×

பண்டிகை காலத்தை முன்னிட்டு சுங்குடி சேலை உற்பத்தி தீவிரம்

சின்னாளபட்டி: தீபாவாளி உள்ளிட்ட பண்டிகை நெருங்கி வருவதால், சின்னாளபட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சுங்குடி சேலைக்கு பிரசித்தி பெற்றது. சுங்குடி நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுங்குடி சேலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 40 வருடங்களுக்கு முன்பு வட்டம் மற்றும் சதுர வண்ண புள்ளிகளை சேலைகளில் பதித்து சுங்குடி சேலை என  பெயர் வைத்து விற்பனை செய்து வந்தனர். வயதானவர்கள் மட்டுமே கட்ட கூடிய புடவை சுங்குடி சேலை என்ற நிலை மாறி தற்போது இளம்வயதினரும் காட்டன் சுங்குடிசேலைகள் மற்றும் ஆர்ட் சில்க் சுங்குடி சேலைகளை அதிகளவில் கட்ட துவங்கியுள்ளனர். கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் மான், மயில், நடனமாடும் மங்கை, யானை, சிங்கம் பலவித பூக்கள், மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள், அன்னப்பட்சி, மயில் உள்ளிட்ட உருவங்களை சேலைகளில் பிரிண்ட் செய்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது மாடர்ன் ஆர்ட் வடிவங்களில் சுங்குடி புடவைகளை தயார் செய்து வருகின்றனர்.இதனால் தற்போது இப்புடவைகளுக்கு இந்தியா முழுவதும் தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களான வங்காளதேசம், கொல்கத்தா, மும்பை, பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான புடவைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால், கடந்த  4 மாதமாக இப்பகுதியில் சுங்குடி சேலை உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து சுங்குடி சேலை உற்பத்தியாளர் தம்பிதுரை கூறுகையில், ‘‘கல்லூரி மாணவிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை சுங்குடி சேலைகளை விரும்பி அணிகின்றனர். பண்டிகை காலங்களில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களை புடவைகளுக்கு சூட்டுவது வழக்கம். தற்போது நடிகைகள் பெயர்களுடன், கண்ணான கண்ணே, சுந்தரி, பூவே உனக்காக, வானத்தைப்போல போன்ற தொலைக்காட்சி தொடர்களின் பெயர்களின் தயாரிக்கப்படும் புடவைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது’’ என்றார்….

The post பண்டிகை காலத்தை முன்னிட்டு சுங்குடி சேலை உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sungudi ,Chinnamalapatti ,Diwali ,Dindukal District ,Dinakaran ,
× RELATED ஹீரோவான வில்லன்