×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை -
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
{398-வது திருநாமம் ‘விரதோ மார்க:’ என்றும் ‘விரஜோ மார்க:’ என்றும் இருவிதமாக ஓதப்படுகிறது. இரண்டுமே ஆழ்ந்த பொருள் கொண்டு இருப்பதால், உரையாசிரியரான பராசர பட்டர் இரண்டு விதமான பாடங்களையும் ஏற்று இந்த ஒரு திருநாமத்துக்கு இரு விதமாக விளக்கவுரை அருளியுள்ளார். அதன் அடிப்படையில், ‘விரதோ மார்க:’ என்ற முதல் பாடத்தின் அடிப்படையில் இத்திருநாம விளக்கத்தை இப்போது காண்போம். அடுத்த கட்டுரையில், ‘விரஜோ மார்க:’ என்ற பாடத்தின் அடிப்படையில் திருநாம விளக்கத்தைக் காண்போம்.}

398 (அ). விரதாய மார்காய நமஹ:
(Virathaaya Maargaaya namaha)
ராமனுக்கு மன்னன்முடி சூட்டப்போகிறார்கள் என்று அயோத்தி நகரமே குதூகலித்திருக்க, பட்டாபிஷேகத்தன்று காலை ராமனைத் தனது அரண்மனைக்கு வரவழைத்தாள் கைகேயி. ராமனைப் பார்த்து, “உன் தந்தை இரண்டு வரங்கள் எனக்கு அளித்துள்ளார். அவற்றை நீ நிறைவேற்ற வேண்டும்!” என்று தொடங்கி,
“ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன்!”

என்று ராமனுக்குக் கட்டளை இட்டாள் கைகேயி. “கடல்சூழ்ந்த இந்த நிலவுலகம் முழுவதும் பரதன் ஒருவனே ஆள வேண்டும். நீ ஜடாமுடி தரித்துக்கொண்டு காட்டில் தவம் புரிந்து, புண்ணிய தீர்த்தங்களிலே நீராடிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பலாம். இது மன்னருடைய கட்டளை!” என்றாள் கைகேயி.
நேற்று இரவு வரை எனக்குப் பட்டாபிஷேகம் என்று சொல்லப்பட்டது, இப்போது திடீரென எனக்கு வனவாசமா என்று ராமன் வருத்தம் கொள்ளவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகேயியைப் பார்த்து,“மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ? என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?”
“தாயே! இதை மன்னர்தான் சொல்ல வேண்டுமா? நீங்கள் சொன்னாலே அடியேன் அதை அடிபணிந்து நடக்க மாட்டேனோ?  என் தம்பி முடிசூடினால், அடியேன் சூடியதாகவே அதைக் கருதுகிறேன்!” என்று சொல்லிக் காட்டுக்குப் புறப்படுகிறான்.

அப்போது ராமனின் முகம் எப்படி இருந்தது?
“அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா!”
என்கிறார் கம்பர். இதற்கு வால்மீகியும் அழகான ஓர் உவமை கூறுகிறார்.
“ந சாஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்யநாச:
அபகர்ஷதி
லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீதரச்மே:
இவ க்ஷபா”

உனக்கு ராஜ்ஜியம் கிடையாது என்று கைகேயி சொன்னபோதும் கூட, ராமன் முகத்தில் இருந்த பொலிவோ அழகோ அணுவளவும் குறையவில்லை. உலகுக்கெல்லாம் குளிர்ச்சியும் ஒளியும் தரும் சந்திரனின் ஒளியை இருளால் மறைக்க முடியுமா? அதுபோலத்தான் ஆயிரம் துயரங்கள் வந்தாலும், ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றில் ஆசை இல்லாத ராமனின் அழகைக் குலைக்க முடியாது என்கிறார் வால்மீகி. ஆசை இல்லா மனிதர் தம்மைத் துன்பம் எங்கே நெருங்கும்?

