×

ஸ்ரீ கயிலாசம் எனும் சிவாலயங்கள்

சிவபெருமான் உமையவளோடு உறையும் இடமாகத் திகழ்வது ஸ்ரீகயிலாசம் எனும் மேருவாகும். பொன்னாலாகிய அம்மேரு பிரபஞ்சப் பெருவெளியில் திகழ்வதாக சைவ நூல்கள் குறிக்கின்றன. ஊனக் கண்களால் பார்க்க இயலாதது அம்மாமேரு என்பதால் அதன் உருவகமாக வெள்ளிமலையாகத் திகழும் இமயத்தின் கயிலை மலையைப் போற்றுகின்றோம். அங்கும் எளிதில் செல்லுதல் இயலாததேயாகும். அதனால்தான் சிவபெருங்கோயில்களை ஸ்ரீகயிலாசமாகவே கட்டுவித்து அங்கு ஈசனை உமையவளோடு எழுந்தருளச்செய்து போற்றி வணங்குகின்றோம். உண்மையான பக்தி உணர்வோடு அத்தகைய திருக்கோயில்களை ஒருமுறை வலம் வந்து உறையும் ஈசனை வணங்கினாலேயே ஸ்ரீகயிலாசாம் சென்று வணங்கிய புண்ணியத்தை நாம் பெறுவோம். தமிழகத்தில் அவ்வாறு திகழும் ஸ்ரீகயிலாய கோயில்கள் சிலவற்றை இனிக் காண்போம்.

நகரங்களில் சிறந்தது காஞ்சி நகரே. ஸ்ரீகாஞ்சி என்பது முது மொழி. அத்தகைய காஞ்சி எனப்பெறும் காஞ்சிபுரத்தில் அந்தயந்தகாமன், சிவ சூடாமணி என்ற பட்டங்களைப் பெற்ற இரண்டாம் நரசிம்மன் என்றழைக்கப்பெற்ற இராஜ சிம்ம பல்லவன் (கி.பி.) ஸ்ரீகயிலாசம் எனப்பெறும் கயிலாசநாதர் ஆலயத்தை எடுப்பித்தான். நடுவில் திகழும் ஸ்ரீவிமானம் கயிலாய மேருவாகவே திகழ்கின்றது. கோபுரவாயிலை குறைவுடைய உயரத்தில் அமைத்து விமானத்தை மிக உயரமுடையதாக அமைப்பதே இவ்வகை ஆலயங்களின் லட்சணமாகும்.

திருச்சுற்று மாளிகைக்குப் பதிலாக ஏறத்தாழ அறுபது சிற்றாலயங்களை மணிகளைக் கோர்ப்பது போன்று கோர்வையாக கோர்த்து வரிசையாக அமைத்திருப்பது புதுமையானதாகும். நடுவே திகழும் ஸ்ரீவிமானம் நடுவில் கயிலாச நாதரின் கருவறையோடு ஒன்பது சிற்றாலயங்கள் சூழ அமைத்திருப்பதும் அற்புதமான காட்சியாகும். இவ்வாறு காஞ்சி கயிலாச நாதர் ஆலயம் தோற்றப்பொலிவால் சிவனுறையும் திருமலையாகவே விளங்குகின்றது. இதனைக் கண்ட இராஜராஜ சோழன் இவ்வாலயத்தை கச்சிப்பேட்டுப் பெரிய தளி எனக்
கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான்.

திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு ஏற்பட்ட சூலை நோயை நீக்கி அவருக்கு ஈசன் அருள்பாலித்த திருத்தலம் திருவதிகையாகும். அதிகை வீரட்டம் எனப் பெறும் இங்குள்ள சிவாலயம் நந்தி வர்ம பல்லவனால் ஸ்ரீகயிலாசமாகவே எடுக்கப் பெற்றதாகும். தோற்றப்பொலிவால் காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தை ஒத்த இத்திருக்கோயிலை இங்குள்ள கல்வெட்டுக்கள் ஸ்ரீகயிலாசம் என்றே குறிப்பிடுகின்றன. காஞ்சி புரத்து கயிலாசநாதர் ஆலயத்தின் பேரழகினை இங்கும் நாம் காணலாம்.

