×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

390. த்ருவாய நமஹ: (Dhruvaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை - துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)ஓர் ஊரில் ஒரு வேதியர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவனாகவும், திருமாலிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவனாகவும் திகழ்ந்தான். தன் தாய் தந்தையர்களுக்கும் சிறந்த முறையில் பணிவிடைகள் செய்து வந்தான். தனது கடமைகளையும் சிறப்பாக ஆற்றிவந்தான்.அவனுக்கு வாலிப வயது வந்த சமயம் அரச குமாரனோடு அவனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த அரச குமாரன் மிக்க அழகோடும் கட்டமைந்த உடலோடும் திகழ்ந்தான். அரசர்களுக்குரிய போகங்களை எல்லாம் நன்றாக அனுபவித்து வந்தான்.

அந்த அரச குமாரனின் செல்வங்களை எல்லாம் வேதியர் மகன் பார்த்தான். “அடுத்த பிறவியில் நாமும் ஓர் அரச குமாரனாகப் பிறந்தால், நமக்கும் இத்தகைய செல்வங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்குமே!” என்று நினைத்துத் திருமாலை வழிபட்டான்.அவன்தான் மறுபிறவியில் உத்தானபாதன் என்ற மன்னனின் மகனான துருவனாக வந்து பிறந்தான். இவ்
வரலாறு விஷ்ணு புராணம் முதல் அம்சம் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால்தான் துருவன் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தபோது, அவனுக்குக் காட்சி தந்த திருமால் நேரடியாக அவனுக்குத் துருவ பதவியோ முக்தியோ அளிக்காமல், முதலில்
நகரத்துக்குத் திரும்பிச் சென்று அரண்மனையில் வாழ்ந்து ஆட்சி செய்யும்படி நியமித்தார். முன்பிறவியில் அவன் விரும்பிய ராஜபோக வாழ்க்கையை முதலில் அவனுக்கு அருளிவிட்டார் திருமால்.முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சீரரசு ஆண்டு செங்கோல் செலுத்திய துருவன், பின்னர் துருவ பதவியை அடைந்து அதன்பின் வைகுண்டமும் பெற்றான் என்கிறது
பாகவத புராணம்.

பூமியை ஆட்சி செய்துவிட்டு, துருவ பதவிக்குப் புறப்படும் வேளையில் தனது மகனுக்கு முடிசூட்டி விட்டு, பத்ரிநாத்துக்குச் சென்றான் துருவன். அங்கே புனித நீரில் நீராடி தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது ஆகாயத்தில் இருந்து ஒரு விமானம் கீழே இறங்கி வந்தது. நந்தன், சுனந்தன் என்ற இரண்டு விஷ்ணு தூதர்கள் வந்தார்கள்.“மிக உயர்ந்த துருவ பதவிக்கு உங்களை அழைத்துச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்!” என்று அவர்கள் துருவனை அடிபணிந்து கூறினார்கள். விமானத்தில் துருவன் ஏறப் போன நேரத்தில், யமன் எதிரே வந்து நின்று, தன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறே யமன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறி அமர்ந்தான் துருவன்.

விமானம் மேல்நோக்கிப் புறப்பட்டது. துருவன் பயணிக்கும் விமானத்துக்கு முன்பு மற்றொரு விமானம் மேல்நோக்கிப் பறந்து கொண்டிருப்பதை நந்தனும் சுனந்தனும் துருவனுக்குக் காட்டினார்கள். “அதோ பாருங்கள்! அந்த விமானத்தில் உங்கள் தாய் சுநீதி துருவ பதவிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்!” என்றார்கள். துருவன் இவ்வளவு தூரம் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தமைக்கு அவனது தாய் கொடுத்த ஊக்கமே காரணம் அல்லவா? பக்திபுரிபவர்களை விட பக்தி புரிவதற்கு ஊக்குவிப்பவர்கள் இறையருளை விரைவில் பெற்றுவிடுவார்
களாம்! அதற்குச் சான்றாக, தவம் புரிந்த துருவனுக்கு முன், அவனைத் தவம் புரியத் தூண்டிய தாய் சுநீதி துருவபதவிக்கு முதலில் சென்றாள்.

