×

திருவரங்கத்தில் 21 நாட்கள் நடைபெறும் தேன் தமிழ் திருவிழா

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், தன்னுடைய வாழ்க்கை முடிந்த பின்னால், தான் நிலவுலகில் வாழ்ந்த உத்தமமான வாழ்க்கைக்குப்  பலனாக, உயர்ந்த உலகத்தை அடைவான் என்பது எல்லா மதத்தினரின் நம்பிக்கை. தமிழர்களின் தொன்மையான மதமான வைணவ மதத்தில், ஒவ்வொரு உயிர்களின் குறிக்கோள், இறைவன் உறையும் உத்தமமான வைகுண்ட  வான் நகரை அடைந்து அந்தமில் பேரின்பத்தில் திளைப்பது; பகவானுக்குத்  தொண்டு புரிவது தான். சரி, இந்த வைகுண்டத்தை எப்படி அடைவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒருவன் இங்கு வாழும் வாழ்க்கையால் வைகுண்டத்தை அடைய முடியுமா? அந்த வைகுண்டத்தை அடைகின்ற மார்க்கம் எப்படி இருக்கும்? இவற்றையெல்லாம் சொல்லுகின்ற ஒரு நிகழ்வுதான் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 3ந்தேதி திருநெடுங் தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 4ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்) விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் கோயிலை பொறுத்தவரை, ‘‘பாஞ்சராத்ர ஆகமம்’ முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், இராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும். சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும்.அந்த வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முப்பது முத்துக்களாக இங்கே நாம் பார்க்க இருக்கின்றோம்.

1. விரதங்களில் சிறந்தது மனித ஜென்மம் எடுத்தவர்கள் தமது வாழ்க்கையில் உயர்வதற்கு ஆன்மிகம் சில வழிகளைக்  காட்டுகிறது.
1. இறைவனை ஆராதனை செய்வது,
2. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரதங்களைக்  கடைப்பிடிப்பது,
3. இறைவனுடைய பக்தர்களை ஆராதனை செய்வது.

இதில் இரண்டாவதாகச்  சொல்லப்பட்ட விரதங்களில் ஏகாதசி விரதம் தலை யாய விரதமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தை எட்டு வயது முதல்
80 வயது உள்ளவர்கள் அனுஷ்டிக்கலாம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.  

2. முதல் ஏகாதசி பொதுவாக ஏகாதசி விரதம்

மார்கழியில் துவங்கி கார்த்திகையில் முடியும். மார்கழியில் இரண்டு ஏகாதசிகள் வரும். வளர்பிறை ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று பெயர். தேய்பிறை ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி தான் முதல் ஏகாதசி. ஏகாதசி  பெயர் காரணமும் இதில்தான்  உண்டு.

3. ஏகாதசி பிறந்த கதை

முரன் என்னும் அசுரன் தன்னுடைய வர பலத்தால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் தொல்லை அளித்து வந்தான். அவனை அழித்து தங்களை
காக்குமாறு தேவர்கள்  ஈசனை துதித்தனர். “நீங்கள்  மகாவிஷ்ணுவை சரணடைந்தால்,  உங்கள் துன்பம் தீரும்” என்று  கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும்
விஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர் களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனோடு பெரும்போர் புரியத்தொடங்கினார்.  1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது போர்.

ஒரு கட்டத்தில் மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரி காஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து சற்று ஓய்வெடுத்தார்.அந்த நேரத்தை தனக்குச்  சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானைத் கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி, ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது. பகவான்  நாராயணனிடமிருந்து, பதினோராம் நாள் தோன்றிய அந்த சக்திக்கு “ஏகாதசி” என பகவான் பெயரிட்டார்.

இந்த நாளில்  விரதம் இருந்து போற்றுவோருக்கு ,சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து, தன்னுள் அந்த அந்த  சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே, ஏகாதசி என்பது பகவானின் சக்தியே. அன்று  விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற  விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

4. வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியேஏகாதசி விரதம் மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டது. சுவாமி நம்மாழ்வார், தன்னுடைய பாசுரத்தில் ஒரு விஷயத்தைச்  சொல்கின்றார். தேவர்கள் கூட, வைகுந்தத்தை அடைய முடியாது. வைகுண்டத்தை அடைவதற்கான ஒரே வழி மனிதர்களாகப் பிறந்து, இந்த கர்ம பூமியில் வாழ்ந்து, திருமால் அடியார்களாய்  இருந்து, சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஏகாதசி முதலிய விரதங்களை முறையாகக்  கடைப்பிடித்து, பகவானை சரணாகதி அடைந்தால் மட்டுமே, வைகுண்டத்தை அடையமுடியும்.

