×

தமிழகத்தில் ஒரு சத்தியவான் சாவித்திரி!

மங்களங்குடி! அற்புதமான ஊர். பெயருக்கு ஏற்றவாறு மங்களத்திற்கு அந்த ஊரில் பஞ்சமே இல்லை. காவிரி பாய்ந்து வளம் சேர்க்கும் சோழ மண்டலத்தின் தலைநகரான தஞ்சைக்கு மிக அருகில் இருக்கும் ஊர். பசுமைக்கு குறைவே இல்லை. வயலெங்கும் நெல்மணிகள் விளைந்திருக்க, வீதி எங்கும் தேவாரத் தேன்தமிழ் சொல் மணக்க, கல்லையும் சிலையாக்கிய சிற்பிகளின் கலை மணக்கும் கோயில்கள் பளபளக்க, எங்கும் மகிழ்ச்சியின் அலை வீச்சுதான்.

அந்த ஊருக்கு மத்தியில், அந்தி நேர வானில் மதியைப் போல இருந்தது ஒரு ஆலயம். ஆண்டவனைத் தன்னுள் லயிக்கச் செய்த தெய்வீக ஆலயம்.  கையிலை நாதனும், அம்பிகையும் அருளோடு குடி கொண்டுவிட்ட கோயில்! சம்பந்தரும், திருநாவுக்கரசரும் போற்றிப் பாடிய தன்னிகரில்லா திருத்தலம்! ஒன்பது கிரகங்களும் வந்து முறையாக ஈசனை வணங்கி, நற்கதி பெற்ற
பெருமையை தன்னகத்தே கொண்ட கோயில்! (நவகிரகங்கள், எருக்க இலையில் இறைவனுக்குத் தயிர் அன்னம் படைத்து வழிபட்டதாகத் தலபுராணம் சொல்லும். ஆகவே, இன்றும் இங்கு எருக்க இலையில் இறைவனுக்குத் தயிர் அன்னம் படைக்கப் படுகிறது.) தேவர்களும், அந்த கோயிலுக்கு ஆனந்தமாக வந்து அரனைச் சேவித்துச் செல்கிறார்கள் என்றால் அது மிகையல்ல! இப்படி பல வகையில் பெருமை வாய்ந்த அந்தக் கோயிலில் ஆனந்தமே வடிவாக அம்மையும் அப்பனும் இருந்தார்கள்.

ஆனால், அன்று அந்தக் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில்,  கொஞ்சம் கூட உற்சாகமே இல்லை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு மங்கை இருந்தாள். கோணல் மானலாக கலைந்திருந்த கேசம், பாதி அழிந்துபோன குங்குமப் பொட்டு, உடைந்து போன கண்ணாடி வளையல்,  கசங்கிப்போன செந்நிறச் சேலை, முகமெல்லாம் வழியும் சோகம், என்று அவள் பார்க்கவே ஒரு தினுசாகத்தான் இருந்தாள்.

அவளுக்குப் பின்னே ஒரு நான்கு பேர் எதையோ சுமந்தபடி அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தோளில் சுமப்பது, ஏதோ புதையலும் இல்லை. ஈசனுக்கான பூஜைப் பொருளும் இல்லை. தலை வெட்டப் பட்டிருந்த ஒரு சடலம் அது! ஆம், அது சடலமேதான். அது மட்டு மில்லை அந்த சடலம் உயிரோடு இருந்த போது, முன்னே செல்லும் பெண்ணின் கணவனாக இருந்தது. அது சரி, ஏன் இந்தப் பெண் இப்படி தனது கணவனின் சடலத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்குச் செல்லாமல் மங்களங்குடி கோயிலை நோக்கிச் செல்கிறாள்? எல்லாம் காலம் செய்த கோலம்!

சோழ மண்டலத்தின் முதன்மை அமைச்சராக இருந்தவர், அலைவானர் என்ற மாபெரும் சிவ பக்தர். அப்போதைய சோழச் சக்ரவர்த்தியான குலோத்துங்க சோழனின் அன்பிற்கு பாத்திரமாக இருந்தவர் இந்த அலைவானர். “இடிப்பாறை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்” என்பார் வள்ளுவர்.  அதாவது மன்னன் செய்யும் தவறுகளை சமயம் பார்த்து மறுத்துரைக்கும் மந்திரிகள் இல்லாத நாடு, கெடுப்பவர்கள் இல்லாத போதிலும் அழிந்துபோகும் என்று பொருள். மன்னனுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்லி, அவன் செய்யும் தீமைகளை கண்டித்து, வள்ளுவம் காட்டும் உன்னத மந்திரியாகச் செவ்வனே தன் கடமையை ஆற்றினார் அந்த அமைச்சர்.

அவரது அயராத தர்மச் சிந்தனைகளையும் நல்ல நடத்தையையும் நோக்கிய மன்னன், அவரிடம் வரி வசூலிக்கும் பொறுப்பைத் தந்தான். மந்திரியும் ஒரு குறையும் வராமல் வரி வசூலித்தார். மக்களை தர்மசிந்தனையில் இருக்கச் செய்வதும் நல்லவர்களாக வாழ வைப்பதும் இறை நம்பிக்கைதானே? அந்த இறை நம்பிக்கைக்கு வித்திடுவது அருள் தரும் ஆலயங்கள் அல்லவா? அதனால் தானே கோயில் இல்லாத ஊரில் குடிபுக வேண்டாம் என்றார்கள் ஆன்றோர்கள்? ஆகவே அநியாயமாக மன்னன் வசூலித்த வரிப்பணத்தைக் கொண்டு, மங்களங்குடியில் கோயில் கொண்ட மறையவனுக்கு அற்புதமான கோயில் எழுப்பினார் அமைச்சர்.

ஒரு அம்பு சீராகவும் நேராகவும் இருக்கிறது.  ஆனால் அது செய்வது, கொலை அல்லவா? அதே போல யாழ் உருவத்தில் வளைந்துள்ளது. ஆனால் செவிக்கினிய நாதத்தை அது தருகிறது இல்லையா? ஒரு மருத்துவர் வாளால் உடலை அறுத்து வைத்தியம் செய்தாலும், அவருக்கு பாவம் சேராமல் நோயாளியை காத்த புண்ணியம் தானே சேருகிறது. மொத்தத்தில் ஒரு செயலின் நோக்கத்தைப் பொறுத்தே அது நல்ல செயலா இல்லை தீய செயலா என்பதும் உள்ளது. இதை அழகாக வள்ளுவர் “கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்” என்று இரண்டே வரியில் சொல்லி விட்டார். அதைப் போல வரிப் பணத்தை மன்னன் அனுமதி இல்லாமல் பயன் படுத்தியது தவறுதான். ஆனாலும், அவர் அந்தப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டியதால் அது குற்றமாகாது.

வரிப் பணத்தை பயன்படுத்தி அமைச்சர் கோயில் கட்டிய செய்தி மன்னனை எட்டியது. சினம் கொண்ட மன்னன் அமைச்சரது சிரத்தை துண்டிக்கச் சொல்லி கட்டளையிட்டான்.
மன்னன் இட்ட கட்டளையை கேட்டவுடன் மந்திரி , தன் மனைவியின் பக்கம் திரும்பினார். திரும்பியவர் மெல்ல தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்து செய்ய
வேண்டியதை, தன் மனைவிக்கு சொல்ல ஆரம்பித்தார்.“தேவி! நமது வாழ்வும் வளமும் அந்த மங்களங்குடி வாழ் மறைபொருளே! ஆகவே நான் போன பின்பு கூட உனக்கு கதி அவன்தான்...”
“நீங்கள் இல்லாமல் இந்த உடலில் உயிர் தாங்குமா சுவாமி?” இடை மறித்தாள் அமைச்சரின் மனைவி.

“தங்க வேண்டும் தேவி! ஆம்! தங்கத் தான் வேண்டும்! இந்த பாழும் உடலை விட்டு உயிர் நீத்த பின் யாரும் இதை மதிக்க மாட்டார்கள்! அதுவும் இது அரச தண்டனையால் உயிர் நீக்கப் போகும் உடல். ஆகவே இதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்...”“சுவாமி...” ஏதோ சொல்ல வந்த தன் மனைவியை, கைகளை உயர்த்திக் காட்டி, தடுத்தார் அமைச்சர். பின், தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்தார்.

“சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் தேவி! அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே என் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும் இந்த உடலை மங்களங்குடியில், அந்த ஈசனின் திவ்ய தேசத்தில் எரித்தோ அல்லது புதைத்தோ விடு! புரிகிறதா!” அமைச்சர் தைரியமாகத்தான் சொன்னார். ஆனால் அவரது மனைவி கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.
“தனக்குக் கோயில் கட்டிய தங்களை அந்த ஈசன் கைவிட மாட்டான் சுவாமி” கேவலின் ஊடே சொன்னாள் அவள். கேட்ட அமைச்சரின் முகத்தில் இள நகை பரவியது. {மரணத் தறுவாயில் எப்படி அவரால் நகைக்க முடிந்ததோ? அது அவர் மட்டுமே அறிந்த ரகசியம் என்று நினைக்கிறேன்!.}