இப்படி உலகியல் விஷயங்களில் விருப்பமோ நாட்டமோ கொள்ளாதவனாக ராமன் திகழ்ந்தபடியால், ‘விரத:’ என்று அழைக்கப்படுகிறான். ‘விரத:’ என்றால் பற்றில்லாதவர் என்று பொருள். அத்துடன் ‘மார்க:’ என்ற பதமும் சேர்ந்து ‘விரதோ மார்க:’ என்று இத்திருநாமம் வருகிறதே! ‘மார்க:’ என்றால் என்ன? ‘மார்க:’ என்றால் (இவ்விடத்தில்) விரும்பப்படுபவர் என்று பொருள். பரத்வாஜர், விசுவாமித்ரர் போன்ற பற்றில்லாத முனிவர்களால் விரும்பப்படுகிறான் ராமன். அதனால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்றார் வள்ளுவர். அந்த வகையில்,
பற்றில்லாத முனிவர்கள் ராமனின் திருவடி

களைப் பற்றிக் கொண்டு உய்வடைகிறார்கள். அத்தகைய பக்தர்களிடம் ராமனும் பற்று வைக்கிறான். உலகியல் செல்வங்களில் தான் அவன் பற்றில்லாமல் இருக்கிறானே ஒழிய, அடியார்கள் மேல் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருக்கிறான் அந்த ஸ்ரீராமன்.அதனால்தான் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான். ‘விரத:’ என்றால் உலகியல் விஷயங்களில் ஆசையற்றவர், ‘மார்க:’ என்றால் முனிவர்களாலும் விரும்பப் படுபவர். உலகியல் பற்றற்றவனாகவும், முனிவர்களால் வணங்கப்படுபவனாகவும் விளங்கும் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 398-வது திருநாமம்.“விரதாய மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தாழ்ந்த விஷயங்களில் உள்ள பற்று நீங்கி, இறைவனிடத்தில் பேரன்பு உண்டாகும்படி ஸ்ரீராமன் அருள்புரிவான்.

399 (ஆ). விரஜாய மார்காய நமஹ:
(Virajaaya Maargaaya namaha)
பஞ்சவடி பர்ணசாலையில் சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு வந்த ராமனும் லட்சுமணனும், வழியில் ஒரு கழுகு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்கள். “சீதையை உண்டுவிட்டு யாரோ அரக்கன் படுத்திருக்கிறான் போலும்!” என்று
சொல்லிக் கொண்டே அந்தக் கழுகை நோக்கி வேகமாகச் சென்றான் ராமன்.
அந்தக் கழுகு ராமனைப் பார்த்து,
“யாம் ஓஷதிம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்”

“ராமா! நீ நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும்! நீ இக்காட்டில் எந்த சீதையைத் தேடிக் கொண்டு வருகிறாயோ, அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்று விட்டான்!” என்று சொன்னது. அருகில் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அக்கழுகு ஜடாயு என்பதை ராமனும் லட்சுமணனும் உணர்ந்து கொண்டார்கள்.
மேலும் ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா! சீதையை அபகரித்துச் சென்ற ராவணனைத் தடுத்து அவனோடு போரிட்டேன். அவன் தனது வாளால் எனது சிறகு களை வெட்டிவிட்டான்! தன்னை அபகரித்துச் சென்றவன் ராவணன் என்பதை உனக்கு எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று சீதை கெஞ்சினாள். எனவே அந்தச் செய்தியை உன்னிடம் சொல்வதற்காகவே உயிரை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்!” என்று சொன்னார்.ராமனின் கண்கள் குளமாயின.

நெஞ்சில் துன்பச் சுமை ஏறியது. ஜடாயு மேல் விழுந்தான் ராமன்.
“தம் தாதையரைத் தனயர் கொலை செய்தார்
முந்தாரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன்
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அருங்கூற்றம் ஆனேனே”

“நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்துவிட்டார்.
 காட்டில் ஒரு தந்தை எனக்கு உதவி செய்யப்போய்
இறக்கப் போகிறாரே! நாட்டில் ஒரு
தந்தையும் காட்டில் ஒரு தந்தையும் மரணம் அடைய இந்த மகன் காரணமாகி
விட்டேனே!” என்று புலம்பினான் ராமன்.

ஜடாயு, “ராமா! நீ துயரத்தையும் கோபத்தையும் விட்டு, அடுத்து நடக்க வேண்டியதைப் பார். சீதையை மீட்டு அவளது துயரத்தைத் தீர்த்து, ராவணனை வதம் செய்து தேவ காரியத்தை நிறைவேற்று! நீ நீடூழி வாழ்க!” என்றார். ராமன், “ராவணன் சீதையோடு எங்கே போனான்?” என்று கேட்டான். மிகுந்த தளர்ச்சியால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வருந்தினார் ஜடாயு. அந்த வருத்தத்தோடே ஜடாயுவின் உயிர் பிரிந்தது.
அப்போது ராமன் ஜடாயுவைப் பார்த்து,
“யா கதிர் யஜ்ஞசீலானாம் ஆஹிதாக்னேச்ச யா கதி:

அபராவர்த்தினாம் யா ச யா ச பூமிப்ரதாயினாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்
க்ருத்ர ராஜ மஹாஸத்த்வம் ஸம்ஸ்க்ரு
தச்ச மயா வ்ரஜ”

“வேள்வி செய்பவர்கள், தவம் புரிபவர்கள், துறவிகள், தானம் செய்பவர்கள் உள்ளிட்ட சான்றோர்கள் எல்லோரும் பெறுகின்ற மிக உயர்ந்த இலக்காகிய வைகுண்டத்தை நீங்கள் அடைவீர்கள். நான் ஆணையிடுகிறேன். எனது ஆணைப்படி வைகுண்டத்தை நோக்கிய பாதையான அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணித்து நீங்கள் முக்தி அடைவீராக!” என்றான். அவ்வாறே ஜடாயுவின் ஆத்மாவும் அர்ச்சிராதி மார்க்கத்திலே பயணித்து வைகுண்ட லோகத்தை அடைந்தது.

இப்படி முக்தியை நோக்கிய தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுவதால், ராமன் ‘விரஜோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மார்க:’ என்றால் பாதை. ‘விரஜ:’ என்றால் மாசில்லாத, தூய என்று பொருள். ‘விரஜோ மார்க:’ என்றால் தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.“விரஜோ மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச்சிறந்த பாதையை ஸ்ரீராமன் காட்டியருள்வான்.

400. நயாய நமஹ: (Nayaaya namaha)
ஆரண்ய காண்டத்தின் முதல் சர்க்கம் சீதையோடும் லட்சுமணனோடும் தண்ட
காரண்யம் என்னும் காட்டுக்குள்ளே ராமன் நுழைந்த விதத்தை வர்ணிக்கிறது.
“ப்ரவிச்ய து மஹாரண்யம் தண்டகாரண்யம் ஆத்மவான்
ததர்ச ராமோ துர்தர்ஷஸ் தாபஸாச்ரம மண்டலம்”
என்கிறார் வால்மீகி.

அந்த தண்டகாரண்யத்தில் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் புற்கள், மரவுரிகள் போன்றவை இருந்தன. வேத ஒலி அங்கே ஒலித்துக் கொண்டே இருந்தது. துஷ்ட மிருகங்கள் கூட பரஸ்பரம் துவேஷம் காட்டாமல் ஒற்றுமையாக அங்கே வாழ்ந்துவந்தன. முனிவர்கள் உண்ணும் காய் கிழங்குகளையும், இனிய பழங்களையும் கொடுக்கும் பற்பல மரங்கள் அங்கே இருந்தன.
அங்கு வாழ்ந்துவந்த முனிவர்கள் யாவரும் ராமனின் அவதார ரகசியத்தை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் ராமன் வந்திருப்பதை அறிந்து, ராமன் சீதை லட்சுமணன் ஆகிய மூவரையும் எதிர்கொண்டு அழைத்து வரவேற்றார்கள். அப்போது ராமனின் திருமேனி அழகினாலே அத்தனை முனிவர்களும் ஈர்க்கப்பட்டு, வைத்த கண் வாங்காமல் ராமனையே பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். அதை வால்மீகி,

“ரூபஸம்ஹனனம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸுவேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:”
என்கிறார். இதில் முனிவர்களை ஈர்த்த ராமனின் அழகைப் பல கோணங்களில்
வர்ணித்துக் காட்டியுள்ளார் வால்மீகி பகவான்.

*ரூப ஸம்ஹனனம் - ராமனுக்கு அருகில் வந்து, அவனது ஒவ்வோர் அவயவமாகப் பார்த்தால், திருமேனியின் ஒவ்வோர் அங்கமும் முழுமையான அழகோடு
விளங்கும் தன்மை.
*லக்ஷ்மீம் - தூரத்தில் இருந்து ராமனைத் தரிசித்தால், மொத்த திருமேனியும் அழகு நிறைந்து திகழும் தன்மை.
*ஸௌகுமார்யம் - மென்மை.
*ஸுவேஷதாம் - ராமன் நாட்டில் இருந்தவரை பற்பல ஆபரணங்களாலே அவனது திருமேனி அழகு மறைக்கப்பட்டு விட்டது. இப்போது அந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெறும் மரவுரியோடு ராமன் காட்டுக்கு வந்ததால், அவனது திருமேனி அழகு இப்போதுதான் நன்றாகப் பிரகாசிக்கிறது.
*தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:- பற்றுகளைத் துறந்த முனிவர்களே ராமனின் இத்தகைய அழகில் மயங்கி,
ஈடுபட்டு, ராமன் மீது யாருடைய கண் எச்சிலும் படக்கூடாதே என்று பல்லாண்டு பாடத் தொடங்கினார்கள்.

அதன்பின், ராமன், சீதை, லட்சுமணனைத் தங்களது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று இளைப்பாறச் செய்த முனிவர்கள், ராமனிடம் தங்களது பிரார்த்தனையை முன்வைத்தார்கள். “ராமா! நீ தர்மத்தைக் காப்பவன்! துன்பப்படும் முனிவர்களுக்கு ஒரே புகலிடம்! எங்களுக்கு வணங்கத்தக்க தெய்வமும் நீயே! போற்றத்தக்க மன்னனும் நீயே! உனது அடியார்களான எங்களை இந்த தண்டகாரண்யத்தில் வாழும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நீயே காத்தருள வேண்டும்!” என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள். (குறிப்பு: சரபங்க ஆசிரமத்தில் இருந்து ராமன் புறப்படும்போது ராமனிடம் சரணாகதி செய்த முனிவர்கள் வேறு. ராமன் முதன்முதலில் தண்டகாரண்யத்துள் நுழையும் போது சரணாகதி செய்த முனிவர்கள் வேறு.)
“ரக்ஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்யபூதாஸ் தபோதனா:”

“உங்களது தவ வலிமையால் நீங்களே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொல்லி விடாதே ராமா! நாங்கள் புலன்களை அடக்கிக் கடுந்தவம் புரிபவர்கள்! தவக்கேடு நேராமல் இருக்கக் கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பவர்கள்! எனவே நாங்கள் அரக்கர்களுக்குச் சாபம் கொடுப்பதில்லை. நீதான் எங்களைக் காத்தருள வேண்டும்!” என்றும் அவர்கள்
வேண்டினார்கள்.“அஞ்ச வேண்டாம்! அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன்!” என்று அவர்களுக்கு உறுதி அளித்தான் ராமன். “வேறு ஏதாவது பிராத்தனை உள்ளதா?” என்று ராமன் கேட்க, “உன்னை ஆரத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம்!” என்றார்கள் முனிவர்கள்.

“இப்போது உங்களை நான் தழுவிக் கொள்வது பொருத்தமாக இருக்காது. அடியார்களோடு ஒருநீராகக் கலந்து பரிமாறவே அடுத்து கண்ணனாக நான் அவதரிக்கப் போகிறேன். நீங்கள் அத்தனை பேரும் ஆயர்பாடியில் ஆயர்குலப் பெண்களாக வந்து பிறப்பீர்களாக! நான் கண்ணனாக வந்து உங்களைத் தழுவிக்கொள்கிறேன்!” என்று அவர்களிடம்  சொன்னான் ராமன்.

உலகப் பற்றுகளை எல்லாம் விட்ட முனிவர்களுக்குக் கூட ராமனின் அழகைக் காணும் போது அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும் என்கிற அவா வருகிறதல்லவா? ‘நய:’ என்றால் தன்பால் இழுத்துக் கொள்பவர் என்று பொருள். தனது அழகாலும் குணங்களாலும் முனிவர்கள் உட்பட அத்தனை மக்களின் மனங்களையும் தன்னிடம் ஈர்த்துக் கொள்வதால், ராமன் ‘நய:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 400-வது திருநாமம்.“நயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீராமன் தன்பால் ஈர்த்துக்கொள்வான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!