இதை ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார்.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

தேவர்கள் கூட மனித வடிவம் எடுத்து நாராயணனை சரணாகதி செய்து வைகுண்டம் புக வேண்டும். வேறு விதி இல்லை என்கிறார்.

5. வைகுண்ட ஏகாதசி என்று ஏன் பெயர்?

மார்கழி மாத ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வரலாறு ஸ்ரீபிரஸன்ன சம்ஹிதையில் தெரிவிக்கப்படுகின்றது. நாராயணன் பிரளயத்துக்குப் பின்னர், ஆலிலையின் மேல் பள்ளி கொண்டு, தம்முடைய நாபிக் கமலத்தில் இருந்து, உலகத்தைப் படைப்பதற்காக நான்முகக் கடவுளை  படைத்தார். ஸ்ரீமன் நாராயணனின் பிள்ளை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன.

பிரம்மாவிடம் வேதத்தைக்  கொடுத்து உலகத்தைப் படைக்கச்  சொன்னார். வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு நான்முகன் உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் படைக்கத்  தொடங்கினார். ஒரு கட்டத்தில் தன்னால் மட்டுமே இந்த உலகத்தை படைக்க முடியும் என்கின்ற ஒரு ஆணவம் நான்முகனுக்கு வந்துவிட்டது.ஒருவருக்கு வந்த ஆணவம், சரியான நேரத்தில் போகாவிட்டால், ஆணவமே அவரை அழித்து விடும் என்பதை உணர்ந்த ஸ்ரீமன் நாராயணன், நான்முகனின் ஆணவத்தை அழிக்க திருவுள்ளம் கொண்டார்.

மது, கைடபர் என்ற இரண்டு
அசுரர்களை அனுப்பி வைத்தார்.
இருவரும் பிரம்மாவின் கையிலிருந்த வேதத்தை
அபகரித்துக் கொண்டு மறைந்து விட்டனர்.
கைப்பொருளை இழந்த நான்முகன்,
படைக்கும் வழி அறியாது தவித்தார்.
திகைத்தார். தன் தவறை உணர்ந்தார்.

திருமாலிடம் சென்று முறையிட்டார்.
தனக்கு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டி நின்றார்.
6.ஹயக்ரீவ அவதாரமும்
வைகுண்ட ஏகாதசியும்
திருமாலும் ஹயக்ரீவராக  அவதரித்து, மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.

மதுகைடபர்கள் பெருமாளிடம்
தங்களுக்கு வைகுண்டம் தருமாறு
பிரார்த்தனை செய்தனர்.  
அவர்களிடம் பகவான்,
‘‘மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்களுக்கு மோட்சம் தருகின்றேன்” என்று வாக்களித்தார்.

7. சொர்க்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு

மார்கழி மாத ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து மது கைடபர்களை உள்ளே அனுமதித்தார். அதனால் மது கைடபர்களுக்கு வைகுண்டம் தந்த  ஏகாதசி என்பதால் “வைகுண்ட  ஏகாதசி” என்று சொல்கின்றார்கள். அன்று மது கைடபர்கள், “இந்த நல்ல நாளிலே  யாரெல்லாம் விரதம் இருப்பார்களோ, அவர்களுக்கும் இந்த வைகுண்டம்  அளிக்க வேண்டும்” என்று வேண்ட, திருமால் அதற்கு இசைந்தார்.

எனவேதான், மார்கழி மாத ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் உள்ள வடக்கு வாசல் கதவை, வைகுண்ட வாசலாகக்  கருதி, மக்கள் பயபக்தியோடு, அந்த வழியாகச்  சென்று பெருமாளை வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்கின்றனர். ஒருவகையில் இது நிஜமான வைகுண்டத்தை அடைவதற்கு முன் நடக்கும் ஒத்திகையைக் காட்ட  வந்த விழா என்றும்  எடுத்துக்கொள்ளலாம்.

