×

கருங்கல்லில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் பேரிகை சிவன் கோயிலில் 700 ஆண்டுக்கு முந்தைய பார்வதி சிலை கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் உள்ள சிவன் கோயிலில் 700 ஆண்டுக்கு முற்பட்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பார்வதி சிலை உள்ளது தெரிய வந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகையில் பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 700 ஆண்டுக்கு முற்பட்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பார்வதி சிலை உள்ளது. இந்த சிலை குறித்து ஆய்வு செய்த, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ஒய்சாளர்கள் மாக்கல்லில் மிக நுட்பமான வேலைப்பாடுடன் அமைந்த சிற்பங்களை, பேலூர் அளபேடு போன்ற கோயில்களில் வடித்த அதே காலத்தில், தமிழகத்தில் பிற்கால சோழர்களும், பாண்டியர்களும் கருங்கல் சிற்பங்களை தங்கள் கோயில்களில் வடித்து வைத்துள்ளனர்.  இவ்விரு பாணிகளையும் உள்வாங்கியே, விஜயநகர மன்னர்கள் உருவாக்கிக் கொண்டனர். அதாவது, கருங்கல்லில் மாக்கல்லைப் போன்று நுட்பமான வேலையை காட்டுவதே அவர்கள் பாணி. விஜயநகரர்கள் இந்த பாணியை தொடங்குவதற்கு முன்பே, ஒய்சாளர்களுக்குக் கீழ் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதியை ஆண்ட பூர்வாதராயர்கள் தொடங்கி விட்டனர். அதற்கு உதாரணமாக மிக அழகிய சிற்ப வேலைப்பாடுளுடன் கூடிய, பார்வதி சிலை பேரிகை சிவன் கோயிலில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.பேரிகை கைலாசநாதர் கோயிலில் உள்ள பார்வதியின் சிலையானது, 700 ஆண்டுக்கு முந்தையது. கருப்பு நிறத்திலான கருங்கல்லில் 4.5 அடி உயரம் கொண்டதாக செய்யப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பழமையான கோயில்கள் எல்லாம் இடிந்து போய் அங்குள்ள சிலைகள் காணாமல் போயும், கர்ப்பக் கிரகத்தின் கீழ் பகுதி புதையலுக்காக தோண்டப்படும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதன் பின்னர் ஊர் மக்களால் சில கோயில்கள் சரி செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது. ஆனால், இந்த கோயிலின் எந்த பகுதியும் சேதப்படுத்தப்படவில்லை. பார்வதி சன்னதி மட்டும் மரம் வளர்ந்து இடிந்ததால், இடைக்காலத்தில் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலத்தில் செய்யப்பட்ட அதே சிலை இன்னும் அப்படியே பாதுகாப்பாக இருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே இன்னும் வழிபாட்டில் உள்ள பழமையான லிங்கமும், பார்வதி சிலையும் இங்குதான் உள்ளது. இக்கோயிலின் 700 ஆண்டுக்கு முந்தைய பெயர் திருவத்தீஸ்வரமுடைய நாயனார் என்பதாகும். பார்வதி சிலைக்கு பின் உள்ள பிரபாவளி என்ற பகுதியும், அதே கருங்கல்லால் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் காணப்படுகின்றன. முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள்ளன. பின் கைகளின் பாச அங்குசங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு ஒரு தேரில் உள்ள மரச் சிற்பம் போன்று நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார். இந்த ஆய்வுப் பணியில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, பேரிகையைச் சேர்ந்த ஆசிரியர் சன்னை பல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர்….

The post கருங்கல்லில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் பேரிகை சிவன் கோயிலில் 700 ஆண்டுக்கு முந்தைய பார்வதி சிலை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Parvati ,Parikai Shiva temple ,Barikai Shiva temple ,Krishnagiri district ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...