“இதி உத்தானபத: புத்ரோ த்ருவ:
க்ருஷ்ணபராயண:
அபூத் த்ரயாணாம் லோகானாம் சூடாமணி: இவாமல:”
என்று பாகவத புராணத்தில் சுகமுனிவர் தெரிவிக்கிறார். மூவுலகங்களின் தலைக்கு மேல் உள்ள சிரோமணி போல் அந்த துருவ பதவியைத் துருவன் அலங்கரித்தான் என்பது இதன் பொருள்.
‘த்ருவ:’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான பதவியைத் துருவனுக்கு அளித்த திருமால், எப்போதுமே நிலையானவராக, உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்கிறார். மேலும், உலகெங்கும் வியாபித்து அனைத்து உலகங்களும் நிலைநிற்கும்படிச் செய்கிறார். அதனால் திருமாலுக்கு  ‘த்ருவ:’ என்று திருநாமம். துருவராக நிலைமாறாமல் இருப்பவரால் தானே துருவ பதவியை அருள முடியும்?

‘த்ருவ:’ என்றால் நிலையாக நிற்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 390-வது திருநாமம். “த்ருவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் மிக உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்கும்படித் திருமால் அருள்புரிவார்.

391. பரர்த்தயே நமஹ:(Pararddhaye namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ஸ்ரீராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் ஆகி, ராமராஜ்ஜியம் நடைபெற்று வந்த சமயம். தமசா நதிக்கரையில் உள்ள வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு நாரத முனிவர் வந்தார். அப்போது நாரதரை அடிபணிந்த வால்மீகி, அவரிடம், “பூமியில் இப்போது வாழ்பவர்களுக்குள் அனைத்து மங்கல குணங்களும் நிரம்பப்பெற்றவர் யார்?” என்று கேட்டார்.

ராமனின் ஆட்சியில் வாழும் வால்மீகி பகவானுக்கு, ராமனே பரமாத்மா என்பதும், ராமன் அனைத்து விதமான மங்கல குணங்களும் நிறைந்தவன் என்பதும் நன்றாகவே தெரியும். ஆனாலும் இறை வனைப் பற்றி நாமாக அறிந்துகொள்வதை விட, குருவின் மூலம் அறிந்துகொள்வதே விசேஷம் ஆகும். அதனால் தான் நற்குருவுக்கு உரிய இலக்கணங்கள் அனைத்தும் நிறைந்த நாரதரிடம் பணிவோடு தனது கேள்வியை முன்வைத்தார் வால்மீகி.

அதற்கு விடையளித்த நாரதர்,
“இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ச்ருத:
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வசீ”
(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-8)
என்று தொடங்கி, “இட்சுவாகு குலத்தில் அவதரித்த ராமன் என்பவனே
அனைத்து விதமான மங்கல குணங்களும் பரிபூரணமாக நிறைந்தவன்!” என்று சொல்லி
ராமனுடைய குணங்களையும் அவற்றின்
பெருமையையும் பட்டியலிடுகிறார்.

“ஸ ச ஸர்வகுண உபேத: கௌஸல்யா ஆனந்த வர்த்தன:
ஸமுத்ர: இவ காம்பீர்யே தைர்யேண ஹிமவான் இவ”
(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-17)

“கௌசல்யா தேவியின் மகனாக அவதரித்த திருமாலாகிய ராமனே வேதாந்தங்கள் போற்றும் அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன். அவனே பரமாத்மா ஆவான். இவ்வுலகில் பெருமை மிக்க பொருள்கள் அனைத்தும் தத்தம் பெருமைகளை அவனிடம் இருந்துதான் பெற்றிருக்கின்றன. கடல் தனக்குள் முத்து, ரத்தினங்கள் போன்ற பல விலை உயர்ந்த பொருள்களை வைத்திருந்தாலும் அவற்றை வெளியே காட்டாது. அதுபோல் தானே இறைவன் என்பதை ராமன் நன்கு அறிந்திருந்தாலும், தனது இறைத்தன்மையை அவன் வெளியே

காட்டிக் கொள்ளாமல் மனிதனைப் போல நடிப்பான். எத்தனை துக்கங்கள் வந்தாலும்,
தன் நிலை மாறாமல் இருப்பதிலே மலையைப் போன்றவன் ராமன்.”
“விஷ்ணுனா ஸத்ருசோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன:
காலாக்னி ஸத்ருச: க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம:”
(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-18)

“வீரத்தில் திருமாலைப் போன்றவன். அமுதைப் பொழிந்து மகிழ்விப்பதில் நிலவைப் போன்றவன். அடியார்களைத் துன்
புறுத்துவோர் மீது கோபம் கொள்ளுகையில் ஊழிக் கால நெருப்பைப் போன்றவன். பொறுமையிலே பூமியைப் போன்றவன்.”

“தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம: இவாபர:
தம் ஏவம் குணஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம்”
(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-19)

“தியாகம் செய்வதில் குபேரனைப் போன்றவன். ‘த்யாகே ச தனதோ யதா’ என்று குபேரனைப் பற்றிப் பழமொழி பிரசித்தமாக உண்டு. சத்தியத்தில் நிலை நிற்பதில் தரும தேவதையைப் போன்றவன். அவனே அனைத்து வித நற்குணங்களும் நிறைந்த பரம்பொருள் ஆவான். அவனது குணங்கள் என்றுமே மாறாமல் அவனிடம் நிறைந்திருக்கும்.”
இவ்வாறெல்லாம் பலபடிகளில் ராமனின் குணத்தை நாரதர் வால்மீகிக்கு விவரித்ததால் தான், அந்தக் குணங்களால் ஈர்க்கப்பட்ட வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை ஒரு காவியமாக எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதன்பின், பிரம்மாவின் நியமனப்படி, நாரதர் கூறிய வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீராமாயணத்தை இயற்றினார் வால்மீகி பகவான் என்பது வாசகர்கள் அறிந்த செய்தியே.

இப்படி பால காண்டத்தில், வால்மீகிக்கு நாரதர் வர்ணித்த படி, பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால், அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான். ‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல். பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள்புரிவான்.

392. பரம ஸ்பஷ்டாய நமஹ:(Parama Spashtaaya namaha)

 (வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 114-ம் சர்க்கம்) ராம பாணத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் இறந்துகிடந்த ராவணனின் சடலத்தைக் கண்ட அவனது மனைவி மந்தோதரி, அவன்மேல் விழுந்து புலம்பி அழுதாள். அப்போது ராவணனின் சடலத்தைப் பார்த்து, “மூவுலகையும் ஆக்கிரமித்து, தேவர்களையும் வீழ்த்திய உங்களை ஒரு சாதாரண மனிதன் வென்று விட்டாரா? பற்பல வரம் பெற்ற உங்களை, ஒரு மனிதனின் சரம் அழித்துவிடுமா?” என்று சிந்தித்துக் கூறத் தொடங்கினாள் மந்தோதரி.“ஜனஸ்தானத்தில் பல அரக்கர்களுடன் கூடியிருந்த உங்கள் தம்பி கரனை இந்த ராமன் முன்பே தனி ஒருவராக இருந்து அழித்திருக்கிறார். எனவே இவர் நிச்சயமாக மனிதராக இருக்கமுடியாது.

தேவர்களாலும் புக முடியாத இலங்கைக்குள்ளே
அநுமன் என்ற தூதுவனை அனுப்பி நுழைய வைத்த ஸ்ரீராமன்,
நிச்சயம் சாதாரண மனிதர் அல்லர்.

கடலில் அணைகட்டி ஒருவர் இலங்கைத் தீவுக்கு வந்திருக்கிறார் என்னும் போதே அவர் சாதாரண மானிடராக இருக்க முடியாது என்று நான் எண்ணினேன்.
உங்களை அழிக்க நினைத்த யமன், சீதை என்ற அழகான பெண்ணை உருவாக்கி, உங்களை மயக்கி, அந்த யமனே ராமனாக வடிவம் கொண்டு வந்து உங்கள் உயிரைப் பறித்துச் சென்று விட்டாரோ? இல்லை, ராமன் யமனாக இருக்க முடியாது. யமன் இலங்கைக்குள் நுழையவே அஞ்சுவாரே!

