ஷீரடி சாயி பாபாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்

அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஒரு பெருங்கடல் போன்று சாயி பாபாவின் வரலாறு உள்ளது. அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலை மதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம். நல்லுணர்வில் ஊறிக்கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம். சாயி பாபாவின் அறிவுரைகள் மிகவும் அற்புதமானவை. இவ்வுலக வாழ்வின் துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும், அறிவூட்டுவதுமான சாயி பாபாவின் இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் பிரம்மத்துடன் ஐக்கியமாதல் அஷ்டாங்க யோகம், தியானப் பேரின்பம் முதலியவற்றை பெறுவார்.

ஒரு சமயம் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் சீரடி சாய்பாபா படத்தை தன் சட்டை பாக்கெட்டிலேயே வைத்திருப்பார். தன் பாக்கெட்டில் இருந்த பாபா படத்தை எடுத்து, “பாபா.. ஆபத்தில் இருக்கிறோம். இந்த ஆபத்தில் இருந்த எங்களை காப்பாற்றுங்கள் பாபா.“ என்று கண்ணீருடன் வணங்கினார். அப்போது உடன் இருந்த வெளிநாட்டு நண்பர் ஒருவர், “ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் நடுகடல் எல்லையில் இருக்கும் நம்மை, எங்கோ ஷீரடி கிராமத்தில் இருக்கும் பாபா காப்பாற்றுவார் என்று எப்படி நம்புகிறாய்.?“ என்றார்.

“ஒரு சிவபக்தை எங்கள் ஊரில் இருந்தாள். அவளின் மகள் நிறைமாத கற்பிணி பெண். ஒருநாள் பிரசவ வலியால் அவள் துடித்து அழுத போது, அவளின் தாய் அவள் அருகில் இல்லை. இதனால் அந்த பெண்ணின் ஊரில் இருக்கும் சிவபெருமான் அந்த பெண்ணின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சென்றார். அதனால் அவரை நாங்கள் “தாயுமானவர்.“ என்று அழைக்கிறோம். ஒரு குழந்தைக்கு வேதனை என்றால் அதன் தாய்க்கும் அந்த வேதனை அல்லவா. அதுபோல் ஒரு பக்தனுக்கு துன்பம் என்றால் அவனின் இஷ்ட தெய்வத்திற்கும் அந்த கஷ்டம் உண்டு. அதனால் நம்மை காப்பாற்றும் ஒரே தெய்வம் நம் இஷ்ட தெய்வமாகதான் இருக்கும். நம்பிக்கை இருக்கிறது. என் சாய்பாபா நம்மை காப்பாற்றுவார்.“ என்றார் கேப்டன். அதே சமயம் ஷீரடியில் – “ஓ…“ என்று கூச்சல் இட்டார் சாய்பாபா. பாபாவை தரிசிக்க வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடத்தில் பாபாவின் மீது தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. எப்படி – எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது.? என்று அதிசயித்தார்கள் பக்தர்கள்.

அங்கிருந்த பலர், அந்த தணணீரை ருசி பார்த்து, “இது கடல் நீர்.“ என்றனர். கடல் நீர் பக்தர்களின் கால் பாதம் அளவு நிரம்பியது. உடன் இருந்த ஷாமா, பாபாவின் உடலை துணியால் துடைத்துக்கொண்டு இருந்தார். இப்படியே மூன்று நாட்கள் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருந்தது. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பினார்கள் பக்தர்கள். அதை பாபாவிடம் கேட்கவும் தயக்கம். மூன்றாம் நாள், வெளிநாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்து உள்ளது என்று பாபாவிடம் ஷாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். அதை வாங்கிய பாபா, தன் அருகில் இருப்பவரிடம் கடிதத்தை கொடுத்து படி என்றார். அது கப்பல் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதிய கடிதம். சாய்பாபாவை நலம் விசாரித்துவிட்டு, “பாபா புயல் காற்றால் பல கப்பல்கள் கடலில் முழ்கியது. கடலில் எங்கள் கப்பலும் முழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. என் வாழ்நாளின் கடைசியாக உங்களை பிராத்தனை செய்யலாம் என உங்கள் படத்தை வைத்து பிராத்தனை செய்தேன்.

அற்புதம் நடந்தது பாபா… எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கள் கப்பல் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தது. எல்லாம் உங்கள் கருனைதான். உங்கள் மகிமை எனக்கு தெரியும் பாபா.“ என்று கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதி இருந்தார். பிறகுதான் பாபாவுடன் இருந்த பக்தர்களுக்கு புரிந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலை காப்பாற்றவே பாபா போராடினார். பாபா வசிக்கும் இடத்தை கடல் நீர் கொஞ்சம் சூழ்ந்ததற்கும் அவர் உடலை கடல் நீர் நனைத்ததற்கு காரணம் இதுதான். மனிதர்கள் ஸ்ரீசாய்பாபாவின் மகிமையை சொன்னால் அது பக்தி நிலை. ஆனால் விஷ்ணுபகவானே, “சாய்பாபாதான் உன் இன்னல்களை தீர்ப்பார்.“ என்றால், அதன் காரணம் ஸ்ரீசாய்பாபா இறைவனின் ஓர் அம்சம். இறைவனின் மகத்துவங்களின் ஒரு வடிவம்தான் ஷீரடிசாய்பாபா என்பதே உண்மை.

Related Stories: