×

15 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதியுடன் புதுப்பொலிவு பெறும் சமத்துவபுரங்கள்-மகிழ்ச்சியில் பொதுமக்கள்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள 9 யூனியன் சமத்துவபுரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 திட்டங்கள் பராமரிப்பின்றி இன்றி கிடந்தது. இந்நிலையில் 6 யூனியன்களில் ரூ.15 கோடி மதிப்பில் கடந்த 6 மாதங்களாக மராமத்து பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே காக்கூர், கடலாடி அருகே கருங்குளம், பரமக்குடி அருகே பாம்பூர் மற்றும் தோளூர், ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை, மண்டபம் அருகே வேதாளை, போகலூர் அருகே தீயனூர் மற்றும் நயினார்கோயில், திருவாடானை ஆகிய 9 இடங்களில் கடந்த 1999-2000ம் ஆண்டுகளில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டது.ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் நூறு வீடுகளும், ரூ.32 லட்சங்கள் மதிப்பீட்டில் சுமார் 33 திட்டப் பணிகளும் நடைபெற்று உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரேசன்கடை, நூலகம், கால்நடை காப்பகம், அங்கன்வாடி மையம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, சமுதாய கூடம் மற்றும் குடிநீர், தெருவிளக்கு மற்றும் தார்ச்சாலை சாலை என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 33 திட்டப் பணிகள் செய்துகொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, சமத்துவபுரம் திட்டங்களை போதிய பராமரிப்பு செய்யாததால், கட்டிடங்கள், சாலைகள், குடிநீர் ஆதாரங்கள் சேதமடைந்து, பொதுமக்களுக்கு பயன்பாடின்றி கிடக்கிறது. இங்கு கட்டப்பட்ட வீடுகளிலும் மேற்கூரை சேதமடைந்தது, வீடுகளின் கழிப்பறைகள் சேதமடைந்து திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்திய அவலம் இருந்தது.நூலகத்திலுள்ள புத்தகங்கள், தளவாடச் சாமான்கள் மாயமாகி கட்டிடம் பூட்டியே கிடந்து சேதமடைந்து விட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் சேதமடைந்தும், பல பொருட்கள் மாயமாகி உள்ளதால், விளையாட்டு மைதானம் புதர்மண்டிய காடாக மாறியது. தெருக்குழாய், குடிதண்ணீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. தெரு விளக்குகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறது.சமத்துவபுரங்களின் அவல நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்திலுள்ள அனைத்து சமத்துவபுரங்களிலும் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மராமத்து செய்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை புதியதாக ஏற்படுத்தி கொடுக்க உத்திரவிட்டார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கே.கருங்குளம், காக்கூர்,பாம்பூர், தோளூர், சித்தார்கோட்டை, தீயனூர் மண்டபம், வேதாளை மற்றும் திருவாடனை, நயினார்கோயில் சமத்துவபுரங்கள் மராமத்து செய்ய கடந்தாண்டு ஜூலை மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் துவங்கப்பட்டது.அதன்படி வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வீடுகளின் அனைத்து பகுதிகளிலும் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு உதவிபொறியாளர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்க்கு 25 வீடுகள் என 4 பொறியாளர்களுக்கும் 100 வீடுகள் மற்றும் அரசு கட்டிங்கள், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.தீயனூர், தோளூர், நயினார்கோயில் ஆகிய 2 சமத்துவபுரங்களில் பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள 6 சமத்துவபுரங்களில் ரூ.14.76 கோடி மதிப்பில் புதிய வீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பணிகள், ரூ.96 லட்சத்தில் வீடுகள் மராமத்து பணிகள் முழுவீச்சுடன் நடந்து 60 சதவீத பணிகள் முடிவுற்று உள்ளன.கருங்குளம் சமத்துவபுரம் சண்முக சுந்தரம் கூறும்போது, இங்கு வீடுகள் சேதமடைந்து கிடந்தது. பெருமம்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே வசிப்பதால் முறையாக மராமத்து கூட செய்ய முடியவில்லை. குடிநீர்,சாலை உள்ளிட்ட எவ்வித வசதியும் இருந்தது கிடையாது. மழை பெய்தால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி விடும். இதனை போன்று அங்கன்வாடி, சமுதாய கூடம், சிறுவர் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது பயன்பாட்டில் உள்ளவை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தற்போது கடந்த 6 மாதங்களாக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வீடுகளை நாங்களாகவே மராமத்து செய்து கொண்டோம். அதற்கான பணத்தையும் அரசு வழங்கி வருகிறது என்றார்.உதவி திட்ட அலுவலர் முத்துகுமாரசாமி கூறும்போது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்திரவின் பேரில் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் சமத்துவபுரங்கள் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சுடன் நடந்து வருகிறது. இதில் ரூ.13.03 கோடி மதிப்பில் 406 புதிய வீடுகள் கட்டும் பணிகள், ரூ.1.73 கோடி மதிப்பில் சாலை, பொது கட்டிடம், சிறுவர் விளையாட்டு மைதானம், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும், ரூ.96 லட்சத்திற்கு வீட்டின் உரிமையாளரின் நேரடி பங்களிப்போடு மராமத்து பணிகளும் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் ஒரிரு மாதத்தில் முடிந்து விடும் என்றார்….

The post 15 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதியுடன் புதுப்பொலிவு பெறும் சமத்துவபுரங்கள்-மகிழ்ச்சியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Equalization ,-Joy ,Sayalkudi ,9 ,Union Equality Puras ,Ramanathapuram ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் கோலாகலம்