“பலனை எதிர்பார்த்து அந்த ஈசனுக்கு நான் அதைச் செய்யவில்லை. இந்த ஊனும் உடலும் அவன் சொத்து. அதை பறிப்பதும் கொடுப்பதும் அவன் உரிமை. கேள்வி கேட்க நாம் யார்?” அமைச்சரை அதற்கு மேல் பேச விடவில்லை காவலர்கள். அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்று சிரசைத் துண்டாக வெட்டிப் போட்டார்கள். அதுவும் அவரது மனைவியின் கண் முன்பாகவே! எந்த ஒரு மனைவியும் காணக்கூடாத காட்சி! கண்ட அந்த அம்மையாருக்கு எப்படி இருந்திருக்கும்! எழுதவும் படிக்கவும் நமக்கே பதறுகிறதே. அப்போது அந்த அம்மையாரின் நிலை...

நடந்ததைக் கண்ட அந்த அம்மையார் பல கணங்கள் சிலையாக சமைந்துவிட்டாள். பிறகு ஒரு வழியாகத் தன்னை தேற்றிக்கொண்டு, கணவனின் இறுதி ஆசையைப் பூர்த்தி செய்ய, மங்களங்குடியை நோக்கிப் பயணப்பட்டாள்.  கணவனின் சடலத்தோடு மங்களங்குடி ஊரின் எல்லையை மிதித்தாள். நெஞ்சமெல்லாம் பதைபதைத்தது. கண்ணில் தெரியும் கோவில் ராஜகோபுரம் மனதில் சொல்ல வொண்ணா வேதனையை ஏற்படுத்தியது. வாய் விட்டுக் கதற ஆரம்பித்தாள் அந்தக் காரிகை.

“அம்மா! மங்களாம்பிகையே! உன் கணவன் மகேசன், சுடுகாட்டில் பேய்களோடு ஆடி ஆடி கருணையை மொத்தமாக இழந்துவிட்டான் போலும். மூன்று போதும் அவனையே நினைத்து சேவை செய்து வந்த என் கணவர், இன்று இருக்கும் நிலையை... அந்தோ! (கேவி விட்டு, பின் தொடர்ந்தாள்) என்னால் வாய் விட்டு கூட சொல்ல முடியவில்லையே. கண் கவரும் கோயிலை உனக்கும் உன் கணவனுக்கும் கட்டித் தந்த என் கணவரின் நிலை இன்று,  கண் கொடுத்தும் பார்க்க முடியாத படி இருக்கிறதே.

தாயே ஜெகன் மாதா,  நீயாவது அந்த ஈசனிடம் சொல்லக் கூடாதா?... மங்களாம்பிகையே! இந்த அபலை, மங்களமே இல்லாமல் போனதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே! இந்தப் பாவிக்கு உன்னை விட்டால் ஏது கதி? இந்த அபலைப் பெண் உன் சரணங்களையே சிக்கென பற்றிவிட்டேன்! இனி என்னை ரட்சிப்பதும் தள்ளுவதும் உன் இஷ்டம் தாயே” என்று கண்ணீர் விட்டு கதறினாள் அமைச்சரின் மனைவி.

அப்போது அவளது குரலை விட பெரிதாக ஒரு குரல் கேட்டது. “அப்பனே பிராணவரதேஷ் வரா! (உயிரைத் தந்தவனே என்று பொருள்). அம்மா மங்களாம்பிகையே என்னை காத்து
விட்டீர்கள்.” என்று ஒலித்த அந்தக் குரல், அமைச்சரின் மனைவிக்கு  வெகுநாளாக பழகிய குரலாக இருந்து. குரல் வந்த திசை நோக்கித் திரும்பினார் அந்த அம்மையார். அங்கு அவரது கணவர் உயிர் பெற்று எழுந்திருந்தார். கண்ட அம்மையார் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார்.

தனது பக்தைக்காக காலனையே வென்று அவளது கணவனுக்கு உயிரைக் கொடுத்த அம்பிகையை இன்றும் மங்களங்குடியில் தரிசிக்கலாம். அதனால்தான் முருக பக்தரான அருணகிரிநாதர்
கூட அம்பிகையை “காலன் விழ மோது சாமுண்டி” என்றார் போலும். எப்படி, சாவித்ரிக்காக சத்தியவானை உயிர்ப்பித்தாளோ, அதே போல இன்று இந்த அமைச்சரையும் காத்து விட்டாள். இந்த அம்பிகையை நவராத்திரியின் போது வணங்கி நற்கதி பெறுவோம். இந்த அற்புதக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது.  ஆடுதுறையில் இருந்து 3 கி.மீ தூரம். கும்பகோணத்தில் இருந்து குறித்த நேரத்தில் பஸ் வசதி இருக்கிறது. ஆடுதுறையில் இருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்லலாம்.

Tags : Savithri ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...