அல்லது, உங்களால் வீழ்த்தப்பட்ட இந்திரன் உங்களைப் பழிவாங்குவதற்காக ராமன் என்ற மனிதனாக வேடமிட்டு வந்து அழித்து விட்டானோ? சாத்தியமில்லை! உங்களைப் பார்க்கும் சக்திகூட அந்த இந்திரனுக்குக் கிடையாதே!

இந்த ராமன் பரமாத்மாவான
திருமாலாகத் தான் இருக்கவேண்டும்.
“வ்யக்தம் ஏஷ மஹாயோகீ பரமாத்மா ஸநாதன:

அநாதி மத்ய நிதன: மஹத: பரமோ மஹான்”
இவர் திருமால் என்பது அடியேனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. உலகைக் காக்க வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவரும், பரமாத்மாவும், உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவரும், தொடக்கம் நடு முடிவு இல்லாதவரும், இந்திரன் பிரம்மா உள்ளிட்ட தேவர்களை விட உயர்ந்தவருமான திருமாலே இவர் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன்.

“தமஸ: பரமோ தாதா சங்க சக்ர கதாதர:
ஸ்ரீவத்ஸ வக்ஷா: நித்யஸ்ரீ: அஜய்ய:
சாச்வதோ த்ருவ:”

சம்சார மண்டலத்துக்கு அப்பாற்பட்ட வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பவரும், உலகைப் போஷிப்பவரும், காப்பதற்கு உறுப்பாக சங்கு சக்கரம் கதை ஏந்தியவரும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவைக் கொண்டவரும், திருமகளோடு எப்போதும் இணைந்திருப்பவரும், திருமகளோடு இணைந்திருப்பதால் எப்போதும் வெல்பவரும், எக்காலத்திலும் இருப்பவரும்,
மாறுதலற்றவருமான திருமாலே இவர்.

அந்தத் திருமால்தான் உலகுக்கு நன்மை செய்வதற்காகவும், தீயசக்திகளை அழிப்பதற்காகவும், மனிதனாக அவதாரம் செய்து வந்துள்ளார். வானவர்கள் அவருக்கு உதவி செய்வதற்காக வானரர்களாக வந்துள்ளார்கள். உலகைக் காக்கும் திருமால், உலகுக்குத் தீங்கிழைத்த உங்களை உங்களது பரிவாரங்களோடு அழித்துவிட்டார்!” என்று சொல்லிப் புலம்பினாள் மந்தோதரி.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், ராமன் பொதுவாகத் தனது இறைத்தன்மையை வெளியிடாமல் இருந்தாலும், மந்தோதரி, தாரை போன்ற கற்புக்கரசிகளுக்கும், அநுமன் போன்ற பக்தர்களுக்கும் தனது சொரூபத்தை அவரே தனது கருணையால் நன்றாக வெளிப்படுத்திவிடுவார். அல்லது, தனது நடவடிக்கைகளால் தானே பரம்பொருள் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்துவிடுவார்.

இப்படிச் சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால், ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை. தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம். “பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

393. துஷ்டாய நமஹ:(Thushtaaya namaha)

ராவண வதம் ஆனபின், குபேரன், யமன், இந்திரன், வருணன், சிவன், பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வானில் கூடி ராமபிரானைத் துதித்தார்கள்.
“த்ரயாணாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்த்தா ஸ்வயம் ப்ரபு:”“பிரம்மதேவர் உட்பட அத்தனை உயிர்களையும் உலகங்களையும் படைக்கும் ஆதி கர்த்தாவாக, ஊழி முதல்வனாகத் திகழ்பவர் நீங்கள். ஆனால் உங்களைப் படைத்தவர் என்று யாரும் இல்லை.”“அந்தே ச ஆதௌ ச லோகானாம் த்ருச்யஸே த்வம் பரந்தப”“உலகங்கள் படைக்கப்படுவதற்கு முன்னும் நீங்கள் இருந்தீர்கள். உலகங்கள் யாவும் ஊழிக்காலத்தில் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்கள்.”இப்படி எல்லாம் பிரம்மாவும் மற்ற தேவர்கள் ராமனைப் பார்த்துத் துதி செய்தவாறே, அவர்களைத் தடுத்து ராமன்
கீழ்க்கண்ட வாக்கியத்தைச் சொன்னான்:

“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்”
(வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 120-11)பொதுவாக இவ்வாக்கியத்துக்குப் பொருள் உரைப்பவர்கள், ராமன் தன்னை இறைவன் என்று அறியவில்லை, அதனால் தேவர்கள் கூறும் பெருமைகளை எல்லாம் மறுத்துப் பேசி, “நான் வெறும் தசரதன் மகன் தானே ஒழிய நீங்கள் சொல்லும் பெருமைகள் ஏதும் எனக்கு இல்லை!” என்று சொல்வதாகக் கூறுவார்கள்.
ஆனால் வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ராமாநுஜருக்கு அவரது தாய்மாமாவான திருமலை நம்பிகள் கீழத் திருப்பதியில் ஒரு புளிய மரத்தடியில்
உபதேசம் செய்தார். திருமலை நம்பிகள் ராமனின் இந்தக் கூற்றில் ஒரு விசேஷ அர்த்தம் இருப்பதாக விளக்கினார்.

அது என்ன விசேஷ அர்த்தம்?
ராமனின் வாக்கியத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள் -

1. ஆத்மானம் மானுஷம் மன்யே, 2. ராமம், 3. தசரதாத்மஜம்.ராமன் சொல்கிறான், “1. ஆத்மானம் மானுஷம் மன்யே - தேவர்களே! நீங்கள் என்னைத் துதிக்கும் போது நானே உலகுக்கு மூலக் காரணம் என்றும், பிரம்மாவைப் படைத்தவனும் நானே என்றும் இப்படிப் பலவாறாக எனது பெருமைகளை எல்லாம் சொல்லித் துதி செய்துவிட்டீர்கள்.

ஆனால் இந்தப் பெருமைகள் எல்லாம் ஏற்கனவே வேதங்களில் சொல்லப்பட்டு விட்டனவே! தேவர்களான உங்களுக்கு அருள்புரியத் தானே மனிதனாக எளிமையோடு அவதரித்தேன்? அந்த எளிமையைச் சொல்லி என்னைத் துதி செய்யலாமே! என் பெருமையைச் சொல்லித் துதிப்பதை விட என் எளிமையைச் சொல்லித் துதிப்பதையே நான் பெரிதாகக் கருதுகிறேன்.

2. ராமன் - அவ்வாறு எளிமையைச் சொல்லித் துதிக்கும் போதும், நாராயணன், வாசுதேவன், வைகுண்டநாதன் போன்ற எனது பெயர்களைச் சொல்லித் துதிக்காமல், நான் எளிமையோடு பூமியில் அவதாரம் செய்தமைக்கு அடையாளமான ராமன் என்ற திருப்பெயரைச் சொல்லி அழைத்துத் துதிசெய்யுங்கள்.

3. தசரத ஆத்மஜம் - ராமன் என்று என்னை அழைப்பதை விட, சக்கரவர்த்தி தசரதனின் மகன் என்று என்னை நீங்கள் அழைத்தால் மேலும் மகிழ்வேன்.”
ராமன் கூறவரும் கருத்து - மற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி அவனைத் துதிப்பதைக் காட்டிலும், தசரதனின் மகன் என்று அழைத்துத் துதி செய்தால் அதுவே ராமனுக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

ஏன் அப்படி? வைகுண்டத்திலேயே திருமால் இருந்தால், பக்தர்களால் அவரை அணுகவே முடியாது. அங்கிருந்து இறங்கி வந்து தசரதன் மகனாக அவதாரம் செய்தபடியால் தான், எல்லா பக்தர்களாலும் அந்த இறைவனை எளிதில் அணுக முடிந்தது. தனது தந்தையைத் தானே தேர்ந்தெடுக்க வல்ல அந்த இறைவன், ராமாவதாரத்துக்குத் தந்தையாகத் தசரதனைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு மகனாக வந்து பிறந்து, தனது எளிமையை அடியார்களுக்கு நன்கு வெளிப்படுத்திக் காட்டினார்.

‘தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன். அதனால் தான் இன்றளவும் வைணவ நெறியில் ஸ்ரீராமன் என்று சொல்லாமல் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே சொல்வார்கள்.  மூதறிஞர் ராஜாஜி ராமாயண வரலாற்றை எழுதிய போது, அந்நூலுக்குச் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே பெயர் சூட்டினார்.

இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி, மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!