8. அத்யயன உற்சவம் என்றால் என்ன?

மார்கழிமாதம் தேவர்களுக்கு விடியற்காலை, பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். மார்கழிமாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி, 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீபாஞ்ச ராத்திரம் ஸ்ரீபிரஸன்ன ஸம்ஹிதையில் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமை முதல் தசமி முடிய பத்து நாள் ஆகும் வேதங்களையும் ஸ்தோத்திரங்களையும்  பாடி உற்சவம் செய்ய வேண்டும். அந்த பத்துநாள் உற்சவத்திற்கு “அத்யயன உற்சவம்” என்று பெயர். அத்யயனம் என்றால் வேதங்களை பாராயணம் செய்தல் என்று பொருள்.

9. மோட்ச உற்சவம் என்றால் என்ன?

அடுத்து வளர்பிறை ஏகாதசி முதல் பஞ்சமி முடிய 10 நாட்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு ‘‘மோட்ச உற்சவம்” என்று பெயர்.

அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம்.மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம். இந்த உற்சவங்களில் பகவானை மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாதசியன்று பகவத் சந்நதிகளில், வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில்  பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது.

10. திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் காலத்தில்  வேதங் களையும் ஸ்தோத்ரங்களையும்  தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கை யாழ்வார்தான்  இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றியவர். திருமங்கை ஆழ்வார், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாளில் அவதாரம் செய்தவர் திருமங்கையாழ்வார். வைணவ ஆழ்வார்கள் பரம்பரை நம்மாழ்வாரிடம் தொடங்கி, திருமங்கையாழ்வாரிடம்  முடியும். நம்மாழ் வாரை  “பராங்குசன்”  என்றும், திருமங்கை ஆழ்வாரை “பரகாலன்”  என்றும் சொல்வார்கள். வைணவ பரம்பரையைச் சொல்லுகின்ற பொழுது  ‘‘பராங்குச பரகால எதிவராதிகள்'' என்று சொல்லும் வழக்கம் உண்டு.

11. காத்திருந்து சாதித்த திருமங்கை ஆழ்வார்

திருமங்கையாழ்வார், தம்முடைய தலைவராகிய நம்மாழ்வாரின் பாசுரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களையும், நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டால், அதற்கு ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங்களாக அருளியவர் திருமங்கை ஆழ்வார். அப்பொழுது வடமொழி வேதங்கள் தான் கோயிலிலே ஓதப்பட்டனவே தவிர, ஆழ்வார்களின்  தமிழ் பிரபந்தங்கள்  முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களுக்கு  எப்படியாவது ஒரு அந்தஸ்து பெற்றுத் தரவேண்டும்.

வேதங்களைப் போலவே தன்னுடைய திருச்செவிகளால் எம்பெருமான், தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திருவாய் மொழியைக் கேட்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டார்.  இதற்கான ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

12. திருநெடுந்தாண்டகம்

தன்னுடைய ஜென்ம நட்சத்திரமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், திருவரங்கன் முன்னால், தன்னுடைய ஆறாவது பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில்  இசைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய இசையும் அபிநயமும் மிக அற்புதமாக இருந்தது. பெருமாளும் மிகவும் உள்ளமுகந்தார்.

சாமவேதம் கேட்டுப் பழகிய எம்பெரு மானின் திருச்செவிகளுக்கு, உணர்ச்சிகரமான, உள்ளம் உருக்கும் தமிழ் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகம், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இதைப்   பாடிய திருமங்கையாழ்வாருக்கு ஏதேனும் வரம் தந்து ஆக வேண்டும் என்பதால், அர்ச்சகர் மீது ஆவேசித்து, திருமங்கையாழ்வாருக்கு பரிசு தர எண்ணினார்.

13. என்ன பரிசு வேண்டும்?

திருநெடுந்தாண்டகத்தில் மயங்கிய பெருமாள் கேட்டார்.
‘‘உமக்கு நாம் சம்பாவனை செய்யவேண்டும். என்ன சம்பாவனை?”