திருநாவுக்கரசர் கயிலையை நேரில் காண வடபுலம் நோக்கி தனியே சென்றார். கை கால்கள் தேய்ந்து ஊனம் அடைந்த நிலையிலும் தன் முயற்சியில் தளராது மேலும் மேலும் செல்ல முற்பட்டார். அப்போது அவர் முன்பு முனிபுங்கவர் தோற்றத்தில் வந்த ஈசன் அம்முயற்சி ஈடேறாது எனக் கூறிய போது ‘‘மாயும் இவ்வுடல் கொண்டு மீளேன்’’ எனக்கூறி மேலும் செல்ல முற்பட்டார். அப்போது அம் முனிபுங்கவர் தன் கையில் கொண்டு வந்த புனல் தடம் ஒன்றினை அப்பரிடம் அளித்து அப்பொய்கையில் மூழ்கச் சொன்னார். அப்போது நாவுக்கரசருக்கு ஒளி திகழ்மேனி ஏற்பட்டது. சிவன் கொடுத்த பொய்கையில் மூழ்கி யவர் எழுந்தபோது திருவையாற்று வாவி ஒன்றி னில் அவர் இருந்தார்.

குளத்திலிருந்து எழுந்து கோயிலை நோக்கி சென்ற போது இணை இணையாக விலங்குகளும் பறவைகளும் அவர் முன்பு சென்றன. அனைத்தையும் சக்தியும் சிவமுமாக கண்டவர் திருவையாற்று கோயிலை அடைந்தார். அப்போது அவருக்கு கோயிலே கயிலையாக காட்சி தந்தது. சிவனை தரிசித்தார். கயிலையில் உள்ள சிவகணங்கள், தெய்வங்கள், முனிபுங்கவர்கள் என அனைவரையும் அங்கு கண்டார். கயிலை தரிசனம் முடிந்து வெளி வந்தவர் தாம் போகும்போது கண்ட விலங்குகள் பறவைகள் ஆகியவற்றை வரிசைப்படுத்தி ‘‘மாதற் பிறைக்கண்ணியானை’’ என்ற பதினொரு பாடல்கள் உள்ள பதிகத்தினைப் பாடினார்.

அன்று அவருக்கு ஐயாற்றுக் கோயிலே கயிலையாகச் காட்சி தந்தது. அதனால் தான் திருவையாற்று ஐயாறப்பர் கோயிலை நாம் பெருங்கயிலையாகக் கொள்கிறோம். அதன் பெருமையை உணர்ந்த இராஜராஜ சோழனின் தேவி லோகமாதேவி ஐயாற்று மூல கயிலாசத்திற்கு வடபுறம் வடகயிலாயம் எனும் கோயிலைக் கட்டுவித்தாள். அதேபோன்று இராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவி தென்புறம் தென் கயிலாயம் என்ற மற்றொரு கோயிலை எடுப்பித்தாள். இன்று மூன்று கயிலாயங்கள் காட்சி நல்கும் திருக்கோயில் திருவையாற்றுப் பெருங்கோயிலே.
மாமன்னன் இராஜராஜ சோழன் வான் கயிலாயம் என்ற மகாமேருவை அப்படியே 216 அடி உயர கற்றளியாக எடுப்பித்தான்.

அது பொன்மலை என்பதால் தான் கட்டுவித்த அந்த கோயிலின் ஸ்ரீவிமானம் முழுவதையும் தங்கத் தகடுகளால் போர்த்தி பொற்கோயிலாகவே மாற்றினான். மாமேருவில் இருப்பது போன்றே மூர்த்திஸ்வரர்கள், வித்யேஸ்வரர்கள், இராஜராஜேஸ்வரர்கள், அட்டவசுக்கள், மருத்துக்கள், பன்னிரு ஆதித்தர், தசாயுத புருடர்கள் என அனைவரையும் ஸ்ரீவிமானத்தில் சிற்பங்களாக இடம்பெறச் செய்தான். விண்ணகத்து மகா மேருவை (ஸ்ரீகயிலாசத்தை) மண்ணகத்தில் இறக்கி வைத்துக் காட்டியவன் இவன் ஒருவனே.தஞ்சைப் பெருங்கோயில் போன்ற பெரியதொரு கயிலை பர்வதமாகக் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை இராஜேந்திர சோழன் எடுப்பித்தான். அவ்வாலயத்திலும் வடகயிலாயமும் தென் கயிலாயமும் இடம்பெற்றன.

