×

ரெய்டில் சிக்கிய 50 லட்சம், 316 முக்கிய ஆவணங்கள்.. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியீடு

சென்னை: எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் நடந்த சோதனையில் 316 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எல்இடி விளக்குகள் கொள்முதல் டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் முறைகேடான வகையில் தனியார் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனங்களுக்கு எல்இடி விளக்குகள் டெண்டர் விட்டதற்கான ஆவணங்கள் மற்றும் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தான் அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் அடிப்படையில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.05/2022 சட்டப்பிரிவு 120(B) r/w 420, 409 IPC and u/s 13(2) r/w 13(1) (C) மற்றும் 13 (2) r/w 13 (1) (d) of the Prevention of Corruption Act, 1988 and r/w 13(2) r/w 13(1) (a) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 ன்படி வழக்கு முன்னால் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மற்றும் 9 தனிநபர்கள் / நிறுவனங்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 9 இடங்களிலும், கோயம்பத்தூரில் 14 இடங்களிலும், திருச்சியில் 2 இடங்களிலும், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டில் தலா 3 இடங்களிலும், ஆகமொத்தம் 31 இடங்களில் இன்று 13.09.2022 சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான திரு.சி.விஜயபாஸ்கர் 2020-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சென்னை நகரப்பிரிவு – 5 குற்ற எண். 1/2022 சட்டப்பிரிவுகள் 120(B), 420, 468, 471 IPC மற்றும் 7(a) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 -ன் கீழ் 12.09.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று 13.09.2022, இவ்வழக்கு சம்பந்தமாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 1 இடத்திலும் ஆக மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி சோதனையில் 18.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 – போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன இவ்வாறு குறிப்பிட்டுள்ளது….

The post ரெய்டில் சிக்கிய 50 லட்சம், 316 முக்கிய ஆவணங்கள்.. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,S.P.Velumani ,C.Vijayabaskar. ,Anti-corruption department ,C.Vijayabaskar ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...