அப்பொழுது திருமங்கை மன்னன் ‘‘நாயந்தே! அடியேனை தேவரீர் ஏன் என்றும் கேட்கும்படியான பாக்கியத்தை அடைந்தேன். நான் என்ன பிரார்த் தனை செய்யப் போகிறேன்? உன்னால் என்ன வேண்டும் என்று கேட்கப் பட்டதே பெருமை அல்லவா? நான் அடைய வேண்டிய பொருளோ குறையோ ஏதும் இல்லை. ஆனாலும் தேவரீர் கேட்பதால், அடியேன் ஒருவரம் கேட்கின்றேன்.”

14. தமிழின் பெருமை  

பெருமாள் கேட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நம்மாழ்வாரின் தமிழுக்கு ஏற்றம் தேட நினைத்தார் திருமங்கை ஆழ்வார். ‘‘என்ன வரம்?” என்று பெருமாள் கேட்க, ஆழ்வாரின் தமிழுக்கு ‘‘வேத ஸாமியம் தரவேண்டும்” என்று கேட்க, ‘‘அது என்ன?” என்று பெருமாளும் திரும்பக் கேட்க, ‘‘தேவரீர் வைகுண்டத்தில் எப்பொழுதும் சாமகானம் கேட்டுக் கொண்டிருப்பீர். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று உற்சவத்தின்போது நீர் வடமொழி வேதத்தோடு தமிழ் வேதமாகிய திருவாய்மொழியையும் சமமாகக்  கேட்டருள வேண்டும். திருவாய்மொழித் திருநாளாக இந்த விழா நடக்க வேண்டும்”  என்று கேட்க, பகவானும் அப்படியே தந்தருளினார்.

15. தமிழ் விழாவாக மாறியது

இப்படித்தான் “வேதவிழா'’, திருவாய்மொழி விழாவாக மாறியது. ஆழ்வார்கள் திருவோலக்கத்தில், நம் பெருமாள் தினம் இரவு, மதுரகவி கானமாக திருவாய்மொழி கேட்டருளுகிறார். ஒரு தமிழ் பிரபந்தத்திற்காக 1400 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விழா இது.அதற்குக் காரணம் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம். இப்பொழுதும் வைகுண்ட ஏகாதசி விழா “திருநெடுந்தாண்டக பிரவேசத்தோடு தான் நடக்கும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு. திருமங்கை ஆழ்வார் இங்கு தம் பாடலுக்கு ஏற்றம் கேட்கவில்லை. தம் தலைவர் நம்மாழ்வார் பாசுரங்களுக்கு ஏற்றம் கேட்டார். அதுதான் திருமங்கை ஆழ்வார்.

16. “செம்மொழி” அந்தஸ்து அரங்கன் தந்தான்

முதன்முதலில் தமிழ் வேதத்திற்கு, இறைவனாகிய திருவரங்கநாதனிடம்,  ஒரு உயர்ந்த இடத்தைக் கேட்டுப் பெற்றவர் திருமங்கை ஆழ்வார்தான். பெருமான் அப்பொழுதே , சகல மாலை பரிவட்டம் மரியாதைகளையும் தந்து, தமக்கு திருநெடுந்தாண்டகம் பாடிய திருமங்கையாழ்வார் தொண்டை வலிக்குமே என்று, தனக்கு திருப்பணி செய்கின்ற “தழையிடுவான்”(திருப்பணி செய்யும் அந்தரங்கர்)  கையிலே, தாம் சாத்தியிருந்த தைலக்காப்பைத் தந்து திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே தடவச் செய்தார்.இந்த உற்சவத்தின் நீட்சி தான் இப்பொழுது தை அமாவாசையில் காவேரியின் கிளை நதியில் திருநகரியில் (சீர்காழி) மஞ்சள் குளி உற்சவமாக நடைபெறுகிறது.

17. நம்மாழ்வார் வருகை

இது நடந்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்.திருவரங்கனிடம் அனுமதி பெற்ற  திருமங்கையாழ்வார், அப்பொழுதே இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது  என்று முடிவு செய்தார். அதே ஆண்டு, மார்கழி மாத வேத உற்சவத்தை, நம்மாழ்வாரின் தமிழ் உற்சவமாக அதாவது திருவாய்மொழித் திருநாளாகக் (இதற்கு பெரிய திருநாள் உற்சவம் என்றும் ஒரு பெயர் உண்டு) கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தார். பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய, பெருமான் அப்பொழுதே திருமுகம் தந்தருளி, சகல மரியாதைகளையும் தந்து, உற்சவத்திற்கு நம்மாழ்வார் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யவேண்டும் என்று திருமங்கை ஆழ்வாரை பாண்டி நாடு, ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பிவைத்தார்.  

அரங்கனின் அருள் பிரசாதத்தையும் ஸ்ரீமுக பட்டயத்தையும் அங்குள்ள ஸ்தலத்தார், நம்மாழ்வார் முன் சமர்ப்பித்து, பல்லக்கு பரிவாரத்துடன் நம்மாழ்வாரை   எழுந்தருளச் செய்து திருவரங்கம் வந்து சேர்ந்தார்.  

18. இரா பத்து திருநாள்

அழகிய மணவாளன் மண்டபத்தில் நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து, பத்து நாட்கள் திருவாய்மொழியை, திருமங்கையாழ்வார் தேவகானத்தில் அபிநயத்தோடு இசைத்தார். பத்தாம் நாள் வேதங்களைச் சொல்லி முடித்த பிறகு, இரவு திருவாய் மொழியைப்  பாடி முடித்து, நம்மாழ்வார், பெரிய பெருமாளின் திருவடிகளில்  சேர்ந்ததை, ஒரு நாடகமாக நடித்துக் காண்பித்தார். அழகிய மணவாளனையும் நம்மாழ்வாரை  ஏக ஆசனத்தில் இருத்தினார்.

திருவாய்மொழியின் ஈழத்தமிழை  கேட்டு உகந்த பெருமாள்,  நம்மாழ்வாருக்கு மாலைபிரசாதம், கஸ்தூரி திருமண் காப்பு முதலியவைகளைத் தந்து ஆழ்வாருக்கு விடை தர  ஆழ்வார்,  திரும்ப தன் ஆஸ்தானமான திருநகரிக்கு மேள, தாள, பல்லக்கு மரியாதைகளுடன் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரியில் சேர்த்துவிட்டு திரும்ப வருகின்ற பொழுது தைமாதம் அஸ்த நட்சத்திரம் ஆகிவிடும்.  

இந்த உற்சவம் திருமங்கை ஆழ்வார் காலம் வரையில், வருடா வருடம் இதே முறையில் நடந்தது. அப்பொழுது 10 நாட்கள் மட்டுமே இரவில் திருவாய் மொழியைப் பாடுகின்ற திருவாய்மொழித் திருநாளாக நடைபெற்றது. இதனை இரவில் நடத்துவதால் இராபத்து திருநாள் என்று பெயர்.

19. நாதமுனிகள் முயற்சி

திருமங்கை ஆழ்வார் காலத்துக்குப்  பிறகு திருவரங்கத்தின் பல்வேறு நிலைகள் மாறின. ஆழ்வார்கள் பிரபந்தம் மறைந்தது. காட்டுமன்னார்குடியில் தோன்றிய சுவாமி நாதமுனிகள் பெருமுயற்சிக்குப் பின்னால், ஆழ்வார்கள் பிரபந்தங்களைக் கண்டுபிடித்து, தொகுத்து, இயல் இசையாகப்  பிரித்து தமிழ் உலகுக்குக்  கொடுத்தார்.

20. பகல் பத்து உற்சவம் எப்படி வந்தது?

திருவரங்கத்தில் அப்பொழுது மார்கழி மாத உற்சவ காலம் வந்தது. நாதமுனிகள் யோசித்தார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு இத்தனை ஏற்றத்தை திருமங்கையாழ்வார் செய்தாரே, அந்த திருமங்கையாழ்வார் ஈரத் தமிழில் பாடிய பிரபந்தங்களையும், மற்ற ஆழ்வார் பிரபந்தங்களையும் இணைத்து இவ்விழாவை விரிவாக்கினால் என்ன என்று நினைத்தார். திருவாய் மொழியைத் தவிர, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களும் பத்து நாட்கள் பாட வேண்டும் என்று, ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாள்களைச்  சேர்த்தார். மற்ற  ஆழ்வார்களின் பாடல்களை பிற்பகலில்
பாடுவதால் இத்திருநாட்கள் “பகல் பத்து உற்சவம்” என்று அழைக்கிறார்கள். நிறைவாக இயற்பாவையும் சேர்த்தார். இயலும், இசையும், அபிநயமுமாக 21 நாட்கள் இந்தத்  திருநாள், திருமொழி திருநாள், திருவாய்மொழி திருநாள் என்ற பெயரோடு மாறியது. 21  நாட்கள் முத்தமிழ் விழாவாகவே நாதமுனிகள் வடிவமைத்தார்.