தஞ்சையில் நாம் கண்டது போன்றே விண்ணகத்து கயிலையை மண்ணகத்தில் இறக்கி வைத்தவன் இரண்டாம் இராஜராஜ சோழன் என்பானாவான். இவன் தாராசுரத்தில் எடுப்பித்த சிவாலயத்தின் ஸ்ரீவிமானம் கயிலை பர்வதமாகவே விளங்குகின்றது. விமானத்தின் இரண்டாம் தளத்தில் தனித்த சிற்றாலயம் ஒன்றினை உருவாக்கி அதில் சிவன் உமையோடு இருக்கும் செப்புத் திருமேனிகளை இடம்பெறுமாறு செய்தான். மேலும் அச்சிற்றாலயத்துச் சுவர்களில் கயிலையில் உள்ளோர். அனைவரையும் சிறிய சிறிய சிற்பங்கள் வடிவில் இடம்பெறுமாறு செய்துள்ளான். சோழர் காலத்தில் இங்கு கயிலைநாதனாகவும், உமாமகாசுவரியாகவும் இடம்பெற்றிருந்த செப்புத் திருமேனிகளை ஒரு காலட்டத்தில் கோயில் வளாகத்திற்குள்ளேயே புதைத்து வைக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது செப்புத் திருமேனிகள் இருந்த இடத்தில் சுதையால் செய்யப் பெற்ற உருவங்களை வைத்துவிட்டனர். அண்மையில் செப்புத் திருமேனிகள் வெளிப்பட்டது நாம் செய்த புண்ணியமே.

தாராசுரத்து ஸ்ரீவிமானம் கயிலைமலையாகவே திகழ்வதால் இவ்விமானத்துத் தென்புறப் படிக்கட்டுக்கள் பகுதியில் அப்பரடிகள் ஐயாற்றில் கயிலைத் தரிசனம் செய்தபிறகு பாடிய மாதற் பிறைக்கண்ணியானை என்ற பதிகத்திற்கென பதினொரு சிற்பங்கள் உள்ளன. இணை இணையாகத் திகழ்ந்த விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைத் தனித்தனியே காட்டி அவை முன்பு உழவாரத் துடன் அப்பரடிகள் பதிகம் பாடும் காட்சி காணப்பெறுகின்றது. ஒரு தேவாரப் பதிகம் சிற்பவடிவம் பெற்ற ஒரே இடம் இதுதான்.

இதே போன்று இவ்வாலயத்து ராஜகம்பீரன் திருமண்டபத்திலிருந்து மேற்தளத்தில் உள்ள கயிலைக் கோயிலை (சிற்றாலயத்தைக் காணச் செல்லும் படிக்கட்டுகள் அருகே உள்ள தூணில் யானைமீது அமர்ந்தவாறு சுந்தரர் கயிலை செல்லும் காட்சியும் அவர் முன்பு குதிரையில் வந்து சுந்தரரை சேரமான் பெருமான் மறிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீவிமானத்தில் சுவரில் இராவணன் கயிலைமலையைப் பெயர்க்கும் சிற்பக்காட்சியை நாம் கண்டு மகிழலாம்.

காஞ்சி கயிலாசநாதர் கோயில், திருவதிகை வீரட்டான, திருவையாறு ஐயாறப்பர் கோயில், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்து ஆலயங்கள், தாராசுரத்து ஐராவதீஸ்வரம் போன்றே திருபுவனம் கம்பகரேஸ்வரமும் ஸ்ரீகயிலை பர்வதமாகவே விளங்குகின்றது. இவ்வாலயங்களுக்குச் சென்று ஸ்ரீவிமானங்களைக் கயிலை மலையாகவே பாலித்து திகழும் பெருமான் திருமேனிகளை நாம் வணங்கும் போது நிச்சயம் ஸ்ரீகயிலை தரிசனம் பெற்ற உணர்வைப் பெறுவோம்.

சோழநாட்டிலுள்ள நல்லூர் சிவாலயம் பாடல்பெற்ற தலமாகும். இது மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. அப்பர் பெருமானுக்கு ஈசன் திருவடி தீட்சை அருளிய புனிதமான இடமாகும். உயர்ந்த மாடத்தின் மீது திகழும் ஸ்ரீவிமானம் புதுமையாக இருப்பதோடு அதுவும் கயிலயங்கிரி என்பதை அதனை தரிசிப்போர் உணர்வர்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Tags : Shiva ,Sri Kailasam ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு