×

சிதம்பரத்தில் ஆருத்ரா

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிக உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி, நடராஜப்பெருமானுக்கு மிகச் சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு
‘‘திருவாதிரை திருவிழா” என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெரு மானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.

ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனி வரும் சிவபெருமானின் திருநடனத்தைக்  காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக்  காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் இது தவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.

திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது பெருமான் சூரிய பிரபை, சந்திரப் பிரபை, பூத வாகனம், ரிஷப வாகனம்,  கைலாச வாகனம் முதலிய வாகனங்களில் திருவீதி உலா வருவார். அதன்பிறகு பிட்சாடனர் வடிவத்தில் தங்கத்தேரில் வர  அதற்கு மறுநாள் தேர் உற்சவம் நடைபெறும்.

இந்த விழாவின்போது திருவாதிரைக்களிபடைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், 7 தான் கூட்டு என்று  பல்வேறு காய் கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி  என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும். அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். சிதம்பரத்தில் தேர் உற்சவம் 19.12.2021 காலை நடைபெறும்.

20.12.2021 திங்கள் அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை மகா அபிஷேகம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும். பிறகு பஞ்ச மூர்த்தி புறப்பாடும், பகல் 1.00 மணி அளவில் சித்சபை பிரவேசமாகிய ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.21.12.2021
அன்று முத்துப் பல்லக்கு திருக்காட்சி நடைபெறும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

விஷ்ணுபிரியா

லால்குடியில் ஆருத்ரா

சைவத் திருத்தலங்களான 274-ல் வற்றாத காவிரி நதி பாயும் சோழ நாட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ‘திருத்தவத்துறை’ என்றும் ‘லால்குடி’ என்றும் பண்ெடழுவர் தவத்துறை’ என்றும் அழைக்கப் பெறும் இத்தலம் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகும். இருப்பினும் “தவத்துறை வானவர் தாய் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்றமிழ் மாலை கொண்டேத்தி” என்று பெரிய புராணத்தில் குறிக்கப்படுவதால், திருஞான சம்பந்தர் பெருமானாலும் இங்குத் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. இந்த சைவ சமயக்குரவர்களின் காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு ஆகும். இத்திருக் கோயிலின் வரலாறு சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும்.

ஏழு முனிவர்கள், தவமியற்றி அருள் பாலிக்கப்பட்டதால் ‘ஏழுமுனிவர்க்கிறைவன்’ என்று தமிழிலும், ‘சப்தரிஷீஸ்வரர்’ என்று வட மொழியிலும் இத்தலத்து இறைவன் ‘திருநாமம்’ பெறுகிறார். தவமியற்றிய முனிவர்களை இறைவன் தாரகன் என்ற அசுரனிடமிருந்து தடுத்தாட் கொண்டபோது லிங்கரூபமாய் இருந்த திருமேனி இரண்டாகப் பிளந்து பெருஞ்ஜோதி
அங்குத் தோன்றியது. ஜோதியுடன் ஜக்கியமாகிய ஏழு முனிவர்களின் உருத்தடயங் களைப் பினைந்திருக்கும் லிங்கத்திரு மேனியில் காணலாம். மூல மூர்த்தியான இச்சிவலிங்கம் சுயம்பு வடிவமாகும்.

இத்தலத்தில் உறையும் அம்பிகை ‘அறம் வளர்த்த நித்ய கல்யாணி’ என்று தமிழிலும், ‘ஸ்ரீமதி’ என்று வடமொழியிலும்  அழைக்கப்படுகின்றாள்.மொகலாய மன்னவன் தென்னகம் வந்தபோது, தூரத்திலிருந்து கண்ணுக்குப் புலப்பட்ட சிவப்பு நிறக் கோயிலைப்பார்த்து ‘அதென்ன சிவப்பாகத் தெரிகிறது?’ என்று கேட்டானாம். உருது மொழியில் சிவப்பு என்பது ‘லால்’, ‘குடி’ என்று கோயில். அதனால், அது வோர் கோயில் என்றும், ‘லால்குடி’ என்று வழங்கலாயிற்று.

திருத்தவத்துறை, லால்குடி, சப்தரிஷீஸ்வரர் கோயில், பைரவிவனம் என்று பல பெயர்கள் கொண்ட சிவஸ்தலம் இது. திருச்சிக்குக் கிழக்கே 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விண்ணும், மண்ணும், நீரும், நெருப்பும், காற்றுமாய் எங்கும் நிறைந்த பரம்பொருளாய் ஜோதிவடிவாய் ஆனந்தம் தருவதாகும். எம்பெருமானைத் திருவாதிரைத் திருநாளில் போற்றித் துதிப்போம். திருச்சி-அரியலூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில், பேருந்து வசதி நிறைய உண்டு. இங்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது.

டி.எம்.ரத்னவேல்

Tags : Arutra ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...