21. அரையர் சேவை

திருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திரு வரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் - கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம் திருவில்லிபுத்தூர்,ஆழ்வார்  திருநகரி ஆகிய திருத்தலங்களில் இக்கலை வடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார்.அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் “அரையர்கள்.”  

அரையர் சேவையின் மிக முக்கியமான விஷயம் மேடை இருக்காது. இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களைப் இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாதமுனிகள் என்று பெயர். ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர்.  தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள்.

நாதமுனிகள் பேரரான ஆளவந்தார் தம்முடைய குமாரனுக்கு திருவரங்கப் பெருமாள் அரையர் என்று பெயர் சூட்டி னார். திருவரங்கப் பெருமாள் அரையர் ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் .இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். ‘‘வரம் தரும் பெருமாள் அரையர்” ‘‘நாத வினோத அரையர்” என்ற அருளப் பாடுகள் உண்டு.

22. ராமானுஜர் செய்த மாற்றம்

ராமானுஜர் காலத்தில் இப்பெருவிழாவில்  பல மாற்றங்கள் நடந்தன. இராமானுஜர் காலத்தில் திருவரங்கத்து அமுதனார் என்கின்ற ஆசாரியர் பிரபன்ன காயத்ரி என்று சொல்லப்படுகின்ற 108 கட்டளைக் கலித்துறை பாசுரங்களால் ஆன அந்தாதி  நூலை இயற்றினார். அந்த நூலுக்கு ராமானுஜ நூற்றந்தாதி என்று பெயர். அதில் ஆழ்வார்களின் பெருமையும், ராமானுஜரின் பெருமையும், வைணவத்  தத்துவங்களும் பொதிந்திருக்கும்.

அரங்கனின் திருவுள்ளப்படி, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் நிறைவு நாளில், இயற்பா சேவிக்கும் நாளில், ராமானுஜ நூற்றந்
தாதியையும் சேர்ந்து சேவிக்கும் வழக்கம் ராமானுஜர் காலத்தில் வந்தது. அதுமட்டுமின்றி எல்லா ஆழ்வார்களின் திருவுருவங்களும் உருவாக்கப்பட்டன. இனி வருடாவருடம் நம்மாழ்வார் விக்கிரகத்தை திருநகரியில் இருந்து எழுந்தருளச் செய்வது சிரமம் எனக் கருதி எல்லா ஆழ்வார்க ளையும்  ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். இது உடையவர் செய்த ஏற்பாடு.

23. நான்கு நடை அழகு (பத்தி உலாத்துதல்)

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியில்  பெருமாள்  வெளியில் வரும் பொழுது நான்கு நடையில் (நடை அழகு ) வருவதை நம்மால் தரிசிக்க முடியும். திருவரங்கப்
பெருமானுக்கு “சதுர்கதிப் பெருமாள்’ என்று பெயர்.

1. அவர் கருவறையிலிருந்து வெளியே வரும்பொழுது குகையில் இருந்து வெளிப் படும் சிங்கம் போல, சிம்ம கதியில் வருவார்.

2. உள்ளே திரும்பப் போகும் பொழுது புற்றில் நுழையும் பாம்பு போல சர்ப்ப கதியில் வளைந்து நெளிந்து புகுவார்.

3. படி ஏறும் பொழுது யானை ஏறுவது போல ஆடி ஆடி, மெதுவாக கஜ கதியில் ஏறுவர்.  

4. ஒய்யார நடை(வையாளி) போடும் பொழுது விருஷப கதியில் நடை போடுவர்.

நம்பெருமாளை தோளில் சுமக்கும் கைங்கர்ய பரர்கள் நமக்கு இந்த நான்கு நடையையும்  காட்டுவார்கள். இதற்கென்று அவர்களுக்கு தனி பயிற்சி உண்டு. இந்த வையாளி சேவையை துரகதி என்பார்கள்.

இந்த வைபவத்தை “பத்தி உலாத்துதல்” என்று சொல்லுகின்றார்கள். பகல் பத்து முழுவதும் பெருமாள் புறப்பாடு நடந்து, திரும்ப தன்னுடைய ஆஸ்தானத்திற்கு செல்லும்போது, இந்த நான்கு நடைகளும் பார்க்கலாம்.

24. மோகனா அவதாரம்

பகவான் மோகினி அவதாரம் செய்வதற்கு ஒரு சரித்திரம் உண்டு. மார்கழி சுக்ல தசமி அன்று திருப்பாற்கடல் கடையப்பட்டது  என்கிறார்கள். அன்று தேவர்களுக்கு அமுதம் தர பகவான் மோகனா(மோஹினி) அவதாரம் எடுத்தார். அதற்காகவே மோஹினி அலங்காரம் செய்யப்படுகிறது.இன்னொரு விதத்தில் திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்து கொண்டு  “கள்வன் கொல்” என்ற பதிகத்தை அருளிச் செய்தார்.

இப்பொழுதும் திருநகரியில் (திருவாலி) திருக்கார்த்திகை உற்சவத்தில், ஆழ்வார் நாயகி பாவத்தில் பெண்வேடம் போட்டுக்கொண்டு, பெருமாளுடன் ஏக ஆசனத்தில் இருப்பார். திருமங்கை யாழ்வாரின் இந்த நாயகி பாவத்தை பார்த்த பெருமாள், தனக்கும் இந்த கோலத்தை ஆதரித்து அலங்காரம் செய்து கொண்டார் என்றும்
சொல்கிறார்கள்.

பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு இந்த அவதார அலங்காரத்தைச்  செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து  காட்சி தருவார்.

25. பெருமாள் கேட்கும் வீணை

பெருமாளுக்கு வீணை ஏகாந்தம் என்ற ஒரு இசை சமர்ப்பணம் உண்டு. பெருமாள் வெளியே மண்டபத்திலிருந்து தன்னுடைய ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது ஏகாந்த வீணை வாசிக்கப்படும். இதற்கென்றே வீணை வாசிக்கக் கூடிய பரம்பரை பெரியவர்கள் உண்டு.

அவர்களுக்கு வீணை மிராசுகாரர்கள் என்று பெயர். பெரிய திருநாளில் தினம்தோறும்ராத்திரி உள்ளே சங்கீதம் கேட்பதற்காக மௌனமாய், அழகாய், அசைந்து, நம்பெருமாள் படி  ஏறுவார் என்று வியாக்கியானத்தில்  வருகின்றது.

26. ரத்னாங்கி சேவையும் முத்தங்கி சேவையும்

வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி,  அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று மது கைடபர்களை,
நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக்கொண்டு தம்முடைய திவ்யமான வடி வழகை காட்டி அருளுவார்.  இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள்.

விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப் பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது.  ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும் முத்தினால் செய்த  அங்கியை  மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார்.இந்த சேவைக்கு  “முத்தங்கி சேவை” என்று சொல்கிறார்கள்.

27. திருக்கைத்தல சேவை

இராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை என்று ஒரு சேவை உண்டு. அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி, ‘‘கங்குலும் பகலும்” சேவிக்கப்படும். நாச்சியார் விஷயமாக ஸ்ரீஸ்தவம், ஸ்ரீகுண ரத்னகோஸம் சேவிக்கப்படும். பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார். இப்படி அர்ச்சகர்களின் கையில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி “கைத்தல சேவை” எனப்படும். கைத்தல சேவைக்காக உத்தம நம்பி சமர்ப்பிக்கும் சர்க்கரைப் பொங்கல், பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படும்.

28. வேடுபறி உற்சவம்

இராப்பத்து, எட்டாம் திருநாள் “வேடுபறி உற்சவம்” நடைபெறும். வேடர் பறி உற்சவம்  என்றும்  சொல்வார்கள்.
திருமங்கை ஆழ்வார் ஒரு காலத்தில், பெருமாளை வழி மறித்து, நகை பறித்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படும்.

மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே- வேலை

அணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து
என்பது இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்
ஸ்ரீசோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன்.

வேடு பறி உற்சவம் வெகு கோலாகலமாக இருக்கும்.பெருமாளை தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடுவதும் திரும்புவதும் என அற்புதமாக இருக்கும்.
அன்று சந்நதி வாசலில் பெருமாள் குதிரை வாகனத்தில் கிழக்குமுகமாக எழுந்தருளி இருப்பார். அன்று பரமபதவாசல் வழியாகப்  பெருமாள் செல்லமாட்டார். பெருமாள் புறப்பாடாகி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள மணல் வெளிக்குச் செல்வார்.

அங்கே நீண்ட நடை கொட்டகை போடப்பட்டிருக்கும். பெருமாளுடைய குதிரைக்கு கடலை சுண்டலும், பெருமாளுக்கு பாசிப்பருப்பு , பானகமும்  திருவமுது (நிவேதனம்) ஆகும். அப்போது திருமங்கையாழ்வார் வந்து பெருமானைச்  சுற்றிக் கொண்டு போவார். வழிப்பறி நாடகம் கோலாகலமாக நடக்கும். பிறகு திருமங்கை ஆழ்வாருக்கு திருஎட்டெழுத்து மந்திர
உபதேசம் ஆகி, பெரிய திருமொழி முதல் பதிகம் சேவிக்கப்படும்.

29. நம்மாழ்வார் மோட்சம்

திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார்  மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில்  தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார்.

அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணியாரங்கள்  சமர்ப்பிக்கப்படும். நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன்  வேடத்தில்  இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி , பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால்  போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக்கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள். சத்ர சாமரங்கள் அவருக்குப்  பிடிக்கப்படும்.

மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும்,
‘‘சூழ் விசும்பு” என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும்.
நம்மாழ்வார்
திருமேனியை எடுத்துச் சென்று
பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.

அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான ‘‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்ற பதிகம் பாடப்படும்.

ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி)  
வைத்துக்கொண்டே இருப்பார்கள்.  

ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ் தூரி திருமண் காப்பையும்  மாலையையும் அருளுவார். அதற்கு பிறகு, ‘‘எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த் தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.

பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சந்நதிக்கு புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில்
எழுந்தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடை போடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சந்நதிக்குச்  செல்வார்.

30. தாயாருக்கும் உற்சவம்

திருவரங்கத்தில் பெருமாளுக்கு எப்படி உற்சவம் இருக்கிறதோ, அப்படி நாச்சி யாருக்கும் இந்த அத்யயன உற்சவம் உண்டு. நாச்சியாருக்கும் திருநெடுந் தாண்டகம் தொடங்கப்படும். ஆனால் நாச்சியார் புறப்பாடு கிடையாது. மாலை  ஷீரான்னம் சமர்ப்பணம் ஆகும். ஆங்காங்கு அரையர் தொடங்கி, அத்யாபகர்கள் சேவிக்க திருமொழி இரண்டாயிரமும் ஐந்து
நாளில் பூர்த்தி செய் வார்கள்.

ஆயினும் இங்கும் அரையர் சேவை, அபிநயம்,  கானம் உண்டு. 5ம் நாள் முத்துக்குறி, அரையர் தீர்த்தம், சடகோபம் போன்ற நிகழ்வுகள் உண்டு.இதில் சொல்லியது சில மட்டுமே.இன்னும் பல சுவையான செய்திகள் உண்டு. பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில், இப்படித்  தொட்ட இடமெல்லாம்,  மணக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி
மகா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், எல்லா திவ்ய தேசங்களிலும் இருபத் தொரு நாட்கள் இந்த உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் முதலிய திவ்ய தேசங்களில் இந்த விழா மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இந்த உற்சவம் பற்றிச் சொல்ல ஆயிரம் செய்திகள் உண்டு. அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நாம் பார்ப்போம்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Tags : Honey Tamil Festival ,Thiruvarangam ,
× RELATED மகாபிஷேகம் காணும் ஸ்ரீராகவேந்திரர்