×

ஆரணி ஊராட்சியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மோசடி பிடிஓவின் போலி கையெழுத்து போட்டு வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: மனைகளை வாங்கிய மக்கள் அதிர்ச்சி

ஆரணி: ஆரணி ஊராட்சியில் பிடிஓவின் போலி கையெழுத்து போட்டு வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம்  வெள்ளேரி ஊராட்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கடந்த 2016ல் தனியார் கார்டன் குடியிருப்பு பகுதி உருவாக்கி  140க்கும் மேற்பட்ட மனைகள் மற்றும் வீடுகள் அமைத்துள்ளார். கடந்த 2019ல் தனியார் கார்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள பல வீட்டு மனைகளுக்கு பிடிஓ அலுவலகத்தில் தடையில்லா சான்று, பிடிஓவின் கையெழுத்து போலியாக போட்டு, மனைபிரிவு அங்கீகாரம் உள்ளிட்ட ஆவணங்கள் போலியாக தயாரித்து பொதுமக்களிடம் வீட்டு மனைகளை மோசடியாக விற்பனை செய்து ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த மோசடி பத்திரங்களை ரத்துசெய்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி திருவண்ணாமலை கலெக்டருக்கும், சென்னை பத்திரப்பதிவுத்துறைக்கும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், கலெக்டர், சென்னை பத்திரப்பதிவு தலைவர் பரிந்துரையின் பேரில், பத்திரப்பதிவுத்துறை மற்றும் நகர் ஊரமைப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஆரணி பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும், வெள்ளேரி ஊராட்சியில் உள்ள தனியார் கார்டனுக்கும் நேரில் சென்று விசாரணை செய்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திர பதிவுத்துறைக்கும், மாவட்ட  கலெக்டரிடமும் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், வெள்ளேரி ஊராட்சியில் உள்ள தனியார் கார்டனில் 1 முதல் 9  மற்றும் 77 முதல் 82 வரையுள்ள 15 வீட்டுமனைகளுக்கு, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அரசு, தணிகைவேல் ஆகியோர் அப்போதைய பிடிஓவும், தற்போது அனக்காவூர் பிடிஓவாக உள்ள ரவி என்பவரின் கையெழுத்தை தடையில்லா சான்று வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தில் முறைகேடாக மனைகளுக்கு ஊராட்சிமன்ற தீர்மானம், பிடிஓ அலுவலகத்தில் மனைவிரிவுகளுக்கு தடையில்லா சான்று, மனைபிரிவு அங்கீகாரம் உள்ளிட்ட  ஆவணங்கள் போலியாக தயாரித்து வீட்டு மனைகளை விற்பனை செய்து  முறைகேடாக பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில், கலெக்டர் பா.முருகேஷ், நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்கும், முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய பதிவு துறை தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, அரசு, தணிகைவேல் மீது ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிந்து தலைமைறைவாக உள்ள இருவரையும் தேடுகின்றனர். இதனால் மனைகள் வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்…

The post ஆரணி ஊராட்சியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மோசடி பிடிஓவின் போலி கையெழுத்து போட்டு வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: மனைகளை வாங்கிய மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arani ,PTO ,Arani Pavilion ,Dinakaran ,
× RELATED போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது வழக்கு 80 கிலோ பறிமுதல் ஆரணியில் உள்ள கடைகளில்