய்கறிகளையும் மாட்டுத் தீவனத்துக்கான தீவனப்புல் போன்றவற்றையும் விதைப்பார்.

வட இந்தியாவில், அறுவடைத் திருவிழா பஞ்சாபில் லோஹ்ரி என்றும், அஸ்ஸாமில் பிஹு என்றும், மேகாலயா மற்றும் மிசோராமில் வங்காலா என்ற பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது. இங்கு மார்கழி, தை மாதங்களில் மகர சங்கராந்தியுடன் இணைத்து கொண்டாடப்படும். இந்த அறுவடைத் திருவிழாவின்போது [bon fire] குளிருக்குக் கதகதப்பாக நெருப்பு வளர்த்து அதைச்சுற்றிப் பெண்களும், ஆண்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் டோலி மற்றும் பாங்கரா எனப்படும் நடனங்களை ஆடிக்கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்விழா, குளிர்காலத்தின் அறுவடையை அடுத்து நடைபெறுகிறது. பாங்கரா நடனத்தின் அசைவுகள்; மாடுகளின் அசைவு, அவற்றை வண்டியில் பூட்டி  ஓட்டுதல் மற்றும் வேளாண்மை செயல்பாடுகளின் ‘போலச் செய்தல் சடங்கு முறையில்’ [Imitative ritual] அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டில் பொங்கல் நாட்கள், கரி நாள் - ஏன்?

தெற்கே, ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் விழாவில் குறிப்பாக, தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில், பொங்கல் என்ற பெயரில் மூன்று நாட்கள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் நாள் தைப்பொங்கல், மறு நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல். இந்த மூன்று நாட்களும் கரிநாள் என்பதால் தனி நபர் வீடுகளில் கல்யாணம், காதுகுத்து போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.

சமூகவியல் அறிஞர்கள் “சமூகம்” என்ற கூட்டு வாழ்க்கையையும் விழாக்களையும்  ஆராய்ந்து செயற்பாட்டியல் கோட்பாடு [theory of functionalism] என்ற கொள்கையை உருவாக்கினர். அதன்படி,  சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவ்விழாக்கள், அறிவிக்கப்பட்டவுடன் காப்பு கட்டி விடுவர். ஏனெனில் விழாக்கள் நடைபெறும் நாட்களில் ஊர் மக்கள் தம் ஊரை விட்டு வெளியே செல்வதோ, வீட்டில் விசேஷங்கள் நடத்தி தமது சொந்த வேலைகளைக் கவனிப்பதோ ஆகாது.

வெளியூரில் இருந்து விருந்தினர் வந்து தங்கி இருந்து போவதையும் ஊர் அனுமதிக்காது. இதன் நோக்கம் சமுதாயத்தினர் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆகும்’ இதன் அடிப்படையில் தான் பொங்கலிலிருந்து மூன்று நாட்கள் கரி நாள் என்பதும், சில இடங்களில் ஐந்து நாட்கள் கரி நாள் என்று நம்புவதும் ஆகும். இதனால், ஊர் மக்கள் ஒன்றுகூடி வேறு சிந்தனையின்றி பொங்கலையும் மாட்டுப் பொங்கலையும் [மஞ்சு விரட்டு. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் போன்றவற்றையும்] கொண்டாடுவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பர்.

வேளாண்மையில் முதல் வழிபாடு இந்திரனுக்கு

வேளாண் குடியினர் உலகெங்கும் முதலில், இடி மழைக் கடவுளைத்தான் வேளாண்மையுடன் தொடர்புபடுத்தி வணங்கி மகிழ்ந்தனர். கதிரவன் வழிபாடு இருள் தந்த அச்சத்தைப் போக்கிய ஒளி தரும் இறைவன் வழிபாடாக மட்டுமே உணரப் பட்டது. ஆரம்பத்தில், கதிரவனை மக்கள் வேளாண்மையுடன் தொடர்புபடுத்தவில்லை. இந்திரனே கிழக்குத்திசைக்கும் உரியவனாக இருந்தான். வேதங்கள், மேகங்கள் இந்திரனுக்கு உரியவை. அவை தெய்வீகப் பசுக்கள்; அவை கறக்கும் பால் அமுதமென்னும் மழையாகி பூமித்தாயின் பசியைத் தீர்த்தது என்று போற்றின. இவன், தண்ணீரை அருவியாகக் கொட்ட விடுவான், நதியாக பெருக்கெடுத்து ஓட விடுவான் என்ற நம்பிக்கை இருந்ததால் வேத காலம் தொட்டு இந்தியாவில் இந்திரனே வேளாண்மைக்குரிய கடவுளாக வணங்கப்பட்டான்.

மேலை நாடுகளில், கிரேக்கத்தில் ஜீயஸ் எனப்படும் மழைக் கடவுள் ஆண்களின் தலைவனாக தேவர்களின் தலைவனாகப் [Lord of gods and men] போற்றப்பட்டான். எகிப்தில் சேத், உரோம் நாட்டில் ஜூபிடர், நோர்ஸ் தொன்மங்களில் தோர், சீனாவில் தியான்மு, புத்த சமயத்தில் வஜ்ரபாணி [இந்திரன்] என்று மழைக்குரிய கடவுளே  காலநிலைக்குரிய கடவுளாகவும் வணங்கப்பட்டனர். இக்காலநிலைக்குரிய கடவுளே [god of weather] வேளாண்மையின் முழுப்பலனை அளிக்கும் வல்லமை படைத்தவர்களாக நம்பப் பட்டனர். பிற்காலத்தில், பெண் தெய்வங்கள் வேளாண்மை மற்றும் குழந்தை நலத்துக்குரிய கடவுளாகக் கருதப்பட்டனர். அகிலமெங்கும் அறுவடைத் திருவிழாவில் இடி, மின்னல் மழைக்குரிய தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் தன் வேளாண்மையின் முதல் பலனை தானியமாகவோ, கனியாகவோ வழங்கிக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: